வாரம் ஒரு பக்கம் (9)

"நீங்கள் சுவர்க்கத்திலிருந்து வருகிறீர்களா?" என்று புத்தபிரானைக் கேட்டார்கள். "இல்லை" என்று பதிலளித்தார் அவர். " நீங்கள் தெய்வீக மனிதரா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றதும், " அப்படியானால் நீங்கள் யார்?" என்று கேட்டார்கள்.

"நான் தூய உணர்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. என்ன இருக்கிறதோ அதை அப்படியே காட்டுகிறேன்" என்றார் அவர்.

புத்தபிரான் வழங்கிய அற்புதமான செய்தி இது! இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் வெறும் நிலைக் கண்ணாடியாக நமது மனம் இருக்க முடியுமா? பெரும்பாலும் நம் மனம் காமராவைப் போன்றது. பிம்பங்களையெல்லாம் சேமித்து வைத்துக் கொள்கிறது. நம் தேவையற்ற பற்றுக்களும் பாசங்களும் எண்ணங்களுமே அவற்றைச் சேர்த்து வைத்துக்கொள்கின்றன. மாறாக, புத்தர் போல் நிலைக் கண்ணாடியாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இப்போது என்ன இருக்கிறதோ அதையே பிரதிபலிக்க வேண்டும். கடந்த கால நினைவுகளைச் சுமந்துகொண்டு வீணாக மனதில் பளுவை ஏற்றிக் கொள்ளக் கூடாது. இந்த முறையைக் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் அற்புதம் நிகழும். பறவையின் சிறகு போல மனம் இலேசாகும்.

மகிழ்ச்சியற்ற மனம் சுவர்க்கத்தில் இருந்தால் கூட அதை நரகமாக்கி விடும். மகிழ்ச்சியுள்ள மனம் நரகத்தையும் சுவர்க்கமாக்கி விடும். சுவர்க்கமும் நரகமும் நமது மன நிலைகள்தான்.

இந்த வார ‘ஊருக்கு உபதேசம்‘…

மனம் ஒரு மந்திரச் சாவிங்க! அதனால் சுவர்க்கத்தையும் திறக்கலாம், நரகத்தையும் திறக்கலாம். எதைத் திறக்க வேண்டுமென்பது நம் கையில்தானே!

நன்றி: ‘புதிய கோணத்தில் எண்ணிப் பார்’ – சுவாமி சுகபோதானந்தா.

About The Author