சொர்க்கமே என்றாலும்… நரகத்தைப் போல வருமா?

"ராஜாதி ராஜ, ராஜ கம்பீர" என்ற எம கிங்கரர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து, மாமிச மலையைப் போன்ற எம தர்மன், எம சபைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தார்.

பாவிகள் பலர், போலிகள் சிலர், பாவிகளும் போலிகளும் கலந்தவர் பலர்… என்று, அனைவருமே எமதர்மனின் கட்டளைக்காகவும், தங்களுக்கு எந்த குவார்ட்டஸ் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதற்காகவும் லைன் கட்டி நின்று கொண்டிருந்தனர். எமதர்மன், பொன் சிம்மாசனத்தில் உட்கார்ந்ததும், சித்திரகுப்தனும் எம கவர்ன்மெண்ட்டின் மற்ற ஊழியர்களும் தத்தம் இருக்கையில் அமர்ந்தனர். சபை தொடங்கியது.

முதல் காரியமாக, அன்றைய தினம் நிறைவேற்ற வேண்டிய சட்டத் திருத்தம் பற்றியும், பூலோகத்தில் புதிது புதிதாகத் தவறு செய்பவர்களுக்கு, எமலோகத்தில் தரப்படும் தண்டனைகளை அப்கிரேடு செய்வதற்குமான மசோதா பற்றியும் விலாவாரியாக, விலா எலும்பு நோக, சித்ரகுப்தன் எமதர்மனுக்கு விளக்கிக் கூறத் தொடங்கினார். மசோதா தாக்கலின் இடையே, "பிரபோ! என்னுடைய சம்பள உயர்வு…" என்று, தன்னுடைய சொந்த மசோதாவையும் தாக்கல் செய்தார் சித்ரகுப்தன்.

"அதைப் பற்றி, தனியாகப் பிறகு பேசலாம். நான், மேலிடத்தில் கலந்து ஆலோசித்து விட்டு, உன் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்கிறேன்" என்று நைச்சியமாகப் பேசி, சித்ரகுப்தனின் மசோதாவைத் தற்காலிகத் தள்ளுபடி செய்தார் எமதர்மராஜா.

‘எப்பக் கேட்டாலும் இப்படித்தான். இந்தாளு, சரியான வழு வழு வெண்டைக்காய்’ என்று மனதிற்குள் முணுமுணுத்துவிட்டு, "மகாப் பிரபோ! பூலோகத்தில், ஈசன் மைந்தன் திருக்குமரனின் பிறந்த தினத்தை, வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அதே போல, எமலோகத்திலும் கொண்டாட வேண்டும் என்று தாங்கள் விருப்பப்பட்டீர்கள். குமரனின் பிறந்த நாள் நெருங்குகிறது…" என்று இழுத்தார் சித்ரகுப்தன்.

"ஆம்! அதற்கு ஏதேனும் யோசனை உண்டா உம்மிடம்?"

"ஆம் அரசே! அதாவது, பூலோகத்தில், காந்தி பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் என்று வந்தால், சிறையிலிருந்து கைதிகளை விடுவிப்பார்கள் அல்லவா? அதைப் போல…" என்று சித்ரகுப்தன் தயங்கினார்.

"அதற்காக?" என்று உறுமினார் எமதர்மராஜா.

"அதற்காக, நரகத்தில் உள்ளோரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கலாமா?" என்ற சித்ரகுப்தனைப் பார்த்து,

"சித்ரகுப்தா! இது அநியாயம்! ஈசன், இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்" என்று, எமதர்மர் கோபத்தில் சீறினார்.

"சரி. அப்படியானால் ஒன்று செய்யலாம். ஒரே ஒரு நாள், நரகத்தில் உள்ளோரை சொர்க்கத்திற்குச் சுற்றுப் பயணம் அழைத்துச் செல்லலாமே?" என்றார் சித்ரகுப்தன்.

"சபாஷ்! நல்ல யோசனை! இதை, ஈசனுக்குத் தெரியாதபடி, கணக்கில் அட்ஜெஸ்ட் செய்துவிடு!" என்றார் எமதர்மர், மர்மப் புன்னகையோடு.

சித்ரகுப்தன் குதூகலத்தோடு, "அதெல்லாம், தூள் கிளப்பி விடுவேன் அரசே!" என்று கூறி நகைத்தார்.

