முதல் வேலை முதல் அதிகாரி (3)

ஐயா மணல்மூட்டைகளை எங்கெங்க போடணும் என்று காட்டிக் கொண்டிருந்தார். எங்கள் பக்கம் முதுகுகாட்டிக் கொண்டிருந்தார், என்றாலும் அவர் தீர்மானமாய் தைரியமாய் இயங்கிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. குரலில் அத்தனை நிதானம். முன்னைவிட அதிகப் பொறுமை காட்டினார். ஆனால் மணல்மூட்டைகள் போடுவது பயனளிக்கவில்லை, போடப்போட வெள்ளம் அதை இழுத்துச் சென்று கொண்டிருந்தது. பிளவில் ஓரங்கள் மேலும் மேலும் விரிந்தபடி யிருந்தன, கரை உடைந்து விழுந்து கொண்டிருந்தது. மறுபக்கமிருந்து செயலாளர்¢ ழாய், ஜின் அண்ணன் மற்றும் அவர் பரிவாரம், அவர்களும் மணல்மூட்டைகளைப் போட்டு மறுபக்கமிருந்து அடைக்கப் பார்த்தார்கள், அதுவும் நடக்கவில்லை.

ஜியாங் மௌனமாய்ப் பார்த்தபடி யிருந்தவர், கத்தினார். ”போதும்!” ஐயா திரும்பி எங்களைப் பார்த்தார். ”இப்ப என்ன பண்ணலாம்… கம்பு கழி எதாவது…” தாத்தா சொன்னார். ”ஆமாமா, அதுக்கு முன்னால் உடைப்பெடுத்த ஓரங்களை மேலும் உடையாமல் பலப்படுத்தணும்.” ஐயா தலையாட்டினார். ”சரி நீங்க உத்தரவு போடுங்க” என் பக்கம் திரும்பினார் ஐயா. ”நம்ம பகுதிக்குத் தகவல் சொல்லிரு. பயப்படண்டாம், நாங்க உடைப்பச் சமாளிச்சிருவோம்னு சொல்லு.” அவரது குரலில் உறுதி.

நான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு போய்த் தகவல் சொல்லிவிட்டு வருமுன் வேலை ஒரளவு ஒழுங்குக்குள் வந்திருந்தது. மக்கள் ரெண்டு பகுதியாக அணையின் மேல் வரிசையிட்டிருந்தார்கள். கம்பங்களையும், பாய்களையும், மணல்மூட்டைகளையும் கைமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஐந்து கம்பங்கள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன. இந்த ஒரத்திலிருந்து மத்தி வரை கம்பங்கள் நடப்பட்டு மணல்மூட்டை போட்டு முட்டு தரப் பட்டிருந்தன. கம்பங்களின் முழு உயரத்துக்கு தண்ணீர் ஒடிக் கொண்டிருந்தது. ஆறாவது கம்பம் நடப்படுகிற இடத்தில் பக்கத்திலேயே ஜியாங் மந்திரம்போல உற்சாகமான வார்த்தைகள் தந்து கொண்டிருந்தார். ”அப்பிடிப்போடு, ஆகா, நல்ல காரியம்… இன்னுங் கொஞ்சம்,. முடிஞ்சிட்டது…” தியான் ஐயாவும் வேறு சிலரும் மணல்மூட்டைகளை முட்டுக் கொடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

உடைப்பின் மறு புறத்தில் இருந்து செயலாளர் ழாய் மேற்பார்வையில் அங்கிருந்து கம்பங்கள் எங்கள் பக்கத்துக்கு நடப்பட்டன. தடால் தடால் என்று கம்பத்தை அடிக்கிற சத்தம், உற்சாகக் குரல் எடுப்புகள், (தூக்கிக்குடு, வாங்கிக்குடு – இந்தா பிடி, எடுத்துக்கோ) இத்தோடு காற்றிரைச்சல் வேறு, சூழலே இறுக்கமாய் இருந்தது.

வேலை ஒழுங்காகப் போக, உடைப்பின் வாசல்அளவு மெல்லக் குறுகியது. காலை ஒரு மூணு மணிப்போல, வெறும் நாலு மீட்டர் அளவில்தான் உடைப்பு எனச் சுருங்கி விட்டது. அதையும் மூடிறலாம்னிருந்த போதுதான், திடீரென அலையுடன் வந்த பிரம்மாண்ட பெருக்கு கம்பங்களைப் பாதிபிடுங்கி உயர்த்திவிட்டு, ஜியாங்கையும் சில ஆட்களையும் வாரிச்சுருட்டி அடித்துப் போனது முன்ஜாக்கிரதையாக இடுப்பில் கயிறு கட்டியிருந்தார்கள். அப்படியே மதகு மேலிருந்து அவர்களைத் தூக்கிக் கரை சேர்த்தார்கள்.

