வேதக்கோயில் – 2

”எனக்கும்தான்.” வேற என்னத்தச் சொல்ல! தெரியவில்லை. பின் சொன்னேன். ”வரணும். உன்னைப் பத்தி இவ பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.” சிறு கும்பலாக நாங்கள் உள்ளே நகர ஆரம்பித்தோம், என் பெண்டாட்டி அவனைக் கைத்தாங்கியபடியே வந்தாள். அவன் மறுகையில் பெட்டியைத் தூக்கியிருந்தான். ”இடது பக்கம் ராபர்ட், ஆமாம். கவனி, இதோ நாற்காலி. இங்கியே உட்கார். இது சோபா. ரெண்டு வாரம் முந்திதான் வாங்கினோம்.”

எங்கள் பழைய சோபா பற்றி நான் வாயெடுத்தேன். எனக்குப் பிடித்த சோபா அது. அதைக் கடாசிவிட்டு இதை வாங்கியிருந்தோம். ஆனால் எதுவும் பேசவில்லை. வேறெதாவது சின்னதாய்ப் பேசலாம், ஹட்சன் நதியில் படகுச் சவாரியில் பார்க்க நிறைய இருக்கு… நியூ யார்க்குக்குப் போகிற வழி, ரயிலில் வலது பக்கம் உட்காரணும், நியூ யார்க்கிலிருந்து வர்றச்ச இடது பக்கம்.

”ரயில் பயணம் சௌகர்யமா இருந்ததா?” நான் கேட்டேன். ”ஆமா, ரயில்ல எந்தப் பக்கமா உட்கார்ந்தே?”

”என்ன கேள்வி இது, எந்தப் பக்கம்!” என்றாள் என் பெண்டாட்டி. ”எந்தப் பக்கமா உட்கார்ந்தா என்ன?” என்றாள் அவள்.

”சும்மா கேட்டேன்.”

”வலது பக்கம்.” குருடன் சொன்னான். ”நாற்பது வருஷமாச்சு நான் ரயிலேறி. குழந்தையா இருக்கறச்ச ஜமாவோட போனது, வருஷம் ரொம்ப ஆயிட்டுது. அந்த உற்சாகமே கூட மறந்திட்டது. என் தாடிக்கே இப்ப மூப்பு வந்தாச்சு!” அவன் சொன்னான். ”அப்படிதான் எல்லாரும் சொல்றாங்க, ரொம்ப இதுவா இருக்கா அன்பே!” குருடன் என் பெண்டாட்டியிடம் சொன்னான்.

”ஆத்தாடி, நல்லாதான் இருக்கு, ராபர்ட்” என்றாள் அவள். ”ராபர்ட்” என்றாள். ” என்னைப் பார்க்க நேர்ல வந்தியே, நல்ல விஷயம்!”

என் பெண்டாட்டி ஒருவழியா அந்தக் குருடனிமிருந்து கண்ணை நகர்த்தி என்னைப் பார்த்தாள். என்றாலும் அந்தப் பார்வையின் அதிருப்தி!. நான் சுருங்கிப் போனேன்.

எந்தக் கபோதியையும் நான் பார்த்ததும் இல்லை, பழகியதுமில்லை. இந்தாளும் வயது நாற்பதைத் தாண்டியவன், உடம்பு ஊத்தம், தலை வழுக்கை. தோள்எலும்பு டொக்கு விழுந்து கிடந்தது, என்னத்தையோ கனமாத் தூக்கித் தளர்ந்துட்டாப் போல! பழுப்பு சராய், பழுப்பு ஷூ, வெளிர் பழுப்பு மேல்சட்டை, கழுத்துப்பட்டை, ஒரு விளையாட்டுவீரர் மாதிரியான கோட்டு. பாந்தமாயில்லை. அத்தோடு இந்த முழுத் தாடி. ஆனால் கையில் தடி இல்லை, கண்ணில் கருப்புக் கண்ணாடியும் கிடையாது. குருடர்களுக்கு கருப்புக் கண்ணாடி அவசியம் இல்லையோ? இவன் போட்டுக் கொண்டிருக்கக் கூடாதா! முதல் பார்வைக்கு அவனது கண்கள் சாதாரணமாய்த்தான் பட்டன,. ஆனால் உத்துப் பார்த்தால் எதோ வித்தியாசம் இருந்தது. கண் அபார வெள்ளையாய் இருந்தது. கண்பொதிவுக்குள் கண்மணிகள் புரண்டு கொண்டிருப்பதை அவன் அறிந்திருக்கவில்லையோ, அதை நிறுத்த அவனுக்கு முடியவில்லையோ தெரியாது. திகிலாய் இருந்தது அதைப் பார்க்க. நான் கவனித்தபோது அவனது இடது கண்மணி மூக்கைப் பார்க்க உருண்டு வந்தபோது, வலது கண்மணி அப்படியே நிற்க முயன்றது. ரெண்டுமே அவன் கட்டுப்பாட்டில் இல்லை. ஒண்ணு அட்டேன்ஷன்னா மற்றது ஸ்டாண்ட்-அட்-ஈஸ்!

