மடை திறந்து…

முன்பெல்லாம் என்னைத் திறந்த புத்தகம் என்று கடிந்திருக்கிறார்கள் என் நலம் விரும்பிகள் – நினைத்தபடி பேசி, நினைத்தபடி நடந்து… ஒரு அப்பாவிக் குழந்தையாகத்தானிருந்தேன் வெகுகாலமாய். ஆனால் உலகம் எனக்கு கடுமையான பாடங்களைக் கடிந்து கற்றுக் கொடுத்தது. தொட்டாஞ்சிணுங்கியான நான் குவிந்து சுருங்கி ஒரு ஒட்டுக்குள் அடைந்து, சுற்றி ஒரு கோட்டையையும் கட்டிக் கொண்டேன்.

கோட்டைக்குள்ளே வலிந்து வந்து அறிவு புகட்டியது பிரபஞ்ச சக்தி. இந்த அறிவு தந்த விழிப்புணர்வோடு நானே ஏற்படுத்திக் கொண்ட கட்டுக் கோப்புகளை மீறி என் தடைகளை உடைத்துக் கொண்டு, மீண்டும் குழந்தையாய் மாறச் சொல்லி பணித்திருக்கிறது அந்த ஆசான்.

அதனால் மடை உடைத்த நதியாய் ‘ஹோ’வென்று கொட்டப் போகிறேன் மனம் போன போக்கில். இதைத்தான், இப்படித்தான், இவ்வளவுதான் பேசவேண்டும் என்ற கணக்கெல்லாம் வைத்துக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாய் கண்டதையும் பேசப் போகிறேன்.

என்னை உங்களுக்கு எவ்வளவு தெரியும், எப்படித் தெரியும், என்னவாகத் தெரியும் என்பதெல்லாம் இங்கே தேவையில்லை. இரயில் பயணத்தில் சந்திக்கும் ஒரு பயணி போல புதிதாய், காஷுவலாய் ஆரம்பிப்போம். இங்கே நான்தான் பேசவேண்டும் என்பதில்லை. நீங்களும் கேள்வி கேட்கலாம்; கருத்துத் தெரிவிக்கலாம்; பகிர்ந்து கொள்ளலாம்… சரிதானே?

சரி… எனக்கு இப்போ பேச்சுத் தமிழுக்கு மாறணும் போல இருக்கு. போன வருஷம் ஒண்ணுமே எழுதலைங்க… புதிய பார்வைல காலம் தவறாம பத்தி எழுதுன அழுத்தம்னும் நினைக்கிறேன். அது முடிஞ்சதும் எழுதவே தோணலை. ஜனவரி முதல் தேதி அமுதென்றும் நஞ்சென்றும் நூலுக்கு என்னுரை எழுதி அனுப்பி வைச்சேன் ஒரு வழியா. அதுக்கப்பறம் ஏதாவது எழுதணும்னு ஒரே நமைச்சல். நேத்திக்குத்தான் இந்த ஐடியா தோணுச்சு. இதோ ஆரம்பிச்சாச்சு.

நான் நவம்பர்ல புது வேலைக்கு மாறினேன். இந்த புது அலுவலகத்துக்குப் போறதுக்கு சுரங்க இரயிலும் பயன்படுத்தணும். இதில பயண நேரம் என்னவோ 8 நிமிஷம்தான். ஆனா எரிச்சலான பயணம். தவிர, இதில ஏதாவது ஒரு பிரச்சினைன்னா… You are stuck! (இது வேற அடிக்கடி நடந்து தொலையும்!) என்ன பண்றதுன்னே தெரியாது. டாக்ஸி எடுக்கலாம்தான். ஆனா செலவும் அதிகம்; கூட்டமும் அலை மோதும். இப்படி ஏதாவது நடக்கும்போது நான் பாட்டுக்கு வேடிக்கை பார்த்துட்டு கொஞ்ச நேரம் நிற்பேன். பிரச்சினை தன்னால சரியாயிடும். ஆனா போன வெள்ளிக்கிழமை, ஜுபிலி லைன் ஓடவே இல்லைன்னுட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சேன். எப்பவோ அன்னாமரி படகுல அலுவலகம் வந்தது பற்றி சொன்னது நினைவு வர, தேம்ஸ் நோக்கி நடையைக் கட்டினேன். அங்கே பார்த்தா ஒரு கி.மீ நீளத்துக்கு வரிசை. எப்படியோ படகுல ஏறினப்பறம் ராஜுவுக்கு ஃபோனடிச்சு, ‘உன் அதீத கற்பனையை ஒடவிட்டாக் கூட நான் இப்போ எங்கே இருக்கேன்னு நீ ஊகிச்சுக்க மாட்டே’ அப்படின்னேன். அவர் அந்தப் பக்கம் முழிமுழின்னு முழிச்சது என் ஞான திருஷ்டில தெரிய, ‘நான் இப்போ போட்ல இருக்கேன்’ அப்படின்னேன். விழுந்து விழுந்து சிரிச்சார். ‘நீ இன்னும் ஹெலிகாப்டர்லதான் ஆஃபீஸ் போகலை’ன்னார்!

