அக்னிப் பிரகாசம் (3)

“ஒனக்கு அப்படித்தான் ராஜா தெரியும். தாயப்போல பிள்ள நூலப் போல சேலன்னு சொல்லிவச்சிட்டுப் போயிருக்காங்க. யோசிச்சிக்க.”

அப்பாவின் முன்னே என்ன நியாயத்தை எடுத்து வைப்பது என்று தெரியாமல் ஆனந்த் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான்.

அப்பா தொடர்ந்து பேசினார்.

“ஆனந்த், ஊழல், லஞ்சம் எல்லாம் இந்தக் காலத்துல சர்வ சாதாரணம் தான். ஆனா அத ஒரு பொம்பள செய்யற போது நம்மால தாங்கிக்க முடியலப்பா. ரொம்ப விகாரமாத் தெரியுது. இன்னுஞ் சொல்லப் போனா, கற்பு மாதிரியான சமாச்சாரம் இது. கற்புங்கறது இரு பாலருக்கும் பொதுன்னு ஏட்டுல எழுதி வச்சிருக்காங்களே யொழிய நடைமுறைல அப்படியில்ல. ஆண் கெட்டுப் போனா சம்பவம், பெண் கெட்டுப் போனா சரித்திரம்ங்கறதுதான் நடைமுறை. லஞ்ச ஊழலும் அப்படித்தான். இந்த வகயில லாவண்யாவோட அம்மா சரித்திரம் படச்சிட்டிருக்கா. பொம்பளைங்க எல்லாம் லஞ்சம் வாங்குவாங்கன்னு நா நம்பவேயில்ல, இந்த அம்மாவப் பாக்கறவரக்யும். லாவண்யாவோட அம்மா ரேட் பேசற ஜாதிடா ராஜா. இந்தக் குடும்பத்துல பெண் எடுத்தா நமக்கு ஸூட் ஆகுமான்னு பார். ரஹீம் சார் உர்துல சரியாச் சொல்லுவார். ஹராம் கா பைசான்னு. ஒன்ன டிஸ்க்கரேஜ் பண்றேன்னு நெனைக்யாத. நா மஹாத்மா காந்திய பூஜிக்கிறவன்னு ஒனக்குத் தெரியும். அப்புறம் உன் இஷ்டம்.”
அன்றைக்கு ராத்திரி ஆனந்துக்குத் தூக்கம் பிடிக்கவில்லை.

அடுத்த நாள், வணிக வரி வளாகத்துக்குப் போகப் பிடிக்கவில்லையானாலும், அக்கவுன்ட்டன்ட் தனியாய்ப் போனால் பஸ்ஸில் அவதிப்படுவாரே, அவரைக் காரில் கூட்டிக் கொண்டு போய், திரும்ப ஒருமுறை புண்ணியங் கட்டிக் கொள்ளலாமே என்று அவரோடு போனான்.

அழைப்பு வருவதற்காக அறைக்கு வெளியே அக்கவுன்ட்டன்ட்டோடு காத்திருந்த போது கொஞ்சமும் எதிர்பாராமல் அங்கே ப்ரசன்னமானாள் லாவண்யா.

“ஹாய் ஆனந்த் நீ எங்க இங்க?”

அவளைப் பார்க்கிற போது வழக்கமாய மனசில் வீசுகிற தென்றல் இன்றைக்கு வீசவில்லை. ஒப்புக்கு, அவளுடைய கேள்வியையே இவன் திருப்பிக் கேட்டான்.

“நீ எங்க இங்க?”

“எங்கம்மாவப் பாக்க வந்தேன். அம்மாவுக்கு லஞ்ச் கொண்டு வந்திருக்கேன். ஆமா, நீ?”

“நானும் ஒங்கம்மாவப் பாக்கத்தான் வந்தேன். நீ லஞ்ச் குடுக்க வந்திருக்க, நா லஞ்சங் குடுக்க வந்திருக்கேன்.”

லாவண்யா ஆடிப் போனாள். எட்டி அவனுடைய கையை இறுகப் பற்றிக் கொண்டாள். கை நடுங்கியது, குரலும். “ஆனந்த்! என்ன சொல்ற நீ?”