நான் சொன்னேன். ”உனக்கு எதாச்சும் குடிக்கக் கொண்டுவரேன். உன் விருப்பம் எது? எங்கவீட்ல கொஞ்ச கொஞ்சம் எல்லாமே இருக்கு. நாங்க பொழுதுபோகலன்னா ஜாலியா பாட்டிலை உடைச்சிருவோம்.”

”வாத்யாரே! நானே ஸ்காட்ச் ஆசாமிதான்” உடனே அவன் அதே இரைச்சல் குரலில் சொன்னான்.

”ம்!” என்றேன் நான். ”உன்னைப் பாத்தாலே தெரியுது…”

சோபாவை ஒட்டி பெட்டி இருந்ததை அவன் தொட்டான். இன்னும் வசதி பண்ணிக்கொள்கிறதான சிற்றசைவுகள்.

”அதை உன் அறைல நான் வெச்சிடறேன்” என்றாள் என் பெண்டாட்டி.

”இல்ல பரவால்ல” என்றான் சத்தமாய் அவன். ”மேலே போறச்ச இதையும் எடுத்துக்கிட்டாப் போச்சு.”

”ஸ்காட்ச்சோட கொஞ்சம் தண்ணி…?” நான் சொன்னேன்.

”ரொம்பக் கொஞ்சம்.”

”எனக்குத் தெரியுமே.”

”இக்கிணுயூண்டு” என்றான் அவன். ”ஐரிஷ் நடிகர், பாரி ஃபிட்ஜெரால்ட் இல்ல? நான் அவன் ஜாதி. அவன் சொன்னான், தண்ணி வேணும்னா நான் தண்ணிதான் குடிப்பேன். விஸ்கி வேணும்னா விஸ்கிமட்டும்!” என் பெண்டாட்டி சிரித்தாள். (அவன் என்ன சொன்னாலும் சிரிக்கிற மனநிலையில் இருந்தாள்.) குருடன் கையைத் தூக்கினான். தாடியை மெல்ல மேல்பக்கமாக வருடி பிறகு விட்டுவிட்டான்.

மூன்று பானங்கள் நான் தயார் செய்தேன், ஒவ்வொன்றிலும் லேசாய்த் தண்ணீர் தெளித்தேன். நாங்கள் சௌகர்யப் படுத்திக்கொண்டு ராபர்ட்டின் பிரயாணங்கள் பத்திப் பேசினோம். மேற்குக் கரையில் இருந்து கனெக்டிகட் வரையிலான நெடிய ஆகாயப் பயணம், ஒரு டம்ளர் பானம் காலி. கனெக்டிகட்டில் இருந்து இங்கே வரை, ரயில் பயணம். இன்னொரு டம்ளர்.

குருடர்களைப் பற்றி நான் படித்த ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அவர்கள் புகைபிடிக்க மாட்டார்கள், ஏன்னா அவர்கள் வெளிவிடும் புகையை அவர்களால் பார்க்க, பார்த்து ரசிக்க முடியாது. எனக்குக் குருடர்களைப் பற்றி ஒரு விஷயம் தெரியும், ஒரே விஷயந்தான் தெரியும். ஆனால் இவன் ஒரு சிகெரெட்டைக் கடைசி இழுப்பு வரை உறிஞ்சினான். இன்னொன்றைப் பற்ற வைத்துக் கொண்டான். சாம்பல் கிண்ணத்தை அவன் நிறைத்தான், என் மனைவி அதை எடுத்துக் கொட்டினாள்.

