பிம்பங்களின் நிழல்கள்

நாலாபக்கமும் ஏகப்பட்ட ஆட்கள் வியூகம் வகுத்துக் கொண்டு பெரிய பெரிய பட்டாக்கத்திகள் பளபளக்க நின்று கொண்டிருப்பது போல் தோன்றியது. எந்த நேரமும் பாய்ந்து உடம்பைக் கூறுகூறாக்கி ரத்த வெள்ளத்தில் வீழ்த்திவிடும் ஆவேசம் – அவர்களின் பெரிய கண்கள் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தன. தகிப்பு தாள முடியாமல் உடம்பு துடித்தது. பிரமையா நிஜமா. இனம் பிரித்துச் சொல்ல முடியவில்லை. தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் இன்னும் இதர காரியங்கள் செய்யும்போதும் பிம்பங்கள் மறையாமல் அச்சுறுத்திக் கொண்டிருந்தன. நிழல்களாகவும் தெரியவில்லை. தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தன.

பிடித்தமான சிவன்கோயிலின் சிதிலமடைந்த மதில்சுவரின் மேல் உட்கார்ந்து கொண்டு எட்டின மட்டும் பரந்து தெரியும் பசுமையைப் பார்த்தாலும் கழுத்து வலிக்க ஆகாயத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மேகங்களைப் பார்த்தாலும்கூட அவைகள் போகவில்லை. சில நேரம் நெருங்கி வந்து பயமுறுத்துவதும் சில நேரம் தூர நின்று உற்றுப் பார்ப்பதுமான இதுவென்ன இம்சையான விளையாட்டு விபரீதம்.

"கம்பெனியிலிருந்து இன்னிக்கும் லெட்டர் வந்திருக்கு. இது நாலாவது லெட்டர். ஏன் வேலைக்கு வல்லேன்னு காட்டமாக் கேட்டிருக்கான். பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு கை நிறைய சம்பளம். கௌரவம் – எல்லாத்தையும் கெடுத்துண்டு பைத்தியமா அலையப்போற. என்ன வந்தது உனக்கு. என்ன ஆச்சு உனக்கு. இந்த ஆடிக்கு இருபத்தி மூணு வயசாறது. சின்னக் குழந்தை மாதிரி ஏன்டா இப்படி…?"

கமலத்தின் நச்சரிப்பு எரிச்சலைத் தந்தது. ஏதும் சொல்ல முடியுமோ, சப்தம் போட முடியுமோ. அனாதையாக் கிடந்தவனை எடுத்து வளர்த்தாள். படிக்க வச்சாள். பார்த்துப் பார்த்துக் கவனிச்சாள். நல்ல உத்யோகமும் மூணு லட்சம் சம்பளமும் கமலம்மா போட்ட பிச்சை… பேச முடியுமோ. ஒரு க்ஷணத்தில் வெளியே போன்னு விரட்டினால் வாழ்வு சாத்தியமோ. நெற்றி நிறைய கோடாய்ச் சந்தனக் கீற்றும் நடுவே காசளவு குங்கும வட்டமும்… அதன் நடுவே சின்னதா விபூதியும்… எதுவும் பேச முடியுமோ. உனக்கான அதிகாரமென்ன. கேட்க முடியுமோ. தேவி உபாசகி. அவளின் பிரசன்னம் கமலம்மாவிடம். ஓரோர் சமயம் உள்ளூர் மட்டுவார்குழலியம்மையின் சாயல் – கம்பீரம். அல்லது அவளேதானோ. நல்ல உயரம். முகத்தின் காந்தம். பூஜிக்கத் தகுந்த என் தேவீ… உன்னை நமஸ்கரிக்கிறேன். உனக்கான விடைகள் என்னிடமில்லை.

"நீ சொல்லியும் கேட்காத ஆசாமியை இப்போதுதான் பாக்கறேன். பெரிய அதிசியம்தான் கமலம்." அடக்க முடியாத இருமலை சிரமப்பட்டு அடக்கி – அது முடியாமல் காற்றாய் வேகத்தோடு, விசித்திரமான ஒலிகளோடு வெளியேற திக்குமுக்காடி கண்களில் கண்ணீர் தெறித்தது. இருமலோடு பிறந்தவர் சீதாராம வாத்தியார். இடுப்புக்குக் கீழே செயலிழந்து அஞ்சாறு வருஷமாகவே படுத்த படுக்கை. கமலம் நெஞ்சைத் தடவிவிட்டாள். இருமல் ஓய்ந்து சமநிலைக்கு வந்த பிறகு கேட்டார் "ஏன் கமலம்… நல்ல டாக்டரிடம் அழைச்சுப்போய் காமிக்கலாமே. பயந்த கோளாறாக இருக்கும்னு கவலையா இருக்கு…"

