காக்கைச் சோறு

மால்வானியை பேருந்து கடந்தது.ஈரமான கடல்காற்று ஜன்னல்வழி முகத்தில் விட்டுவிட்டுப் படர்ந்தது. குளிர்நீரில் நனைக்கப்பட்ட மென்துகிலால் முகத்தைத் துடைத்துவிடுவது போன்றதொரு உணர்வு. மனதுக்குள் கும்பலாக பலப்பல சிந்தனைகள். ஒரு வேதனையான சம்பவம் கடந்த காலத்தின் அனைத்து துன்பமான சூழ்நிலைகளையும் ஒருங்கே இழுத்து வந்து படம் காட்டிக் கொண்டிருந்தது.

சில மணித்துளிகளுக்குக் கைப்பேசிக்கு அழைப்போ அல்லது குறுஞ்செய்தியோ வரவில்லை என்றால் அகர வரிசையில் கடைசி எழுத்துவரை தேடி இந்த நேரத்தில் யார் ஓய்வாக இருப்பார், யாரை அழைத்தால் மறுப்பின்றிப் பேசுவார் என்று ஒரு கணக்கிட்டு அழைப்புகள் செய்து தனிமையை விரட்டிக்கொண்டிருந்த காலம் போய் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த நிலையிலும் தவறாது அழைத்துப் பேச, குறுஞ்செய்திகளுக்குப் பதில்அனுப்புகிற, ஓய்வுநாட்களில் வெளியில்போக, பரிசுகள் கொடுக்க, சண்டையிட என எல்லா வகையிலும் ஆதரவாய் இருந்த ஒரு துணை இன்று அற்பமான ஒரு காரணத்திற்காக விலகிப்போய் விட்டது.

இப்படி நட்புகள் விலகிப்போவதும், காதல்கள் முறிந்துபோவதும் மோகனுக்கு புதிதாக இல்லைதான். ஆனால் இந்தமுறை அவன் உண்மையிலேயே கடுமையான மனவருத்தத்தில் இருந்தான்.

மனஉளைச்சல் மிகும்போதெல்லாம் கடற்கரைக்கு அல்லது மலைப்பாங்கான இடங்களுக்கு இல்லையேல் மக்கள் கூட்டமிகு ரயில் நிலையங்களுக்கு போய் நீண்டநேரம் இருப்பது அவனுக்கு வழக்கமாகிக் கொண்டிருந்தது. ஆனாலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அனைத்தையும் மறந்துவிட்டு புதுக்கஷ்டங்களுக்காய் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் தேர்ச்சி பெற்றிருந்தான்.

அவனுக்கு வெளியுறவுகள் மட்டுமல்ல, ரத்த உறவுகளும் இப்படித்தான். அவனது அம்மாவுக்கும் அவனுக்கும் எப்பொழுதுமே ஆகாது. ஒன்றுமில்லா பிரச்சனைகளுக்கெல்லாம் சண்டையிட்டுக் கொள்வார்கள். அக்காள் ருக்மணி திருமணமாகி குழந்தைபெற்ற பின்னும் அவர்களுடனேயே இருக்கிறாள். கணவனுக்கு நிரந்தரமாக எந்த வேலையும் இல்லாத நிலையில் அவனும் இதுவே நல்லது என்று மானரோஷம் பார்க்காமல் தங்கி விட்டான்.

அக்காமகள் செல்வராணி ஆறு வயது படுசுட்டியான பெண். மோகனின் அம்மாவுக்கு வீட்டில் யாரையும் பிடிக்காது. எல்லோரையும் திட்டிக் கொண்டே இருப்பாள். நல்லநாள் கெட்டநாள் என்று அவளுக்கு எதுவும் தெரியாது. சந்தோஷமோ துக்கமோ எதுவானாலும் சரி, துணி துவைக்கத் துவங்கிவிடுவாள் அல்லது பார்த்திரம் கழுவுவாள். எல்லோரும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தால் அம்மாவுக்குப் பிடிக்காது. உடல்நிலை சரியில்லை என நடுவீட்டில் படுத்துக் கொள்வாள் அல்லது எதாவது சிறு பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி கூச்சல் போடுவாள். அவர்கள் ஆளுக்கொரு மூலையில் அடங்கி அமைதியாகி விடுவார்கள்.

