அ க தி (3)

பேராசிரியர் அவனைக் குளியல் அறைக்குள் தள்ளினார். குளமாய்த் தேங்கிக் கிடந்த தண்ணீரில் பெரிய துண்டு ஒன்றைப் போட்டு மூடினார். மனைவி என்ன சொல்கிறாள் என்கிறாப் போல அவளைப் பார்த்தார். பிட்சா வந்திருக்கும், என்றாள் அவள். அவளே போய்க் கதவைத் திறந்தாள். பெட்டியை வாங்கிக்கொண்டு பணங் கொடுத்தாள்.

இந்த மாலை உங்களுக்கு சிறப்பாக அமையட்டும், என்றான் பரிசாரகன்.

கதவைச் சாத்து, என அவர் வலியுறுத்தினார். அவள் பிட்சாவை வட்டவடிவ மேஜையில் வைத்தாள். நாம என்ன பண்ணலாம், அவள் கேட்டாள். திரும்ப தொலைபேசிக்கு இணைப்பு கொடுத்தாள். ஆனால் எடுத்துப் பேச முயலவில்லை.

யோசிச்சிச் சொல்றேன், என்றார் கணவர். கதவை உள்பக்கம் தாளிட்டார். சங்கிலியையும் போட்டார். திரைகளை இழுத்துவிட்டார்.

போலீசுக்கு தகவல் சொல்லணும், என்றாள் அவள்.

அவர் பதில் சொல்லவில்லை. கியூபாவாசியை, ஏய் வெளிய வாப்பா, கூப்பிட்டார். சாப்பிடுப்பா, என்றார். பசியா இருப்பே.
வாலிபன் தலையாட்டினான். கடலிலேயே அவர்கள் மூணுநாள் வாசம். கிட்டத்தட்ட சாப்பிடவோ குடிக்கவோ எதுவும் கிடைக்கவில்லை.

பெரிய பெரிய வாயாய்க் கடித்தான். இந்தா என்று இன்னொன்றை எடுத்து நீட்டினார் ஆதுரமாய். அப்படியே தரைவிரிப்பில் உட்கார்ந்து அவரும் ஒரு துண்டு எடுத்துக்கொண்டார்.

பசியில்லை, என்றுவிட்டாள் அவள்.

அறையில் வந்த குழாய்த்தண்ணீரையே அவர்கள் குடித்துக் கொண்டார்கள். அறையைவிட்டு வெளியே வர அவர்கள் விரும்பவில்லை. கண்ணை மூடிக்கொண்டு கடகடவென்று அவன் தண்ணீர் குடித்தான்.

புதிய வாழ்க்கை வேண்டும் எனக்கு, என்றான் அவன்.

அவரும் அவளும் திரும்ப ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

நாங்களே இங்க சுத்திப்பாக்கன்னு வந்தவங்க தான், அவள் சொன்னாள். உல்லாசப் பயணிகள். சட்டத்துக்குப் புறம்பா நாங்க எதுவும் செய்யேலாது…

அவளும் ஸ்பானிய மொழி பேசியதில் அவன் கண்களில் பிரகாசம்.

அம்மணி, என்னை போலீசுகிட்ட மாத்திரம் பிடிச்சிக் குடுத்துறாதீங்க, என்றான் அவன். அப்படியே பேராசிரியரை ஒரு கெஞ்சலான பார்வை பார்த்தான். அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டிருந்தார்.

இதைப்பத்தி நான் யோசிக்கணும், என்றார் அவர். அதுக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்…

கொஞ்சநேரத்தில் வெளியே கீழ்த்தளத்திலிருந்து எதோ பரபரப்பான சத்தங்கள். வண்டிவந்து பிரேக்போட்டு நிற்கும் க்கிர்றீச். கூடத்தில் அதிகாரக் கட்டளைகள் அதிர்ந்தன. ஊய்ங் என விசில். கதவுகள் தடதடவெனத் தட்டப் படுகின்றன. படிகளில் ஜனங்கள் ஏறுவதும் இறங்குவதுமான களேபரம்.

வேட்டையாடப்படும் மிருகம் போல அவன் துள்ளித் தவித்தான். தோளில் இருந்து அவனது போர்வை நழுவி விழுந்தது. அவள் சுவரோடு அழுந்திக் கொண்டாள். அவர் அறையை கவனமாய் நோட்டமிட்டார். உடம்பு ஜிவ்விட்டிருந்தது. அந்த கியூபாக்காரனைப் படுக்கையில் படுத்துக்கொள்ளச் சொல்லி சைகை காட்டினார். உச்சிமுதல் பாதம்வரை முழுக்க போர்த்தினார். கனமான கம்பளிப் போர்வை. மேலே ரெண்டு தலையணை. ஒரு சூட்கேஸ் பெட்டி. பையா, மூச்சுவிடப்டாது, என்றார் கடுமையாக.

