மனிதர்கள் வசிக்கிற ஊர்(3)

‘இன்னிக்கி டிஃபன், சாப்பாடு எல்லாம் எப்படி தம்பி?’ என்று ஆரம்பித்தார்.
 
"இன்னிக்கி யார் சாப்பாடு கொண்டு வந்தது?"

"ஒரு அம்மா கொண்டு வந்தாங்க. காவேரின்னு பேர் சொன்னாங்க."

"ஆனாலும் நேத்து சிவகாமி பரிமாறின மாதிரி இருந்திருக்காது. கன்னிப்பொண்ணு கை மணம் தனிதானே!"

தலைவர் கண்ணடித்தது எனக்குக் கொஞ்சம் நெருடலாய் இருந்தது. அவரே தொடர்ந்தார்.

"ஒங்க சம்சாரம் கோவிச்சுக்கிட்டுப் போயிருச்சாமே தம்பி? அம்மா நேத்து சொல்லி வருத்தப்பட்டாங்க. இந்த விலாசம் அவளுக்குத் தெரியாது, தெரிஞ்சா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிச்சிருப்பான்னாங்க. கழுத போவுது விடுங்க. நீங்க சரின்னு சொல்லுங்க. லட்டு மாதிரி ஒரு பொண்ண ஒங்களுக்குக் கட்டி வக்கிறேன். யாரச் சொல்றேன் புரியுதா? நம்ம சிவகாமி தான். நீங்க ஜாதியெல்லாம் பாப்பீங்களோ என்னமோ, எங்க ஊர்ல ஜாதியெல்லாம் கெடையாது. இங்க ரெண்டே ரெண்டு ஜாதிதான். ஆண்ஜாதி, பொண்ஜாதி. நீங்க உம்ம்ன்னா, ஒங்க அம்மாட்டயும் அப்பாட்டயும் நானே பேசி சம்மதம் வாங்கறேன். அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் தான்."

அவர் பேசப்பேச எனக்கு நெருடல் அதிகமானது. ஒரே ஆன்ட்டிக்ளைமாக்ஸ். இதற்காகத்தானா ஊர்க்கூட்டம்? என்னுடைய அதிருப்திக்கு சொல்வடிவம் கொடுத்தேன்.
 
"சார், என் ஒய்ஃப் கோவிச்சிக்கிட்டுப் போய்ட்டது வாஸ்தவந்தான். ஆனா அவ மனசு மாறி திரும்பி வருவான்னு, என்னோட கொழந்தய எங்கிட்டக் கூட்டிக்கிட்டு வருவான்னு நம்பிக்க இருக்கு. வரணும்னு ஆச இருக்கு. அது தான் எனக்கு சந்தோஷம். இந்த விஷயத்தப் பேசவா நீங்க ஊர்க் கூட்டம் போட்டீங்க?"

தலைவர் என்னை தீர்க்கமாய்ப் பார்த்தார். பிறகு சிரித்தார்.

"ஊர்க்கூட்டம் போட்டது இதுக்கில்ல தம்பி, பயந்துராதீங்க. ஒங்க சம்சாரம் திரும்பி வந்தாங்கன்னா எங்களுக்கு மட்டும் சந்தோஷம் இல்லியா தம்பி? அப்படியே ஆகட்டும் தம்பி. அது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னிக்கி ஊர்க்கூட்டம் போட்டது எதுக்குன்னா…."

சட்டுபுட்டென்று சஸ்பென்ஸை உடைக்காமல் இளங்கோ என் பொறுமையை சோதித்தார். பிறகு, ஊர்கூடிப் பேசிய அந்த திட்டத்தை என் முன் வைத்தார்.

"நம்ம ஊர்ல, ஊர்ப் பொது நிதின்னு ஒண்ணு இருக்கு தம்பி. எல்லா வூட்டுக்காரவங்களும் ஒரு மாசம் விட்டு ஒரு மாசம் பொது நிதிக்கி ஒரு தொகை கட்டணும். பணத் தேவை உள்ளவங்க விண்ணப்பம் குடுத்தா, பொது நிதியிலயிருந்து கடன் குடுப்போம். வட்டியில்லாக் கடன்.

நாலு வருஷம் ஆச்சு. ஆரம்பத்துல விண்ணப்பங்கள் வந்துச்சு. அப்புறம் விண்ணப்பங்கள் வர்றது கொறஞ்சு போச்சு. ஆனா நிதி மட்டும் சேந்துக்கிட்டே போவுது. என்ன ஊர் பாருங்க தம்பி இது! கடன் வாங்க ஆள் இல்ல! இப்ப ஒரு மூணு லச்சம் இருக்கு. அதுல ரெண்டு லச்சத்த ஒங்களுக்குக் குடுக்கறதா ஊர்க்கூட்டத்ல முடிவு பண்ணோம். எந்திரிச்சிட்டீங்களே தம்பி, ஒக்காருங்க. கடன்தான் தம்பி. வட்டியில்லாக் கடன். நம்ம ஊர்லயே ஒரு பலசரக்குக் கட போடறதுக்கு ரெண்டு லச்சம் போதுமில்லியா தம்பி?

