வெற்றிக்கலை இரண்டாம் பாகம்: (15)

எமர்ஸனின் அறிவுரை: இயற்கையை நேசியுங்கள்!

எமர்ஸனின் அறிவுரை

மிகப் பெரும் அறிஞரான எமர்ஸன் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தவர். "அவரது எழுத்துக்கள் எல்லோருக்குமாக எழுதப்பட்டவை" என்று அறிஞர்கள் புகழ்கின்றனர். வாழ்நாளில் ஒரு முறையேனும் அவர் எழுதிய இயற்கை (NATURE) என்னும் கட்டுரையைப் படித்தே ஆக வேண்டும்.

"இயற்கை அளப்பரியது. இயற்கைக்கு, கஞ்சத்தனமின்றி வாரி வழங்கும் தன்மை உள்ளது. இயற்கையை நேசியுங்கள்! இயற்கை மர்மங்களை அறியுங்கள்!" – இப்படியெல்லாம் அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். அவரது நூல்கள் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அரிய பொக்கிஷங்கள் அவை.

அவற்றிலிருந்து மாதிரிக்காக ஒரே ஒரு கட்டுரையின் சில வரிகளைக் குறிப்பிடலாம்:

"A little consideration of what takes place around us every day would show us, that a higher law than that of our will regulates events; that our painful labors are very unnecessary, and altogether fruitless; that only in our easy, simple, spontaneous action are we strong, and by contenting ourselves with obedience we become divine. Belief and love, — a believing we love will relieve us of a vast load of care. O my brothers, God exists."

நம்மைச் சுற்றி ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது என்பதைச் சிறிது ஆலோசித்துப் பார்த்தோமானால் உயரிய விதி ஒன்று நமது நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதைக் காணலாம். நம்முடைய துன்பகரமான கடும் உழைப்புகள் தேவையற்றவை, பயனற்றவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். நம்முடைய சுலபமான, எளிதான, இயல்பான செயல்களிலேயே நாம் வலுவுடையவர்களாக இருக்கிறோம். கீழ்ப்படிதலுடன் திருப்தியுறும்போது நாம் தெய்விக நிலை உடையவராகிறோம். நம்பிக்கையுடனான அன்பு பெரும் பளுவை நம்மிடமிருந்து அகற்றும். ஆஹா! எனது அருமைச் சகோதரர்களே! கடவுள் இருக்கிறார்!"

அற்புதமான இந்த வரிகள் எவ்வளவு ஆறுதலை அளிக்கின்றன! வெற்றிக்கான வழிகள் இதில் எவ்வளவு பொதிந்து கிடக்கின்றன!

இயற்கை இரகசியங்கள்

இயற்கை எதிலும் எங்கும் தன் ஆற்றலை முழு வீச்சுடன் காண்பிக்கிறது. அது மனித உடலானாலும் சரி, பிரபஞ்சமானாலும் சரி – பிண்டமானாலும் சரி, அண்டமானாலும் சரி, அதன் இரகசியங்கள் ஏராளமானவற்றைக் காணலாம். இவற்றை உணர்ந்து எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு சரியான வகையில், நமக்கு உகந்த வகையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்!

