மடை திறந்து… (10)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே? இங்கே கொஞ்சம் களைப்பா இருந்தாலும் எல்லாம் நலமே!

நேற்றைக்கு என்னோட facebookல ஒரு மிக நல்ல நண்பரைப் பார்க்கப் போறதா போட்டிருந்தேன். அனுராதா இது இந்த வாரக் கொடைகள்ல சேர்த்துப்பீங்கதானேன்னு கேட்டிருந்தாங்க… எப்படி… எப்படி…எப்படி அனு இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க? 

அந்த நண்பர் சிவசங்கர் பாபா. அவரோட சத்சங்கம் இலண்டன் இல்ஃபோர்ட்ல நடந்தது. ரொம்ப நல்ல சொற்பொழிவு. நிறைவா இருந்தது. என்னோட அதே ஆஃபீஸ் ரூட்ல இன்னும் கொஞ்சம் அதிக தூரம் பயணப்படும்படியா இருந்ததுனால கொஞ்சம் சலிப்பா இருந்தது. எனினும் நலமே!

அந்த சத்சங்கத்தில விஷால்னு இன்னொரு புது நண்பர் கிடைச்சார். பார்த்த உடனே எனக்கு அவரைப் பிடிச்சிருச்சி. அவ்வளவு அழகு. நானே போய் அறிமுகம் செஞ்சுக்கிட்டேன். அவரும் என்னவோ என்னை ரொம்ப யுகங்களா தெரிஞ்ச மாதிரி நடந்துக்கிட்டார். ஒரே கொஞ்சல். என் மனசை அள்ளிட்டுப் போன அந்தப் புன்னகைய நினைச்சு நினைச்சு நினைச்சு இன்னும் ரசிச்சிக்கிட்டே இருக்கேன்… அவர் இந்த உலகத்துக்கு வந்து 7 மாசம்தான் ஆகுது. (நல்லா ஏமாந்து போயிட்டீங்களா? . ஆனா அந்தக் குழந்தைக்குள்ள வந்திருக்கறது ஒரு முதிர்ந்த ஆன்மான்னு எனக்குத் தோணுது. புதுயுகம் பிறக்க உதவறதுக்காக இந்த மாதிரி முதிர்ந்த ஆன்மாக்கள் பூமில அவதாரம் எடுக்கறாங்க. அவங்க ‘Indigo children’னு அழைக்கப்படறாங்க. ஒரு குழந்தை இண்டிகோவோ இல்லையாங்கறதை எல்லாம் தாண்டி ஒவ்வொரு குழந்தையோட புன்னகைலயும் எனக்குக் கண்டிப்பா இறை தெரியுது. புன்னகைக்கற குழந்தைங்களோட படங்களை என்னோட எல்லா கணினியிலயும் சேகரிச்சு வச்சிருப்பேன். மனம் சஞ்சலப்படும்போது ஸ்லைட் ஷோ போட்டுப் பார்ப்பேன். என்னை அறியாம அவங்களோட சேர்ந்து நானும் சிரிச்சிட்டு இருப்பேன். நல்ல அதிர்வுகளைக் கொண்டு வர இது ஒரு நல்ல உத்தி. முயற்சி செய்து பாருங்க.

என்னோட கலெக்ஷன்ல இருக்கற ஒரு படம் இங்கே:
https://www.nilacharal.com/wp-content/uploads/2011/04/Little-Sweet-Baby-Smiling1.jpg

இதைப் பார்த்து புன்னகைக்காதவங்க கை தூக்குங்க…. உங்களுக்குக் கண்டிப்பா சுகமளிக்கணும்

சுகமளித்தல்னா என்னன்னு ராதா கேட்டிருந்தாங்க. என்னைப் பொறுத்தவரை, சாமானிய வார்த்தைகளில சொன்னா வாழ்க்கையை சௌகர்யமா வாழ உதவற மனநிலையை ஏற்படுத்தறதுதான் சுகமளித்தல். வெளிச்சூழல் எப்படி இருந்தாலும் நாம வசதியா சுகமா உணர்றதுக்கான பலத்தை ஏற்படுத்தறதுதான் சுகமளித்தல். அந்த மனநிலை ஏற்படும்போது உடம்பிலேயும் வாழ்க்கைச் சூழல்களிலேயும் விரும்பத்தக்க மாறுதல்கள் ஏற்படுறது உபரி பயன்.

