தனிவழிப் பாதைகள் (3)

அதனால்தான் நேற்று இரவு வீடு வந்து சேர்ந்ததும் அவன் அப்படி ஒரு ரௌத்திர தாண்டவம் ஆடினபோது ஆச்சரியமாக இருக்கவில்லை. "நா நினைச்சேன்" என்று பெருமூச்சு வந்தது. எல்லா இடத்திலும் ஆண் பெண் உறவு என்பது ஒண்ணுதான் என்று தோன்றிற்று. படித்த இவளும் படிக்காத ரஞ்சிதமும் ஒரே தளத்தில் நிற்பதுபோல் இருந்தது. இரவு முழுவதும் அவள் கேட்ட கேள்வி குடைந்தது. "நீ எதுக்கு என்னைக் கேள்வி கேட்கிறே? நீ கண்ட சமயத்துக்கு வீட்டுக்கு வரும்போது நா கேள்வி கேட்டேனா? உன் சினேகிதிகளைப் பத்தி விசாரிச்சேனா?"

அவ கேட்டதிலே நியாயம் இருக்கு என்று கடைசியில் அலமேலு சொல்லிக் கொண்டாள். நல்லாக் கேளு. "நீ செஞ்சா சரி, நா செஞ்சா தப்பா? இனி உன் பாதை தனி என்னுது தனி!"

அலமேலுவுக்குத் தூக்கம் வரவில்லை. எல்லாம் சரிதான். ஆனா வண்டி ஒண்ணு இருக்கில்லே இழுக்க? அதிலே ரெண்டு அறியாப் பிள்ளைங்க உட்கார்ந்திருக்கில்லே? எந்தப் பாதையிலே ஒட்டிப் போவீங்க? எது சரி எது தப்பு?

காலையில் கண்விழித்ததும், இரவு முழுவதும் குழம்பித் தவித்தது தான் மட்டும் தான் என்று அலமேலுவுக்குப் புரிந்தது.

தானாகவே காபி போட்டுக் குடித்து, அவள் முடமுடத்த கஞ்சி போட்ட புடவையில் எங்கேயோ வெளியேறினாள். அவன் நாஷ்டா சாப்பிடாமல் அலுவலகத்துக்குக் கிளம்பினான். அலமேலு வழக்கம்போல் குழந்தைகளைத் தயார்செய்து பள்ளிக்கு அனுப்பினாள்.

அவள் வீடு திரும்பியபோது முகம் வாடியிருந்தாலும் உற்சாகமாகவே காணப்பட்டாள். தோழிகள் வந்தார்கள். தனது கதையை அவள் விவரித்துக் கொண்டுபோக அவனது மிருகத்தனமான கோபத்தை எடுத்துச் சொல்ல, தோழிகள் ஒரு மனதாகச் சொன்னார்கள். "இனிமே சேர்ந்து இருக்கறதிலே அர்த்தமில்லே."

"அதனாலேதான் இன்னிக்கு வக்கீலைப் பார்த்திட்டு வர்றேன்” என்றாள் அவள். “சட்டப்படி பிரிஞ்சாத்தான் எல்லாத்துக்கும் நல்லது."

சினேகிதக் கும்பலைக் கண்டதும் தானாக உற்சாகமாகத் தேநீர் தயாரிக்கும் அலமேலு இன்று கொல்லைப் படிகளில் அமர்ந்து பவளமல்லிகை மரத்தை வேடிக்கை பார்த்தாள். ‘அலமேலு அலமேலு’ என்ற அவள் கூப்பிட்டது காதில் விழாதது போல் அமர்ந்திருந்தாள்.

குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பி ‘அலமேலு அலமேலு’ என்று கூப்பிட்டதும் உயிர் வந்தமாதிரி எழுந்து அவர்களுக்குச் சோறு போட்டாள்.

மாலையில் அவனுடைய சினேகிதர்கள் வந்தார்கள். அவன் ஆவேசத்துடன் அவளைப் பற்றிய புகார் செய்தான். அதில் இதுநாள்வரை புலப்படாத வெறுப்பு துவனித்தது பரம வைரியைப்பற்றிப் பேசுவதுபோல. எல்லாரும் சொன்னார்கள். "இனிமே சேர்ந்து இருக்கிறதிலே அர்த்தமில்லே."

"சட்டப்படி பிரிஞ்சுட்டாப் போவுது" என்றான் அவன் எகத்தளாமாக. "அவ எவனை வேணும்னாலும் கல்யாணம் செய்துக்கலாம்."

