அற்புதங்கள் அழகானவை (1)

மஹாராஜ நகர் வீடு கையை விட்டுப் போய்விட்டது என்பதை இன்னுங்கூட நம்ப முடியவில்லை. ஆனால், ஆண்டவன் அருளால் ஓர் அற்புதம் நடக்கும். இன்னும் ஒன்றிரண்டு வருஷங்களில் அந்த வீட்டை மீட்டு விட முடியுமென்கிற நம்பிக்கை மட்டும் வலுவாய் இருக்கிறது. ஸொஸைட்டியில் லோன் போட்டு, சிமென்ட் மற்றும் வியர்வைக் கலவையைக் கொண்டு வாப்பா செங்கல் செங்கலாய்க் கட்டின வீடு.

மெட்ராஸ் ஸ்டேட் எலக்ட்ரிஸிட்டி போர்டில், பிற்பாடு தமிழ்நாடு மின் வாரியத்தில் அஸிஸ்ட்டன்ட் இஞ்ஜினியராயிருந்து, பிறகு டிவிஷனல் இஞ்ஜினியராய் உயர்ந்து, நிறைவாய் ஸூப்ரன்டண்டிங் இஞ்ஜனியராய் ரிட்டயரான வாப்பாவின் கைகள் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா நீளமாய் இருந்திருந்தால், எழுபதுகளில் சென்னை அண்ணா நகரில் ஒரு லட்சத்துக்கு ரெண்டு ப்ளாட் என்று விற்ற பொற்காலத்தில் அநாயாசமாய் ஓர் அரை டஜன் ப்ளாட்டுகள் வாங்கிப் போட்டு, மத்திய சென்னையில் என்னையொரு குறுநில மன்னனாய்க் கிரீடம் சூட்டி விட்டுப் போயிருப்பார். பிற்காலத்தில், பிஸினஸ் நஷ்டத்தை சரிகட்ட நான் நம்ம மஹாராஜ நகர் வீட்டைக் காவு கொடுக்கவும் நேர்ந்திருக்காது.

எழுபதுகளில் திருநெல்வேலி & பாளையங்கோட்டையின் கிழக்கு எல்லை மஹாராஜ நகர்தான். போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது, ஸ்டேட் பாங்க் இருந்தது, கோலப் புள்ளிகளாய்ச் சில வீடுகள் இருந்தன. ஸ்டேட் பாங்க் ஆஃபீஸர்ஸ் காலனி இருந்தது. மற்றபடி எல்லாம் காலி மனைகள்தான்.

ஸ்டேட் பாங்க் ஆஃபீஸர்ஸ் காலனியை ரெண்டாய்ப் பிரிக்கிற பாதையில் புகுந்தால், தையல் நாயகித் தெரு. தையல் நாயகித்தெருவில் ஒரே வீடு நம்ம வீடுதான். பாளையங்கோட்டையில் வாப்பா அஸிஸ்ட்டன்ட் இஞ்ஜினியராயிருந்த போது பிள்ளைகளெல்லாம் இக்னேஷியஸ் கான்வென்ட்டில் படித்துக் கொண்டிருந்த அரும்புப் பருவம்.

தினமும் ராத்திரி படுக்கப் போகும் முன்னால் சிலுவை போட்டு, முட்டங்காலில் அன்றைய தினம் தெரிந்தோ தெரியாமலோ செய்த தப்புகளையெல்லாம் ஒப்பித்து, ஜீஸஸ் மன்னித்த பின்னால்தான் சகோதரிகள் தூங்குவார்கள்.