கொஞ்சம் ஆழமா சொன்னா நமக்குள்ள இருக்கற இறை சக்தியை வெளிக்கொணர்றதுதான் சுகமளித்தல். நேத்திக்கு பாபா ரொம்ப அழகா சொன்னார் நாம எல்லாருமே நிலா மாதிரின்னு (என்னைச் சொல்லலை . வானத்து நிலவு). நிலவை எத்தனை மேகங்கள் மூடிட்டிருக்குங்கறதைப் பொறுத்துதான் வெளிச்சம் வெளியே தெரியும்னு. அந்த மேகங்களை விலக்க உதவறதுதான் சுகமளித்தல்.

சுகமளித்தலை நிலாச்சாரல் வழியா கத்துக்கொடுக்க முடியுமான்னும் ராதா கேட்டிருந்தாங்க. ரொம்ப சிக்கலான கேள்வி. ஏன்னா சுகமாதல் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். சில பேருக்கு ஒரு மகானைப் பார்த்தாலே போதும் வாழ்க்கை வளமாகறதுக்கு. சிலருக்கு பலவிதமான முறைகளை முயற்சி செய்ய வேண்டிருக்கும். சில மகான்கள் சொல்வாங்க ‘ஆனந்தமா இருக்கறதுக்கு நீங்க முடிவு செஞ்சாப் போதும். வேறெதுவும் வேண்டாம்’. அப்படிப் பார்த்தா எதுவுமே கத்துக்கக் கூடத் தேவையில்லை. அதனால பொத்தாம்பொதுவா சொல்லித் தர்றது சரிவரும்னு தோணலை.

தவிர, சில சுகமாக்கும் முறைகளுக்கு நேரடியான தீட்சை பெறணும். அதுக்குப் பிறகு சுயமா சிகிச்சை அளிச்சுக்கலாம். ஆனா ஒரு சில முறைகளுக்கு கண்டிப்பா சுகவர் தேவை. மற்ற சில சிகிச்சை முறைகளைத் தானாவே கத்துக்கலாம். அப்படி ஒண்ணுதான் சுகம் செயல்முறை. இதைப் பற்றி நான் பல வருஷங்கள் முன்னால ஒரு கட்டுரை எழுதிருக்கேன். அதை இங்கே பார்க்கலாம்:

https://www.nilacharal.com/tamil/specials/sugam.html

ராதா, இதை முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க. சுய உதவி ஒரு எல்லை வரைக்கும்தான் உதவும்ங்கறதை நான் பல சமயம் உணர்ந்திருக்கேன். அதனால இந்த முறை உங்களுக்கு உதவலைன்னா ஒரு சுகவரின் உதவி தேவைப்படுதுங்கறதைத்தான் அது காட்டுது.