இரவு உணவுக்கென நாங்கள் சாப்பிட உட்கார்ந்தபோது இன்னொரு பானம். இவள் அவன் தட்டில் பன்றி இறைச்சியையும், உருளைக்கிழங்குச் சீவல்களையும், பச்சைப் பட்டாணியையும் அம்பாரமாய்க் குவித்தாள். ரெண்டு ரொட்டித் துண்டங்களில் வெண்ணெயைத் தோய்த்தேன் நான். ”இதோ உனக்காக ரொட்டியும் வெண்ணெயும்.” அப்படியே ஒரு மடக்கு பானம் குடித்தேன். ”இப்ப நாம் பிரார்த்தனை பண்ணலாம்.” குருடன் தலை தாழ்த்திக் கொண்டான். என் பெண்டாட்டி, ‘நீயா’, என்கிறாப்போல என்னைப் பார்த்தாள். ”தொலைபேசி அடிக்காதிருக்கவும், உணவு ஆவிபோயிறாமல் இருக்கவும் பரிசுத்த ஆவிக்கு ஸ்தோத்திரம்.”

தட்டைக் காலிசெய்ய ஆரம்பித்தோம். மேஜையில் வைத்திருந்த எல்லாத்தையும் நாங்கள் தின்று தீர்த்தோம். நாளையென்ற ஒண்ணே கிடையாது, இந்த நிமிஷம் இதுவே சத்தியம்னா மாதிரி! பேச்சே இல்லை, சாப்பிட்டோம். பதார்த்தங்களைக் குதறினோம். மேஜையை மேய்ந்தோம். உலகே மறந்தாப்ல ஒரு ஆ-(வாயைப் பிளந்த)-வேசம். சாப்பாட்டுப் போட்டி. தட்டில் எதெது எங்கெங்க இருக்கு என்று அந்தப் பாவிக்கு நன்றாகத் தெரிந்தது. புலாலின் மேல் கத்தியையும் கரண்டியையும் அவன் பயன்படுத்துவதை நான் ஆச்சர்யத்துடன் பார்த்தேன். ரெண்டாகக் கத்தியால் வகிர்ந்தான், முள்கரண்டியால் குத்தி நேரே வாய்க்கு அனுப்பினான், அடுத்து பொறித்த உருளைக்கிழங்குத் துண்டு, பட்டாணி… அப்புறம் வெண்ணெயிட்ட ரொட்டியைக் கிழித்து வாய்க்கு அனுப்பினான். அப்படியே ஒரு டம்ளர் பால் முழுசாய். கையால் எடுத்துச் சாப்பிடவும் அவன் சங்கோஜப்படவில்லை.

எல்லாவற்றையும் தின்று தீர்த்தோம், ஸ்ட்ராபெரிக் கொட்டைப் பொட்டலத்தில் பாதி காலி! அசந்தாப்போல கொஞ்சநேரம் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தோம். வியர்வை முத்துக் கோர்த்தது எங்கள் முகத்தில். குப்பை கூளமான மேஜையை விட்டு ஒருவழியாக எழுந்து கொண்டோம். மேஜையை யாரும் பார்க்க விரும்பவில்லை. திரும்ப கூடத்துக்கு வந்து திரும்ப அவரவர் இடத்தில் அமுங்கிக் கொண்டோம். ராபர்டும் என் பெண்டாட்டியும் சோபாவில். நான் சொகுசு நாற்காலியில்! கடந்து போன இந்தப் பத்து வருடங்களில் அவர்கள் வாழ்வில் வந்து போன முக்கிய விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டே, நாங்கள் ரெண்டு மூணு சுற்று பானம் அருந்தினோம்.