இப்பொழுதெல்லாம் அம்மாவுக்கும் இப்படி சதா சண்டையிட்டுக் கொண்டே இருப்பது பிடிக்கவில்லை. சலிப்பாகி விட்டதோ என்னவோ. மோகனின் அம்மாவைப் பார்ப்பவர்கள் எல்லாம் " ஏன்க்கா, மோகனுக்கு இத்தனை வயதாகிறதே, இன்னும் ஏன் கல்யாணம் பண்ணி வைக்கல” என்ற ஒரே கேள்வியை கேட்டுக் கொண்டிருப்பதாக அம்மா அடிக்கடி வந்து புலம்புவாள்.
அம்மாவும் அழுது பார்த்தாள். சண்டையிட்டுப் பார்த்தாள். ஆனால் மோகன் மனதை மாற்றிக் கொள்வதாக இல்லை. மோகனுக்குத் திருமணத்தின் மேல் ஆசையில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் அவனது பொருளாதாரநிலை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என அவனுக்கு சிந்திக்க பல விஷயங்கள் இருந்தன. இத்தனைக்கும் மேலாக மும்பையில் பத்துக்குப் பனிரெண்டு சதுரஅடி வீட்டில் ஆறுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்க்கையை எந்தவிதத்தயக்கமும் இன்றி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான வீடுகளுடன் ஒப்பிடுகையில் மோகனுடைய வீடு பெரியதுதான். ஆனாலும் அக்கா ருக்மணியின் குடும்பம் எதாவது வீடு பார்த்துக் கொண்டு போனால் திருமணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்றிருந்தான். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை…

ஒருமுறை அம்மாவுடன் திருமணம் குறித்த வாக்குவாதத்தின் போது "வீட்டுல இவ்வளவு கூட்டத்த வச்சுக்கிட்டு எப்படிம்மா கல்யாணம் பண்றது” என்று கொஞ்சம் சிடுசிடுப்பாகக் கேட்டான். அம்மாவும் இதுதான் வாய்ப்பென ஆரம்பித்து விட்டாள். "இந்த பம்பாய் ஊரு ஜனமே, இம்புடு போல வீட்ல இருந்துக்கிட்டு எப்படியெப்படியோ வாழ்றாங்க, இவனுக்கு பங்களா கட்டினாத்தான் கல்யாணம் பண்ணுவானாம்” என அம்மா அடித்தொண்டையிலிருந்து இரைந்தாள்.

மோகன் அமைதியாக இருக்க சமீபமாகக் கற்றுக் கொண்டான். என்ன சொல்லியும் அம்மாவைச் சமாதானப்படுத்த முடியாது என்பது அவனுக்கும் வீட்டாருக்கும் அனுபவம்.

அம்மா இப்படி கத்திக்கொண்டிருக்கையில் சந்திரபாபு கையில் ஒரு பொட்டலத்துடன் வந்து நின்றான். சந்திரபாபு, மோகனின் நெருங்கிய நண்பன். எல்லா நல்லது கெட்டதுகளிலும் அவன்தான் ஆதரவு. கதவில் மாட்டியிருக்கும் மெல்லிய திரைத்துணியை விலக்கியபடி உள்ளே வந்தவன். "என்னடா மாப்பிள்ளை, இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல.." என்று மோகனைப் பார்த்துக் கேட்டுவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் "அக்கா, அம்மா ஏன் சத்தம் போட்டுக்கிட்டு இருக்காங்க? என்னமா ஆச்சு?" என்று அம்மாவிடம் திரும்பினான். கையில் இருந்த பொட்டலத்தை அக்கா ருக்மணியிடம் கொடுத்துவிட்டு " ராணியை எங்கே ?” என்று கேட்டான்.

