ஆவியின் விடுதலை (2)

ஒரு நாள் நாங்கள் மூவரும் சென்று சின்ன யோகீஸ்வரரைச் சந்தித்தோம். எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லி அவருடைய உதவியைக் கேட்டோம். அவரும் பெருந்தன்மையுடன் சாரி என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை நாங்கள் நால்வரும் ஒரு காரில் பெருங்களத்தூரில் இருந்த அந்த வீட்டிற்குச் சென்றோம். ரமேஷ் சொன்னபடியே அந்த வீடும், அதைச் சுற்றியுள்ள இடமும் மிகவும் அற்புதமாக இருந்தன. வீடு சற்று பழையதாக இருந்தாலும் உறுதியாகவும் வாஸ்து சாஸ்திரத்தின் படியும் கட்டப்பட்டு இருந்தது.

வீட்டைச் சுற்றி நிறைய மரங்கள், செடிகள் இருந்தன. வீட்டைச் சுற்றி சுற்றி வந்தோம். வீட்டின் பின்புறம் ஒரு பிரமாண்டமான புளியமரம் இருந்தது. எனக்கு அதன் அருகில் போக பயமாக இருந்தது. சுற்றும் முற்றும், மரத்தின் மேலும் கீழும் பார்த்தேன். என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. "என்ன பேயைத் தேடுகிறாயா?" என்று அவர் கிண்டல் பண்ணினார்.

யோகீஸ்வரர் மரத்தைச் சுற்றி வந்தார். அவர் தன்னுடன் கொண்டு வந்த துண்டை விரித்து மரத்தின் அடியே அமர்ந்தார். எங்களையும் உட்காரச் சொன்னார். ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தார். கண்களை மூடினார்.

அவ்வப்போது அவர் தலையும் கழுத்தும் அசைந்தன. யாரிடமோ மவுனமாக வாயைத் திறக்காமல் பேசுவது போல இருந்தது. சுமார் 20 நிமிடங்கள் கழித்து அவர் கண்களைத் திறந்தார். அவர் முகத்தில் மிகுந்த திருப்தி காணப்பட்டது. சற்று நேரம் மரத்தின் மேலே பார்த்து விட்டு என்னிடம் பேச ஆரம்பித்தார்.

"அம்மா, முதலில் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் ¨தைரியமாக இந்த வீட்டை வாங்கலாம். உங்கள் குடும்பத்தால்தான் இங்கு மகாதுன்பத்துடன் அலைந்து கொண்டு இருக்கும் ஒரு ஆவிக்கு விடுதலை கிடைக்கப்போகிறது. அவசரப்படாமல் கேளுங்கள்.

இந்த மரத்தில் இருப்பது வள்ளியம்மை என்ற பரிதாபத்திற்கு உரிய பெண்ணின் ஆவி. அவளும் அவள் கணவனும் 6 மாத குழந்தையும் இந்த வீட்டில் வசித்து வந்தார்கள். வசதிபடைத்த அவள் கணவன் ஒரு காரின் இரும்பு உருக்கு அச்சு பாகங்களை செய்து தரும் கம்பெனி நடத்திக் கொண்டு இருந்தான். ஒரு நாள் இரும்பு உருக்கும் உலை வெடித்து அந்த விபத்தில் அவன் இறந்து போய் விட்டான். அதைக் கேள்விப்பட்டதும் இந்தப் பெண் ஏதோ ஒரு உத்வேகத்தில் தன் மேலும் தன் பெண் குழந்தை மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாள்.

தற்கொலை செய்து கொண்ட பிறகுதான் அவள் செய்த தவறு அவளுக்கு மேலே உள்ள சக்திகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அவளுக்கு விதித்த ஆயுள் முடியும்வரை அவள் இந்த உலகில் கிடந்து அவஸ்தை படவேண்டும் என்றும் சொல்லப்பட்டது. ஆனாலும் அவளால் இயலாத ஒரு நிலையில் உணர்ச்சி வேகத்தில் இதை செய்து கொண்டதால் ஒரு விதி விலக்கு அவளுக்கு கொடுக்கப்பட்டது,

அவள் தற்கொலை செய்துகொண்ட இந்த வீட்டில் ஒரு கரு உண்டாகி அது குழந்தையாக பிறந்தால் அவள் தன் பயணத்தைத் தொடரலாம் என்றும் சொல்லப்பட்டது.