நான் பேச எதுவும் இல்லை. அவ்வப்போது கூட எதாவது சொல்வதோடு சரி…! நான் அறையைவிட்டு வெளியே போய்விட்டதாக அவன் நினைச்சிறப்டாது. இவளும், நான் அவ என்னை ஒதுக்கிட்டதாக நினைக்கவில்லை, என உணரட்டும்! அவர்களுக்குள் நடந்த சமாச்சாரங்களை அவர்கள் உரையாடினார்கள் – கழிந்த பத்து வருட சம்பவங்கள். எங்கவீட்டு அம்மணியின் இனிய அதரங்களில் இருந்து என் பெயர், ”… அதன்பிறகு தான் என் அருமைக் கணவர் என் வாழ்வில் நுழைந்தார்.” – ம்ஹும். அதிகமும் ராபர்ட்டைப் பற்றியே! வாய் வலிக்கவில்லையா மக்களே. எதையும் விடவில்லை அவன். எல்லாத்திலயும் வாய்வெச்சிருக்கான் அந்த பிறவிக் குருடன். இப்பதான் அவனும் அவன் மனைவியும் ஒரு ஆம்வே விற்பனை விநியோகம் எடுத்து, அதிலிருந்து நல்ல வருமானம். புத்திசாலித்தனமான காரியம் அவன் செய்தது! அவன் ஒரு ஹாம் வானொலிக்காரனும் கூட! பல வெளிநாட்டு ஹாம்காரர்களுடன், குவாமில், ஃபிலிப்பைன்சில், அலாஸ்காவில், ‘ஏ அப்பா… திகிரி வரைகூட அவன் வயர்லெஸ் மூலமாகப் பேசினான்’ “எல்லா இடத்திலும் நமக்கு ஆள் இருக்கு இவளே, இஷ்டம்னாச் சொல்லு. எங்க வேணா நீ போய் வரலாம்” அப்பப்ப அவன் என்னைப் பார்க்கத் திரும்புவான், தாடியைச் சொறிவான், எதாவது கேட்பான். என்னையும் பேச்சுல சேத்துக்கறானாம். இந்த வேலைல நான் எவ்வளவு காலமா இருக்கிறேன்? (மூணு வருஷம்.) என் வேலை எனக்குப் பிடிச்சிருக்கா? (இல்லை. இப்ப என்னான்ற அதுக்கு) இதுலயே இப்டியே வண்டிய ஓட்டிர்றதா? (வேற மார்க்கம் என்ன? என்னையும் ஆம்வே எடுக்கச்சொல்லப் போறியா) அவனிடம் சப்பையான கேள்விகள் தூர்ந்துவிடும் என நான் நினைத்தபோது தொலைக்காட்சியை நான் முடுக்கினேன்.

என் பெண்டாட்டி கடுப்புடன் என்னைப் பார்த்தாள். உச்சபட்ச பேச்சு மும்முரத்தில் இருந்தாள் அவள். குருடனைப் பார்க்கத் திரும்பி அவள் கேட்டாள். ”ராபர்ட், உன்னாண்ட டி.வி. இருக்கா?”

”ரெண்டு! ஒண்ணு கலர். மற்றது அரதப் பழசான கருப்பு வெள்ளை. தமாஷ் என்னன்னா, எப்ப நான் டி.வி போட்டாலும், அடிக்கடி போடறதுதான், நான் கலர் டி.வியைத்தான் போடறேன். என்ன சொல்றே?”

என்ன பதில் சொல்ல? ‘அது ஒன் சௌரியமப்பா. எனக்கு இதில் அபிப்ராயமே கிடையாது. நாட்டு நடப்பு, அதைக் கேட்கலாம்.’

”இது கலர் டி.வி. – எப்டிக் கண்டுபிடிச்சேன்னு கேட்காதே. எனக்குத் தெரியும்.”

”இப்பதான் வாங்கினோம்” என்றேன் நான்.

இன்னொரு மடக்கு பானம் அருந்திக் கொண்டான் அவன். தாடியைப் பிடித்து முகர்ந்து பார்த்துவிட்டுக் கீழே விட்டான். சோபாவைப் பார்க்கக் குனிந்தான். சிகெரெட் கிண்ணத்தைக் டீபாய்மேல் இடம்பார்த்து திரும்ப எடுக்கும் கவனத்துடன் வைத்தான். ஒரு சிகெரெட் பற்றவைத்துக் கொண்டான். பின் இருக்கையில் சாய்ந்துகொண்டு கால்மேல் கால் போட்டுக் கொண்டான்.

இவள் வாயைப் பொத்திக்கொண்டு, ஓஹ், கொட்டாவி விட்டாள். பின்சாய்ந்து நெட்டி முறித்தாள். ”நான் மாடிக்குப் போயி இரவு உடை மாத்திக்கலாம்னு பாக்கறேன்… ராபர்ட் நீ உன்னை சௌகர்யம் பண்ணிக்கோ.”

