ஸ்வர்ண லோகம் ( 18)-இதோ ஒரு கோப்பை டீ, எடுத்துக்கொள்ளுங்கள்!

மூ என்பது அனுபூதி மூலமே உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு தத்துவம். இதை நன்கு உணர்த்தியவர் மாஸ்டர் சாவோ சௌ சங்-ஷென். அவரை ஜோஷு என்றும் அழைப்பர்.

ஒருநாள் ஒரு புத்திக்கூர்மை மிக்க புத்த பிக்ஷு ஜோஷுவை அணுகினார். பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற பொருட்கள் அனைத்தும் ஒன்றுக்கு (மூலத்திற்குத்) திரும்பிவிட்டால் ஒன்று (மூலம்) எதற்குத் திரும்பும்?" என்று கேட்டார். அந்த பிக்ஷு கந்தவ்யூஹா சூத்திரத்தை நன்கு பயின்றவர். அதில் உள்ள ஒரு சூத்திரம் சொல்லும் "மூன்று உலகங்களில் உள்ள அனைத்தும் ஒரே மனதிற்குள் அடங்கி விட்டது" என்பதை நினைவில் கொண்டு, "அனைத்துமே கடவுளிடம் திரும்பி விட்டால் கடவுள் எங்கே திரும்புவார்?" என்று கேட்க நினைத்தார். இதை இன்னொரு விதமாகச் சொல்வது என்றால், "கடவுள் இந்த உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார்?" என்று சொல்லலாம். அதைத்தான் இப்படிக் கேட்டார் அந்த பிக்ஷு.

இதே கேள்வியை செயிண்ட் அகஸ்டைனிடம் ஒருவர் கேட்டபோது, உடனே அவர், "இப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கான நரகத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்" என்று பதில் அளித்தாராம்!

ஆனால் ஜோஷுவோ, "நான் சிங் மாகாணத்தில் ஏழு பவுண்ட் எடையுள்ள ஹெம்ப் சட்டை (ஹெம்ப் என்பது ஒரு வகையான தாவரம். இதன் இழைகள் சட்டை தயாரிக்கப் பயன்படும்.) ஒன்றை வைத்திருந்தேன்" என்று பதில் அளித்தார்! இது என்ன பதில், பொருத்தமான பதிலாக இல்லையே என்று தோன்றும். ஆனால் ஜோஷு சரியான பதிலைத்தான் அளித்திருந்தார். புத்திசாலியான பிக்ஷு ஜோஷுவை "சூன்யம்" அல்லது "ஒன்றுமில்லை" என்ற பதிலைச் சொல்லுமாறு கேள்வியைத் தயாரித்திருந்தார். ஆனால் ஜோஷுவோ அதை நன்கு உணர்ந்து பிக்ஷுவின் வலையில் விழவில்லை! தத்துவ ரீதியாகப் பார்த்தால் இந்தக் கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது!

ஆகவே ஜோஷு பிக்ஷுவிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்து அவரை நிதரிசனமான இன்றைய நிலைக்கு அழைத்து வந்தார். ஏழு பவுண்ட் எடையுள்ள ஹெம்பினால் ஆன சட்டையைத் தொட்டுப் பார்க்க முடியும், அணிய முடியும், அது நைந்து கிழிந்து போகும்.

மேலும் ஜோஷு சட்டையை கடவுள் என்ற மூலத்துடன் ஒப்பிட்டார். பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற பொருட்கள் அனைத்தும் இந்த "ஒன்றே ஒன்றுதான்". ஒன்று ஏழுக்குச் சமம். ஏழு ஒன்றுக்குச் சமம். ஒன்று எண்ணற்ற அனைத்திற்கும் சமம்!!! ஆனால் சட்டையை அணிந்து அனுபவித்து நேரடி ஸ்பரிசத்தினால் உணர்வதன் மூலம் "ஒன்றே ஒன்றாக" இருக்கும் மூலமான சத்தியத்தை உணர முடியும். வெறும் எண்ணத்தால் மட்டும் அதை அறிய நினைத்தால் அது முடியாது.

இந்த அரிய பெரிய உண்மையை ஜோஷு தனது பதில் மூலம் பிக்ஷுக்கு அளித்தார்.