என் அனுபவத்தில் சுகமாதல் ஒரு பயணமாத்தான் இருந்திருக்கு. நான் கிட்டத்தட்ட 20 – 25 முறைகளை முயற்சி செய்திருக்கேன். ஒவ்வொரு சமயத்தில ஒவ்வொண்ணு எனக்கு உதவியா இருந்திருக்கு. ஆனா ஒரு பெண்மணிக்கு ஒரே ஒரு செஷன் போதுமா இருந்தது. ஆரம்பிக்கும்போது ‘எனக்கு எப்பப் பார்த்தாலும் பணப் பிரச்சினை. அதனால மனசில நிம்மதியே இல்லை’னு சொன்னாங்க. 30 நிமிஷத்துக்கப்பறம் ‘எனக்கு எல்லாம் இருக்கு. எதுவுமே குறையாத் தோணலை’ன்னு சொன்னாங்க. அதுக்கப்பறம் அவங்க திரும்ப வரலை. ஆனா நான் பத்து பதினொரு வருஷமா என்னை சுகமாக்க முயற்சி செய்துட்டிருக்கேன் . நல்ல மாறுதல் இருக்கு. ஆனா சுகமாக்க ஏதாவது இருந்துட்டே இருக்கு. இதுக்குக் காரணம் அடுத்தவங்களோட கஷ்டத்தை அவங்க சார்பா நான் எடுத்துக்கறேன்னு சில சுகவர்கள் சொன்னாங்க. பல சமயம் என்னோட நண்பர்கள் தங்களோட உணர்வுகளைப் பற்றிச் சொல்லும்போது ‘அட, இதே மாதிரிதானே நானும் உணர்றேன்’னு நினைச்சிருக்கேன். சில சமயம் அவங்களுக்கு வர்ற கனவுகள் போலவே எனக்கும் வந்திருக்கு. அவங்க தங்களோட உணர்வுகளை வெளிப்படுத்த பயன்படுத்தற அதே சொற்றொடர்களை நானும் பயன்படுத்திருக்கேன்.

இந்த உலகத்திலருக்கற இருளை மனித இனம் சார்பா விடுவிக்க இந்த மாதிரி சிலர் பிறவி எடுத்திருப்பாங்களாம். அவங்களை Consciousness clearers அப்படின்னு ரே ஹிக்ஸ் சொல்றார். (அவரும் அப்படி ஒருத்தர்தான்). ஆனா அவரே அந்தக் காலகட்டம் முடிஞ்சிருச்சின்னும் இனி அப்படி அடுத்தவங்க கஷ்டத்தை நாம படவேண்டிய தேவை இல்லைன்னும் சொல்றார். அதாவது உலகம் அடுத்த யுகத்துக்கு மாறத் தேவையான ஒளி கிடைச்சிருச்சாம். ஆனா பழக்க தோஷத்தினால என்னைப் போன்றவர்களுக்கு கஷ்டங்களில்லைன்னா எதையோ இழந்தது போலிருக்கு. அதனால நாங்க தேடித் தேடி கஷ்டங்களை வரவழைச்சிக்கறோம். (என்ன கொடுமை சார், இது?) அந்த மனநிலையை மாற்றத்தான் நான் இப்போ ஸராவோட உதவியோட முயற்சி செய்துட்டிருக்கேன்.
நடிகை சுஜாதாவோட மரணம் ரொம்ப வருத்தத்தைக் கொடுத்தது. எனக்கு மிகவும் பிடிச்ச நடிகை அவங்க. அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் படங்கள்ல எல்லாம் மிகச் சிறப்பா செஞ்சிருந்தாங்க. அவங்க, ஸ்ரீவித்யா எல்லாம் Ageless beauty. எந்த வயசிலேயும் கம்பீரமா, அழகா தெரிஞ்சவங்க. அவங்க ஆன்மா சாந்தி பெற பிரார்த்திப்போம்.

எனக்கு முதன்முதலா திரைப்பட இயக்கத்தின் மேல காதலை ஏற்படுத்தின படம் அவள் ஒரு தொடர்கதை. பள்ளி படிக்கும்போது பார்த்தேன். ரொம்பப் படிச்சு கவிதை கூட எழுதினேன். பாலச்சந்தர் மேல மிகப் பெரிய மரியாதையைக் கொடுத்த படம் அது.
இந்த வாரம் என்னோட கொடைகளைப் பற்றி விரிவா எழுதலாம்னு இருக்கேன். (எப்படியாவது இடத்தை அடைக்கணுமே )

கொடை 1:

Sandra Bullock நடிச்ச Blind Side படம் பார்த்தேன். ரொம்ப கருணை நிறைஞ்ச படம் அது. ஆதரவில்லாத ஒரு கறுப்பின மாணவரோட வாழ்க்கை ஒரு பணக்கார வெள்ளையினப் பெண்மணியின் உதவியானால எப்படி மாறுதுங்கறதுதான் கதை. ஆனா இது வேறும் கற்பனைக் கதையல்ல. ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில எடுக்கப்பட்ட படம் இது.  சாண்ட்ரா இந்தப் படத்துக்காக ஆஸ்கர் வாங்கினாங்க. எனக்கென்னவோ கறுப்பின மாணவரா நடிச்ச Quinton Aaron அவரைவிட நல்லா பண்ணிருந்தது போல இருந்தது. பல இடங்கள்ல அவரோட நடிப்பு கண்ல தண்ணி வரவைச்சுது. இவ்வளவுக்கும் காட்சியமைப்பிலேயோ வசனங்களிலேயோ அதிகமான சோகம் கிடையாது. ஆனா ஆரோனோட முகபாவமும் உடல் மொழியும் அந்த பாத்திரத்தோட சோகத்தை ரொம்ப அழகா வெளிக் கொணர்ந்தன. வாழ்க!

கொடை 2:

சில வருடங்கள் கழிச்சு அருமை நண்பர் ராம்கி தொலை பேசினார் ஒரு நல்ல காரியத்துக்காக. ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் சேவை நிறுவனம் நடத்தற Lotus Blind Ashram (ஏன் தமிழ்ல பேர் இல்லைன்னு தெரியலை) சார்பா உதவி கேட்டிருந்தார். இந்த நிறுவனம் 60க்கும் மேற்பட்ட பார்வையில்லாப் பெண்களுக்கு உயர்கல்வி கிடைக்க உதவுது. இதைப் பற்றிய விரிவான கட்டுரை விரைவில் நிலாச்சாரல்ல வரும். அவங்க அனுப்பிச்சிருந்த படங்கள் ரொம்ப மனம் நெகிழ வைத்தன. (ஒரு படம் கீழே) பண உதவியோட கூட அந்தப் பெண்களுக்கு நல்ல தோழமை தரவும் அவங்களுக்கு நிலாச்சாரல் வாசகர்கள் மூலமா வேலை வாய்ப்பு, திருமண ஏற்பாடுகள் செய்து தரவும் விரும்பறேன். சென்னையிலருக்கற யாராவது ஒரு வாசகர் இவற்றை ஒருங்கிணைப்பு செஞ்சா உதவியா இருக்கும். நல்ல உள்ளம் கொண்ட யாராவது உங்க பொன்னான நேரத்தைக் கொஞ்சம் ஒதுக்கறீங்களா?

தொடர்பு விபரங்கள் கீழே:

SMT RAJESWARI RADHAKRISHNAN CHARITABLE TRUST
Managing Trustee: M. Radhakrishnan
A4, Bhavithra Apts., 144A, College Road, Nanganallur, Chennai – 600 114.
Ph: +91-44- 22245087. Mobile: +91-9176855310.
E-mail: mail2srrct@gmail.com

கவனிங்க… அவங்களுக்கு இணைய தளமில்லை. யாராவது வடிவமைக்கத் தயாரா இருக்கீங்களா?

திரு ராதாகிருஷ்ணன் தன்னோட ஓய்வூதியத்தை வச்சு இவ்வளவு பெரிய சேவை செய்யும் போது நாமெல்லாம் அணில் போல இப்படிச் சின்னச் சின்ன உதவிகள் செய்யலாம்கறது என்னோட எண்ணம். செய்வோமா?