”இப்டியே நல்லாதான் இருக்கு” என்றான் அவன்.

அவனும் நானும் வானிலை அறிக்கையையும், அடுத்து விளையாட்டுச் செய்தித் தொகுப்பையும் கேட்டோம். என் பெண்டாட்டி அங்கிருந்து போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அவள் திரும்பி வருவாளா தெரியவில்லை. அவள் படுத்திருக்கலாம். அவ திரும்ப கீழே வந்தா நல்லது. ஒரு குருட்டுக் கம்னாட்டியோடு தனியே இப்படிக் கழிக்கறாப்ல ஆயிட்டுதே! ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை’. அவனிடம், இன்னொரு ‘பானம் வேணுமா’, என நான் கேட்க, ‘அவசியம்’, என்றான் அவன். ‘என்னோடு கஞ்சா அடிக்கிறியா, நானே இலையில் சுருட்டி வைத்திருக்கிறேன்,’ என அவனிடம் சொன்னேன். அது தயாராய் இல்லை, அதுனால என்னப்பு ஒரு ரெண்டு சுத்து பானம் காலிசெய்வதற்குள் ரெடி பண்ணிக்கலாம், என்றிருந்தது.

”ம். உன்னுடன் இன்னிக்கு அதையும் ருசி பார்க்கிறேன்.”

”ஏ ராசா.” என்றேன் நான்.

பானங்களுடன் அவனருகில் சோபாவில் உட்கார்ந்தேன். தடியாய் உருட்டிய ரெண்டு கஞ்சாச் சுருட்டு. ஒண்ணைப் பற்ற வைத்து அவன் கையில் கொடுத்தேன். வாங்கி இழுத்தான்.

”புகைய வெளிய விட்றப்டாது. உள்ளயே எவ்வளவு நேரம் முடியுமோ அடக்கு.” அதன் முதல் இழுப்பு, அதைப் பத்தி அவனுக்குத் தெரியாது என்று தோன்றியது எனக்கு.

இளஞ்சிவப்பு உடையும் அதே நிறச் செருப்புமாய் இவள் கிழே திரும்பி வந்.. ”என்ன கண்றாவி வாடை இது?”

”கொஞ்சம் லாகிரி வஸ்து…” என்னைச் சுட்டெரிக்கிறாப் போலப் பார்த்தாள். ”ராபர்ட், யூ டூ புரூட்டஸ். உனக்கு இதெல்லாம் பழக்கம் உண்டுன்னு எனக்குத் தெரியாது…”

”என் கன்னி முயற்சி” அவன் சொன்னான். ”எல்லாத்துக்கும் ஆரம்பம்னு ஒண்ணு உண்டு. ஆனா எனக்கு இதுவரை ஒண்ணும் கிக் இல்ல…”

”இது ஜுஜுபி” என்றேன் நான். ”சமாளிச்சிக்கலாம். ஆளை விழுத்தாட்டிறாது.”

”ஒண்ணில்ல, ஒண்ணுமே இல்ல, ஹா!” அவன் சிரித்தான்.

எனக்கும் அவனுக்கும் இடையே அவள் உட்கார்ந்தாள். நான் அவளிடம் சுருட்டை நீட்ட அதை வாங்கிக் ஒரு இழுப்பு அவள் இழுத்துவிட்டு என்னிடமே திருப்பினாள். ”எனக்கு ஏற்கனவே தூக்கம் கண்ணச் சுத்துது. ராட்சஸத் தீனி…”

”ஸ்ட்ராபெரி,” என்றான் குருடன். ”எல்லாம் அது படுத்தற பாடுதான்.” சொல்லிவிட்டு பெரிசாய்ச் சிரித்து, பின் தலையை உதறிக் கொண்டான்.

”இன்னும் இருக்கு” என்றேன் நான்.

”வேணுமா ராபர்ட்?” என்றாள் அவள்.

”கொஞ்சம் கழிச்சி…” என்றான் அவனும் விடாமல்.