தாத்தா குளிரில் வெடவெடத்தார். முகம் வெளிறியிருந்தது. ”இதை அடைக்கேலாது” என்றார் ஜியாங் ஐயாவிடம், ”என் சக்திக்கு மீறியிருக்கு இது.” சுத்தியிருந்தவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது அவர் பேசியது. ”மக்கள்லாம் வீட்டுக்குப் போகட்டும், இன்னும் நேரங் கெடக்கு உடைப்பு பெரிசாகறதுக்கு…” என தாத்தா வேண்டிக் கொண்டார். ”மத்த அணைகளைப் பாருங்க போயி, இல்லாட்டி அதுங்களும் புட்டுக்கும், மொத்த பிராந்தியமும் நாஸ்தி!” எல்லாரும் நடுங்கிப் போனார்கள். மாத்தி மாத்தி அவர்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள், சிலர் வீட்டைப் பார்க்க ஓட ஆரம்பித்தார்கள். ”வேணாம், யாரும் போகக்கூடாது!” என்று கத்தினார் ஐயா, கண்கள் ஜ்வலித்தன. எல்லாரும சிலிர்த்து அப்படியே நின்றார்கள். ஐயா புலிபோலத் திரும்பி ஜியாங்கைப் பார்த்தார். ”அந்த உடைப்பு அடைபட்டாகணும்!” மறுபக்கம் பார்க்கக் கத்தினார். ”ழாய் அண்ணே, உங்காளுங்களைத் தயார் பண்ணுங்க. நாம தண்ணிக்குள்ள போறம்!…” மறுபக்கம் ழாய் மெகாஃபோனில் உத்தரவிட்டார். ”கட்சியாட்கள், இளைஞரணி எல்லாத்திலும் யாருக்கெல்லாம் நீச்சல் தெரியுமோ முன்னாடி வாங்க, நாம தண்ணில இறங்கப் போறம்…”

மணல்மூட்கைளும் கம்பங்களுமாக மறுபக்கம் அவர்கள் தயாரானார்கள். ஐயா பேனாவும் நோட்டும் வைத்துவிட்டு அவரும் ஆயத்தமானார். ”ஐயா வேணாம்… கீல்வாதமும் அதுவுமா, உங்களால முடியாது…” ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பொருட்களை என்னிடம் கொடுத்தார். பிறகு கூட்டத்தைப் பார்த்து கூக்குரலிட்டார். ”நீச்சல் தெரிஞ்சாளுகள் என்னோட வாங்க.” கூட்டத்தில் சலசலப்பு. ”ஐயாவே தண்ணிக்குள்ளாற இறங்கறாரு..” ஐந்தாறு நபர்கள் முதலில், பிறகு கொஞ்ச கொஞ்சமாய் ஆட்கள் திரண்டார்கள். பெரிய மனிதச் சங்கிலி அமைத்தார்கள். தியான் முதலில் குதித்தார். தண்ணீர் முதலில் அவர்கள் இடுப்பாழம், பிறகு மார்பாழம் உயர்ந்தது. சீற்றமான ஆறு உலுக்கி அசைத்தது அவர்களை. அசராமல் அவர்கள் உடைப்பு வழியே நடந்து போனார்கள். மறுபக்கமிருந்து ழாய் ஆட்கள் இப்படியே வந்தார்கள். மூணு முறை ழாயும், தியானும் கைகளைக் கோர்த்தாப் போல கிட்ட வந்து விலகிப் போனார்கள். அலை ஆளைப் புரட்டி விலக்கியது.

குத்திட்டு அணையில் உட்கார்ந்திருந்த ஜியாங் எழுந்து கொண்டபடி தன் பக்க ஆட்களிடம், ”போயி பெரிய தெலைபேசிக் கம்பம் ஒண்ணு கொண்டாங்க!” என்று கத்தினார். கம்பத்தை வாங்கி உடைப்பின் குறுக்கே வீசி ”பிடிங்க பிடிங்க” என்று கத்தினார். கம்பத்தைப் பிடித்தபடி நிதானப்பட்டு பிறகு ழாயும் ஐயாவும் கையைக் கோர்த்துக் கொண்டார்கள். உடைப்பின் பாதை முழுதுமாக ஒரு மனிதச் சங்கிலி. அதைப் பார்த்து அந்த வரிசைக்குப் பின்னால் ரெண்டாவது, மூன்றாவது சங்கிலி அமைக்க மக்கள் நீரில் குதித்தார்கள். இந்த அடைப்பை உடைக்கும் சக்தி காட்டாறுக்கு இல்லை.

அலை மேல் அலை வந்து மனிதச் சுவரில் மோதி உலுக்கியது. ஒரு பொங்கலில் எல்லாருமே காணாமல் போனார்கள், அலை விழும்போது அவர்கள் உருவம் தெரிந்தது. சகதிக்குழம்புக் குளியல். மூச்சடக்கி நிற்க வேண்டும். அடுத்த அலையறைக்குத் தயாராக வேண்டும்… அணைச்சுவரில் மேலே நாங்கள் பரபரப்பாய் இருந்தோம். ஜியாங் மேலும் கம்பங்களை நட உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். ஆளாளாய்க் கைமாற்றி மணல் மூட்டைகளை நாங்கள் தண்ணீருக்குள் அடுக்கினோம். இரக்கமற்ற பெருங் காற்றும் ஈரமான அலையடிப்பும் மனிதச் சுவரை ஆட்டியசைத்தன, என்றாலும் அவர்கள் யாரும் அசரவில்லை.

