அப்பா (1)

அப்பா, ஆகிருதியை கழற்றி வைத்துவிட்ட சோர்வோடு பையுடன் வீட்டிற்குள் நுழைந்தார். பார்த்த கணத்தில் அழுகை பொங்கிவிடும் என்றிருந்தது. அவர் இப்படியாகி ரொம்ப வருஷங்கள் ஆகிவிட்டது. ஆனால் அதை உணர்கிற தருணங்கள் திடீரென்றுதான் ஏற்படுகிறது. "வாங்கப்பா" என்பதோடு சேரின் ஒரு முனையில் என் கை அவருக்கு இடம் காட்டியது. தாங்காலத் தூறல் வெம்மையைக் குறைத்த வேளையாதலால் அப்பா அறைக்குள் நுழைந்ததும் சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு ‘அப்பப்பா என்ன கொடுமை, இந்த வெயிலும், வேர்வையும்’ என்கிறதை இப்போது சொல்லவில்லை. பையைக் கையில் கொடுத்தார். வழக்கம் மீறி கனமாக இருந்தது. எப்போதும் மீறிப் போனால் 1.20க்கு விற்கிற அசோகா பிஸ்கட் இரண்டு பாக்கெட்டை வாங்கித் தருவார். தடவினபோது அட்டைப் பெட்டி மாதிரி தென்பட்டது.

"சிவகுமாருக்கு ஜட்டியும், மேல் பனியன் சட்டையும் மூணு மூணு. கொஞ்சம் சீப்பாகக் கெடச்சது வாங்கியாந்தேன். எங்க சிவக்குமார்?" உள் நுழைந்து சமையல் கட்டிலிருந்து "சிவக்குமார், தாத்தா வந்திருக்காங்க" என்று சப்தமிட்டேன். அவன் எங்கிருக்கிறான் என்பது தெரியாத கோபத்தில் அச்சப்தம் கொஞ்சம் மிகையாகவே இருந்தது. ஓடி வந்தான். "கிச்சு முச்சு தாத்தா" என்று பக்கம் வந்தான். "வாடா… வா" அப்பா கைகளில் ஏந்திக் கொண்டார். "சட்டை போட்டுட்டு வந்திரு.. போ" என்றேன். சுகந்தி நுழைந்தவள் "வாங்க வீட்லே எல்லாரும் சௌக்யமா" என்றாள். பதிலை எதிர்பாராதவள் மாதிரி, "சட்டை போட்டுட்டுத் தாத்தாவோட வெளையாடலாம் வா" என்றாள். "இதையே போட்டுடேன்" என்று அப்பா அட்டைப் பெட்டியைத் திறந்தபோது சிவகுமார் "அய்ய" என்றான். மூன்று ஜோடிகளும் ஒரே நிறத்தில் இருந்தன. கொஞ்சம் கொறச்சலான வெலையிலே கெடச்சுது.

"அதுதான் ஒரே நெறமா இருந்தாலும் பரவாயில்லேன்னு வாங்கிட்டேன்." பழைய ஜட்டியைக் கழற்றி எறிந்துவிட்டு புதுக்காலர் பனியனையும், ஜட்டியையும் போட்டு விட்டார். நைந்து போயிருந்த ஜட்டி அவசரமாய்க் கழற்றும் போது அவரின் ஆள் காட்டி விரல் நகம் பட்டுச் சற்றுக் கிழிந்தது. கைதட்டிக் கொண்டான். பிஸ்கட் இரண்டை வாங்கின பின் அப்பாவிடமிருந்து கீழறங்கி ஓடி வாசலில் நின்றான். அவன் எதிர்பார்த்த மாதிரியே யாரோ தட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று பட்டது.

"எங்க கிச்சுமுச்சுத் தாத்தா வாங்கியாந்தார். கிச்சுமுச்சு தாத்தா" வெளியே போய் நான் கதவோடு சாய்ந்தபோது எதிர்வீட்டுச் சுமதியிடம் தன் கலர் சட்டையையும் ஜட்டியையும் காட்டிக் கொண்டிருந்தான். கூப்பிட்டு கையிலிருந்த பிஸ்கட்டொன்றை அவளிடம் தந்தான். "கிச்சுமுச்சு தாத்தா சட்டெ எப்படியிருக்கு?" என்றான். என்ன பெருந்தன்மை.

"புதுச் சட்டைக்கு அவளுக்கு ட்ரீட் இது." என்றாள் சுகந்தி. "தாத்தாவுக்குத் தேங்க்ஸ் சொல்லு" "கிச்சுமுச்சு தாத்தா தேங்க்ஸ்" என்றபடி சுமதியுடன் படியிறங்கிப் போனான். அப்பா முகம் நிறைந்து உட்கார்ந்திருந்தார். உடம்பை ஒருவாறு மேல்தூக்கி அவன் தெருவில் போவதைப் பார்த்தார்.