திரும்ப நாங்கள் தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தோம். அவள் திரும்ப, ஓஹ், ”உன் படுக்கை போட்டாச்சு. படுக்கணும்னு எப்ப தோணுதோ போய்க்கோ. இன்னிக்கு ஓய்வில்லாத அலைச்சல் உனக்கு. படுக்கணும்னா சொல்லு…” என்றவள் அவனை உலுக்கினாள். ”ராபர்ட்?”

அவன் சுதாரித்தான். ”எல்லாம் ரொம்பவே ஷோக்கா அமைஞ்சிட்டிருக்கு இன்னிக்கு. அதுலயும் இந்தச் சரக்கு… ஸும்மா அதிருதில்ல!”

”ஒன் சோலியப் பாப்பம். இந்தா.” அவன் விரலிடுக்கில் ஒரு சுருட்டைக் கொடுத்தேன். அதை உள்ளிழுத்து, உள்ள்ளேயே வைத்திருந்தான். எல்லாம் தெரிஞ்சாப்போல, ஒரு ஒன்பது வயசிலிருந்தே இதையெல்லாம் கற்றுத் தேர்ந்தவன் போல இருந்தது அவனைப் பார்க்க. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாயிருவானோ.

”சகலபாடி. எனக்கு இத்தோட போதும்னு உள்ள பட்சி கூவுது.” .அவன் கங்கை என் மனைவியை விட்டு தூரமாய்ப் பிடித்தான்.

”எனக்கும் அவ்ளதான்” என்றாள் அவள். கங்கை வாங்கி எனக்கு நீட்டினாள். ”கொஞ்சநாழி உங்க ரெண்டு பேர்த்துக்கும் மத்தில நான் தேமேன கண்ணை மூடிட்டு உட்கார்ந்திருக்கேன். உங்களைத் தொந்தரவு செய்யன்னு இல்லை, சரியா? இடைஞ்சல்னா சொல்லலாம். நான் இப்டியே இங்கியே கண்ணை மூடிட்டு உட்கார்ந்திருக்கேன், நீங்க படுக்கைக்குப் போற வரைக்கும்.” அவள் சொன்னாள். ”ராபர்ட், மாடில எங்க அறைக்கு வலது பக்க அடுத்த அறை உனக்கு, உன் படுக்கை விரிச்சு தயாரா இருக்கு. போறச்ச சொல்லு, நான் கூட்டிப் போறேன். ஒருவேளை நான் தூங்கிக் கீங்கிப் போயிட்டா என்னை யாராச்சும் எழுப்புங்க.” அவள் சொன்னாள், கண்ணை மூடிக் கொண்டாள், அப்படியே தூங்க ஆரம்பித்தாள்.

செய்தி முடிந்தது, நான் எழுந்து சேனல் மாற்றினேன். திரும்ப வந்து உட்கார்ந்துகொண்டேன். தூக்கச் செருகலில் இவள் சாமியாடினாள். தலைசரிந்து சோபாவின் பின் இருந்தது. வாயைப் பிளந்திருந்தாள். ஒரு பக்கமாத் திரும்பி, அவள் உடை விலகி, செழிப்பான ஒரு தொடை வெளியே எட்டிப் பார்த்தது. அவசரமாக அதைச் சரி செய்ய கையை நீட்… அந்தக் குருடனைப் பார்த்தேன். கிடக்கட்டுமே கழுத, இன்னா போச்சு, திரும்ப ஒதுக்கிவிட்டேன்.

”ஸ்ட்ராபெரி வேணும்னா சொல்.”

”ம் ம்.”

”அசதியா இருக்கா? நான் அழைச்சிட்டுப் போறேன். கட்டையைச் சாச்சிர்றியா?”

”இன்னும் போவட்டும். உன்னோட இருக்கேனே, உனக்குச் சம்மதம்தானே சகல? உனக்குத் தூக்கம் வர்ற வரை. நாம பேசிக்க சந்தர்ப்பம் ஒழியவே இல்லை. உன்னை ஓரங்கட்டிட்டு நானும் அவளுமா இந்த சாயங்கால வேளையை ஆக்ரமிச்சிட்டோம்…” தாடியைத் திரும்ப ஒரு தூக்கு தூக்கி பின் தளர விட்டான். தன் சிகெரெட்டையும் அதன் தீமூட்டும் சிக்கிமுக்கியையும் எடுத்துக் கொண்டான்.

”பரவால்ல. நீ வந்ததுல சந்தோஷம்தான் எனக்கு.”

