ஸ்வர்ண லோகம் -5

மோரினாகா சோகோ (1925-1995) ஜென் பிரிவைச் சேர்ந்த துறவி. அவர் புத்த மடாலயத்தில் சேர்வதற்கு எத்தனை பாடு பட வேண்டியிருந்தது என்பதை அவரே விளக்கி எழுதியுள்ளார். அதன் சுருக்கத்தைப் பார்க்கலாம்.

மோரினாகா சோகோ ஜப்பான் நாட்டில் ஓட்ஸு என்ற இடத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தார். இரண்டாம் உலகப் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த தருணம்.டோயாமா உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் சோகோ. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் போர் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்ற நிலை முதலில் இருந்தது. ஆனால் போர் உக்கிரமாக ஆக அனைவரும் போர் நடக்கும் முன்னணிப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது, அதற்கான அரசாங்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

விஞ்ஞானப் படிப்பு அல்லாத கலை,பொருளாதாரப் பாடங்களைப் படிப்போர் ராணுவத்தில் சேர வேண்டும் என்று உத்தரவு தெரிவித்தது. விஞ்ஞானம் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் இதர அறிவியல் துறைகளில் போருக்கு உதவக்கூடிய தேவையான அனைத்தையும் செய்யக்கூடும் என்பதால் அவர்களை போர்க்களத்திற்கு நேரடியாக அனுப்ப அரசாங்கம் முன்வரவில்லை.

எல்லோரும் ஒரு நாள் இறக்க வேண்டியவர்களே. இன்றோ இருபது வருடங்கள் கழித்தோ, ஒரு நாள் இறந்து தானே ஆக வேண்டும். சோகோவும் தனது உத்தரவை எதிர்பார்த்தவாறு காத்திருந்தார்.அவரது நண்பர்களோ விமானங்களில் ஏறி திரும்பி வர முடியாத ஒரு வழிப் பயணத்தை ஏற்றுக் கொண்டு பயணிக்கலாயினர். வெகு காலமாக மேலை நாடுகள் ஜப்பானைச் சுரண்டி வருவதாக ஜப்பானில் அனைவரும் நம்பி வந்தனர். ஆகவே அந்தச் சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டி மாபெரும் போர் தொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர்கள் நம்பினர்.

விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. சோகோவின் நண்பர்களில் பலர் கொல்லப்பட்டனர்.

ஒரு வழியாக யுத்தம் கோரமான அணுகுண்டால் ஒரு முடிவுக்கு வந்தது.இப்போது ஜப்பானிய மக்கள் அவர்கள் தேவையற்ற தீங்கு பயக்கும் கோரமான ஒரு போரில் அனாவசியமாக ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டனர். நல்ல வேளையாக இந்த கோரத்தின் மரணப்பிடியிலிருந்து சோகோ தப்பித்து உயிரோடு இருந்தார்.அவரிடம் ஒரு சிறிய ரேடியோ இருந்தது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்தவர்களைப்பற்றிய போர்க் குற்ற விசாரணைகள் ஒலி பரப்பப்பட்டன. அதை அவர் கேட்டவண்ணம் இருந்தார். விசாரணையின் முடிவில் வழக்கமாக வரும் வார்த்தைகள் -"…. ஆகவே அவர் தூக்கிலிடப்பட வேண்டும்" என்பது தான்!

அமெரிக்க நியூஸ் ரீல்கள் ஆங்காங்கே காண்பிக்கப்பட்டன. ஜெர்மானிய தளபதிகள் பொது மக்கள் கூடும் சதுக்கத்தில் பகிரங்கமாக தூக்கில் இடப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இத்தாலிய சர்வாதிகாரியான முஸோலினியையும் அவர் காதலியையும் கழுத்தில் ஒரு கயிறால் கட்டி தெருத் தெருவாக மக்கள் இழுத்துச் செல்வதையும் ஆங்காங்கே குழுமி இருந்த மக்கள் கல்லால் அவர்களை அடித்தவாறு இருப்பதையும் சோகோ பார்த்தார்.

ஒரு வழியாக மாணவர்கள் ஒவ்வொருவராகப் பள்ளிக்குத் திரும்பினர்.ஆனால் சோகோவுக்கு ஒன்று மட்டும் புரியாத புதிராக இருந்தது. நன்மை எது தீமை எது அவற்றை எப்படி இனம் காண்பது என்பதுதான் அவருக்குள் பிறந்த கேள்வி! மாணவர்கள் ஒருவருக்கொருவர் இதைப் பற்றியே விவாதித்துக்கொண்டிருந்தனர். போரின் முடிவில் ஜப்பானியரின் அறநெறிப் பண்புகள் மிகவும் தாழ்ந்திருந்தன.