"இது என்ன தேங்காய் பழம்? எதாவது பூசை பண்ணினீங்களா?" என்று அக்கா கேட்டாள். அதற்குள் உள்ளே ஓடிவந்த ராணி, ருக்மணி கையில் இருந்த பொட்டலத்தை வாங்கி ஒரு மூலையில் உட்கார்ந்து பிரித்துக் கொண்டிருந்தாள்.

"இவன் பிரச்சனைதான்பா பெரிய பிரச்சனையா இருக்கு. நீங்களெல்லாம் பாரு காலகாலத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு வேலை குடும்பமுன்னு எப்படி இருக்கீங்க, இவன் எதுக்கும் ஒத்து வரமாட்டேங்கிறான்" என்று அம்மா மூக்கை சிந்தினாள்.

"டேய், ஏண்டா, பண்ணிக்க வேண்டியதுதானே? இல்ல நீ யாரையாவது பார்த்து வச்சிருக்கியா? சொல்லு வேணும்னா பேசலாம்” என்றான் எரிகிற தீயில் எண்ணெய்விட்டாற் போல்.

மோகனுக்கு இப்படி நண்பர்கள் வீட்டிற்கு வருவது பிடிப்பதில்லை. அப்படியே வந்தாலும் அம்மாவுக்கு ஆதரவாய் மோகனுடைய திருமணம்பற்றிப் பேசுவது எரிச்சலைத் தந்தது. "அதெல்லாம் ஒண்ணுமில்ல, இப்ப வேண்டாம். கொஞ்சநாள் போகட்டும்?”

"இன்னும் எவ்வளவுநாள் போகணும்? அவனவன் கைவண்டி இழுத்தே ரெண்டுபுள்ள மூணுபுள்ளன்னு குடும்பம் நடத்துறான்? உனக்கென்ன, வேலைதான் செய்றல்ல?" என்று அம்மா ஆயிரத்திப்பத்தாவது தடவையாக அந்த வசனத்தைப் பேசிவிட்டு மூச்சுவிட்டாள்.

”வீட்டுல என்ன விஷேசம் பாபு?” ருக்மணியக்கா விஷயத்தைத் திருப்பினாள். "அதுவொண்ணுமில்ல நம்ம சிவராமன் இருக்கான்ல, அவங்க அண்ணன் மெட்ராஸ்ல பெரிய ஜோசியராம். அவன் கல்யாணத்துக்கு அவரு வரல இல்லையா, இப்பதான் நேரங்கிடைச்சி வந்திருக்காரு. நேத்து போய்ப் பார்த்தேன். இப்படியொரு பூஜை செஞ்சா நல்ல இருக்குமுன்னாரு. அதான் காலத்தக் கடத்தாம இன்னைக்கே முடிச்சிட்டேன்” என்றான் பாபு.

”அவரு எங்கப்பா தங்கியிருக்காரு?” அம்மா ஆர்வமானாள். "இங்க பக்கத்துலதான், காந்திவிலி பொய்சர்ல, பஸ் டிப்போ இருக்குல்ல அதுக்குப் பின்னாடி. மோகனுக்கு அவன்வீடு தெரியுமே?” என்றான் பொறுப்பாக.

வீட்டில் ஒருவித அமைதி பரவிக்கொண்டிருந்தது. ஓரமாய் சுவற்றில் சாய்ந்தபடி ராணி எதையோ மென்று கொண்டிருக்கும் சத்தம் மட்டும் வீடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தது.

"நாளைக்கு காலையில் அவரப் பார்க்கலாமா?” என்றாள் அம்மா.

"கண்டிப்பா, அவரு ஒரு வாரம் இங்கதான் இருக்காரு. அதுவும் நமக்குன்னா அவரு காசுபணம் வாங்கமாட்டாரு. அதேநேரத்துல அவரு சொல்றது எல்லாம் சரியா இருக்கு.” என்று அம்மாவின் ஆர்வத்திற்குப் பலம் கூட்டினான் பாபு.

