போன்சாய் (4)

போன்சாய் வளர்ப்பதற்கான தொட்டி, மண் ஆகியவற்றைப் பற்றிக் கடந்த வாரம் தெரிந்து கொண்டோம். அடுத்து, போன்சாயை வளர்ப்பது எப்படி, மரத்தைத் தொட்டியில் நடுதல், மாற்றி நடுதல், வடிவமைத்தல் போன்ற விவரங்களை இப்போது அறிந்து கொள்வோம்.

தொட்டியில் நடுதல்

மரக்கன்றைத் தேர்வு செய்த பின், அதைப் போன்சாய்த் தொட்டியில் நட வேண்டும். புதிதாகத் தொடங்குபவர்கள் நம்மூர் மரங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில், நம் தட்பவெப்ப நிலையில் வளரும் மரங்களைப் போன்சாயாக்குவது எளிது. அதிகச் சிரமமின்றி இவற்றை நம்மால் வளர்த்து ஆளாக்க முடியும். இக்கலையில் நல்ல தேர்ச்சியும் அனுபவமும் பெற்றபின் வெளிநாட்டு மரங்களில் முயற்சி செய்யலாம்.

மாற்றி நடுதல்

தேவையற்ற நீண்ட வேர்களைக் கத்தரிக்கவும், வளமான புதிய மண்ணை நிரப்பவும் தொட்டி மாற்றுவது அவசியம். மரத்தின் வளர்ச்சியைப் பொறுத்து ஆண்டுக்கொரு முறை, அல்லது இருமுறை மறுநடவு செய்ய வேண்டியிருக்கும். மெதுவாக வளரும் மரங்களை மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தொட்டி மாற்றினால் போதுமானது. மறுநடவு செய்த போன்சாய் புதுத் தொட்டியில் வேர்ப் பிடிக்கும் வரை நிழலில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

பராமரிப்பு

போன்சாய் மரங்களுக்கு இயற்கை மரங்களைப் போலவே வெயில், மழை, காற்று, பனி என எல்லாமும் வேண்டும். எனவே, இவையெல்லாம் நன்றாகக் கிடைக்கும் இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும். அழகுக்காக வீட்டினுள் வைக்கப்படும் தொட்டிகளைக் கூட இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு பழைய இடத்தில் வைக்க வேண்டும்.

நீர் வார்த்தல்

இக்குறுமரங்கள் மிகக் குறைந்த மண்ணையே நீருக்கும் உணவுக்கும் நம்பி இருப்பதால் தினமும் தவறாமல் தண்ணீர் விட வேண்டும். அதிகப்படியான நீர் தொட்டியின் அடித்துவாரம் வழியாக வெளியேறும் வரை தண்ணீர் விடலாம். மண், தூசி போன்றவற்றால் இலைத் துவாரங்கள் அடைப்படாமலிருக்க அவ்வப்போது இலைகளின் மீது நீர் தெளிப்பது நல்லது.

உரமிடுதல்

தினமும் நீர் வார்ப்பதோடு குறிப்பிட்ட இடைவெளியில் உரம் இடுதலும் அவசியம்! எல்லாத் தாவரங்களுக்குமே ஆரோக்கியமாக வளர்வதற்கு நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் தேவை. இலைகள் அதிகமாகத் துளிர்க்கும் இளவேனிற்காலத்தில் நைட்ரஜன் அதிகமுள்ள உரமும், வளர்ச்சி ஏதுமில்லாத குளிர்காலத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம் நிறைந்த உரமும் அளிக்க வேண்டும் என்பது வேளாண் வல்லுநர்களின் கருத்து. கடுமையான கோடையிலும், மழைக் காலத்திலும் உரமிடுவதைத் தவிர்க்க வேண்டும்! மழைக்காலத்தில் உரம் முழுக்க மழைநீருடன் கலந்து தொட்டியிலிருந்து வெளியேறிவிடும். வேர் கத்தரிப்பு செய்து மறுநடவு செய்த போன்சாய் புது வேர்விட்டுத் துளிர்க்கும் வரை உரமிடக்கூடாது! மரம் நோயுற்ற சமயத்திலும் உரமிடுதலைத் தவிர்க்க வேண்டும்!

வடிவமைப்பு

மரத்தின் தொடக்க அமைப்பை வைத்து, அதை எந்தப் பாணியில் வளர்த்தால் நன்றாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்து அதற்கேற்ப வளர்க்க வேண்டும். வடிவமைப்பில் கம்பி கட்டுதல், கத்தரித்தல், சீர்ப்படுத்துதல் ஆகியவை இடம் பெறுகின்றன.

1. கம்பி கட்டுதல்

மரத்தை நாம் விரும்பும் வகையில் வடிவமைக்கச் செம்பு, அலுமினியம், இரும்பு என எந்தக் கம்பி வேண்டுமானாலும் பயன்படும் என்றாலும் இரும்பின் துரு கிளையில் படியுமென்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது. செம்பு அதிக வலுவுள்ளது என்பதால் சரியாகக் கட்டவில்லையென்றால் மரத்தைப் பாதிக்கும். எனவே, புதிதாக முயல்பவர்களுக்கு அலுமினியக் கம்பியே நல்லது! வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் கம்பி கட்டுதல் சிறந்தது! குளிர்காலத்தில் மரம் விறைப்பாக இருப்பதால் கம்பி சுற்றும்போது கிளைகள் ஒடிந்து விடக்கூடும். முதலில், கம்பியை மரத்தின் அடிப்பாகத்தில் தொடங்கிப் பின் சீரான இடைவெளியில் தண்டு முழுதும் சுருள் சுருளாகச் சுற்ற வேண்டும். முதலில் தண்டு, பின் அடர்த்தியான கிளைகள், இறுதியாகச் சிறிய கிளைகள். கிளைகளிலும் கம்பி அடியிலிருந்து தொடங்கி நுனிக்குச் செல்ல வேண்டும். கம்பியின் முனை, செடியில் சேதம் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! கிளைகளின் அடர்த்திக்கேற்பக் கம்பியின் தடிமன் இருக்க வேண்டும். சுற்றப்பட்ட கம்பி அதிக இறுக்கமாகவோ, தளர்வாகவோ இருக்கக் கூடாது.

சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை கம்பிகளை அப்படியே விட்டு வைத்துப் பின்னர் அகற்றி விட வேண்டும். அப்போது கிளைகள் அந்த வடிவத்திலேயே இருக்கும். கம்பியைப் பிரித்தெடுப்பதை விட மரம் சேதமுறாவண்ணம் கட்டர் மூலம் சிறு சிறு துண்டுகளாக்கி நீக்கி விடுவது நல்லது.

2. கத்தரிப்பு

போன்சாயை வடிவமைப்பதில் கத்தரிப்பு முக்கிய பங்காற்றுகிறது. மரத்தின் தண்டுப்பகுதி, கிளைகள் ஆகியவை பருமனாகவும், அவை வளரும் திசைகளின் போக்கை மாற்றவும்,தேவையில்லாத, அதிகப்படியான கிளைகளை நீக்கவும், மரத்தின் அழகான வடிவத்தைத் தொடர்ந்து தக்கவைக்கவும், பெரிய கிளைகளுக்கிடையில் மேலும் பல சின்னஞ்சிறு கிளைகளையும், இலைகளையும் உருவாக்கவும் கத்தரிப்பு தேவைப்படுகிறது. வேர், கிளை, இலை என மூன்றிற்குமே அவ்வப்போது கத்தரிப்பு அவசியம்!

2.1. வேர் கத்தரித்தல்

போன்சாயைத் தொட்டியில் நடும்போதே, கிளைவேர்கள் நாலாப் பக்கமும் அதிகளவில் வளர்ந்திருந்தால் ஆணிவேரைக் கண்டுபிடித்துக் கூர்மையான கத்தியால் வெட்டிவிட வேண்டும்! பக்கவாட்டு வேர் சரியான வளர்ச்சி பெறாமலிருந்தால் அது நல்ல வளர்ச்சி பெறும் வரை ஆணிவேரை வெட்டுவதை ஒத்திப் போடுங்கள். கிளைகள், வேர்களை வெட்டும் கத்தரிக்கோல், கத்தி முதலான உபகரணங்கள் கூர்மையாக இருத்தல் அவசியம்! (மரக்கிளைகள் சிலவற்றிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் கத்தரிக்கோலை மழுங்கடித்து விடும். எனவே, உடனுக்குடன் துடைத்துச் சுத்தம் செய்து கொள்ளுங்கள்).

2.2. கிளை கத்தரித்தல்

தேவையற்ற கிளைகளை வெட்டி விட்டு நாம் விரும்பும் வழியில் போன்சாயைப் பெறக் கத்தரித்தல் அவசியமாகிறது. நுனிக்குருத்தை அகற்றாவிட்டால் போன்சாய் தொடர்ந்து உயர வளரும். தேவையான உயரம் வந்த பிறகு நுனிக்குருத்தைக் கிள்ளி விட்டால் பக்கங்களில் துளிர்த்துச் செடி அடர்த்தியாக வளரும். எனவே, செடியின் அமைப்புக்கேற்றாற்போல நுனியையோ பக்கவாட்டுக் குருத்தையோ கத்தரித்து அழகான வடிவம் பெறலாம்.

2.3. இலைக் கத்தரிப்பு

புதிய இலைகள் தோன்றவும், இலைகளின் அளவைச் சிறியதாக்கவும் இலைக்கத்தரிப்பு தேவை. மரத்தின் உட்பக்கக் கிளைகளுக்குச் சூரிய ஒளி, காற்று தாராளமாகக் கிடைக்கவும் இது அவசியமாகிறது. நல்ல திடகாத்திரமான மரங்களில் மட்டுமே இலைக் கத்தரிப்பு செய்ய வேண்டும். இலைகளை வெட்டும்போது இலைக்காம்பை விட்டுவிட்டு அனைத்து இலைகளையும் வெட்டி விட வேண்டும். இதனால் குருத்து பாதுகாக்கப்படும். இலை வெட்டுக்கு முன்னும் பின்னும் சில நாட்களுக்கு உரமிடுதல் கூடாது! இலை வெட்டப்பட்ட பின் சில நாட்கள் நிழலில் வைத்து நீர் விட்டுப் பராமரிக்க வேண்டும். இலைக்கத்தரிப்பு செய்வதால் சில ஆண்டுகளில் போன்சாயின் இலைகள் சிறுத்துக் காணப்படும்.

இதுவரை, போன்சாய் வளர்ப்பதற்குத் தேவையான விவரங்களை அறிந்து கொண்டோம். எது எப்படி இருப்பினும், போன்சாய் வடிவம் என்பது அதை வளர்ப்பவரின் கற்பனா சக்தியைப் பொறுத்தது என்பதே உண்மை.

போன்சாய் வளர்ப்பில் செய்யக் கூடியவை, செய்யக்கூடாதவை பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்…

— வளரும்…

About The Author