ஏராளமான மர்ம இரகசியங்களில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

1)வாழும் இடத்தைத் தேர்ந்தெடுத்து ஐம்பூதங்களையும் நமது வெற்றிக்கு ஏற்றதாக ஆக்கிக் கொள்ளும் வாஸ்து சாஸ்திரம்.
2)உடல் நலம் பேண இயற்கை மூலிகைகள், இயற்கை உணவுகளை அறிய வைக்கும் ஆயுர்வேதம்.
3)இடத்திற்கும், நேரத்திற்கும், செய்யும் தொழிலுக்கும், பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவும் மலர் மருத்துவம்.
4)கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையை நமது நிலையுடன் இயைந்து இயக்கச் செய்து நலம் பெற வைக்கும் ஜோதிடம்.
5)அன்றாடச் செயல்கள் – அவை சிறியவையானாலும் சரி, பெரியவையானாலும் சரி – வெற்றி பெற வழி காண்பிக்கும் ஸ்வரோதய விஞ்ஞானம். (நமது சுவாசம் ஒரு சமயத்தில் மூக்கிலுள்ள இரு துவாரங்களில் ஒரு துவாரம் வழியே மட்டுமே சுவாசிக்கப்படுகிறது. சீரான இடைவெளியில் அடுத்த துவாரத்திற்கு நம்மை அறியாமலேயே மாறுகிறது. எந்தக் கலையில் – அதாவது துவாரத்தில் – மூச்சு வருகிறது, நாம் செல்லும் திசை என்ன என்பன போன்றவற்றை வைத்து வெற்றி காண்பது ஸ்வரோதய விஞ்ஞானம்).
6)இதன் அடிப்படையில் அமைந்துள்ள பிரஸ்னம்.
7)மகிமை வாய்ந்த மந்திர ஒலிகள் மூலம் வெற்றி காணுதல்.
8)தெய்விக வரைபடங்கள் எனப்படும் யந்திரங்களை அமைத்து வெற்றி காணுதல்.
9)இசையை ஒலிக்கச் செய்து மேன்மையுறல்.
10)ஒலிக்கேற்பப் பெயரை மாற்றி அமைத்து எண்கணித சாஸ்திரம் மூலம் வெற்றி பெறல்.
11)செல்லும்போது ஏற்படும் நிமித்தங்களை அறிந்து அதன் மூலம் வெற்றி காணுதல்.
12)குறித்த நேரத்தை வெற்றிக்கு உகந்த நேரமாகத் தேர்ந்தெடுத்தல்.
13)வலிமை வாய்ந்த வார்த்தைகள் எனப்படும் SWITCH WORDSகளைப் பயன்படுத்தி வெற்றி பெறல்.
14)மகான்கள், அருளாளர்கள் இயற்றிய பாடல்கள், ஸ்தோத்திரங்களை முறைப்படி உச்சரித்துப் பிரச்சினைகளைத் தீர்த்தல், அல்லது பிரச்சினைகளே தோன்றாதவாறு வாழ்தல்.
15)சக்தி வாய்ந்த ஆலயங்களுக்கு யாத்திரை.
16)ஒழுக்க நெறிகளை போதிக்கும் அன்றாட அல்லது வாழ்வின் பல்வேறு நிலைத் தரங்களில் செய்ய வேண்டிய விழாக்களை நடத்துதல்.
17)மகான்களின் ஆசிகளையும், தாய் தந்தையர் போன்ற பெரியோரின் ஆசிகளையும் பெறுதல்.
18)முன்னோர்களுக்கு உரிய கடன்களை உரிய நாட்களில் செய்தல்.
19)விரதம் போன்ற ஆயுளை நீட்டிக்கும், பல்வேறு பேறுகளைத் தரும் உத்திகளை மேற்கொள்ளல்.
20)சம்பாதித்த பொருளிலிருந்து ஏழைகளின் பசி தீர்க்க அன்னதானம், தண்ணீர் தானம், ஞான தானம் எனப்படும் புத்தகம் வழங்கல், பல்வேறு கலைகளைக் கற்றுக் கொடுத்தல்.

என இப்படிப் பட்டியல் நீளுகிறது. இயற்கை நமக்காக வடிவமைத்துள்ள ஏராளமான வழிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த இயற்கை வழிகள் மூலமாக முன்னேறி வெற்றி பெற்றோரின் லட்சக்கணக்கான சம்பவங்களை நூல்களில் படித்து உத்வேகம் பெறலாம். இயற்கையின் வழிகள் தனி. அவற்றின் விதிகள் தனி. அதன் செயல்பாடுகள் தனி. இவற்றைத் தெளிவாக விளக்கும் அறநூல்கள் வாயிலாகவும், வல்லார் வழியாகவும் உத்திகளைக் கற்று வெற்றி பெறலாம்.

ஆக இயற்கையை உற்றுக் கவனித்து அதன் மர்மங்களை அறிந்து அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவோருக்கு வெற்றி நிச்சயம்!

–வெல்வோம்…

About The Author