400 வாரங்கள் கண்ட நிலாச்சாரல்

இது நிலாச்சாரலின் 400வது வாரம். பிரமிப்பாக இருக்கிறதல்லவா? நிலாச்சாரலின் படைப்பாளிகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

டி.எஸ்.ஜம்புநாதன்:

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ‘குறையொன்றுமில்லை’ என்ற என் முதல் நேர்முகத்துடன் (ஒரு ஊனமுற்ற சாதனைச் சிறுவன்) நிலாச்சாரலுடன் துவங்கிய என் உறவு. இன்று நிலாச்சாரல் என் வாழ்க்கையுடன் இணைந்த ஒரு பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. நிலாச்சாரல் வெறும் மின் இதழ் மட்டுமல்ல. அது ஒரு கண்ணியமான நிறுவனம். தன்னார்வத் தொண்டர்களும், தமிழ் ஆர்வலர்களும் கனிவான, ஆனாலும் தரம் தாழக்கூடாது என்ற விஷயத்தில் கண்டிப்பாக இருக்கும் ஒரு தலைமையின் கீழ் (அல்லது தலைமையுடன்) இணைந்து ஒரு நல்லதோர் குடும்பமாக இயங்கும் ஸ்தாபனம். தமிழ் கூறும் நல்லுலகில் எல்லாம் தனக்கென ஒரு தரமான தடம் வகுத்துக் கொண்டிருக்கும் நிலாச்சாரலின் உறுப்பினன் என்ற வகையில் ஒரு மன்னிக்கக் கூடிய கர்வம் எனக்கு உண்டு.

டி.எஸ்.பத்மநாபன்:

இந்த 400 வாரங்களில் திங்கள் வர மறந்தாலும் இந்த நிலா தவறாமல் வந்து தன் சாரலில் வாசகர்களை நனைத்திருக்கிறது. கதைகள், கட்டுரைகள், கவிதை, நகைச்சுவை என்று எந்த அம்சத்தையுமே விட்டுவைக்காது நிலாச்சாரல் புது எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்திருக்கிறது. 400 வாரங்கள் தொடர்ந்து ஒரு இணைய இதழை எந்தவிதமான லாப நோக்கமும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்த இந்த ‘நிலா’வால் மட்டுமே முடியும். 400 அல்ல இன்னும் ஆயிரத்தையும் தாண்டி நிலாவின் பணி தொடர வாழ்த்துக்கள்.

டி.எஸ். வெங்கட்ரமணி: 

அற்றைத் திங்களும் இற்றைத் திங்களும்..

நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின் எழுத்தாளன் என்று என்னைப் பெருமையுடன் அடையாளப் படுத்திக்கொள்ளத் துணை நிற்கும் நிலாச்சாரலுக்கு ‘முதற்கண்’ என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அதிலும், நிலாக் குடும்பத்தில் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமையும் சந்தோஷமும் மேலோங்கி நிற்கிறது. இப்படி, புதியவர்கள் பலரையும் கூடப் பெருமைக்குரியவர்களாக நிலாச்சாரல் உருவாக்கியிருப்பதை நானறிவேன்.

நானூறாவது இதழ் வெளிவரும் இந்த வேளையில் நிலாவின் தனித்துவத்தை எண்ணிப் பார்க்கிறேன். மேலாண்மை அறிவியலில் (Management Science) நிலாச்சாரலை ஒரு நிகழ்வாய்வாகக் (Case study) கொள்ளலாம். முறையான அலுவலகமும், கட்டுக் கோப்பான ஆள்பலமும் உள்ள பத்திரிகைகளே உரிய தினத்தில் பத்திரிகையைக் கொண்டு வரும் முயற்சியில் கடைசி நேர நெருக்கடிகளுக்கும், மன இறுக்கத்துக்கும் ஆளாவதாகச் சொல்கிறார்கள். ஆனால், உலகத்தின் பல மூலைகளில் இருந்து கொண்டு, அலட்டிக் கொள்ளாமல், யாரும் புன்னகை மாறாமல், 400 வாரங்களும் திங்கள் தவறாமல் இதழைக் கொண்டு வருவது மேலாண்மை அறிவியல் வரலாற்றில் குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம். “அற்றைத் திங்களும், இற்றைத் திங்களும்” ஒவ்வொரு திங்களும், அதே, பொலிவு மாறாத, நிலா!

இதழுக்கு இதழ் அதி உன்னதத்தை நோக்கி நிலாச்சாரல் நடை போடுவது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக சமீப காலமாக ‘சில்லுனு’, வந்து கொண்டிருக்கும் பகுதியைச் சொல்ல வேண்டும். வாசகர்களுடன் நேருக்கு நேர் நெருங்கிய தொடர்பைத் தந்து கொண்டிருக்கிறது. Let us march ahead! The road to success is always under construction.