போர் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு சோகோ ஒரே அடியில் தனது தாயையும் தந்தையும் இழந்தார். ஏற்கனவே அவர் தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். இதில் அவர் தன் மனைவியை – சோகோவின் தாயை- இழக்கவே அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சோகோவின் தாய் இறந்த மறுநாள் காலை அவர் கோமாவில் மயங்கி உணர்வற்று இருந்தார்.அப்படியே இறந்தும் போனார். இந்த நேரம் பார்த்துத் தான் சோகோவிற்கு போரில் உடனே சேருமாறு அரசாங்க ஆணை வந்திருந்தது. இரண்டு நாட்களில் சேர வேண்டும்! அதற்குள்ளாக தாயாருக்கும் தந்தைக்கும் உரிய அடக்க காரியங்களை அவர் கவனித்தாக வேண்டும்.

பரம்பரை பரம்பரையாக சோகோவின் குடும்பம் நிலங்களைக் கொண்டிருந்த குடும்பம். அந்த நிலங்களை விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டிருந்தனர். சோகோவின் அப்பா அடிக்கடி சோகோவிடம் கூறுவது இது தான்: "நிலத்தைப் போல நிலையான சொத்து எதுவும் இல்லை. தீ அதை எரிக்காது. வெள்ளம் அதை அழிக்காது. திருடர்கள் அதைத் திருட முடியாது. ஆகவே நீ என்ன செய்தாலும் சரி, நிலத்தை மட்டும் விற்கவே விற்காதே!"

ஆனால் போர் முடிந்தவுடன் வந்த நிலச்சீர்திருத்தத் திட்டங்களினால் குடும்பத்தின் நிலம் முழுவதும் பறி போனது. உள்ளங்கையளவு நிலம் கூட மீதி இருக்கவில்லை. எது எப்போதும் சாசுவதமாக இருக்கும் என்று சோகோ நம்பினாரோ அது மாயையாகப் போனது.

போரின் பிறகு ஏற்பட்ட புனருத்தாரணக் கொள்கைகளின் படி வங்கிகளும் அதிரடிக் கொள்கை மாற்றத்திற்கு உள்ளாயின. தனது குழந்தைகளைப் பாதுகாக்க அவரது தந்தையார் எடுத்திருந்த இன்ஷூரன்ஸ் மூலம் ஒரு யென் கூட அவருக்குக் கிடைக்கவில்லை! ஆனால் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளினால் வாழ்க்கைத் தரம் ஒன்றும் உயரவில்லை. விலைவாசி ஏறிக் கொண்டே போனது.இன்று ஒரு யென்னுக்குக் கிடைக்கும் ஒரு பொருள் மறு நாள் பத்து யென்னுக்குத் தான் கிடைக்கும்.அதற்குச் சில நாட்களுக்குப் பின் அது நூறு யென் ஆகி விடும்!. சோகோவோ மாணவர். இரண்டு கைகள் இருக்கின்றன ஆனால் எப்படிப் பிழைப்பது? நல்லவேளை கிரிமினல்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கும் தொழிலில் அவர் ஈடுபடவில்லை. பள்ளிப்படிப்பு முடிந்தது. ஆனால் மேலே படிக்க சோகோவுக்கு மனமில்லை.

யோசித்துப் பார்த்தார். வாழ்க்கையில் என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. வெறும் புத்தகப் படிப்பு. கொள்கைகள் பற்றிய வெற்று அறிவு! தன் மீதான சுயக் கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை!

விதியின் விசித்திரமான வழிகள் தான் இருக்கின்றனவே! ஒரு நாள் விசித்திரமான சூழ்நிலையில் பல ஜென் ஆலயங்களுக்கு அவர் செல்ல ஆரம்பித்தார்.

சின்ன உண்மை :

ஜென் பிரிவு ஏழாம் நூற்றாண்டில் ஜப்பானில் பரவியது. ஜென் குருமார்கள் 16ஆம் நூற்றாண்டில் ராஜ தந்திரிகளாகவும் ராஜாங்க தூதுவர்களாகவும் பணியாற்றினர்.

(தொடரும்)

About The Author