மிளகு பச்சைப் பயறானது

கேரள மாநிலத்தில் பாறை என்னும் பகுதியில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது. அம்மனின் பெயர் மாங்கரை அம்மன். மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது!

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். இதைத் திருப்பூரைச் சேர்ந்த செட்டியார் சமூகம் பராமரித்து வருகிறது. ஆலயம் வடக்கு நோக்கி இருக்கிறது. நுழைவாயிலை அடைந்தால் சில படிகள் கீழே இறங்கிப் போகின்றன. இறங்கினால், அங்கு அழகான கணபதியைக் காண முடிகிறது. கணபதியின் அருள் பெற்று நகர, அங்கே ஒரு பெரிய வாயில் நம்மை வரவேற்கிறது. அங்கு அம்மன் தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. அன்னையின் அழகைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. கருணையான கண்கள், மெல்லிய உதடு, புன்னகை பூக்கும் முகம். கண் கொட்டாமல் பார்த்து மகிழத் தோன்றுகிறது. அன்னையின் வலப்புறம், கிழக்குப் பக்கம் பார்த்து ஈசன் எழுந்தருளியிருக்கிறார். லிங்க வடிவில் இருக்கும் அவருக்குப் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இவர் அருகில் மேலும் நான்கு சன்னதிகள் இருக்கின்றன. ஒன்றில் அவருக்குப் பிரணவ மந்திரம் ஓதிய அவர் செல்ல மைந்தன் முருகன், வள்ளி தெய்வானையுடன் தம்பதி கோலமாக நின்று அருள்புரிகிறார். மற்றவற்றில் விசாலாட்சி, நடராஜர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

இந்த அம்மன் எழுந்தருளியது ஓர் அதிசய வரலாறு! அந்தக் காலத்தில், வணிகர்கள் சிலர் திருச்சியிலிருந்து கேரளாவுக்கு வியாபார நிமித்தம் அடிக்கடி செல்வது வழக்கம். அவர்கள் இங்கிருந்து பாசிப்பயற்றை எடுத்துச் சென்று விற்று, அங்கிருந்து குறுமிளகு வாங்கி வருவார்கள். திரும்பி வரும்போது களைப்பு ஆற பாறை ஊரில் வந்து இரவில் தங்கிவிடுவார்கள். ஒரு சமயம் இதுபோல் இரவில் தங்கியிருந்தபோது, ‘ஜில் ஜில்’ என்று கொலுசுச் சத்தம் கேட்டது. அந்த இரவில், ஒரு சிறுமி வந்து நின்றாள். கொல்கொல்லென்று இருமினாள். வியாபாரிகளில் ஒருவன் விழித்துப் பார்த்தான்.

“யார் நீ? உனக்கு என்ன வேண்டும்?” என்று சிறுமியைக் கேட்டான்.

“எனக்குத் தலைவலி. கூடவே இருமலும். தலைக்கு மிளகுப் பற்று போட்டுக்கொள்ளக் கொஞ்சம் மிளகு வேண்டும்!” என்றாள்.
“எங்களிடம் ஏது மிளகு? இந்த மூட்டைகளெல்லாம் பாசிப்பயறு மூட்டைகள். வேறு எங்கேயாவது போய்க் கேள்” என்றான் வியாபாரி. சிறுமி, முகத்தில் புன்னகை தவழ அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

மறுநாள் காலை.

வியாபாரிகள் மிளகு மூட்டைகளுடன் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். பின், தங்கள் இடமான நாகப்பட்டினத்திற்கு வந்து மூட்டைகளைப் பிரித்தனர். ஆனால், அவற்றில் மிளகு இல்லை. எல்லாம் பச்சைபயறாக இருந்தன.

“ஐயோ! என்ன காரியம் செய்தோம்! சிறுமியிடம் பொய் சொல்லிவிட்டோமே! அந்தச் சிறுமி கடவுள் வடிவமாக இருப்பாளோ?” என்று வருந்தி எல்லோரும் அன்னையிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். சிறுமி வந்த இடத்தில் அன்னைக்கு ஆலயம் கட்டுவதாகவும் வேண்டிக் கொண்டனர். உடனே, என்ன ஆச்சரியம்! மூட்டைகளில் இருந்த பச்சைப்பயறெல்லாம் குறுமிளகாய் மாறின! வணிகர்கள் தம் வாக்கைக் காப்பாற்ற பாறையில் அம்மனுக்கு இந்தக் கோயிலைக் கட்டினர்.

கோயில் காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு 11 மணி வரை பூஜை, அபிஷேகம் எல்லாம் நடைபெறுகின்றன. பின், மாலை ஐந்திலிருந்து இரவு எட்டு மணி வரை. உற்சவமூர்த்தியின் ஊர்வலம் அடிக்கடி நடைபெறுகிறது. பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சதுர்த்தி, கிருத்திகை எல்லாம் மேளதாளத்துடன் கொண்டாடப்படுகின்றன. ஆடியில் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகளைப் பார்க்கக் கூட்டம் அலைமோதுகிறது. விஷு பண்டிகையும் மிகவும் சிறப்பாக நடத்தப்படுகிறது. முருகனின் விழாவான சூர சம்ஹாரம், அதன் பின் நடக்கும் கல்யாண உற்சவம் காண மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். மார்கழி மாதம் முழுவதும் விழாதான். முதல் நாள் கொடியேற்றம், கடைசி நாள் ஊஞ்சல் சேவை, பின் பஞ்ச மூர்த்தி ஊர்வலம். அதில் சிவன் யானை வாகனத்தில் எழுந்தருளுகிறார். நந்தி வாகனத்தில் சந்திரசேகரர் – சௌந்திரவல்லி காட்சியளிக்க, மூஷிக வாகனத்தில் கணபதியும், காமதேனு வாகனத்தில் பார்வதியும் தரிசனம் அளிக்கிறார்கள். எல்லாவற்றையும் பார்க்கக் கோடிக்கண்கள் வேண்டும்! கடைசியில், சக்கர வாகனத்தில் மாணிக்கவாசகரும் ஊர்வலம் வருகிறார்.

இந்தக் அம்மனைப் பிரார்த்திக்கத் தீராத வினைகளும் தீர்ந்து பாபங்கள், தோஷங்கள் நீங்கி நோய்களும் மறைந்து போய்விடுகின்றனவாம்.

About The Author