என்னைப் பொறுத்தவரையில் இனிவரும் நாட்களில், நிலாச்சாரலுக்கு அதிகம் பயன்படவும், அதனை மேலதிகம் பயன்படுத்திக் கொள்ளவும் உறுதி பூணுகிறேன்.

ஆகிரா
(ஆ.கி. ராஜகோபாலன்)

நான்கு ஆண்டுகளுக்கு முன் அழகி மென்பொருள் உபயோகித்து அதன் சிறப்பை உணர்ந்த நிலையில் அதனை உருவாக்கிய இளம் விஞ்ஞானி விஷி அவர்களின் நேர்முகம் நிலாச்சாரலில் இடம்பெற்றிருந்தது. அத்துடன் பல துறைகளில் திறமையுடன் விளங்கும் பலரையும் இணைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதும், பல அரிய படைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள நிலையும் கண்டு விஷியின் நேர்முகத்தை வாசிக்கும் நோக்கில் முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தவன் அதில் ஒரு தன்னார்வத் தொண்டனாகப் பணியாற்ற ஆர்வம் தெரிவித்தேன். குறுகிய காலத்துக்குள் எனக்குள் ஒளிந்து கொண்டிருந்த எழுத்தாளனை வெளிக்கொண்டு வந்து என்னையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது நிலாக் குடும்பம். அன்றுமுதல் தொடர்ந்து நிலாச்சாரலின் படைப்புகளில் பிழைதிருத்தம் செய்யும் பணியைத் தொடர்ந்து செய்த ுவருகிறேன். தமிழறிஞர்கள் பலர் எழுதிய அருமையான படைப்புகள் பலவற்றைப் பிழைதிருத்தும் பணியில் சங்காகாலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றின் ஏடுகளைப் புரட்டிப்பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதுதவிர சிந்தையைக் கவர்ந்து அறிவை வளர்க்கத்தக்க கதைகளும், கட்டுரைகளும் கவிதைகளும் படிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைப்பதால் அயர்வைத் தரும் அன்றாடப் பணிகளின் இடையில் நிலாவின் கதிர்களில் குளிப்பது புத்துணர்வைத் தருகிறது. பூமி உள்ளளவும் உலகுக்குத் தண்ணொளியை வழங்கிவரும் ஆகாய வெண்ணிலாவுடன் இந்த இணைய நிலாவும் இருக்கும், மனித மனங்களுக்கு இன்னொளி அளிக்கும்.

விசாலம்:

"நிலாச்சாரல்" நிலா என்னும் போதே ஆழமான அன்பின் காரணமாக வந்தது ஒரு கவிதை

"நிலாச்சாரலில் நிலாவைக் கண்டேன்!
பெயருக்கேற்ற குணத்தைக் கண்டேன்,
நிர்மலமான மனதைக் கண்டேன்
என் மனம் அங்கு கலந்ததைக் கண்டேன் .
முதல் மடலே எங்கள் சங்கமம்,
உணர்ந்தேன் ,இது ஜன்ம பந்தம்,
மகளாய் எனக்குத் தோன்றினாள்.
எனக்குப் பெருமை சேர்க்கிறாள்,
மேலும் உயர்ந்து விடுவாள்
தன் இலக்கினையும் தொடுவாள்,

ஆசி வழங்குவது அன்னையல்லவோ!

"நிலாச்சாரலைப்பற்றி திரு ஆ.கி.ரா அவர்கள் முதன் முதலில் என்னிடம் சொல்ல, "ஆஹா என்ன அருமையான பெயர்.. நிலாச்சாரல்! உள்ளமெல்லாம் குளுமை!". இதை நடத்தும் பெண்மணியை நான் பார்க்க வேண்டும் என்று ஆவலும் கொண்டேன் .