"செய்துப்பேன். நா சன்யாசினியில்லே" என்று அவள் சிரித்தாள்.

பப்புவும் சுமியும் தங்கள் அறையில் டீ.வி.யின் முன் பதுங்கி இருந்தார்கள்.

நேற்றுவரை வீட்டின் எஜமானனைப்போல் வளைய வந்தவன். இப்போது அன்னியனாய், குழந்தைகளுடன் கூடப் பேசத் தோன்றாமல் இரண்டு நாட்கள் வளைய வந்தான். மூன்றாம் நாள் ஒரு சின்னப் பையில் தனது உடுப்புகளைத் திணித்துக் கொண்டு வெளியேறினான். அலமேலுவுக்கு அழுகை வந்தது. போகாதீங்க என்று தடுக்க வேண்டும்போல் இருந்தது.

அவள் வழக்கம்போல் அலுவலகத்துக்குச் சென்றாள். மாலை நேரங்களில் வக்கீல் வீட்டிற்குச் செல்லுவது வழக்கமாகிப் போயிற்று.

துணைக்கு அவளுடைய சினேகிதன் சென்றானா என்று அலமேலுவுக்குத் தெரியாது. அலமேலுவுக்கு எல்லாம் அலுத்துப் போயிற்று. சட்டு புட்டுனு ஏதானும் முடிவாகி, அந்தப் புது ஆளு வீட்டுக்குள்ளே நுழையறதுக்குள்ளே நான் கிளம்பிப் போறேன், என்று சொல்லிக் கொண்டாள். ‘அவங்களே வீட்டைப் பார்த்துக்கட்டும்.’

அன்று மாலை அலமேலு அவளைக் கேட்டாள்.

"இன்னும் எத்தனை நாள் ஆகும்?"

"எது?” என்றாள் அவள் திடுக்கிட்டு.

"அதான். இந்தக் கோர்ட்டு கச்சேரி சமாசாரமெல்லாம்."

அவள் சோர்வுடன் சொன்னாள். "ரொம்ப நாள் ஆகும்."

"வக்கீல் ஐயா என்ன சொல்லுறாங்க?"

"ஐயா இல்லே. அம்மா. பெண்ணுக்குத்தான் பெண்ணைப் புரிஞ்சுக்க முடியும். ஆண் வக்கீல்னா ஏன் பிரியணும்பாங்க. விவாகரத்து வாங்கறதிலே இப்ப வக்கீல் அம்மா என்னைவிடத் தீவிரமா இருக்காங்க."

"குழந்தைங்க?"

அவளுடைய முகம் இலேசாக இருண்டது. "யாருக்கு யார்கிட்ட இருக்கணும்னு விருப்பமோ இருந்துக்கட்டும். அதைக் குழந்தைகளே தீர்மானிச்சுக்கட்டும்."

பப்பு அன்று நின்ற இடத்தில் சிறுநீர் கழித்ததைச் சொல்லலாமா என்று யோசித்து அலமேலு மௌனமாக நின்றாள்.

அவள் திடீரென்று முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள். அலமேலு திகைப்புடன் பார்த்தாள். பாவமாக இருந்தது.

"விலகறது கஷ்டம்தான்" என்றாள் மெல்ல. "யோசிச்சு முடிவு செய்யுங்கக்கா."

அவள் சடக்கென்று நிமிர்ந்தாள். "இப்ப யோசிக்க என்ன இருக்கு?" என்றாள் கோபத்துடன். "இனிமே என் தீர்மானத்தை மாத்திக்க முடியாது. தனியாப் போராடணும்னா போராடிட்டுப் போறேன்." இதைச் சொல்லும்போது மீண்டும் கண்களில் நீர் துளித்தது.

அழுகையின் காரணம் அலமேலுவுக்குப் பின்னால் புரிந்தது.

அவளுடைய சினேகிதன் பிறகு தலையே காட்டவில்லை.

இப்பொழுதெல்லாம் பவளமல்லிகை மரத்தின் முன் பிரமைபிடித்தவள் போல் அமர்ந்திருக்கும்போது நாவிலிருந்து ‘அடிப்பாவி, அடிப்பாவி’ என்று வெளிப்படும் பிரலாபம் யாரைக் குறித்தது என்று அலமேலுவுக்கு விளங்கவில்லை. ஆனால் அண்ட சராசரம் முழுவதும் வியாபித்திருக்கும் ரஞ்சிதங்களுக்காக மனசு அழுவது போலிருந்தது.

About The Author