மோகனுக்கு இந்த ஜோதிடம் ஜாதகத்தில் எல்லாம் விருப்பம் இல்லை. அவனது அம்மாவுக்கும் ஜோதிடம், ராசிப்பலன் என்று எதிலும் ஆர்வமில்லைதான் ஏன் சாமி கூட கும்பிடுவதில்லை. அதற்கான அவகாசம் இல்லாமல் போனது கூட காரணம் எனலாம். மோகனுக்கு இரண்டு வயதாக இருக்கையில் அவனது அப்பா இறந்து போனார். அவனது அக்கா ருக்மணிக்கு ஆறு வயதிருக்கலாம். அன்றுதொடர்ந்து அம்மா இன்று வரைக்கும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். ருக்மணிஅக்காவும் ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகத்துவங்கி விட்டிருந்தாள்.

வீட்டில் எப்பொழுதும் சண்டைசச்சரவாக இருப்பது யாருக்கும் பிடிக்கவில்லைதான். ஜோசியரிடம் போவது என்று முடிவாகி விட்டது. மறுநாள் காலை சிவராமனைச் சந்திக்கபோவதென முழுமனதாக முடிவாகி விட்டது. மோகனுக்கும் ‘சரி என்னதான் சொல்லப் போகிறார் பார்ப்போமே’ என்றிருந்தது.

காலையில் அம்மாவும் அக்காவும் கிளம்பிவிட்டார்கள். மோகன் கொஞ்சம் வேலையிருப்பதாகவும் பின்னாலேயே வந்து விடுவதாகவும் சொல்லி அவர்கள் இருவரையும் முன்னால் அனுப்பி வைத்தான்.

சிவராமனின் அண்ணன் நெற்றியில் சந்தனம்பூசி நடுவில் குங்குமப் பொட்டிட்டு காவிவேட்டியில் மணமணத்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு தேஜஸ் இருந்ததைக் காணவும் உணரவும் முடிந்தது. நமக்குப் பிரச்னைன்னா எதிராளி முகத்தில் தேஜஸ் வந்துவிடுகிறது! தண்ணில தத்தளிக்கிறவன் மிதக்கிற வைக்கோலைப் பாய்ந்து பிடிப்பானாம். அம்மாவும் ருக்மணியக்காவும் போய்க் காத்திருந்தார்கள். எதேதோ விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மோகன் வந்து சேர்ந்தான்.
ஜோதிடம் பார்க்கத் துவங்கினார். ஒரு ஊதுவத்தியைக் கொளுத்தி வைத்தார். வீட்டார் அனைவருடைய மவுனமும் ஊதுவத்திப்புகை வாசமும் ஒரு மாறுபட்ட உணர்வைத் தந்து கொண்டிருந்தது. ஜோதிடர், வீட்டில் இரண்டு வாசல்கள் இருப்பதையும், அவை எந்தெந்த திசைகளில் இருக்கிறது என்ற விபரங்கள் துவங்கி பலவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொல்லிக் கொண்டிருந்த எல்லா விஷயமும் உண்மையானதாக இருந்தது. நடந்தவைகளை பக்கத்தில் இருந்து பார்த்துவிட்டுச் சொல்பவரைப் போல் சொல்லிக்கொண்டிருந்தார். மோகனும் அவனது அம்மாவும் அவர் சொல்லிக் கொண்டிருந்தவைகளுக்க ‘ஆமாம் ஆமாம்’ என்று மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அம்மாவுக்கும் மோகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படவும் மோகனின் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதற்கும் காரணமாக மோகனின் அப்பாவின் ஆத்மா சாந்தியடையவில்லை என்றும் பிதுர்தோஷம் இருப்பதாகவும் அதற்காக முறையாக திவசபூஜை செய்து பிதுர்தோஷத்தை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அதற்குப் பின் எல்லாமும் கூடிவரும் என்றும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்றும் அவர் சொல்லிமுடித்து முகம் மலர்ந்தார்.

நடந்தவைகளை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்மீது பெரிய அளவில் நம்பிக்கை உண்டாகிவிட்டது. அதனால் அவர் சொல்லப் போகும் எதையும் மறுக்கப் போவதில்லை என மோகனும் அவனது அம்மாவும் ஏற்கனவே முடிவுக்கு வந்திருந்தார்கள்.