கட்டடம் ரெடியாயிருக்கு. ஒங்களுக்கு அனுபவம் இருக்கு. மெட்ராஸ்ல டிபார்ட்மென்ட் ஸ்டோர்னு சொல்றாங்களே, அந்த மாதிரி டீஸன்ட்டா ஒரு கட போடுங்க தம்பி. அட, நா என்னத்தச் சொல்லிப்புட்டேன்னு இப்ப அழுவுறீங்க!"

என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

ரெண்டாம் முறையாய் அவருடைய கைகளிரண்டையும் இறுகப்பற்றிக் கொண்டேன்.

வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர் மட்டுமே வழிந்தது.

என்னை இழுத்துத் தோளில் சாத்திக்கொண்டு, தன்னுடைய மேல் துண்டை என்னுடைய கண்களிலும் கன்னங்களிலும் ஒற்றியெடுத்தார்.

"ஐயையே, பட்டணத்துக்காரங்க இப்படித்தான் அழுவாங்களாக்கும்! எங்க ஊர்ல கைக்கொழந்த கூட அழாது தெரியுமோ?"

அவரிடமிருந்து என்னை விடுவித்துக் கொண்டு நான் கை கூப்பினேன்.

"ஒங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல சார். ரொம்ப ரொம்ப தாங்ஸ் சார்."

இதற்கு மேலே வார்த்தைகள் ஏதும் கிடைக்கவில்லை.

‘இதுல நா செஞ்சது எதுவுமே இல்ல தம்பி’ என்றார் இளங்கோ.

"எல்லாம் ஊர் ஜனங்க ஏகமனதா செஞ்ச முடிவு. நா சும்மா ஒப்புக்குச் சப்பாணி. கட போட்டு ஒங்களுக்கு லாபம் வர ஆரம்பிச்சப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக் கடன அடக்யலாம். அப்புறம், இந்த வூட்டுச் சொந்தக்காரர் சிவராமனும் கூட்டத்துக்கு வந்திருந்தார். கடயில நீங்க லாபம் பாக்கற வரக்யும் இந்த வூட்டுக்கு வாடக வேண்டான்னுட்டார். அப்பறம், ஊர்க் கூட்டத்துல இன்னொரு முடிவும் எடுத்தோம். ஒங்களுக்கு சாப்பாடு குடுக்கறதுக்கு நா நீன்னு போட்டி. அதனால சீட்டுக் குலுக்கிப் போட்டு வரிசையா வீடுகள ஏற்பாடு பண்ணிட்டோம்."

திரும்பவும் எனக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. நாத் தழுதழுத்தது.

"அது எப்படி சார், சொல்லிவச்ச மாதிரி இந்த ஊர்ல எல்லாருமே மஹாத்மாக்களா இருக்கீங்க!"

இளங்கோ என்னை இடைமறித்தார்.

"ஐயையோ. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க தம்பி. மஹாத்மான்னா ஒலகத்துலயே அவர் ஒருத்தர்தான். இந்த ஊர்ல மனுஷங்க இருக்காங்க. மனுஷங்க மனுஷங்களா இருந்தாலே போதும் இல்லியா தம்பி!"

நேற்று சந்தித்த வெங்கட் திரும்பவும் நினைவுக்கு வந்தார்.

வெங்கட் சொன்னது எவ்வளவு நிஜம்!

எவ்வளவு அழகான மனிதர்கள் இவர்கள்!

எவ்வளவு அற்புதமான மனிதர்கள் இவர்கள்!

மெய்ம்மறந்த நிலையில் இருந்த என் தோளை உலுக்கிப் பஞ்சாயத்துத் தலைவர் ரெங்கசாமி இளங்கோ சுயநினைவை மீட்டுத் தந்தார். பிறகு சொன்னார், ‘நம்ம டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ல ஒரு ஸைடுல மருந்துக் கட ஒண்ணு சின்னதா போடலாமான்னு ஜனங்க கேட்டாங்க. ஒங்க அபிப்ராயம் என்ன தம்பி?’

என் அபிப்ராயத்தை நான் சொன்னேன்.

"வேண்டாம் சார். இந்த ஊர் மனுஷங்களுக்கு ஒடம்புக்கு ஒண்ணுமே வராது சார். ஒண்ணுமே வராது. தேவையில்ல. மருந்துக்குக்கூட இந்த ஊருக்கு ஒரு மெடிக்கல் ஷாப் தேவையில்ல."

& கவிதை உறவு, மார்ச் 2008 இதழ்
(2008இன் கவிதை உறவுச் சிறுகதைத் தொகுதியின் தலைப்புக் கதையாய் இடம்பெற்றது ‘மனிதர்கள் வசிக்கிற ஊர்’. கலைமாமணி ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.)

loading...

About The Author

2 Comments

  1. சங்குகணேஷ், அம்பாசமுத்திரம்

    ஐயா. எங்கள் ஊர்க்காரரான தங்களின் கதைகளில் ஒரு உயிர் இருக்கிறது. இதில் எனக்கும் பெருமையே. நெல்லை சார்ந்த கதைகளை மேலும் வெளியிட வேண்டுகிறேன்.

Comments are closed.