**************************

ஒரு வருடம் கழித்து…

இடம் : நரகத்திலுள்ள ஆல் ஃபெஸிலிட்டி அறை.
நாள் : பூமியில் உள்ளதைப் போலக் காலண்டர் இல்லை.

அதென்ன, ‘ஆல் ஃபெஸிலிட்டி அறை’ என்றுதானே கேட்கிறீர்கள்? நரகத்தில் குவார்ட்டர்ஸ் ஒதுக்கப்படுபவர்களில், குறைந்த பாவங்களைச் செய்தவர்களுக்கு, இந்த ‘ஆல் ஃபெஸிலிட்டி அறை’ கொடுக்கப்படும். பாவம் கூடக் கூட வசதி குறையும். இதுதான் சட்டம்.

இன்று, அந்த ஆல் ஃபெஸிலிட்டி அறை ஒன்றில், ஒரே பரபரப்பு! பரபரப்புக்கான காரணத்தை அறிவதற்கு முன், அந்த அறையில் இருப்பவர்களைப் பற்றி, ஒரு சிறிய அறிமுகம். ஃப்ரிட்ஜுக்குள் உட்கார்ந்து ஆவிக் கதை படிப்பவன், ரயிலில் அடிபட்டு இறந்தவன். கம்பியில் நாயைக் கட்டி ஒட்டடை அடிப்பவன், பிள்ளையார் சிலையைத் திருடி விட்டு, மக்களிடம் அடி வாங்கிச் செத்தவன். அந்த நாய் கூட, தன் காதலியைக் கடித்துக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டதுதான். அந்தத் தாத்தாவும் பாட்டியும், சரியான கஞ்சர்களாயிருந்து, நோய்க்கு மருந்து வாங்கிச் சாப்பிடாமல் செத்துப் போனவர்கள். ஹெல்மெட் போட்டுக் கொண்டு குளிப்பவர், பைக் ஆக்ஸிடெண்ட்டில், அல்பாயுசில் இறந்தவர். கவர்ச்சிக் கன்னி, பூலோகத்தில் பல பேரை அவுட் ஆக்கி விட்டு, எய்ட்ஸ் வந்து செத்தவள். அதோ, சிறிய சைக்கிளில் சவாரி செய்யும் அந்தப் பெண், ஹார்ட் அட்டாக் வந்து இறந்தவள். ஆனால், தன் கணவனுக்காகக் காத்திருக்கிறாள் (பாரதிராஜா பட பாணியில்!). அங்கே, ஒரு மூதாட்டி ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருக்கிறாளே? கூடவே, ஒரு மூதாட்டனும் அவளை லவ்விக் கொண்டிருக்கிறாரே? இருவரும் ஆங்கிலோ இண்டியன் கப்புள்ஸ். பாட்டிக்குக் கிட்னி ஃபெயிலியர், தாத்தாவுக்கு லிவர் ஃபெயிலியர். இதுதான் நரகக் கூட்டுக் குடும்பம்.

இன்று அந்த அறையில், பரபரப்புக்குக் காரணம் என்ன? அறிய ஆவலாய் உள்ளதா? சற்றுப் பொறுங்கள்! இதோ, எமதர்மராஜாவும் சித்ரகுப்தனும் மேலும் சிலரும் வந்துவிட்டார்கள். நரகத்தின் ஆல் ஃபெஸிலிட்டி அறைக்குள் நுழைந்த எமதர்மன், மற்றவர்களிடம் சொன்னார், "இதோ! இப்பொழுது இந்தியாவில் பகல். இந்தியாவில் இரவு வரும் வரை, நீங்கள் இங்கு இருக்கலாம்."

"ஏய்!…" என்ற கூச்சலுடன் ஓடினார்கள் சொர்க்கவாசிகள். போன வருடம், நரகவாசிகள் சொர்க்கத்திற்குச் சுற்றுப்பயணம் வந்ததைப் போல, இந்த வருடம் திருக்குமரனின் பிறந்த நாளுக்கு, சொர்க்கவாசிகள் நரகத்திற்குச் சுற்றுப்பயணம் வந்திருக்கிறார்கள்.

இதை முன்னிட்டு நரகவாசிகள், நேற்றிரவு நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், ரகசியமாய் ஒரு திட்டத்தை நிறைவேற்றியிருந்தார்கள். அதாவது, சொர்க்கவாசிகளுக்கு ‘நரகமே நல்லது!’ என்று தோன்றச் செய்து, அவர்களை நரகத்தில் தங்க வைத்துவிட்டு, தாங்கள் சொர்க்கத்திற்கு ஓடி விடுவது என்பது தீர்மானம். அதற்கான முஸ்தீபுகளில் நரகவாசிகள் தீவிரமாக இறங்கியும் விட்டார்கள்.