நான் மழலைகள் பத்திரிக்கைக்கு விடாமல் என் படைப்பை அனுப்பி வந்த போது திரு ஆகிரா என்னை நிலாச்சாரலுக்கும் அனுப்ப ஊக்கம் அளித்தார். ‘ஆஹா கரும்பு தின்னக் கூலியா?’ உடனே நான் அனுப்பத் தொடங்கினேன். திருமதி நிர்மலாவே எனக்குப் பதில் மடல் அனுப்பி மேலும் எழுத ஊக்கம் அளித்தார். இத்துடன் என் மனம் திருப்தியடையவில்லை. அவரை நேரில் பார்க்கத் துடித்தேன். என் பாண்டிச்சேரிஅன்னையிடம் வேண்டுகோள் விடுத்தேன். அது உடனேயே நடந்து விட்டது. என் அன்பு மகள் என் வீடு தேடி வந்தாள். அன்று என் வீட்டில் புஷ்பாஞ்சலி நடந்து இருந்தது. அவர் கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்தார். நான் அவரின் சாந்தமான முகத்தைக் கண்டேன் அதில் ஒரு அமைதி இருந்தது. பணிவும் இருந்தது. என் மகள் அவள் என்று எனக்கு மிகப் பெருமையாக இருந்தது. இருவருமே மகிழ்ந்து போனோம்

நிலாச்சாரல் 400வது இதழைத் தொட்டுவிட்டது. ஆஹா எத்தனை நீண்ட பயணம் அதில் எத்தனை பேர்களின் உழைப்பு ! ஒவ்வொருவரும் ஒரு மூலையில் இருக்க ஒற்றுமையாக ஒரு பத்திரிக்கை நடத்துவது ஒரு பெரிய சாதனை! சாதித்த பெண்மணி அன்பு நிர்மலாவுக்கும் அவரது நிலா டீமுக்கும் என் நல்லாசிகளுடன் இனிய வாழ்த்துகள்.

நரேன்:

பைத்தியம் போல தனக்குத் தானே புலம்பிட்டு இருந்த என்னோட எண்ணங்களையும் எழுத்துக்களையும் உங்க கூட பகிர்ந்துக்க வச்ச நிலாச்சாரல் பத்தி நான் என்ன சொல்றது!! புத்தகங்கள் படிக்கற பழக்கம் எல்லாம் குறைஞ்சுட்டு வர்ற இந்த காலத்துல, என்னோட கதைகள், கட்டுரைகள் படிக்க உங்களைத் தந்த நிலாச்சாரலுக்கு நான் என்னைக்குமே கடமைப் பட்டுருக்கேன். நிலாச்சாரல் பத்தி தெரிஞ்சுருந்தும், கிட்டத்தட்ட இரண்டு வருஷம் நிலா குடும்பத்துல பங்கேற்காம இருந்தத என்னோட வாழ்க்கைல செஞ்ச ஒரு பெருந் தவறா கருதறேன்! இதுக்கு மேல நிலாச்சாரல் பத்தி சொல்லணும்னா – பன்னிரெண்டு உயிரும் பதினெட்டு மெய்யும் பத்தாதுங்க!!

விஜயா ராமமூர்த்தி: 

ஜெயா டீ.வி. நிகழ்ச்சி மூலம் நிலாவின் உரையாடலைக் கேட்டு நிலாசாரல்.காம் இணையதளத்தினால் ஈர்க்கப் பட்டேன். தன்னார்வத் தொண்டு செய்ய முன்வந்த போது அனைவரும் எனக்கு நல்ல ஆதரவு தந்தனர். குறிப்பாக நிலா, கே.பி., காயத்ரி என் முயற்சிகளுக்கு நல்ல ஊக்கம் தந்ததற்கு என்றும் என் நன்றி. இன்னும் பல ஆயிரம் மலர்கள் வெளி வர இறைவனை வேண்டுகிறேன்.

கவிதா ப்ரகாஷ்:

பெண்ணில் உயிராகி,
மண்ணில் உரமாகும்
நிலையில்லா வாழ்வுதனில்
தையல் அவள் தமிழ்மேல் கொண்ட
மையல் காரணமாய் மலர்ந்ததுவே
இணையத்தில் இன்பத்தமிழும்!

நிலவுக்கு சாமரம் வீசி,
சாரலுக்கு சாமந்திபூ வைத்து
சங்கத்தமிழ் வளர்க்க
நற்றமிழால் நாளும்
குறைவின்றி ஒளிரட்டும்
குன்றின் மேலிட்ட விளக்காய்!

Hemalatha : 

I am really blessed to work with Nilacharal team. Nilacharal has all the colors of entertainment and enlightenment. My Monday starts with “His Name is Siva Sankar” and “Sillunu Oru Arattai”. All the articles are having some special meaning and messages. Nilacharal is one website which shows completeness on every aspect. By the help of Nilacharal I came to many topics that I was unaware of earlier. It is informative and thought provoking. I like to take this opportunity to Thank the editorial committee and other members of the team. Hope the selfless work of people in the team will make good changes among the youngsters and in our shattered society.

Many Thanks!!!