அதென்னமோ உண்மைதான். தினசரி ராத்திரிக்கு ராத்திரி ஒரு சுருட்டு பத்த வெச்சிக்கிட்டு தனியே வெட்டு வெட்டுனு முழிச்சிக்கிட்டுக் கிடப்பேன், தூக்கம் ஆளைத் தள்ளும் வரை. நானும் இவளும் ஒண்ணா படுக்கைக்குப் போனதா சரித்திரமே கிடையாது. நான் படுக்கைக்குப் போகையில் நினைவுகள் தடுமாறிக் குழம்பும். கிறுகிறுக்கும். திடுமென்று நான் சுதாரிப்பதும் பதறி எழுந்து கொள்வதும் உண்டு. எனக்கு என்னவோ ஆயிட்டாப் போலிருந்தது.

டி.வியில் எதோ இடைக்கால தேவாலயங்கள் பத்தி ஓடிக் கொண்டிருந்தது. பிரதான நேரம் தாண்டி, ஏப்ப சப்பையான நிகழ்ச்சி!. வேற வேற என்னென்னவோ சேனல் மாத்தி மாத்திப் பார்த்தேன். எல்லாமே த்ராபை. இதுவே தேவல! ‘ஒத்தக்கண்ணர் ராஜ்யத்தில் ஒண்ணரைக் கண்ணன் பேரழகன்’. என முதல் சேனலுக்கே வந்தேன்.

”பரவால்ல சகல” என்றான் அவன். ”உனக்குப் பிடிச்சதா பாரு, என்னைப் பத்திக் கவலைப் படாதே. நான் எப்பவுமே எதாவது கத்துக்க விரும்பறவன். கத்துக்கறதுக்கு எல்லையே கிடையாது. இன்னிக்கு எதாவது கத்துக்க கிடைச்சா ஒண்ணுங் குறைஞ்சிற மாட்டேன், எனக்குக் காதுகள் இருக்கு. நாம்பாட்டுக்கு கேட்டுக்குனு உட்கார்ந்திருப்பேன்..”

கொஞ்ச நேரம் நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. என் பக்கம்பார்க்க முகத்தைத் திருப்பி, தொலைக்காட்சிப் பெட்டிக்கு வலது காதைக் கொடுத்திருந்தான் அவன். ரொம்ப லஜ்ஜையாய் இருந்தது. அவ்வப்போது அவன் கண்கள் கிழே சரிந்திறங்கின, திரும்பவும் வெள்ளைப்படுகை திறந்தது. காதில் விழுந்து கொண்டிருந்ததைப் பற்றி யோசிக்கிறதாக அவன் அடிக்கடி தாடியை நீவி விட்டுக் கொண்டான்.

வண்ணத்திரையில் கிறித்தவ முக்காடும் சின்னமுமாய் நிறையப் பேர். அவர்களைச் சித்ரவதை செய்யும் எலும்புக்கூடுகள். இன்னும் சிலர் பிசாசு முகமூடியும், ஊதலும், நீண்ட வாலுமாய் இருந்தார்கள். இந்த பாரம்பரியக் காட்சியுடன் ஒரு ஊர்வலம் போகிறது. ஆங்கில வர்ணனையாளன் ஸ்பெயினில் அந்த நிகழ்ச்சி வருடா வருடம் கொண்டாடப்படுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

”எலும்புக்கூடுகள்… எனக்குத் தெரியும்.” அவன் தலையாட்டிக் கொண்டான்.