ஒரு கேள்விக்கு "இதை விளக்குவது கஷ்டம்" என்றோ, "அதை விளக்கவே முடியாது" என்றோ பதில் சொல்லி வார்த்தைகளின் எல்லையைத் தாண்டி அது இருக்கிறது என்பதை சொல்வது வழக்கம். சாதாரண விஷயங்களுக்கே இப்படிச் சொல்வது வழக்கம் என்றால் பேருண்மையை எப்படி வெறும் வார்த்தைகள் மூலமாக விளக்க முடியும்?

இப்படி வார்த்தைகள் மூலமாக விளக்க முடியாத கோயன்களை கான்சென் கோயன்கள் என்று சொல்வது வழக்கம்.

ஜோஷு வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை கான்சென் கோயன் விளக்கத்திற்கு உதாரணமாகச் சொல்ல்லாம்.

ஒரு நாள் ஊரெங்கும் சுற்றும் ஒரு பிக்ஷு ஜோஷுவைப் பார்க்க வந்திருந்தார். அவரை நோக்கி ஜோஷு, " நீங்கள் இதற்கு முன்னர் இங்கே வந்ததுண்டா?" என்று வினவினார். அந்த பிக்ஷு, "ஓ! வந்திருக்கிறேனே!" என்றார். உடனே ஜோஷு, "இதோ, ஒரு கோப்பை டீ, எடுத்துக் கொள்ளுங்கள்!" என்றார். இன்னொரு பிக்ஷுவும் அங்கே வந்திருந்தார். அவரை நோக்கிய ஜோஷு," நீங்கள் இதற்கு முன்னர் இங்கே வந்ததுண்டா?" என்று வினவினார். அதற்கு அந்த பிக்ஷு, "இல்லை, நான் வந்ததில்லை" என்றார். உடனே ஜோஷு, "இதோ, ஒரு கோப்பை டீ, எடுத்துக் கொள்ளுங்கள்!" என்றார். இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஜோஷுவின் பணியாளர் அவரை நோக்கி, " மாஸ்டர்! என்ன இது? வந்திருக்கிறேன் என்று சொன்னவருக்கும் ஒரு கோப்பை டீயை எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். வரவில்லை என்று சொன்னவருக்கும் ஒரு கோப்பை டீயை எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறீர்கள்! ஏன் இப்படிச் சொன்னீர்கள்?"என்று வியப்புடன் கேட்டார். ஜோஷு அந்தப் பணியாளரின் பெயரைச் சொல்லி அழைத்தார். உடனே அவர், "என்ன மாஸ்டர்?" என்றார். உடனே ஜோஷு, " இதோ, ஒரு கோப்பை டீ, எடுத்துக் கொள்!" என்றார்!

பணியாளர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவரது பெயரைச் சொல்லி அழைத்தவுடன் அவர் திடுக்கிட்டு, என்ன மாஸ்டர் என்று கூறி ஒரு விழிப்புணர்வை எய்தினார். ‘அந்த விழிப்புணர்வைக் கொடுப்பதுதான் என் பணி’ என்று குறிப்பால் உணர்த்தினார் ஜோஷு. இதற்கு முன் வந்திருப்பவருக்கும் சரி, வராதவருக்கும் சரி, எப்போதும் உடன் இருப்பவருக்கும் சரி, ஜோஷு தருவது ஒரே விழிப்புணர்ச்சியைத்தான்! எப்போதும் உடன் இருக்கும் பணியாளருக்கும் கூட அவரைப் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதன் மூலம் ஒரு திடீர் விழிப்புணர்ச்சியைத் தந்தார் ஜோஷு. எப்போதும் விழிப்புணர்வுடன் இருத்தல் அல்லது சாட்சியாக இருத்தல் அல்லது ஊன்றிக் கவனித்தல் – இதைத்தான் ஜோஷு அளித்தார். ஒரு கோப்பை டீ தருவது என்பதை மேலெழுந்தவாரியாக அர்த்தம் கற்பித்துக் கொள்ளக்கூடாது. இது ஜென் பிரிவில் உன்னத விழிப்புணர்வைக் குறிக்கும். அதைத்தான் இந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

சின்ன உண்மை :

‘மூ’ என்றால் என்ன? என்ற கோயனைப் போல மிகவும் பிரசித்தி பெற்ற இன்னொரு கோயன் "நான் யார்?" என்பது! இதையே ரமண மஹரிஷி உபதேசித்தார் என்பதை நினைக்கும்போது வியப்பு ஏற்படுகிறது! யோக வாசிஷ்டமும் ‘நான் யார்?’ என்று விசாரம் செய்வதை வலியுறுத்துகிறது!

(தொடரும்)

About The Author