கடற்படைக் காவலர்கள் அறைஅறையாக வந்தார்கள். அடையாள அட்டை காட்டிவிட்டு, இடைஞ்சலுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, சட்டவிரோதமா கடல் வழியா ஊருக்குள்ள ஊடுருவியிருக்கிற சிலரைத் தேடுவதாகச் சொன்னார்கள். அவர்களுக்கு சட்டவிரோதமா அடைக்கலம் தரக் கூடாது. தந்தால் தந்தவர்களுக்கும் ஜெயில் தண்டனைன்னு தெரிஞ்சிக்கணும், என்றார்கள். பேராசிரியர் தலையாட்டினார். ஈரத் துண்டையும் போர்வையையும் குனிந்து எடுத்தார். நாங்கள் நீச்சல் குளத்தில் இருந்துதான் வர்றம், எதையும் பாக்கலியே, என்றார். அவர் மனைவி அமைதிகாத்தாள். அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். குளியல் அறைக்குள் எட்டிப் பார்த்தார்கள். திரும்ப மன்னிப்பு கோரினார்கள்.

இந்த மாலை உங்களுக்கு சிறப்பானதாக அமையட்டும்.

உங்களுக்கும், என்றார் பேராசிரியர். கதவைச் சாத்திவிட்டு வெளி சந்தடிகளை கவனித்தார். காத்திருந்தார். போய் தலையணைகளை, சூட்கேசை அகற்றினார். கம்பளியை நீக்கினார். அவன் அப்படியே செத்த விறைப்பாய் அசையாமல் கொள்ளாமல் கிடந்தான்.

நீ எழுந்துக்கலாம்…

அவள் மெல்ல ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு உட்கார்ந்தாள். அந்த கியூபாக்காரன் நன்றியாய் சில வார்த்தைகள் முணுமுணுத்தான். இன்னுங்கூட அவன்உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. பதறாதப்பா, அமைதி… என்றார் பேராசிரியர். அவன்மேல் ஒரு போர்வையைப் போர்த்தினார். அப்படியே போய்த் தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தார். மியாமியில் ஒரு டாங்கோ நாட்டியப் போட்டி. அதை கொஞ்சம் வெறித்தார்கள்.

நமக்குப் பைத்தியம்தான், அவள் ஹிப்ரு மொழியில் சொன்னாள்.

பேராசிரியர் பதில் சொல்லவில்லை. அறைமுழுசும் சிதறிக்கிடந்த காகிதங்களை அவர் சேகரித்தார்.

நானும் இவளும் அர்ஜென்டினாவில் பிறந்தவர்கள், என்றார் அந்த இளைஞனிடம். நான் ஸ்பானிய இலக்கிய ஆசிரியன். காகிதங்களை ஃபைலில் வரிசைப்படுத்தினார்.

சென்வான்டெஸ் பத்தி ஒரு சொற்பொழிவு, அதற்கு தயார் செஞ்சிட்டிருக்கேன், என்றார் பாதிவிரிந்த புன்னகையுடன். டான் க்விக்ஸாட் தெரியுமா?

உங்களுக்கு என்ன பைத்தியமா, அவன்ட்டப் போயி… என்றாள் அவள்.

ஸ்பானிய மொழிலயே பேசு, அது உனக்குக் கஷ்டமா இல்லையின்னா, பேராசிரியர் எகத்தாளம் பண்ணினார். அப்ப நம்ம மூணு பேருக்குமே விளங்கும், இல்லையா?

அவர் மனைவி அவரை பிரமிப்புடன் பார்த்தாள். நாம என்ன காரியம் பண்ணியிருக்கம் தெரியுதா, சட்டத்தை மீறியிருக்கோம், என்றாள் அவள்.

தெரியும், என்றார் அவர்.

சட்டத்துக்கு விரோதமா உள்ள ஊடுருவிய ஒரு அகதியை நம்மஅறைல ஒளிச்சி வெச்சிருக்கம்… தெரியும்…

புதிய பாஷை, அவனுக்குப் புரியாமல் தலையை இப்படி அப்படி அசைத்தான் அவன். சட்டென பெரும் ஏக்கத்துடன் சொன்னான். டான் க்விக்ஸாட், டான் க்விக்ஸாட்… அவள்முன் மண்டியிட்டான். மெல்லச் சொன்னான்…. ”ஓ இளவரசி டல்சீனியா…”

அவள் துணுக்குற்றாள்.

(தொடரும்)

loading...

About The Author