திருத்தவே முடியாது

சகுந்தலாதான் வந்திருந்தாள். ‘ஹோ’வென்ற இரைச்சலும், சிரிப்பும் அவள் அடையாளங்கள்தான்.
வாசல் நடையில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்ததுமே யூகித்து விட்டேன். ஜானகியும் உறுதிப்படுத்தினாள். ஆபீஸ் பேக்’கை வாங்கிக்கொண்டவள் மெல்ல முணுமுணுத்தாள்.
"சக்கு வந்திருக்கா. பத்து நாள் தங்கப் போகிறாளாம்."

அதற்குள் சக்குவின் பெண்ணே ஓடி வந்துவிட்டது. ‘மாமா’ என்று காலைக் கட்டிக்கொண்டது.
"என்னடி அம்மாவோட வந்தியா…?"
"ம். அப்பா வரலே… லீவு கிடைக்கலே," என்றது.
உள்ளே போனேன்.. அம்மா, முகம் எங்கும் பிரகாசமாய்ச் சக்குவின் எதிரில் அமர்ந்திருந்தாள்.
"..வாங்கம்மா பெரிய மனுஷி! எப்படி இருக்கீங்க…" என்றேன்.
"..ஏதோ இருக்கேன்.." என்றாள் தோரணையாய். " நீங்கதான் பெரிய மனுஷங்க… அங்க வரவே மாட்டீங்க.. அட.. அதான் போவட்டும்…அம்மாவையாவது அனுப்பலாம்… அதுவும் கிடையாது."
"… வந்தா கூட்டிக்கிட்டுப் போயேன். யார் வேணாம்னாங்க?"
"ஏம்மா, நீ வரமாட்டியா?"
"அவன் கிடக்கான். நீ ஏண்டி அவன் கிட்டே பேசறே" என்றாள் அம்மா பொதுவாய்.

போக மாட்டாள். ஒவ்வொரு வருகையிலும் தவறாமல் சக்கு அழைப்பாள். போன வருஷமும் அழைத்தாள். ‘பத்து நாட்களாவது இருந்துவிட்டு வருகிறேன்’ என்று போன அம்மா, மூன்றாவது நாளே திரும்பி விட்டாள்.
"ஏம்மா… என்ன ஆச்சு?" என்றேன்.
"என்னவோடா… என்னால் முடியலே.. பாவம் அவளுக்கு ஏன் சிரமம்னு வந்திட்டேன்."
பின்னால் ஜானகிதான் சொன்னாள்.
".. சாமர்த்தியக்காரிதான். அம்மாவை வச்சு பயங்கரமா வேலை வாங்கிட்டாளாம். அம்மாவால் முடியலே. திரும்பி வந்துட்டா."
"வேறே மாதிரி சொன்னாளே…" என்று இழுத்தேன்.
"பெண்ணை விட்டுக் கொடுப்பாளா?"
மறுபடியும் இப்போது சக்குவின் வருகை. இந்த விஜயத்தில் என்னென்ன நிகழப்போகிறதோ…!

சொன்னபடி நகை தயாராகிவிட்டது. போனஸாக வந்த பணம். உடன் கையிருப்பு கொஞ்சம் சேர்த்து நாலு பவுனில் சங்கிலி செய்ய ஆர்டர் கொடுத்திருந்தேன். செய்யக் கொடுப்பதற்கு முன்பே ஜானகியிடம் பேசிவிட்டேன்.
"ஜானு.. உனக்கு ஆட்சேபணை இல்லியே…"
"என்னங்க இது… அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் இன்னைக்கு காலையிலேயே சொல்லிட்டேன். எதுக்குடீன்னாங்க.. உங்க பையன் ஆசையாப் போடறார்… போட்டுக்குங்கன்னேன்."
நிஜமாகவே நெகிழ்ந்தேன்.
"தேங்க்ஸ்மா… உனக்குச் செய்யலேன்னு வருத்தப்படுவியோன்னு…"
"சேச்சே … அதான் போன தடவை எனக்குப் பிடிச்சது வாங்கிக்கிட்டேனே.." என்றாள்.
பரவசமாய் அவளை என்னுடன் இறுக்கிக் கொண்டேன்.

