வெற்றிக்கலை-Part II -(2)

படேரெவ்ஸ்கியின் அறிவுரை: பயிற்சி செய்யுங்கள்!

ஒரு பியானோவின் கதை

நேஷனல் மியூஸியம் ஆஃப் அமெரிக்கன் ஹிஸ்டரியில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ள அழகிய பியானோ ஒன்றின் மீது கறுப்பு மையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் இவை:

"This piano has been played by me during the season 1892-1893 in seventy-five concerts". – I.J.Paderewski

படேரெவ்ஸ்கி ரகசியம்

பியானோ வாசிப்பதில் அபார மேதையான படேரெவ்ஸ்கி இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 12 மணி நேரம் வாசிப்பதுண்டு. அவரது வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டபோது அவர் கூறினார் இப்படி:

"If I don’t practice for one day, I know it; If I don’t practice for two days, the critics know it; If I don’t practice for three days, the audience knows it!" (ஒரு நாள் நான் பயிற்சி செய்யாவிட்டால், அதன் விளைவை என்னால் உணர முடியும்; இரண்டு நாட்கள் செய்யாவிட்டாலோ விமரிசகர்கள் அதைக் கண்டுபிடித்து விடுவார்கள்; மூன்று நாட்கள் நான் பயிற்சி செய்யாவிட்டாலோ பார்வையாளர்களுக்கே அது தெரிந்து போகும்!).

பியானோ வாசிப்பதில் ஓர் அற்புத அனுபவத்தை ஏற்படுத்திய அவரின் இசை நிகழ்ச்சிகளைப் பற்றி லண்டன் நியூஸ் பேப்பர் ஒன்று ‘பாடிமேனியா’ (Paddymania) என்று குறிப்பிடும் அளவு அவர் ரசிகர்களை ஈர்த்தார். 1892ஆம் ஆண்டு அவர் ‘’MASS WONDER’ ஆகி விட்டார். அவர் பியானோ வாசித்த இடம் எல்லாம் மக்கள் வெள்ளம்தான்!

வெற்றி பெறத் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் என்பதே அவர் அனைவருக்கும் கூறும் ரகசியம்!

ஒரு வில்வீரனும் எண்ணெய் வியாபாரியும்

சீனாவில் தொன்று தொட்டு வழங்கி வரும் பழங்கதை ஒன்று உண்டு.

ஒரு வில்வீரனைப் பற்றியும் எண்ணெய் வியாபாரி ஒருவனைப் பற்றியும் கூறும் கதை அது.
சிறந்த வில்லாளி ஒருவன், தொலைவில் இருக்கும் குறியைக் கூட ஒரே அம்பினால் தவறாமல் அடிக்க வல்லவன். முதலில் குறியை அடித்தபின் அடுத்த அம்பினால் முதல் அம்பையும் அவன் பிளந்து விடுவான்.

தனது திறமையை ஊர் ஊராகச் சென்று காண்பித்துப் பாராட்டுகளைப் பெறுவது அவன் வழக்கமானது.

ஒரு நாள் வழக்கம்போல ஓர் ஊரில் தனது வித்தையைக் காட்ட ஆரம்பித்தான். முதல் அம்பினால் குறியை அடித்தவுடன் கூட்டத்தினர், "ஆஹா! பிரமாதம்" என்று கூவி ஆரவாரித்தனர். ஆனால், கூட்டத்தில் ஒரு குரல் மட்டும், "இது பயிற்சியினால் வருவது" என்று கூறியது. இதைக் கேட்ட வில்லாளி சற்றுத் திகைத்தான். என்றாலும் தனது வித்தையைத் தொடர்ந்து செய்து, தனது அடுத்த அம்பினால் முதல் அம்பைப் பிளந்தான். இதைப் பார்த்த கூட்டத்தினர், "ஆஹா! என்ன அதிசயம்!! பிரமாதம்" என்று இன்னும் உரக்கக் கூவினர். ஆனால், முதலில் ஒலித்த அதே குரல் இந்த முறையும், "ஹூம்! இது பயிற்சியினால் அடையப்பட முடியும்!" என்றது. வில்லாளி குரல் வந்த திசையை நோக்கினான்.

அதைக் கூறியவன் ஒரு எண்ணெய் வியாபாரி. மூங்கில் ஒன்றின் இரு முனைகளிலும் எண்ணெய்ப் பாத்திரத்தைத் தொங்க விட்டு, அந்த மூங்கிலைத் தோளில் போட்டுக் கொண்டிருந்தான் அவன். ஊர் ஊராகச் சென்று எண்ணெய் விற்பது அவன் வழக்கம்.

கூட்டம் கலைந்த பிறகு வில்லாளி அவனைச் சந்தித்து, "சாதாரண எண்ணெய் வியாபாரி நீ! உனக்கென்ன தெரியும் வில்வித்தை பற்றி? எனது குறி பிரமாதமாக இருப்பதால்தானே என்னை உலகமே மெச்சுகிறது?" என்றான்.

எண்ணெய் வியாபாரியோ, "இல்லை! இது பயிற்சியினால் பெறப்படுவது! உதாரணமாக, இதோ என்னைப் பார்!" என்றான்.

ஒரு முனையில் இருந்த எண்ணெய் பாத்திரத்தை எடுத்து அதை மூடியிருந்த சிறிய மூடியை எடுத்தான். அதில் ஊசி அளவு ஓட்டை ஒன்று இருந்தது. அந்தச் சிறிய ஓட்டையின் வழியே எண்ணெயைச் சிந்தாமல் இன்னொரு பாத்திரத்தில் ஊற்றினான்! "இது உன் முறை. இப்படி நீ நிரப்பிக் காட்டு பார்ப்போம்!" என்றான் அவன்.

வில்லாளி இப்போது புரிந்து கொண்டான். பயிற்சியினால் மட்டுமே அதைச் செய்ய முடியும் என்று!
காலம் காலமாக, சீனாவில் கல்வியை ஆரம்பிக்கும்போது அல்லது எந்த ஒரு கலையையும் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கும்போது இந்தக் குட்டிக் கதையைச் சொல்வது வழக்கம்!

சற்று யோசித்துப் பார்த்தால், வாழ்க்கையில் வெற்றி பெற மகத்தான உத்தி ஒன்று இதில் அடங்கி இருப்பது தெரியும்!

ஆமாம், பயிற்சியினால் எதையும் சாதிக்க முடியும்!

–வெல்வோம்

About The Author