”பிதுர்தோஷம் நீக்க பூசைசெய்ய எவ்வளவு செலவாகும்?” மோகன் மெதுவாகக் கேட்டான். "ஏழாயிரத்தில இருந்து பத்தாயிரம் ரூபாய் வரைக்கும் செலவாகலாம்.” என்றார் ஜோதிடர்.

ஜோதிடத்தின் மீதிருந்த மரியாதை குறையவில்லை ஆனால் ஜோதிடம் மீதிருந்த நம்பிக்கை குறைந்தது. "அவ்வளவு ஆகுமா? சரி பார்க்கலாம். யார்கிட்டயாவது கடன்வாங்கி செஞ்சிடலாம்” என்றாள் அம்மா.

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். என்னை மாதிரி ஜோதிடரை இல்ல, திவசம் பண்ற ஐயர்மார்களைக் கூப்பிட்டாதான் இவ்வளவு பணம் கேட்பாங்க. நீங்களே வீட்ல பண்ணுங்க. எப்படி பண்ணணுமுன்னு நான் சொல்றேன்” என்றார் புன்னகை மாறாமல்.

ஜோதிடம் மீது குறைந்து போயிருந்த நம்பிக்கை மரியாதையோடு சேர்ந்து வந்து அப்பிக்கொண்டது. "சரி, சொல்லுங்க ஏதோ ஆயிரம் ஐநூறுன்னா இந்த வாரமே செஞ்சிடுறோம்” என்றான் மோகன். அக்கா இடையிடையே எல்லாவற்றிற்கும் சரி என்பது போல் தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

"ஒரு பிடி பச்சரிசி, கொஞ்சம் எள்ளு எடுத்துக்கோங்க, புதுசா மண் கலையம் ஒண்ணு வாங்கி அதுல போட்டு பொங்குங்க. பொங்குன சாதத்த மூணா பங்குவச்சு பிண்டமாக்குங்க. முதல் பிண்டத்தைக் கடல்ல கரைச்சிடுங்க, இரண்டாவது பிண்டத்த காக்காவுக்குக் கொடுத்திருங்க, கடைசியா மூணாவது பிண்டத்த ஆளுக்கு கொஞ்சமா மூணு பேரும் சாப்பிட்டு அப்புறம் தகப்பனாருக்குப் பிடிச்சத சமைச்சி மூலையில் வச்சி படைச்சி கும்பிட்டுட்டு நீங்க சாப்பிடுங்க” என்று விளக்கிவிட்டு மூச்சு வாங்கினார். தொண்டையைச் செருமிக்கொண்டு தண்ணீர் குடித்துக் கொண்டார்.

எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விட்டதைப் போல் மூவரும் ஒருவித மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.

பிதுர்தோஷ பூசையை மறுநாளே செய்வது என முடிவாகி விட்டது. அன்று மாலையே அரிசி எள்ளு மற்றும் படையல் சாப்பாட்டிற்காக காய்கறிகள் அப்பளம் என எல்லாம் வாங்கியாயிற்று.

காலையில் ஆறுமணிக்கு எழுந்து அம்மா குளித்து தயாராகி மோகனை எழுப்பிக் கொண்டிருந்தாள். மோகனுக்கு எழுந்துகொள்ள விருப்பமில்லை. அவன் அப்படியும் இப்படியுமாக புரண்டு கொண்டிருந்தான். பின் எழுந்து உட்கார்ந்து கொண்டான். ருக்மணியக்காவும் அம்மாவுக்குப் பின் குளித்துவிட்டு வீட்டில் வாசலில் காப்பியுடன் உட்கார்ந்தாள். அம்மா எவ்வளவோ சொல்லியும் அவளால் காப்பி குடிக்காமலிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

அரிசியை கழுவிக்கொண்டிருந்த அம்மாவுக்கு மண் கலையம் வாங்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ‘இந்தநேரத்தில் எங்கேபோய் வாங்க’ என்று ஆளுக்கொரு இடமாக, அங்கே கிடைக்கலாம் இங்கே கிடைக்கலாமென எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அம்மா ஸ்டூலை நகர்த்திப்போட்டு அலமாரிக்கு மேலிருந்து சில்வர் சட்டி ஒன்றை எடுத்தாள். பழைய துணிகளைக் கொடுத்து வாங்கிய புது பாத்திரம் அது. அதிலேயே பொங்கல் வைத்துவிடலாம் என்றும் முடிவாகி விட்டது.