இவர்களின் பேச்சும் அக்கறையும் காதில் லேசாக விழுந்தது. எங்கோ ஏழு கடல்களுக்கப்பால் நின்று பேசுவதைப்போல – என்ன இது? நாலாபக்கமும் பட்டாக்கத்திகள் பளபளக்க அவர்கள் வந்துவிட்டார்கள். வரிசையாக நிற்கிறார்கள். என்ன செய்யப் போகிறார்கள். ஏனிந்த வன்மம். ரத்தக் குவியலாய் ஆக்கி துண்டு துண்டாய் துடிக்கச் செய்ய வரும் கோபம் எதற்காக – எதற்கான தண்டனை. மெல்ல மெல்ல ஆக்ரோஷத்தோடு அருகில் வருகிறார்கள். ஏதோ யோசித்து விட்டு பின்னே போகிறார்கள். வியூகம் கவலை தருவதாய் இருக்கிறது.

"எப்போதோ தாத்தா சொல்லிக் கொடுத்த மந்திரங்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து – மரணத்திலிருந்து மரணமில்லாப் பெருவாழ்விற்குக் கொண்டு சேர் – என்னை இறுக்கமாய்ப் பிடித்துக் கொள் – பத்திரமாகப் பிடித்துக்கொள். சந்திரனிலிருந்து பெறும் ஒளிக்கற்றைகளைச் சுற்றிலும் நிலை பெறச் செய். நீ தவிர ரட்சிக்க யாருளர் தேவீ…"
"துளஸீ தள முலவே… சந்தோஷமுக… துளஸீதள…" மாயா மௌள கௌளையின் மெல்லிய கானம் – யாரோ தேர்ந்த பெண் குரல் – ஜன்னல் வழியாக மெல்ல வந்து இதமாக வருடியது. அதுகூட அச்சுறுத்தியது – ஜீவனைத் தருவது அச்சுறுத்துமோ, அழகு பயப்படுத்துமோ?

அவர்களது முகம் அனைத்தும் சிவந்து போயிருந்தன. நீளநீளமான கைகளை காற்றில் இங்குமங்கும் அசைத்துக் கொண்டே வந்தார்கள். இடைகளில் பத்திரப்படுத்திய பட்டாக்கத்திகள். நெஞ்சை அழுத்தும் பாரம் தாங்க முடியலே. கைகள் இரண்டையும் பிய்த்துப் போடுவதைப் போன்ற ஆவேசம். தாறுமாறாக முறுக்கிப் பேரவஸ்தை. தலையை அப்படியும் இப்படியுமாகத் திருப்பி – தரையில் மோதிவிடுவார்களோ. கொன்று விடுவார்களோ… வியர்வை ஆறாய் வழிந்து படுக்கையை நனைத்து நாலா பக்கமும் கோடுகளாய் ஓடியது. என் ஒருவனுக்கு மட்டும் ஊழியா?

"என்னப்பா உடம்பு சரியில்லையா" – ஏகப்படட விசாரிப்புகள் – ஆளாளுக்கு நூறு கேள்விகள். என்னாச்சு உனக்கு. ராஜா மாதிரி இருப்பியே. டாக்டரிடம் அழைச்சு போனாளாமே. என்ன சொன்னார்?” பட்டாக்கத்திகளின் பயமுறுத்தல்களைவிட கேள்விகள் பயப்படுத்தியது கொஞ்சமில்லை.

கமலத்தின் நெற்றியில் லேசாய்ச் சுருக்கங்கள். கவலையின் ரேகைகள் – பிரபஞ்சத்தையே ஆட்சி செய்பவளுக்கு மனக்கிலேசம் என்பது நம்புதற்குரியதல்ல. இரண்டு பக்கங்களிலும் காதோரமாக வெள்ளை – முன் வகிட்டிலும் கணிசமான நரை. இதெல்லாம் வயசு காரணமாக என்பது பொய். அவள் நித்யமானவள். நிரந்தரமானவள். அநுபூதி பெற்றவள்.