எதோ ஒரு தேவாலயம் பிறகு இன்னொன்று. அதன் நீளத்தைக் காட்டியபடி மெல்ல நகர்ந்தது. காட்சி.யின் கடைசியாக பாரிசின் ஒரு பிரபல தேவாலயம், அதன் விரிந்த உத்திரங்கள், மேகத்தையே தொடுகிறாப் போன்ற அதன் உயர்ந்த கோபுரங்கள். ஒளிப்பதிவு பின்வாங்கி தேவாலயத்தின் முழு விரிவையும், அதன் விண்முட்டும் உயர்ச்சியையும் காட்டியது. காட்சி தேவாலயத்தைச் சுற்றியும் மேல் கோணத்திலும் காட்டுகிற போதெல்லாம் அந்த ஆங்கில வர்ணனையாளன் கப்சிப்! நாமே பார்த்துணர வைத்தான். அல்லது காமெரா கிராமாந்திரப் பக்கம் எதையாவது காட்டிக் கொண்டிருக்கும், குடியானவன், அவன் முன்னே உழவுமாடுகள். நானும் பேசாமல் பார்த்தவாறிருந்தேன், அவனுக்கு எதாவது சொல்ல வேண்டியிருந்தது. ”தேவாலயத்தின் வெளிப்பக்கம் காட்டிட்டிருக்காங்க. கதவிலும், வெளி வளாகச் சிலைகளிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள்… சிறிய அசுர சிலைகள். இத்தாலிதானா… ம், இத்தாலிதான். தேவாலயச் சுவர்களில் ஓவியங்கள்…”

”பிளாஸ்டரில் வாட்டர்கலரால் மியூரல் மாதிரி, ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்களா சகல?” என்றான் அவன்.

நான் டம்ளரை வாயில் கவிழ்த்தேன், காலி டம்ளர் என்பதையே கவனிக்கவில்லை. தடுமாறினேன். ”என்ன கேட்டே? ஃப்ரெஸ்கோ ஓவியமான்னா?” அதுவே புது விஷயமா இருந்தது எனக்கு! ஆள் விவரமேடிக் தான்.

காட்சி, லிஸ்பனுக்கும் வெளியே வந்திருந்தது. பிரஞ்சு இத்தாலிய தேவாலயங்களுக்கும் போர்த்துக்கீசிய ஆலயத்துக்கும் பெரிய வித்யாசமில்லை. ஆனாலும் கொஞ்சம் இருந்தது, அவை உள் அமைப்புகள். ”யப்பா ஒண்ணு தோணுது. தேவாலயம் பத்தி உனக்கு எதும் தெரியுமா? அவை எப்பிடி இருக்கும்ன்றா மாதிரி எதும் யூகம் உண்டா? அதாவது தேவாலயம்னு யாராச்சும் சொன்னா, உனக்கு அது புரியுமா, அதன் விஸ்தீரணம் என்னன்னு? ஒரு தேவாலயத்துக்கும், பாப்டிஸ்ட் சபைக்கும் உள்ள வித்யாசம் உனக்குத் தெரியுமா?”

வாயிலிருந்து புகையை ஊதினான். ”நூத்துக்கும் மேற்பட்ட வேலையாட்கள் ஐம்பது நூறு வருஷமாப் பாடுபட்டு அதைக் கட்டுவார்கள்” என்றான் அவன். ”இப்ப கேள்விப்பட்டேன். அப்பா, பிறகு அவர் பிள்ளைன்னு கூட கட்டி முடிக்க வேண்டியிருக்குமாம். இதுவும் வர்ணனையாளன் சொல்லித்தான். அதைக் கட்ட ஆரம்பிச்சவர்கள் சில பேர் அது கட்டி முடிக்கறதைப் பார்க்காமலேயே செத்துப் போயிருக்கிறார்கள். அந்த வகைல பாத்தா, நமக்கும் அவங்களுக்கும் கூட ஒண்ணும் பெரிய வித்யாசங் கிடையாது சகல.” அவன் சிரித்தான். கண்மணிகளைச் கீழிறக்கினான். தலையாட்டியதைப் பார்த்தால் குட்டித் தூக்கத்தில் அமிழ்ந்தாற் போலிருந்தது. ‘போய் வேணாப் படேண்டா. மனசால போர்ச்சுக்கல் போயிட்டாப்லியா?’ காட்சியாக இப்போது மற்றோர் தேவாலயம் – இது ஜெர்மெனி. வர்ணனையாளனின் குரல் நிறுத்தி நிதானமாய் வளைய வந்தது. ”தேவாலயங்கள்…” பார்வையற்றவன் தலையை இப்படி அப்படி ஆட்டி எழுந்து உட்கார்ந்தான். ”நிஜத்தைச் சொல்லணும்னா சகல, எனக்கு அதுதான் தெரியும். அவ்வளவுதான் தெரியும். சரி, நீதான் எனக்குச் சொல்லேன், தேவாலயம்னா என்ன, எப்பிடி இருக்கும்?”

(தொடரும்)

loading...

About The Author