எள்ளு போட்டு பொங்கிய சோற்றை மூன்று பாகமாக பிரித்து பிண்டம் உருட்டினார்கள். முதல் பிண்டத்தை இலையில் சுருட்டி மார்வே கடலுக்கு எடுத்துச் செல்ல சைக்கிளை மிதித்தான் மோகன். இத்தனையும் நடந்துவிட ஒன்பதரை மணியாகி விட்டிருந்தது. மார்வே கடலுக்குப் பஸ்சில் சென்றிருக்கலாம் அல்லது ஆட்டோ ரிக்ஷா விரைவாகக் கொண்டு சேர்த்திருக்கும் ஆனால் ஏனோ சைக்கிளில் போவதுதான் சரியென மோகனுக்குப் பட்டிருக்கிறது. ‘மிதிக்க கஷ்டமாய் இருந்தாலும் என்ன, அப்பாவுக்காகக்ததானே செய்கிறேன்’

மார்வே கடற்கரையில் காலைநேரம் என்பதால் மீன்வண்டிகளும் இறுக்கமான சட்டையும் முட்டுவரைக்குமான பாவாடையும் அணிந்த பெண்களும், மேலுக்கு பனியனும் இடுப்பில் வண்ண கைக்குட்டையும் கட்டிய மீனவர்களும் மட்டுமே இருந்தனர்.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பிண்டத்தை கடலில் கரைத்தான். அதன்பின் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் கொஞ்சநேரம் திகைத்து நின்று, பின் கடல்நீரை வணங்கினான். முதல்காரியம் வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் மார்வே கடற்கரையிலிருந்து சைக்கிளை வேகமாக மிதித்தான். போக வர என ஒருமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. வீட்டிற்கு வந்ததும் பசி வயிற்றைக் கிள்ளியது

இரண்டாவது பிண்டத்தை இலையில் வைத்து காக்கைக்கு வைத்து வரும் படி அம்மா அனுப்பினாள். காக்கைக்கு சோறு வைப்பது பற்றி பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும் அப்படி இதுவரை செய்ததில்லை.

ஒரு பத்துவீடு தள்ளி இருக்கும் கோனார் வீட்டுக்கார அம்மா இப்படி அடிக்கடி எதாவது பூசை செய்துவிட்டு காக்கைச்சோறு வைத்து ‘கா…கா” என வெட்டவெளியில் நின்று கத்திக் கொண்டிருப்பதை பலமுறை வேடிக்கை பார்த்திருக்கிறான் மோகன்.
காக்கைக்கு சோறு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்ததும் அக்கா மகள் செல்வராணியும் சேர்ந்துகொண்டாள். அக்கா ருக்மணியும் குள்ளமான ஒரு பிளாஸ்டிக் இருக்கையை எடுத்து வாசலில் போட்டுக் கொண்டு காக்கை சோறு சாப்பிடப்போவதை வேடிக்கைபார்க்க வந்து விட்டாள். "காக்கா, திங்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் வாப்பா? என்று அம்மா சொல்லி அனுப்பினாள். நிறையப்பேர் இருந்தால் காக்கை இறங்கி வராது. வீட்டில் அனைவருக்கும் பசி வாட்டி எடுத்தது. நல்லது நடக்குமென்று பார்த்துச்செய்யும் இந்த பூசைமுறை மீது அனைவருக்கும் ஒருவித எரிச்சல் உண்டானது.