கொடை 3:

இங்கே வெப்பநிலை நல்லா இருக்கறதுனால சாவகாசமா மரங்களினூடா பறவைகளோட கொஞ்சல் மொழியைக் கேட்டுக்கிட்டு மலர்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்கிட்டே ஸ்டெஷன்லருந்து வீட்டுக்கு நடந்து வந்தது. குழந்தைகள் போலவே தாவரங்கள், பறவைகள், மலர்கள் மூலமா என்னால இறைவனை உணர முடியுது. இயற்கையில நேரம் செலவழிக்கறது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச விஷயம். ஸ்காட்லாந்துல எடுத்த இந்தப் படம் இயற்கையோட இழைஞ்சப்போ எடுத்ததுதான்.

கொடை 4:

ரொம்ப நாளைக்கப்பறம் எனக்குப் பிடிச்ச பழைய பாடல்களை ரொம்ப ரசிச்சு என்னோட ஐபாட்ல கேட்டது. ரெண்டு பாடல்கள் மனதைத் தொட்டன: உள்ளத்தில் நல்ல உள்ளம் (கர்ணன்) மற்றும் உன் கண்ணில் நீர் வழிந்தால் (வியட்நாம் வீடு)
இசை, பாடல் வரிகள், குரலிலிருக்கும் பாவம் – Outstanding combination. அப்படியே கண்முன்னால காட்சியைக் கொண்டு வந்துடறாங்க. என்ன தெளிவு! என்ன படைப்புத்திறன்!

‘தாய்க்கு நீ மகனில்லை; தம்பிக்கு அண்ணனில்லை;
ஊர்ப்பழி ஏற்றாயடா… நானும் உன்பழி கொண்டேனடா’

இப்படி சீர்காழி கண்ணன் சார்பா பாடும்போது கண்ணு கலங்கிடுச்சுப்பா…

உன் கண்ணில் நீர் வழிந்தால் பாட்டுல ஒவ்வொரு வரியும் பிரமாதம். எதைச் சொல்றது, எதை விடுறதுன்னு தெரியலை. ஒருத்தர் பாடும்போதே மற்றவரோட முகபாவம் நமக்குத் தெரியுதே, சிவாஜி – டி.எம்.எஸ் காம்பினேஷன் போலத் திரும்ப கிடைக்குமா?

கொடை 5:

திரும்பவும் என்னோட வாத்யார் டோலேவோட ‘Power of now’ படிக்க ஆரம்பிச்சிருக்கறது. எத்தனை முறை படிச்சாலும் ஒவ்வொரு முறையும் புதுசு புதுசா தெளிவு பிறக்க வைக்கற நூல் அது. தற்செயலா அலுவலக நண்பரொருவர் எனக்குப் பிடிச்ச நூல்னு நான் இதைச் சொல்லிருந்ததை linked-inல பார்த்துட்டு, தானும் படிக்க ஆரம்பிச்சிருக்கறதா சொன்னார்.

கொடை 6:
சுகன்யா போனவாரம் எழுதிருந்த கொடைகள் எனக்கு நல்ல அதிர்வைக் கொடுத்தன. நன்றிப்பா. போன வாரம் நான் சொல்லலைன்னாலும் உங்களுக்கு ஒரு மின்னூல் அனுப்ப விருப்பப்படறேன். எழுதறீங்களா: LLJ டாட் நிலா அட் ஜிமெயில் டாட் காம்.

கொடை 7:

மடை திறந்து எழுதறது. நான் மிகவும் விரும்பிச் செய்யற ஒரு விஷயமா இருக்கு. நெருக்கமான நண்பர்கள்கிட்டே பாசாங்கில்லாம பேசறது போல ஒர் கொடை உண்டா? தேங்க்ஸ்பா எல்லாருக்கும்…

சொல்ல மறந்துட்டேனே… மேலே சொன்ன நண்பர் ராம்கி, ‘அது சரி, உனக்குக் கேள்வியெல்லாம் வருதே, அதெல்லாம் நீயே எழுதிக்கறதுதானே’ன்னு கேட்டார் . அதெல்லாம் இல்லைன்னு அவருக்குப் புரிய வைக்கறது உங்க கடமை, சரியா?