ஒரு மணிக்கூர் கடந்தது. மணல்மூட்டைகளை உயரஉயர அடுக்கி, கம்பங்களை நட்டு மெல்ல அந்த உடைப்புவாசல் குறைந்தது. இப்போது கும்மிருட்டாகி விட்டது, குளிர் நடுக்கியெடுத்தது. கம்பளிக்கோட்டு போட்டிருந்தாலும் எனக்கே உதறியது. சனங்கள் அந்தத் தண்ணீரில் நிற்கிறார்கள்! குளிர்காற்றும் அலை மோதலுமாய் அவர்கள் பற்களைக் கிட்டித்தன. தியான் பாறை போல இருந்தார். கத்திக் கொண்டிருந்தார். ”அப்டியே நில்லுங்க, அப்ப்ப்படியே… நாம ஜெயிக்கிறோம்!” மத்தாட்களுக்குச் சொல்கிறாரா, ஒருவேளை தனக்கே சொல்லிக்கிறாரா!

விடியல் வர, ஒருவழியாக உடைப்பு அடைப்பு என்றானது. வெள்ளத்தை நதிப்படுகையோடு மறித்திருந்தோம். தாத்தா ”மூடிட்டம்!” என்று கத்த எல்லாரும் ஹோவென்று இரைச்சலிட்டார்கள். மெல்லத் தவழ்ந்து அணையில் ஏறி வந்தார்கள். கடுங்குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது, உச்சிமுதல் உள்ளங்கால் வரை பூசிய சேறு. என்றாலும் உற்சாகத்துக்குக் குறைவில்லை. எல்லாருக்கும் குளிராற்றிக் கொள்ள கணப்பு தயாராய் இருந்தது. கூட்டமாய் கணப்பைச் சுற்றிக் கொண்டார்கள்.

ஐயா மாத்திரம் தண்ணீரிலேயே இருந்தார். கண் மூடியிருந்தது. பல் கிட்டியிருந்தது. கைகள் தொலைபேசிக் கம்பத்தைப் பிடித்திருந்தன. மணல்மூட்டையின் மேல் அவரிடம் அசைவேயில்லை. பதறிப் போனேன். ”ஐயாவப் பாருங்க. யாராவது ஐயாவக் காப்பாத்துங்க!”

ழாயும், ஜியாங்கும் இன்னும் சிலரும் போய் ஐயாவை இழுத்துப் போட்டார்கள். நினைவே இல்லை ஐயாவுக்கு. கைகால்கள் விரைத்துக் கெட்டித்திருந்தன. மிக மெல்லிசாய் வந்தது மூச்சு. கண்காணிப்பு குடிலுக்கு அவரைத் தூக்கிப் போனோம். ழாய் ஒரு ஸ்ட்ரெட்சர் கொண்டுவரச் சொன்னார். ஊரில் இருந்து ஒரு காரும் வரவழைத்தார். ஐயாவின் நனைந்த உடைகளைக் களைந்தோம். தாத்தா கண்ணீர் சிந்தியபடி தன் ஜிப்பாவைக் கழற்றி ஐயாவுக்குப் போர்த்திவிட்டார். என் கம்பளிக் கோட்டை அவர் காலுக்குப் போர்த்தினேன். வெளியிலிருந்தும் மனுச மககள் உலர்ந்த உடைகளை அவருக்குப் போட்டார்கள். கூட்டமாய்க் கூடி விட்டார்கள் எல்லாரும் கவலையுடன்.

இளம் மருத்துவப்பெண் ரெண்டு ஊசிகள் போட்டாள். டர்பன்டைன் வைத்து அவர் கால்களை சூடுபறக்கத் தேய்த்தாள். முட்டிகள் செவேலென்று வீங்கிக் கிடந்தன. உள் ரத்தக் குழாய்கள் முடிச்சாய் வெளியே துருத்தித் தெரிந்தன. யாரோ இரண்டு கனமான போர்வைகளை ஊருக்குள் போய் எடுத்து வந்திருந்தார்கள். ஸ்ட்ரெட்சர் தயாராகி யிருந்தது. அந்த ஸ்ட்ரெட்சரைத் தூக்க என்று நிறையப் பேர் முன்வந்தார்கள். நாங்கள் கிளம்பியபோது மலையில் இருந்து சூரியன் எழுந்து கொண்டிருந்தான். காற்று அடங்கியிருந்தது. நதி சமத்தாய் ஓடிக் கொண்டிந்திருந்தது. எல்லாரும் நாங்கள் போவதையே உருக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரெண்டாம் கிளையைத் தாண்டினோம். அங்கே கார் காத்திருந்தது. ஊர் ஆஸ்பத்தரிக்கு நேரே கூட்டிப் போனோம்…

ரெண்டு மாதம் கழித்து தியான் ஐயா வீடு திரும்பினார். திரும்ப அவரை வழியில்தான் நான் சந்தித்தேன். அதே ஐயா. தோள் உள்ளொடுங்கி, தலை தொங்கி, கை பின்னால் கட்டி, அதே தவக்கா நடை!

loading...

About The Author