நூருன்னிஸா ஒரு ஸ்பெஷல் ஜீஸஸ் பைத்தியம். அதோடு, நூருன்னிஸாவும் நானும் ரேடியோப் பைத்தியங்கள். ரேடியோ உலகத்தில் இலங்கை வானொலியின் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருந்த விசேஷமான காலகட்டம் அது. மயில்வாகனனின் மணிக்குரலில் கோல்கேட் இசைக் களஞ்சியம் ஒலிபரப்பானது திங்கட்கிழமையா வெள்ளிக் கிழமையா என்பது இப்போது நினைவில்லை. ஆனால், நாலரை மணிக்கு இசைக் களஞ்சியம் கேட்பதற்குக் கோனார் ஒன்றை மாட்டு வண்டியில் நிலை கொள்ளாமல் வந்து சேர்ந்து, வீடு வந்ததும் கோஸ் பெட்டியிலிருந்து குதித்து ஓடி வந்து ரேடியோ போட்டது நினைவிருக்கிறது. அது, தாய்வழிப் பாட்டனாரின் புராதன வீடு.

கொஞ்சம் பெரிய பிள்ளைகளான பிறகு, ஹிந்திப் பாடல்கள் மேல் ஒரு மொஹபத் ஏற்பட்டுப் போனபோது, நூரிக்கும் எனக்கும் புதன் கிழமை ராத்திரி எட்டு மணிக்கு அமீன் ஸயானியின் அமர்க்களத்தில் பினாக்கா கீத் மாலா கேட்டால்தான் ராத்திரி சாப்பாடு இறங்கும்.

டிவிஷனல் இஞ்ஜினியராய் வாப்பா ஊட்டியில் இருந்த போது, ஊட்டி அரசினர் கலைக் கல்லூரியில் நான் பி யூ ஸி. அக்கா பி எஸ் ஸி. நூரி, ஃபைரோஸ், குல்நார் எல்லா சிறுமிகளும் பெத்லஹேம் கான்வென்ட். குளிருக்காக, ஊட்டியில் வீட்டுக்குள்ளே செருப்புக் கால்களோடு தான் எல்லோருமே புளங்குவோம். வாப்பாவுக்கு விசேஷமாய் மரச் செருப்பு. இதிகாச கால காவித் துறவிகள் மாதிரி முரட்டு மரக்கட்டைச் செருப்பு.

வாப்பாவுடைய அறை மாடியில். மாடிக்குப் போக மரத்திலான படிக்கட்டு. படிக்கட்டின் அடிவாரத்தில் ரேடியோ. நூரியும் நானும் ரேடியோவோடு அந்நியோன்னியமாகி, பினாக்கா கீத்மாலாவோடு ஒன்றிப் போயிருப்போம். இசையின் ஓசை மேலெழும்பிப் போய் மாடியறையை எட்டிவிட முடியாதபடி ஒரு பாதுகாப்பான வால்யூமில் ரேடியோ பாடிக்கொண்டிருக்கும்.

எங்கள் கெட்ட நேரம், அப்போதான் வாப்பாவுக்குப் பசியெடுக்கும். டக் டக் கென்று படியிறங்கி வருவார். ஒவ்வொரு "டக்"குக்கும் ரேடியோவின் வால்யூம் குறைந்து கொண்டே வந்து, கடைசி "டக்"கும் ரேடியோ அணைக்கப்படுகிற "கடக்"கும் ஐக்கியமாகிவிட, வாப்பா ஹாலுக்குள்ளே பிரவேசிக்கிற போது நாங்கள் கள்ளங் கபடமற்ற பிள்ளைகளாய்ப் பாடப் புஸ்தகங்களின் மேல் கவிழ்ந்து கிடப்போம். வாப்பாவுக்கு முகம் மறைத்து அக்கா சிரித்துக் கொண்டிருப்பது உணரப்படும். அந்த ரேடியோவுக்கு வாயிருந்தால் அதுவும் கூடச் சேர்ந்து சிரித்திருக்கும். ஆமா, ரேடியோவுக்கு வாய் இல்லையா என்ன? மண்டு, ரேடியோவுக்கு வாய்த்திருப்பதே வாய் ஒண்ணுதானேடா!