பூஜையறையில் அதிக நேரம் செலவழிப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. நெற்றி நிறைய கோடாய் சந்தனக் கீற்றும் நடுவில் பெரிதாக வட்டக் குங்குமமும், அதில் துளி விபூதியும் அன்று கொய்த பூக்களும் ஒருவித நேர்த்தியான வாசனை சூழ வெளியே வரும்போது சீதாராம வாத்தியார் சிரிப்பார். "எங்கே அம்பாளுடனேயே அய்க்கியமாகி விடப்போகிறாயோ என்று பயந்தேன் – கமலம். இந்த வாத்தியக் கட்டிண்டு அவஸ்தைப் படறது போறாதுன்னு புதுப்புது அவஸ்தைகளைச் சேர்த்துக் கொள்கிறாயா. உலகத்துக் கவலைகளை யெல்லாம் உள் வாங்கிக் கொண்டு ஜீரணித்துக் கொள்ளும் உத்தேசமா… போய் சாப்பிடு…"

மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு வானத்தை கண் வலிக்க உற்றுப் பார்ப்பதில் ஏதேனும் விடைகள் கிடைக்குமோ. நட்சத்திரங்களின் சிரிப்பில் புதிர்கள் விடுபடுமோ. அவர்களை விரட்டியடிக்கும் வல்லமை கிட்டுமோ. விடுதலை சாத்தியமோ.

"உக்ரகாளியம்மனை தரிசித்துவிட்டு வரலாம். அவளால் தீர்க்க முடியாதது ஏதுமில்லை. வழிபடுதலை ஏற்றுக் கொள்ளக்கூடியவள். அவளின் ரத்தச் சிவப்பான கண்கள், நீளமாய்த் தொங்கும் நாக்கு, கூர்மையான சூலாயுதம் கோரைப் பற்கள் எல்லாமே உன்னைத் துன்புறுத்துபவர்களை சம்கரிக்கும். நீ போயிருக்கியோ… இன்னிக்குப் போவோம். நான் பிரார்த்திப்பேன்"

எதிலும் லயிக்காத மனசு – விமோசனம் ஏது?

கண்ணாடியில் பார்த்தபோது திடுக்கிட்டது. கண்கள் குழி விழுந்து, கன்னங்கள் வற்றி ஏகப்பட்ட சுருக்கங்களோடு, நிறைய கறுத்து – யாரது நானா வேறேயா. எப்படி இருந்தாய் எப்படி உருமாறிப் போனாய.! மனசிலும் உடலிலுமான இந்த மாற்றத்தின் மூலம் எது. இம்சை ஏன் "உஷைதேவியே பனித்துளிகளால் பிரபஞ்சத்தையே வளப்படுத்துவதுபோல் மனசை வளப்படுத்துவாய். உடம்பை வளப்படுத்துவாய். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை வழங்குவாய் -"

காலையில் இருள் பிரியும்முன் பூஜையறையிலிருந்து வெளியே வரும்போது மணக்கும் சந்தனம், குங்குமம், மல்லிகைப்பூ என கூடம் நெடுக மாலை வரை ரம்மியப்படுத்தும். "இன்னும் எழுந்திருக்கலே. எழுந்து குளி. காபி குடி – அரை மணி நேரம் சங்கல்ப சூக்தம் சொல். மாத்திரை சாப்பிடு. ஆபீஸ் கிளம்பு… டாக்டர் சர்டிபிகேட்டெல்லாம் வாங்கி ரெடியா வச்சிருக்கேன்… ஆபீஸிலே வரச் சொல்லிட்டா… எல்லாம் சரியாயிடும்."

கமலத்தின் பேச்சே உத்தரவு மாதிரி இருக்கும். ராஜ நடை. எதையும் எதிர்கொள்வேன் என்பது போன்ற அலட்சியப் பார்வை –
"ரங்கம்மா ஏண்டி இப்படி சினிமாப் பைத்தியமா ஆயிட்டே? – ஆரு பாக்க வேண்டாம்னா. அது பொழுது போக்குதான். உனக்கு ஜீவன் மாதிரின்னா ஆயிட்டுது. உனக்குத் தெரிந்த வித்தையை உபாசனை பண்ணு. சங்கீதம் வரம். எல்லோருக்கும் வாய்க்காது. நீ வாயைத் திறந்தா தேன். தினமும் பாடு. நாலு கச்சேரி போனா வித்தைக்கும் மதிப்பு. பேருக்கும் பேர். “இது தருணமம்மா…” பாடு. சித்த கேட்போம்."