இலையில் இருந்த எள்ளுச்சோற்றுப் பிண்டத்தை வீட்டின் முன்னே இருந்த வெளியில் வைத்துவிட்டு மோகன் கொஞ்சம் விலகிவந்தான். அம்மா வீட்டுவாசலில் நின்றபடி " யப்பா, அங்கயே நின்னுக்கிட்டு இருந்தா காக்கா எப்படி வரும் கொஞ்சம் தள்ளிவந்து நில்லு” என்று சத்தமிட்டாள். அம்மா இப்படிக் கத்துவது மோகனுக்குப் பிடிக்கவில்லை. இவ லொள்ளு தாள முடியல வீட்டில் எதாவது விஷேசம் என்றால் ‘எங்கள் வீட்டில் விஷேசம்’ என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்காத குறையாகக் கத்தி சத்தமெடுப்பாள். காலையிலேயே பல்துலக்கும் பிரஷ்ஷை எடுத்துக் கொண்டு, ஒருசுற்று வந்து விடுவாள்.
வீட்டில் பிரிட்ஜ் வாங்கினார்கள். "பிரிட்ஜ்தண்ணி தவிர மத்ததண்ணியக் குடிச்சா தாகம் தீர்ந்தமாதிரியே இல்லை” என்று போகுமிடமெல்லாம் சொல்லி வந்தாள்.

"மாமா, நான் வேணுமுன்னா போய் காக்காவ கூட்டிட்டு வரட்டா? என்றாள் செல்வராணி. அவளால் இதற்குமேலும் பசியைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது என்பது தெளிவாயிற்று.

"காக்கா குருவியை கூப்பிட்டா வராது, அதுங்க இந்த சுற்றுவட்டத்துல எங்க இருந்தாலும் சாப்பாட்டு வாசனை அவங்களுக்குப் போய்ச் சேர்ந்திடும். கொஞ்சம் பொறுங்க வரும்” என்று அம்மா தனது அறிவுவிசாலத்தை வெளிப்படுத்தினாள்.
மணியாகிக் கொண்டிருந்தது. ஒரு காக்காவைக்கூடக் காணோம். வழக்கமாக அங்கே எப்பொழுதும் இருபது இருபத்தைந்து காக்கைகள் வந்தும் போயும் கொண்டிருப்பதைக் காணலாம். இன்று என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஒருவேளை அவை வேறு எங்காவது விருந்துக்குப் போயிருக்கலாம்.

இங்கே எள்ளுபோட்டு பொங்கிய சோற்றில் என்ன வாசனை கிளம்பும். அதுமட்டுமல்லாமல் இதில் என்னதான் சுவையிருக்கும். ஒருவேளை காக்கைகளுக்கு திவசப் பிண்டங்களில் சுவை தெரிந்திருக்கலாம் போல. சரி இதுவரைக்கும் திவசச் சாப்பாட்டை ருசிக்காத ஒரு ஏமாளி காக்கையாவது வந்திருக்க வேண்டுமே. அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

மோகன் வீட்டுவாசலுக்குத் திரும்பி விட்டான். அவனும் அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பக்கத்து வீட்டுக்காரனின் ஸ்கூட்டரின் மேல் உட்கார்ந்து கொண்டான்.

மோகன் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பிண்டமாய் வைத்திருக்கும் எள்ளுச் சோற்றை காக்கை வந்து சாப்பிட காத்திருந்தனர். இதுவரைக்கும் இப்படிச் செய்யவில்லை என்பதால் அப்பாவின் ஆத்மா கடுமையான கோபத்தில் இருக்கலாம். அதனால் ஆத்மா தான் இப்படி சோதிக்கிறது என்று அம்மா நினைத்துக் கொண்டாள். இதுவரை வீட்டில் எந்தவித பூசையும் செய்து பழக்கமில்லாததால்இன்று நடந்த இந்த திவசப் பிண்டம் வைக்கும் முறை சரியாக செய்யப் படாத காரணத்தால் இப்படி ஆகுமோ?… மோகன் கடுமையாய் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தான்.

செல்வராணி பிண்டம் வைத்த இடத்திற்கும் வீட்டுவாசலுக்குமாய் போய்வந்து கொண்டிருந்தாள். ”அடிக்கடி அங்க போகாதடி. காக்கா வர்ரதுதான் இங்க இருந்து பார்த்தாலே தெரியுதுல்ல. உன்னப் பார்த்து வர்ற காக்காவும் வராம போயிடப் போகுது” என்று ருக்மணி ராணியை மிரட்டினாள்.