உண்மையச் சொல்லணும்னா, என்னை நான் கண்டுபிடிக்க உதவினவர்கள்ல ராம்கியும் ஒருவர். இதைப் பற்றி மந்திரச் சிற்பிகள்னு நான் எழுதின கட்டுரை பாருங்க:

http://nilaraj.blogspot.com/2006/03/1.html

சரிப்பா… உங்க வாழ்க்கை எப்படிப் போகுதுன்னும் எழுதுங்க…
Warm hugs
Love you all….

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

6 Comments

  1. கீதா

    நிலா, உங்க கொடைகளில் உங்களைக் கவர்ந்த இரு பாடல்களை இங்கே பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி. எனக்கும் அந்தப்பாடல்களை எப்போ கேட்டாலும் கண்கள் கலங்கும். அப்புறம் மனதைப் பாதித்தவை, நடிகை சுஜாதாவின் மரணமும், ஜப்பானில் மறுபடி இன்று நிகழ்ந்த நிலநடுக்கமும்.

    ஜப்பானின் நிலையைப் பார்க்கும்போது நமக்குக் கிடைத்திருக்கிற இந்த அமைதியான வாழ்க்கையே ஒரு கொடைதான் என்று தோணுது. அதை உணரவைத்ததற்கு நன்றி நிலா.

  2. Suhanya

    Hi
    Nilla min book enake ! enaka ! Tharumi ranjula kuthichukittu irukiren hiyaaaaa!!!! yahoooo…

  3. M RADHAKRISHNAN

    I am Radhakrishnan, Managing Trustee of Smt. Rajeswari Radhakrishnan Charitable Trust. First of all I thank Mr Ramakrishnan for spreading
    the Trust activities to his friends (NILACHARAL) and Mrs and Mr Bhaskaran Ganesan ). I am at the
    age of 60 doing independantly various activities of the Trust, including taking care of 62 visually challenged girl students studying in various city
    colleges (THAMARAI PARVAIATROR ILLAM – This is the Tamil name – read in Tamil). The Trust is arranging KUMBABISHEKAM of
    Sri POORNA PUSHKALAMBIKA SAMETHA HARIHARA PUTHRA DHARMASASTHA TEMPLE, a famous Temple in a remote village,
    Pakkam Paruthiyur on 22-05-2011,.for which one time pooja was arranged for the last 9months by the Trust. The Trust participated in the
    MAHA RUDRA YAGNAM on 10-04-2011 arranged by my GURUJI as also in SRI RAMA NAVAMI celebrations.
    As stated in KODAI 2, If any one helps me in bringing our WEBSITE for theTrust, I will provide details of activities of the Trust.
    All in NILA is very nice and I thank one and all for mentioning the Trust in KODAI 2 and spreading the message. If any one requires
    more details about the Trust, pl. mail – mail2srrct@gmail.com – I will provide some of important events in Nila in the coming weeks.
    Thanks to one and all in the Nila groups.
    M Radhakrishnan

  4. Mamallan

    Kodai 4, yes these songs I feel have excellant healing power. I recently listened to Ezhu swarangalukkul from Apoorva Ragangal, the following lines always ring on my ears, what a wonderful lines these are

    enakkaaga nee azhudhaal iyarkaiyil nadakkum
    nee enakkaaga unavu unna eppadi nadakkum
    namakkenru bhoomiyilae kadamaigal undu – adhai
    namakkaaga nam kaiyaal seyvadhu nanru

    naalaip pozhudhu enrum namakkena vaazhga
    adhai nadaththa oruvanundu koayilil kaanga
    vaelai pirakkum enru nambikkai kolga
    endha vaedhanaiyum maarum maegaththaip poala

    Best Wises Nila, MT is super concept of yours, keep it up

  5. ragavi

    dear neela!

    i liak your sinceair percenality but i am sory i can,t speck very well English but i wish my bottemof my haerd
    raji

Comments are closed.