"ஏய் காலங்கார்த்தாலே மானத்தைப் பார்த்துண்டு பாலக் கட்டையிலே உட்கார்ந்திருக்கே. பரிட்சை நெருங்கியாச்சு. படி… உன் குடும்பத்திலே முதல் படிப்பாளி நீ… பெரிய படிப்பெல்லாம் படிக்கணும். உனக்கு ஃபீஸ் கட்டினது, புத்தகம் வாங்கிக் கொடுத்தது. துணிமணி வாங்கிக் கொடுத்ததெல்லாம் எதற்காக… .அமாவாசை தர்ப்பணம், பிராமணார்த்தம் எல்லாம் உங்கப்பாவோட போகட்டும்… படி…"

"குருக்களே… இப்போ மணி என்ன? எத்தனை மணிக்கு கோயிலுக்கு வரது. ஒவ்வொரு ஊர்லே சம்பளம்னு தொட்டுக்கோ துடைச்சுக்கோன்னு கொடுக்கறா. உமக்கு தாராளமாகக் கொடுக்கறது. வீடு தந்திருக்கு. நிலம் ஒதுக்கியிருக்கு. எல்லா வசதியும் பண்ணிக் கொடுத்திருக்கு. பகவான் கைங்கர்யம் பண்ணக் கொடுத்து வச்சிருக்கணும். நீங்க சிரத்தையே காட்டறதில்லையே. தினமும் சீட்டாடப் போய்டறது சரியா -"

கீழ்ப்படிதல் தவிர வேறென்ன? எல்லாவற்றையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தி வலம் வரும் தேவீ… நின் ஆணை தட்ட முடியாதது. போற்றத்தக்கது. நெறிப்படுத்த வல்லது. நான் விதி விலக்கா? இந்த பயப்படுத்தும் மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள். எதற்காகக் குறி வைக்கிறார்கள். இவர்களை விரட்ட முடியாத பலவீனமென்ன?. தினமும் ஏனிந்த இம்சை? ஜீவனைப் பிடுங்கி எறிந்தாற்போல் இதுவென்ன அசதி. செத்துக் கொண்டிருக்கிற அறிகுறிகளா?

எங்கேயோ ரோட்டோரம் அனாதையாய்க் கிடந்த குழந்தையை எடுத்து பொத்திப் பொத்தி வளர்த்தாள் கமலம். வெறிபிடிச்சவ மாதிரி வளர்த்துப் படிக்கவச்சு. இப்போ நல்ல சம்பள வேலை. பார்க்க ராஜா மாதிரி இருக்கான். இந்த சித்திரைக்கு இருபத்தி மூணு. நம்ம வைதேகிக்குப் பொருத்தமா இருக்கும்னு பார்த்தேன். என்ன பண்றது. பேசவே மாட்டேங்கறானே. பேந்தப் பேந்த முழிக்கறானே. செய்வினையா இருக்குமோ…” பலரும் வந்து வந்து போனார்கள். அனுதாபத்தை கூடத்தில் வீசி யெறிந்துவிட்டுப் போனார்கள்.

ஆகாய மேகங்கள் ஒன்றை ஒன்று துரத்திக் கொண்டு விரைந்து கொண்டிருந்தன. அதை அடைய வழியென்ன. உபாயமென்ன. அவற்றில் சவாரி செய்தால் எவ்வளவு சுகம். அவற்றின் ஓட்டம் மேன்மையானது. இலக்கு உன்னதமானது.

"இன்னும் கிளம்பலையா"

பார்க்குமிடமெல்லாம் வரிவரியாய்க் கோடுகள். வெள்ளையாய்க் கோடுகள். அவையே மெல்ல மெல்ல மாறி அழுத்தமான வண்ணங்களோடு கண்களைக் கூசச் செய்யும் பேரிம்சை. மண்டையைப் பிளக்கும் விசித்திரம். தப்ப முடியுமோ. வந்துவிட்டார்கள் சுற்றிலும் உருவிய பட்டாக்கத்திகளோடு….

‘தேவியைத் துதிக்கிறேன். தேவியைத் தஞ்சமடைகிறேன். சுற்றிய காரிருள் அகலட்டும். தேவீ…’ கமலம் சொல்லிக் கொடுத்திருந்த மந்திரங்கள் சக்தியற்றவையா…!

