அ க தி (2)

நாளைக்கு நாம கீ வெஸ்ட்டுக்குப் போலாம், ஹெமிங்வே வாழ்ந்த வீட்டைப் போய்ப் பாப்பம், என்ன இவளே, என்றார் அவர். அவளை உற்சாகப்படுத்த அவர் கங்கணங் கட்டிக்கொண்டாப் போலிருந்தது.

பல் தெரிய அவள் சிரித்தாலும், அதில் ஒரு எரிச்சல்.

மறுபடியும் அந்தப் பூனைங்க…. அவள் சொன்னாள். எனக்கு பூனைன்னாலே அலர்ஜிப்பா. ஹெமிங்வே வீட்டில் பூனைகள் இருக்கும் என நினைத்தாளா தெரியவில்லை… நாளைக்கும் இங்கயே இருப்பம். நாளைய பொழுதை கடற்கரையில் ஓட்டுவம்.
அவர் பதிலொன்றும் சொல்லவில்லை. கண்ணாடியை மாட்டிக்கொண்டார். விளக்கொளியை வாசிக்க வசதியாகச் செய்துகொண்டார். வாசிக்க ஆரம்பித்தார். அவளானால் விடுதி பற்றிய விவரங்கள் அடங்கிய பளபள அட்டையை மேய்ந்தாள். ஒவ்வொரு கூடத்திலும் தீயணைப்பான் ரெண்டு வெச்சிருக்காங்க, என்றாள்.

ம்… என மென்மையாய் முணுமுணுத்தார் பேராசிரியர். கைத்தாள்களைக் கீழே பரப்பி, தன் பையிலிருந்து சில கரன்சி கோட்டுகளை உருவி மனைவியிடம் நீட்டினார்.

பிட்சா இப்ப வந்திரும்…

அந்தப் பணத்தை கையில் வாங்கியபடியே படுக்கையில் பரப்பிக்கிடந்த மற்ற காகிதங்களை ஒருபார்வை அவள் பார்த்தாள். அதில் எதையோ வாசித்திருக்க வேண்டும்… செர்வான்டெஸ், என்றாள். (செர்வான்டெஸ் – நாவலாசிரியர்.) ஏறத்தாழ முப்பது வருஷங்கிட்ட ஆச்சி இல்லியா? அவர் எழுதிய டான் க்விக்சாட் என்ற அதே நாவலை, இத்தனை வருஷமாவா ரசிச்சிப் படிக்கிறீர்கள் என்ற எள்ளல் இருந்தது அதில்.

ம்… அவர் திரும்ப முனகினார். கொஞ்சம் சரிந்து இன்னும் வசதியாய்ச் சாய்ந்து கொண்டார். உன்னோட ஸ்படிகம் சம்பந்தப்பட்ட ஒரே வேலையில் நீ எத்தனை வருஷமா முட்டிட்டிருக்கே?

அதெல்லாம் அப்பிடி ஒரே மாதிரின்னு சொல்ல முடியுமா என்ன, என்றாள் அவள். ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா நாம கண்டுபிடிக்கிறோம்.

செர்வான்டெஸ் எழுத்துல கூட புது விஷயங்கள் கிடைக்குது, என்றார் பேராசிரியர். நீ சரிமூடுல இல்ல போல…ஆமா. எனக்கென்ன ஆச்சி, எனக்கே தெரியல, அவள் சொன்னாள். திடீர்னு வயசாயிட்டா மாதிரி தளர்ந்திட்டேன். பாருங்க என்னை.

ஏன், நல்லாதான் இருக்கே, என்றார் கணவனாக.

வெளியே காற்றின் இரைச்சல் கிளம்பியது. இன்னொரு சத்தம். என்னவோ தொம் என்று விழுந்தாப்போல. யாரோ படிகளில் கீழிறங்கி ஓடுகிறார்கள். கதவை யாரோ ரெண்டுமுறை தட்டுகிறார்கள். அவள் கொட்டாவி விட்டாள். பணத்தை எண்ணியபடியே போய் கதவைத் திறந்தாள்.