சினிமா விஷயத்தில் வாப்பா கொஞ்சம் தாராளம். பாளையங்கோட்டையில் ஏ.இ.யாயிருந்தபோது தாத்தா வீட்டுக்கு முன்னால் தான் மின்சார இலாக்கா ஜீப் நிற்கும். நூரி என்னிடம் ஓட்டமாய் வந்து, "நாளக்கி க்லாஸ் டெஸ்ட் ஏதாவது இருக்கா" என்று கேட்பாள். இல்லையென்று இவன் சொல்ல வேண்டுமே என்கிற பதைப்பு குரலில் வெளிப்படும். அந்தப் பதைப்புக்கு அவசியமே இல்லை. என்னுடைய பதில் எப்போதுமே "இல்லை" என்பதாய்த்தானிருக்கும்.

திருநெல்வேலி டவுனை நோக்கி ஜீப் பறந்து போய் ரத்னா டாக்கீஸ், அல்லது ராயல் டாக்கீஸ் முன்னே போய் நிற்க, ராஜமரியாதையோடு நாங்கள் முதல் வகுப்பில் கடைசி வரிசையில் உட்கார்த்தி வைக்கப்பட, க்யூவில் நின்று டிக்கட் வாங்கிப் படம் பார்க்க வந்திருக்கிற அப்பாவி ஜனங்களெல்லாம் முகந்திருப்பிப் பார்த்துப் பொறாமை புரிவார்கள். பதவியை துஷ்ப்ரயோகம் செய்கிற தப்பான செயல் இது என்றால், தன்னுடைய பதவிக் காலத்தில் வாப்பா செய்த ஒரே தப்பான காரியம் இதுதான். இடைவேளையில், முறுக்கு, சிங்கம் மார்க் சோடா கலர் பானங்கள் & மானேஜர் உபயம். இந்தத் திரை விருந்தும் கூட, வாப்பா ஹஜ்ஜுக்குப் போய்வந்த பின்னால் நின்று போனது.

பாளையங்கோட்டையில் ஏ இ யாகப் பணியைத் துவங்கின வாப்பா, எஸ் இ யாகத் திரும்பவும் பாளையங்கோட்டைக்கே வந்து சேர்ந்து, ரிட்டயர் ஆனார். ரிட்டயர் ஆன பின்னால்தான் மஹாராஜ நகர் வீட்டை முடித்துக் குடி பெயர வாய்த்தது. பிள்ளைகளுக்கெல்லாம் கல்யாணமாகி, நான் சென்னையில் ஸெட்டில் ஆன போது, வீட்டை வாடகைக்கு விட்டு விட்டுப் பெற்றோர் சென்னைக்கு வந்து விட்டார்கள். பிஸினஸ் நொடித்துப் போய், பாங்க்கில் வைத்துக் கடன் வாங்கின வீட்டை மீட்க வசதியில்லாமல், அந்த பாங்க்குக்கே வீட்டைத் தாரை வார்த்துத் தர வேண்டிய நிர்ப்பந்தம் உருவானதை மெல்ல வாப்பாவின் காதில் போட்ட போது, வெகுண்டெழாமல் வாப்பா அதை ஸ்போர்ட்டிவ்வாய் எடுத்துக் கொண்டாலும் அவருடைய மனசு என்ன பாடு பட்டிருக்கும் என்பதை உணர முடிந்தது.

வாப்பா காலமாகி இப்போது ரெண்டு வருஷம் ஓடிப் போய்விட்டது. தான் வியர்வை சிந்திக் கட்டின வீட்டை இந்தப் பயல் இப்படி வியர்த்தம் பண்ணிவிட்டானே என்கிற வருத்தத்தோடு தன் பயணப்பட்டிருப்பார். அற்புதம் ஒன்று நிகழ்ந்தால்தான் வீட்டை விரையில் மீட்டு, வாப்பாவின் மண்ணரையில் போய் மனங்குளிர முடியும். அற்புதம் நிகழுமென்கிற நம்பிக்கை இருக்கிறது. அவன் அருள்புரிந்தால் அற்புதங்களுக்கா பஞ்சம்!

(மீதி அடுத்த இதழில்)

loading...

About The Author

1 Comment

  1. kavithamani

    அற்புதம் நிச்சயம் நடக்கும்
    வாழ்த்துக்கள்

Comments are closed.