நிசியில் தெரு நாய் பசியோடு தீனமாகக் குரைத்து அடர்த்தியான இருளைக் கிழித்தது. இருளின் அச்சத்தில் பறவைகள் முடங்கிக் கிடந்தன. ஊர்க் கோடி வீட்டிலிருந்து ஒரு குழந்தை வீறிட்டழும் குரல் – கண்களில் தாங்க முடியாத எரிச்சல் – உறக்கம் ஏது. படுக்கையிலிருந்தே ஆகாயத்தை ஊடுருவியபோது ரகசியம் ஏதும் தென்படவில்லை. மர்மங்களே ஆக்கிரமித்துக் கொண்ட உலகம்.

ஆற்றின் வேகம் – சுழித்தோடும் வெள்ளம் குவியல் நுரை – ஒவ்வொரு குவியலிலும் நூறு நூறு பிம்பங்கள். சட்டென்று உடைந்து மீண்டும் மீண்டும். நுரைக் குவியலும் பிம்பங்களும் தோன்றி மறைந்து, மீண்டும் தோன்றி மறைவதிலும் அழகு இருக்கவே செய்தது. ரசிக்கும் மனசைத் தொலைத்த பிறகு அழகு ஏது. எல்லாமே பிரமை. வாகாய் நீண்டிருந்த மரக்கிளையிலிருந்து ஒரு சின்னக் குருவி நீரின் வேகம் கண்டு அஞ்சாமல் சர்ரென்று நேர்கோடாய் நீர்ப்பரப்பைத் தொட்டு எதையோ கொத்திக் கொண்டு கிளைக்கு வந்தது. வெற்றியைக் கொண்டாட குரல் எழுப்பியது. – க்யீய்…. அதன் எதிரொலியா அதற்கான பதிலா. எதிர் கரையிலிருந்து – ‘க்யீய்ய்….

எங்கெல்லாம் தேடறது. இங்கே உட்கார்ந்திருக்கே. சாப்பிட வேண்டாமா…” தரதரவென்று இழுத்துக் கொண்டு போனபோது இரண்டொருவர் வேடிக்கை பார்ப்பது தெரிந்தது. ஊரே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுமோ…? சுற்றிலும் நின்றிருந்த உருவங்கள் – உருவிய வாள்களின் கூர்மையான பளிச்… மர்மமான மெல்லிய சிரிப்பு.

திடீரென்று பெருவெள்ளம். வியர்வை ஆறு, நெஞ்சை அழுத்துவது யார். அவர்களா. மூச்சு முட்டியது. இதுவென்ன ஆவேசம். இன்று முடிவுக்கு வந்துவிட்டார்களா. மார்புக்கூடு நொறுங்கிப் போய்விடுமோ. கைகளை மூர்க்கத்தோடு பின்னுவதார்? வேகம் வேகம். நூறு குதிரை வேகம். உடம்பை முற்றிலுமாக அழுத்துவதார்? பூமியைப் பிளந்து கொண்டு உள்ளே போய்விடுமோ? என்ன மூர்க்கம்! என்ன செய்யப் போகிறீர்கள்… தாங்க முடியாத வெப்பம். எரிந்து பஸ்பமாய்ப் போய்விடும் அபாயம் –

ஆரது… ஆரது… உடம்பு முழுவதும் பரவிய வெப்பம் திடீரெனச் சென்றதெங்கே? குளிர்ந்த பனிக்காற்றின் பிரவேசம் அற்புதமானது. இதுவென்ன விந்தை!

… சந்தன மணமும் குங்கும வாசனையும் மல்லிகை மணமும் வியர்வை நெடியும்…

ஆரது… ஆரது… மெல்லிய இருளில் அறைக்கதவைத் திறந்து கொண்டு செல்வதார்….?

சுற்றிலும் வியூகம் வகுத்திருந்தவர்கள் கூர்வாள்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் போனதெங்கே? எப்போது போனார்கள்? மருட்டும் எந்த பிம்பங்களுமற்ற பெருவெளி. அதில் மிதந்த பயணத்தின் அற்புதம். சீதாராம வாத்தியாரின் தொடர் இருமல்….

திடீரென்று கிடைத்த விடுதலையின் சுகம் மேலானது.

திக்குமுக்காட வைப்பது.

நிசியில் – வேளை கெட்ட வேளையில் – யதுகுலகாம் போதியை குதூகலத்தோடு இழைத்துக் கொண்டிருந்தது…. க…ம….ல…ம்.

About The Author

2 Comments

  1. sk

    டமில் நல்ல இருகு,Bரம்னல் பஷை நல்ல இருகு,Vஅர ஒன்……ரும் இல்லை,னரதுகு கடு(நச்டெ ஒf டிமெ)

Comments are closed.