கருத்த வாலிபன் ஒருவன் சடாரென்று சுழற்காற்று போல உள்ளே நுழைந்தான். உடம்பிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

ஷ்… ஷ்…. என கிசுகிசுத்தான். போலீசைக் கூப்ட்றாதீங்க, தயவுசெஞ்சி போலீஸ் வேணாம்…

பேராசிரியர் தலைநிமிர்த்திப் பார்த்தார்.

அவள் அப்படியே அயர்ந்துபோய்க் கல்லாய்ச் சமைந்து நின்றாள். கதவைச் சாத்தி அதன்மேல் சாய்ந்தபடி அவனும் அப்படியே அசையாது நின்றான். கண்கள் பயத்துடன் அலைபாய்ந்தன.

என்ன நடக்குது இங்க, என்று கேட்டார் பேராசிரியர். யார் இந்தாளு?

யாரோ திருடன், என்றாள் அவள். குரலில் ஒரு வக்ரம். உங்க பணப்பையை அவனாண்ட குடுத்துருங்க, ஜல்தி. இல்ல பணம் வேணாம், தயவு பண்ணி வேணாம். பணம் வேணாம். போலீஸ் வேணாம். கூப்ட்றாதீங்க… அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்

உனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? – அவள் கேட்டாள்.

ம்ஹும், அதெல்லாம் இல்ல, என்றான் அந்தப் பையன் கிசுகிசுப்பான குரலில். பேராசிரியர் தொலைபேசிப் பக்கம் கையைக் கொண்டுபோனார். சட்டென அவர்கையைப் பிடித்துத் தடுத்து, தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான்.

போலிசைக் கூப்பிட வேணாம்… எனக் கெஞ்சினான். அரைக் கால்சட்டை. சிவப்பு வண்ண டி-சட்டை. வெறுங்கால்கள். செருப்பு இல்லை. அவன் நின்ற இடத்தில் தரைவிரிப்பில் சிறு குளமாய்த் தண்ணீர் தேங்கியது.

நீ யாரப்பா, பேராசிரியர் கேட்டார். இருந்த பரபரப்பில் கலவரப்படக் கூட நேரமில்லாதிருந்தது.

முகத்தை விரலால் வழித்துக் கொண்டான் அந்த இளைஞன். ஒரு துள்ளல் போன்ற அசைவுடன் வெளி உப்பரிகையைக் காட்டினான்.

கியூபா, என்றான் ரகசியம் போல.

அவர்கள் ஒருவரையொருவர் வெறித்தார்கள். என்ன சொல்றான் இவன், என்கிறாப் போல.

ஏம்ப்பா நீ கியூபாவில் இருந்து வரும் அகதியா?… பேராசிரியர் ஸ்பானிய மொழியில் கேட்டார்.

அவன் செருமிக் கொண்டபோது கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வேகவேகமாய்ப் பேசினான். கரையில் யாரோ அவர்களுக்காகக் காத்திருந்தார்கள். ஆனால் ஒரு பெரிய அலை வந்தது… கள்ளத்தோணி மூழ்கிவிட்டது. சீன்யோர்… சீன்யோரா… (ஐயா அம்மணி – என ஸ்பானிய மரியாதை த்வனி) ஆனால் என்ன கேடுகாலம்… கடல் காவலர் அவர்களைக் கண்டுகொண்டார்கள்… போர் ஃபேவர், (தயவுசெஞ்சி) அவங்க தேடிவந்தால் பிடிச்சிக் குடுத்துறாதீங்க…

ரெண்டு கண்ணிலும் கண்ணீர் சிறு நதியாய்க் கிளம்பி கன்னத்தை நனைத்தன.

சரி அழாதே, மனசை திடப்படுத்திக்க, என்றார் பேராசிரியர். ஒரு போர்வையை எடுத்து அவனைப் போர்த்திவிட்டார்.
அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள். எதுவும் பேசவில்லை. கதவு மீண்டும் தட்டப்பட்டது. அந்தப் பையன் பதறி நடுநடுங்கினான்.

(தொடரும்)

loading...

About The Author