இப்போதுதான் குழப்பம். நகையைக் கொண்டு வந்தாகிவிட்டது. அம்மாவிடம் கொடுத்து… போட்டுக் கொள்ளச் சொல்லி… நமஸ்காரமும் செய்தாகிவிட்டது.
அம்மாவுக்குப் பெருமை கொள்ளவில்லை.
"நெஜம்மாகவே எனக்குத்தானே!" என்றாள் குழந்தை போல்.
"என்னம்மா இது. இப்படி கேட்கிறே.. உனக்குத்தான். உனக்கேதான்."
எதிர் வீடு பக்கத்துவீடுகளுக்குக் கொண்டு போய்க் காட்டியாகி விட்டது.
சக்கு கூட சொல்லிவிட்டாள்.
"இது நல்லா இருக்கும்மா… ம்.. பரவாயில்லே.. ஒம் பையன் உன்னை நல்லாத்தான் வச்சிருக்கான்."

மறு நாள் அம்மாவின் கழுத்தில் நகையைக் காணோம்.
"என்னம்மா.. எங்கே அது?"
"கழற்றி வச்சிருக்கேன்…"
அப்போதுதான் எனக்குத் தோன்றியது, ‘என்ன இருந்தாலும்… அம்மாவும் பெண்தானே… சக்கு கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று யோசித்திருப்பாளோ…’
ஜானகியிடம் தனிமை கிடைத்த போது சொன்னேன்.
"அம்மாவுக்கும் ஆசைதான் போல… நகையைப் பத்திரமாய் பூட்டி வச்சுட்டா."
"ஏன் அப்படிச் சொல்றீங்க?"
"இல்லே… சக்கு கேட்பாளோன்னு பயப்படறாளா அம்மா…"
ஜானகி அழுத்தமாத் தலையசைத்தாள்.
"இல்லீங்க.. எனக்கும் அதுதான் ஆச்சர்யம், சக்கு நல்லா இருக்குன்னு சொன்னதோட சரி… அப்புறம் சங்கிலியைப் பத்தி வாயே திறக்கலே. அம்மாதான் திடீர்னு கழற்றி வைச்சுட்டாங்க."
"ஏனாம்?"
"இத்தனை நாளா எதுவும் போடாமே திடீர்னு போட்டதாலேயோ… என்னவோ தெரியலே."
"உனக்குக் கொடுத்திருவாங்களா?" என்றேன் என்னையும் மீறி
"தெரியலே," என்றாள் யதார்த்தமாய்.
"அம்மா பார்த்து என்ன செஞ்சாலும் சரி. அது அவங்களோடது."

"வரட்டுமா?" என்றாள் சக்கு.
வந்து பத்து நாட்களாகி விட்டன. இன்று ஊருக்குக் கிளம்புகிறாள்.
"பத்திரமா போயிட்டு வா," என்றேன்.
"கொஞ்சம் இருடி…" என்றாள் அம்மா.
உள்ளே போய்த் திரும்பியவள் சட்டென்று சங்கிலியைக் கழுத்தில் மாட்டி விட்டாள்.
".. ம் ..எதுவும் பேசாதே.. நீ வச்சுக்கோ." என்றாள்.
சக்கு ஒப்புக்கு ஏதோ சொல்லி… மறுக்கப்பட்டு.. முகம் முழுதும் மலர்ச்சியாய்க் கிளம்பிப் போனாள்.
“.. என்னம்மா… இப்படிப் பண்ணிட்டே, உனக்காகத்தானே ஆசையா பண்ணிப் போட்டேன்." என்றேன் ஆற்றாமையுடன்.
"உன் ஆசைக்கு ஒரு நாள் நான் போட்டுக்கிட்டேன். இப்ப என் ஆசைக்கு அவளுக்குப் போட்டுட்டேன்." என்றாள் அதே குழந்தைத்தனமாய்.

இந்த அம்மாக்களைத் திருத்தவே முடியாது.

loading...

About The Author

1 Comment

  1. ss

    Ithirku oruvrum ammavaiyo,thangai yaraum kurai solli kamant podalaiaye,manaivy saidal thapu,amma,thangai saidal ammaidi,good samalipu,keep it up.

Comments are closed.