நரகத்தின் பரப்பளவைக் கேட்டதுமே, சொர்க்கவாசிகள் வாயைப் பிளந்தார்கள். (பாவிகள்தானே உலகில் அதிகம்).

"வாருங்கள்! தாங்கள், இப்பொழுது நரகத்தின் சுதந்திர இடத்தில் இருக்கிறீர்கள்" என்றபடி, ஆல் ஃபெஸிலிட்டி அறையின் உறுப்பினர்கள் சொர்க்கவாசிகளை வரவேற்றார்கள்.

"நரகம் முற்றிலும் சுதந்திரமானது. சொர்க்கத்தைப் போல இல்லாது, அனைவரும், நினைத்தபடி இங்கு வாழலாம். சொர்க்கத்தில், உறுப்பினர்கள் அதிகம் இல்லாததால், பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் திண்டாடியிருப்பீர்கள். ஆனால் நரகத்தைப் பாருங்கள்! எப்பொழுதும், ஒரே கூட்டம்தான். சொர்க்கம், முற்றிலும் ஈசனின் கட்டளைப்படி இயங்குகிறது. அதனால் சட்டதிட்டங்கள் அதிகம். ஆனால் நரகம் அப்படியில்லை. ஒரு சட்டமும் கிடையாது; ஒரு திட்டமும் கிடையாது" என்று, நரகத்தின் பெருமைகளை அள்ளிவிட்டார் மூத்த நரகவாசி ஒருவர். (அனேகமாக, முதல் உலகப் போரில் இறந்திருப்பார் என்று நினைக்கிறேன்).

சொர்க்கவாசிகள், நரகத்தைச் சுற்றிப் பார்த்து முடித்து விட்டார்கள். சற்று இளைப்பாறுவதற்காக, ஆல் ஃபெஸிலிட்டி அறைக்குள் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தனர். கீழே பூமியைப் பார்த்தார்கள். இந்தியாவிற்கு இரவு ஆக இன்னும் சிறிது நேரமே பாக்கியிருந்தது.

நரகவாசிகளின் தலைவன், "ஐயா! உங்களுக்கெல்லாம் நரகம் பிடித்திருக்கிறதா?" என்றான் சொர்க்கவாசிகளைப் பார்த்து.

"ரொம்பப் பிடித்திருக்கிறது!" என்று, சொர்க்கவாசிகள் அனைவரும் ஒரே நேரத்தில் கூச்சலிட்டனர். இதுதான் சமயம் என்று மேட்டருக்கு வந்தான் நரகத்தலைவன்.

"அப்படியானால், நீங்கள் இங்கேயே இருங்களேன்! நாங்கள் வேண்டுமானால், உங்களுக்குப் பதிலாக சொர்க்கத்தில் போய் இருக்கிறோம்."

"அது முடியாது!"

"ஏன் முடியாது?"

"ஏன்னா, போன வருஷம் திருக்குமரன் பிறந்த நாளுக்கு, சொர்க்கத்திற்குச் சென்ற நாங்கள், அங்குள்ளவர்களை மூளைச்சலவை செய்து நரகத்திற்கு அனுப்பிவிட்டு, அவர்கள் இடத்தை நாங்கள் பிடித்துக் கொண்டோம். மறுபடியும் நரகத்திற்கு வர நாங்கள் என்ன முட்டாள்களா?" என்று பதிலளித்தான், போன வருடம் நரகத்திலிருந்து சொர்க்கம் சென்று, ‘சொர்க்க முன்னேற்றக் கழகம்’ ஆரம்பித்த அரசியல்வாதி ஒருவன்.

"வடை போச்சே!" என்று அதிர்ந்து நின்றிருந்தார்கள் நரகவாசிகள்.

"நேரம் முடிவடைந்தது. எல்லோரும் கிளம்புங்கள்!" என்ற எமதர்மனின் குரல் ஒலிக்கவும், சொர்க்கவாசிகள் அனைவரும் கிளம்பிச் சென்றார்கள்.

தூரத்தில், சொ.மு.க தலைவனின் "முயற்சி திருவினையாக்கும்" என்ற முழக்கம், நரகவாசிகளின் காதில் விழத்தான் செய்தது.

loading...

About The Author

2 Comments

Comments are closed.