ராணிக்குப் பொறுக்கவில்லை. அவள் தன்னையும் அறியாமல் அடிக்கடி வந்து போய்க் கொண்டுதான் இருந்தாள். திடீரென " அய்யோ மாமா, சோற்று உருண்டையக் காணோம்” என்று கத்தினாள். எப்படி ஆகியிருக்கும் யார் எடுத்திருப்பார்கள். காக்கைகள் வந்ததாகத் தெரியவில்லையே. ஒருவேளை சொர்க்கலோக அப்பாவே நேரடியாக எடுத்து சாப்பிட்டிருப்பாரா. எத்தனையோ எண்ண ஓட்டங்களுடன் மோகன் பிண்டம் வைத்த இலையருகே ஓடிப்போனான். சுற்றுமுற்றும் பார்த்தான். பார்வை வளையங்களைப் பெரிதாக்கிக்கொண்டே போனான். "அதோ, மாமா அந்தப் பன்னி தின்னுக்கிட்டு இருக்கு பாருங்க?” ராணி கத்தினாள். மோகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் " சூ…. சூ” என்று கத்திப் பார்த்தான் பருத்து நீண்ட வெள்ளைப் பன்றி ஒன்று மெதுவாய் நடந்து போய்க் கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஓடிவந்து சில குட்டிப் பன்றிகளும் பெரிய பன்றியைத் தொடர்ந்து நடை போட்டன.

"இப்ப என்னம்மா செய்யுறது? காக்கா சாப்பிட வேண்டியதைப் பன்னி சாப்பிட்டுடுச்சே?"” மோகன் அம்மாவிடம் கவலை தெரிவித்தான். "ஒரு வேலைய ஒழுங்காச் செய்றீங்களா? அந்த ஜோதிடருக்கு போன் பண்ணி கேட்கலாமா?” ருக்மணியக்கா ஆலோசனை சொன்னாள். " அவரு இதுக்கும் பெரிசா எதையாவது சொல்லப் போறாரு” என்று அம்மா அதிருப்தியானாள்.
யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. யாரிடமும் விளக்கம் கேட்கவும் வெட்கமாக இருந்தது. எதாவது ஆடு அல்லது மாடு தின்றிருந்தால் கூட தேவலாம், நாகரீகமான விலங்குகள். ஏன் பூனைக்குக் கூட அந்த வாய்ப்பு இருந்தது. நாய் மோசமில்லைதான். ஆனால் பன்றி, இந்தியச் சமூகத்தில் இதற்கு மதிப்பே இல்லையே. ‘ஒருவேளை அப்பா பன்றி வடிவத்தில் வந்து சாப்பிட்டு இருப்பாரோ?’ மோகனுக்கு தனக்குத்தானே கூட சமாதானம் சொல்லிக் கொள்ள முடியவில்லை.

"அம்மா, கடைசியா இருக்கே ஒரு பிண்டம் அதை வச்சிடலாமா?” என்றான் மோகன். அம்மா எதையோ தீர்மானித்தவளைப் போல மிகச் சுறுசுறுப்பாக எழுந்தவள். "அட போட்டும்டா, எது தின்னா என்ன? எதாவது ஒரு ஜீவன் தான தின்னிருக்கு. அந்த வேஷ்டி துண்டை எடுத்து வச்சு கும்பிட்டுட்டு சாப்பிடுங்க. எல்லாம் சரியாத்தான் இருக்கு” என்று அம்மா முடித்து வைத்தாள்.
அன்றுமுதல் மைதானத்தில் வயிறுதொங்க அலையும் அந்த பருத்து கொழுத்த பன்றியைப் பார்க்கும் போதெல்லாம் ஒருவித மரியாதை எண்ணம் மனதில் படர்ந்து விடுகின்றது..

(courtesy _ Aganazhigai May 2010)

About The Author

1 Comment

  1. கே.எஸ்.செண்பகவள்ளி

    எதார்த்தத்தைச் சித்தரிக்கும் கதை! அருமை.

Comments are closed.