கிடைச்ச சந்தர்ப்பத்தில வியூவையும் கடற்பறவைகளையும் ரசிச்சுக்கிட்டே ஒரு வழியா ஒண்ணரை மணி நேரம் தாமதமா ஆஃபீஸ் போய்ச் சேர்ந்தேன். பாதிப் பேர் வந்தே சேர்ந்திருக்கலை. நமக்குத்தான் ஐடியாவுக்குக் குறைச்சலே இருக்காதே. அதனால, இப்படிப்பட்ட சூழலைச் சமாளிக்க சில உத்திகள்னு மக்களுக்கெல்லாம் ஜாலியா ஒரு மெயில் அனுப்பிச்சேன். அது அப்படியே பத்திக்கிச்சு. என்னைப் போலவே பலரையும் ஜுபிலி லைன் ரொம்பவே கடுப்பேத்தி இருக்குன்னு தெரிஞ்சது. விளையாட்டா அலுவலக லொகேஷனை மாத்திறலாம்னு நான் சொல்லி இருந்த ஒரு யோசனைக்கு நிறைய ஆதரவிருந்தது… எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! ஜுபிலி லைன் கொடுமைலர்ந்து தப்பிக்க வழியே இல்லையான்னு புழுங்கிக்கிட்டிருந்த எனக்கு இப்படிக்கூட ஒரு சாத்தியம் இருக்குன்னு தெரிஞ்சதே கொஞ்சம் நிம்மதியா இருக்கு. Law of Attraction (தமிழ்ல இதைக் கவர்ச்சி விதின்னு சொல்லணுமோ?) என்ன சொல்லுதுன்னா, உனக்கு என்ன வேணும்னு மட்டும் முழுமையா ஆசைப்படு; அது எப்படி வரணும்ங்கறதை பிரபஞ்சத்துக்கிட்டே விட்ரு. அதுதான் எனக்கு இங்கே நினைவு வந்தது.

ஃபேஸ் புக்ல ராஜுவுக்கு பிடிச்ச ஒரு புகைப்படம் போட்டிருந்தேன். பல பேர் பிடிச்சிருக்குன்னு சொல்லிருந்தாங்க. பொதுவா எனக்கு நல்லா உடுத்திக் கொள்ள ரொம்பப் பிடிக்கும். அதுக்காக அதிகமாக செலவு பண்ண மாட்டேன். ஆனா ஸ்மார்ட்டா செலக்ட் பண்றேன்னு எனக்கு ஒரு நினைப்பு!!! (சரி… சரி… கொஞ்சம் விட்டுப்பிடிங்கப்பா ;-)). என்னோட உடை செலக்ஷன்/ கலெக்ஷன் பல பாராட்டுகளைப் பெற்றிருக்கு (சத்தியமா). அதனால ஒவ்வொரு வாரமும் என்னோட வார்ட்ரோபைப் பற்றியும் கொஞ்சம் பகிர்ந்துக்கலாம்னு பாக்கறேன்.

 
 
 

இந்த ஃபோட்டோல நான் கட்டியிருக்கற புடவை 94ல என்னோட அண்ணன் கல்யாணத்துக்காக எங்க வீட்ல எனக்கு வாங்கிக் கொடுத்தது. அம்மாவோட செலக்ஷன். என்னால போக முடியலை.

நான் போட்டிருக்கற ப்ளவுஸ் 95-96ல தைச்சது. (ஆஹா… இன்னும் அது எனக்குப் பத்துதே!) பின் கழுத்தில நெளிநெளியான ஷேப்புக்கு பொருத்தமா ரொம்ப அழகான ஒரு ஜரிகை டிசைன் இருக்கும். வளசரவாக்கம் சித்ரா டெய்லர்ஸ் கைவண்ணம்.

ஹேர்கட் – போன மாதம் இந்தியா போயிருந்தப்போ சோனுவைத் தேடிப்போய் வெட்டினது. (கன்யா, ராதாகிருஷ்ணன் சாலை, சென்னை)

சரி… அப்புறம் பார்ப்போமா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா.

About The Author

6 Comments

  1. chitra

    நிலா ரொம்ப ரொம்ப சந்தோஷம். மீண்டும் உற்சாகத்தைப் பார்த்ததில்.!எங்களையும் பற்றிக் கொள்கிறது,,,!

  2. shree

    அன்பு நிலா,

    சிறிது நாட்களுக்கு முன்பு ‘நிலாச்சாரலை’ நிறுத்தி விடப் போவதாகச் சொன்னபோது மிகவும் வருத்தமாக இருந்தது. கடந்த 3 வருடங்களாக நிலாச்சாரல் வாசகி நான். என்னுடைய எழுத்துகளும் நிலாச்சாரலில் வந்தது என்பது கூடுதல் மகிழ்ச்சி! இப்போது மீண்டும் உங்கள் பழைய உற்சாகம் மீண்டிருப்பதைப் பார்த்து எனக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது! நோய் மட்டும்தான் தொற்றுவது என்பதல்ல… மகிழ்ச்சியும், உற்சாகமும் கூட அப்படித்தானே!

  3. Vijaya Amarnath

    அன்பு நிலா,
    உங்களை மறுபடியும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
    உங்கள் உற்சாகமும், சந்தோஷமும் எங்களையும் பற்றிக்கொள்கிறது.
    வாழ்க வளமுடன்.

  4. Radha

    Dear nila welcome….. peasateriyatha engalukkku peachu vanthathu pola irukku ,,,, vanga urchagama peasungaaa….. welcome.

  5. அரிமா இளங்கண்ணன் என்னும் பே.பாலகிருஷ்ணன்

    நீண்ட காவத்துக்குப்பின் நிலாச்சாரலில் உங்களைக் கண்டு மகிழ்ச்சி.

Comments are closed.