அது முதல் இந்த வள்ளியம்மை இங்கே காத்துக் கொண்டு இருக்கிறாள். இங்கு குடிவந்தவர்கள் எல்லாரும் ஒன்று வயதான முதியவர்களாக அல்லது சிறுவர்களாக இருந்ததால் இவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்போது நீங்கள் வரப்போவதைச் சொன்னதும் அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளாள். உங்கள் மருமகள் இங்கே வந்து கருவுற்றால் அவளையும் அவள் குழந்தையையும் பத்திரமாக பாதுகாப்பது தன் பொறுப்பு என்று சொல்கிறாள். குழந்தை பிறந்ததும் தனக்கு பொங்கல் படைத்தால் மகிழ்ச்சியோடு போய் விடுவதாகக் கூறுகிறாள். அடுத்த நாளே நீங்கள் மரத்தை வெட்டி விடலாம் என்றும் சொல்கிறாள்.

முடிவு செய்ய வேண்டியது நீங்கள்தான்!" என்று முடித்தார்.

எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அவரைப் பார்த்தேன், அவர் தலையை ஆட்டினார். "அப்படியே ஆகட்டும் ஐயா, எங்களை நீங்கள் ஆசிர்வதிக்க வேண்டும்" என்று கூறி மூவரும் அவர் பாதங்களில் விழுந்து வணங்கினோம்.

இது நடந்த மூன்றாவது மாதம் நாங்கள் எல்லாரும் மகன், மருமகள் உட்பட, புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் பண்ணி குடிவந்தோம். நாட்கள் வெகு வேகமாக, சுகமாக ஓடின. கோபிக்கு கம்பெனி கார் கொடுத்து இருந்ததால் மிகுந்த உபயோகமாக இருந்தது.

கோபி சென்னைக்கு வந்த நாலாவது மாதம் மருமகள் கருவுற்றாள். டாக்டர் இதை உறுதி செய்த அன்று வீடே விழா கொண்டாடியது. நான் சர்க்கரைப் பொங்கலும் வடையும் செய்து ஒரு தட்டில் புளியமரத்து அடியில் வைத்து "அம்மா, வள்ளியம்மா, நீயும் நாங்களும் விரும்பியபடி குழந்தை உண்டாகிவிட்டது. அது நலமாக பிரசவம் ஆக நீதான் துணையாக இருக்க வேண்டும்." என்று சொன்னேன். ஒரு வினாடி மரத்து இலைகள் எல்லாம் அசைந்தது போல இருந்தது.

நாட்கள் வெகு வேகமாக ஒடின. குழந்தை ஜனவரி மாதம் 20ம் தேதி வாக்கில் பிறக்ககூடும் என்று டாக்டர் தேதி குறித்துயிருந்தார். ஜனவரி மாதம் 5ம் தேதி கோபி அவசரமாக இரண்டு நாட்கள் அமெரிக்கா போக வேண்டி இருந்தது. பிரசவத்துக்கு இன்னும் 15 நாட்கள் இருக்கின்றனவே என்று சொல்லி அவன் கிளம்பிப் போய் விட்டான். ஜனவரி 10ம் தேதி ஈரோட்டில் ஒரு முக்கியமான கல்யாணம். 9ம் தேதி இரவு அவர் கிளம்பி போனார். 10ம் தேதி மாலை திரும்பிவிடுவேன் என்று சொல்லி அவரும் போய் விட்டார்.

அன்று இரவு நானும் மருமகளும் மட்டும் வீட்டில் இருந்தோம். இரண்டு பொ¢ய நாய்கள் இருந்ததால் எந்த பயமும் இல்லை. இரவு சாப்பிட்டு விட்டு மருமகள் அவள் அறையில் படுக்க போய் விட்டாள். நானும் 9 மணியளவில் சாப்பிட்டுவிட்டு என் அறைக்குச் சென்றேன்.

வழக்கம் போல டாக்டர் கொடுத்திருந்த தூக்க மாத்திரையைப் போட கையில் எடுத்தேன். ஏதோ ஒன்று என் கையை தட்டிவிட்டது போல இருந்தது. மாத்திரை கீழே விழுந்தது. அதை எடுக்க நான் குனிந்த போது "வேண்டாம். இன்று மாத்திரை வேண்டாம். போய் மருமகளோடு படுத்துக் கொள்" யாரோ காதில் சொல்வது போல இருந்தது.

(தொடரும்)

loading...

About The Author

3 Comments

  1. bobbyshankar

    காட்திருபது கஷ்டமாக உல்லது. ஆனாலும் ஆவலாக காதிருகிரென்.

  2. Sharmi Ananth

    வாழ்த்துக்கள் ராஜேஸ்வரன்…….ரொம்ப நல்ல கதை…அடுத்த அத்தியாயத்திட்கு காத்திருப்பது கஷ்டம் தான் ஆனாலும்
    காத்திருக்கிறேன் ஆவலோடு…
    என்றும் வாழ்துக்களுடன்: ஷர்மி ஆனந்த்

Comments are closed.