சித்ரா :

நிலாச்சாரலுடன் என்னுடைய அனுபவம் ரொம்ப இனிமையானது. எப்படிச் செய்வது என்று தெரியாமல் தப்புத் தப்பாகச் செய்து தடுமாறி நின்றபோது ஆதரவாகத் தட்டிக் கொடுத்ததைச் சொல்வதா அல்லது நான் மொழி பெயர்த்த கட்டுரையைப் பலர் பாராட்டி எழுதியதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து, தன் மகிழ்வை என்னுடன் பகிர்ந்து கொண்டதைச் சொல்வதா அல்லது நான் நிறைய எழுத வேண்டும் என்று என் பலத்தை எனக்கே அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தியதைச் சொல்வதா? எனக்குத் தெரியவில்லை. எந்த ஒரு அவசரத்தில் எழுதப்பட்டக் கடிதமாக இருந்தாலும் அதில் செய்தியை விட முதன்மையாக இருப்பது எவை தெரியுமா? எங்கள் குழுவின், குடும்பத்தின் பரிவு, பண்பு, பணிவு போன்றவைகள்தாம். பெயரின் இயல்பை செயல்களில் காண்கிறேன். நிலாவின் குளிர்ச்சாரல் எனக்கும் கிடைப்பதில் மிகவும் ஆனந்தம். மேன்மேலும் வளர என்னால் இயன்ற உதவியைச் செய்வேன். நன்றி.!

பிரபாகரன் :

சில நிகழ்வுகளை நினைப்பதுவே சுகம்!!! அதுபோல்தான் உள்ளது நான் நிலாச்சாரலில் இணைந்ததும்…. சற்றும் எதிர்பாரா நிகழ்வு. ‘உதவி செய்ய விருப்பமா?’ என்றது கேள்வி . சரி சேர்ந்துதான் பார்ப்போமே அப்படித் தான் நனைந்தேன் நிலாச்சாரலில்…. இன்று அதன் சாரலில் நனைந்து சுகம் அனுபவித்து சொக்கித்தான் போகிறேன். எனக்குள்ளும் ஏதோ ஒரு தாகம் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை மெல்ல மெல்ல, கண்ணாடி போல் பிரதிபலித்த நிலாச்சாரல் மற்றும் நிலாச்சாரல் நிர்வாகக் குழுவிற்கு மிக்க நன்றி இன்னும் பல ஆயிரம் இதழ்களை காண வாழ்த்துகள்.

About The Author

9 Comments

  1. Venkat

    திருமதி.நிலா மற்றும் நிலாச்சாரல் குழுவிற்கு என் வாழ்த்துகள்.
    தலைமை நன்றாக இருந்தால் அரசாட்சியும் நன்றாக இருக்கும் என்பது நிலாச்சாரலின் மூலம் மீண்டும் ஒருமுறை உண்மையாக்கப்பட்டு இருக்கிறது……….

  2. maleek

    இன்னும் அமுதைப்பொழியட்டும் நிலா-வாழ்த்துக்கள்.

  3. Bhagyaa

    நிலாச்சாரல் குழுவிற்கு என் வாழ்த்துகள்.

  4. jayanthinarayanan

    வாராயோ வென்னிலாவே என பாடிக்கொன்டிருக்க ஆசையுடன் காத்திருக்கிரேன்.
    என் கை நன்ட்ச் டொ ந்ரிடெ அ அர்டிcலெச்,எச்சய்ச் இன் யொஉர் மகழினெ .Gஒட்ச் க்ரcஎ இ நில்ல் சென்ட் ம்ய் அர்டிcலெச் இன் யொஉர் நில சிடெ தன்க்ச்

  5. P Rajagopal

    நான் நிலாச்சாரலை படித்து பிரம்மித்தேன். கூடிய விரைவில் என் படைப்புக்களையும் வெளியிட ஆவலாய் உள்ளேன்.

    P.ராஜகோபால்

  6. Sivarani Jegatheeswaran

    naan nilascharalai mikavum virumpip padippen. ellame nanraka ullathu. 400 ithalukku enathu valththukkal innum pala nooru ithalkal velivara vaalththukkal.
    sivarani
    Denmark
    22-01-09

  7. C. PREMALATHA

    முதன் முதலாக நிலாச்சாரல் பார்த்தேன், படித்தேன். மனம் எங்கும்
    மழைச்சாரல். இந்த சாரலில் தினம் நனைய ஆசை.

  8. R.THOMASMERLIN

    தமிழ் அன்பு கலந்த வனக்கம்! நிலாவின் ரசிகன் ஆகிரேன். சௌடி ஆரேபியாவில் இருகிரேன். தன்னார்வலர் ஆக என்ன செய்ய வேன்டும்?
    தமிழன்புடன்
    ரா.தாமா

Comments are closed.