“எல்லாம் சொல்றேன், எங்கூட வா” என்று ஆனந்த், அக்கவுன்ட்டன்ட்டிடம் சொல்லிக் கொண்டு, லாவண்யாவோடு வளாகத்தை விட்டு வெளியே வந்தான்.

காரில் உட்கார்ந்து அவளிடம் எல்லாவற்றையும் விவரமாய்ச் சொன்னான். பேயறைந்த முகத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள் லாவண்யா. பிறகு, ரெண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு பொங்கிப் பொங்கி அழுதாள்.

அழுகைக்கு நடுவே சில வாக்கியங்கள் வெளிவந்தன. கண்ணீரில் தோய்ந்து.

“எங்கம்மா நாங் கேட்டு எதுவும் இல்லன்னு சொன்னதில்ல ஆனந்த். எதக் கேட்டாலும் மறுக்காம ஒடனே வாங்கிக் குடுப்பாங்க. புது டிரஸ், வாட்ச், கம்ப்யூட்டர், ஸ்கூட்டர்…. இப்பத்தான் புரியுது ஆனந்த். எல்லாமே லஞ்சப்பணம்.

பாட்டால ஒரு புது மாடல் செருப்புப் பாத்தேன். காஸ்ட்லி செருப்பு. ஆயிரம் ரூபா. அம்மாட்ட சொன்னேன். நேத்து ஆஃபீஸ்லந்து வரும்போது வாங்கிட்டு வந்துட்டாங்க. இப்ப தெரியுது. ஒங்கட்டயிருந்து புடுங்கின லஞ்சத்துல தான் எனக்கு இந்தச் செருப்பு வாங்கியிருக்காங்க. செருப்பு இல்ல இது, நெருப்பு!”

இந்த இடத்தில் லாவண்யா நிறுத்தினாள். பிறகு மெல்ல “நெருப்பு நெருப்பு” என்று ஆரம்பித்தவள், “நெருப்பு நெருப்பு நெருப்பு” என்று வால்யூமைக் கூட்டிக் கொண்டே போனாள்.

ஆனந்த் அவளைப் புதிராய்ப் பார்த்துக் கொண்டிருக்க, லாவண்யா காரிலிருந்து இறங்கி, வணிகவரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவளுடைய ஸ்கூட்டரைக் கிளப்பி, அதில் ஏறிக் கொண்டு பறந்தாள்.

ஆனந்த் அடித்துப் பிடித்துக் கொண்டு காரில் அவளைப் பின் தொடர்ந்தான்.

லாவண்யா தன்னுடைய வீட்டையடைந்து பூட்டைத் திறந்தாள். உள்ளே ஓடிப்போய் நெருப்புப் பெட்டியை எடுத்து வந்து, ஸ்கூட்டரின் பெட்ரோல் டாங்க்கைத் திறந்து அதற்குள்ளேயே நெருப்புக் குச்சியைக் கிழித்துப் போட்டாள். குபுக் கென்று நெருப்புப் பற்றிக் கொண்டு ஜெகஜ்ஜோதியாய்க் கொழுந்து விட்டு எரிந்தது.

திரும்பவும் உள்ளே ஓடினாள். தன்னுடைய விதவிதமான ஆடைகளையெல்லாம் அள்ளிக்கொண்டு வந்து அந்த நெருப்பில் போட்டாள். கம்ப்யூட்டரை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்து டமாலென்று போட்டாள். கைக்கடிகாரத்தைக் கழட்டிப் போட்டாள். ஆயிர ரூபாய்ச் செருப்பையும் நெருப்பில் எறிந்தாள்.

லஞ்ச சமாச்சாரங்களெல்லாம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தன.

லாவண்யா, வீட்டைப் பூட்டி, சாவியை அந்த நெருப்புக்குள்ளே வீசினாள்.

உடுத்தியிருந்த உடையோடும் வெறுங்காலோடும் வந்து காரை சமீபித்து ஆனந்தை ஏறெடுத்துப் பார்த்தாள்.
ஆனந்த், அவளுக்குக் கார்க் கதவைத் திறந்து விட்டான், புன்னகையோடும் பெருமிதத்தோடும்.

ந‎ன்றி : க்ருஹஷோபா, அக்டோபர் 2003
(சுட்டும் விழிச்சுடராய்)

About The Author