சிவகுமார் அப்பாவைக் "கிச்சுமுச்சு தாத்தா" என்பான். வெவ்வேறு தாத்தாக்களை அடையாளம் கண்டு கொள்வதற்காய் வெவ்வேறு பெயரும் இட்டிருப்பான். அப்பா அவனுக்குச் சொல்லிக் கொடுத்த கிச்சுமுச்சு விளையாட்டை அவன் இன்னும் ஞாபகத்தில் கொண்டிருந்தான் என்பதன் அடையாளம்தான் அது. அந்தக் கிச்சுமுச்சு விளையாட்டைக் கூட அதிகமான தடவைகள் சொல்லிக் கொடுக்கவில்லை. எப்போதோ ஓரிரு முறைகள்தான். கையை விரித்து ஒவ்வொரு விரல்களையும் மடக்கி, மடக்கும் போது "இது சோறு… இது பருப்பு… இது சாம்பார், இது அப்பளம்… எல்லாத்தையும் போட்டுக் கும்மா கும்மான்னு பெசஞ்சு… இது ஆடு போற தடம். இது மாடு போற தடம். இது சின்னப் பூச்சி" ஊர்வது போல் விரல்களை உள்ளங்கையிலிருந்து கக்கம் வரை நகர்த்திக் கக்கத்தில் கைவிரல்களைக் குவித்து நுழைக்கிறபோது யாருக்கும் சிரிப்புப் பொங்கிவிடும். சிவகுமார் கக்கத்தில் கைகளை வைத்து மறைத்தபடி இறுக்கிக் கொள்வான். அதற்கப்புறம் அன்று ரொம்ப நேரம் சிரிப்பான் என்பது விசேஷமானது.

இதில் முதல் பகுதிக்கு, இரண்டாம் பகுதி சம்பந்தமில்லாதது போல் தோன்றும். அப்பாவிடமோ மற்றவர்களிடமோ இது பற்றிக் கேட்க எண்ணி இருந்தேன். இந்தச் சின்ன விஷயத்தைக் கேட்கக் கூச்சமாயிருந்தது. சிவகுமார் தெளிவாகிறபோது இந்தக் கேள்வியை என்னிடம் கேட்காமல் நான் மழுப்புகிற விஷயம் குறித்துச் சிரிப்பாய் இருந்தது.

அப்பாவை இரண்டு நாள்களுக்கு மேல் தங்கச் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். நாளை இரண்டாம் சனி, மறுநாள் ஞாயிறு, எனக்கு எலிமெண்டரி ஸ்கூல் போகிற வேலை இல்லை. பேச்சு இவ்வளவு சக்தியை அபகரித்துக் கொள்ளுமா என்று ஒவ்வொரு நாளும் மாலைகளில் உணர்வது இனி இரண்டு நாளும் இருக்காது. அப்பா என்னை எஸ்.எஸ்.எல்.சி முடித்த பின் டீச்சர் டிரெயினிங்கிற்கு அனுப்பினதே கூட பலம் மீறிய விஷயம் என்பார். தம்பி வெங்கடேஷிற்கு அது கூட முடியவில்லை. எனவே ஒன்பதாவதற்குப் பின் பனியன் பேக்டரிக்குள்தான் அவன் நுழைய வேண்டியதாகிவிட்டது.

திருமணத்திற்குப் பின் அப்பாவிற்கென்று தனியே பணம் அனுப்புவது முடியாமற் போயிற்று. வெங்கடேஷ் எந்த முகச் சுளிப்பும் இன்றி பெருந்தன்மையோடு அப்பாவைத் தன்னுடன் வைத்துக்கொண்டான். 40 கிலோமீட்டர் என்பது அதிக தூரம் இல்லாவிட்டாலும் அங்கே போவது அரிதானது. இரு மாதமும் ஒரு முறை என்பதே அப்பாவின் முகம் காணும் சமயமாயிற்று.

அப்பா கூட பனியன் கம்பெனியில்தான் தன் முழு வயசையும் கழித்திருக்கிறார். அப்போதெல்லாம் சிகரெட் குடிப்பார். வீட்டிற்குத் தெரிய பீர் குடிப்பார். பீர் பாட்டிலின் வெவ்வேறு நிறங்களும், குறிப்பாய் மாநிறமும் அந்த லேபிள்களும், ஏதாவது படம் போட்ட மூடிகளும், அவற்றைச் சுருட்டி வருகிற பேப்பர்களில் இருக்கிற பெரிதான சினிமா விளம்பரங்களும், சினமாச் செய்திகளும் எங்களுக்கு எப்போதும் பிடிக்கும்.

மாதம் இருமுறை சனிக்கிழமை சம்பள நாள்களில் அப்பா பீர் வாங்கி வருவார். அவர் குடிக்கிறபோது சாப்பிட எங்களுக்கு ஏதாவது வாங்கி வருவார். பீர் சாப்பிட்டதும் சாப்பாட்டை உடனே சாப்பிட அவசரப்படுவார். சாப்பாடு வயிற்றை நிரப்ப நிரப்ப "இப்பதா நல்லா இருக்கு" என்பார். பழக்கம் மீறி ஒரு பிடிச் சாதம் அதிகமாய் இறங்கும் அவருக்கு. வயிற்றைச் சாதம் நிறைத்ததும் "கொஞ்சம் மிதப்பா இருக்குது" என்பார் "எப்பிடிப்பா" என்றால், "பட்டாம்பூச்சி கண்ணுக்குள்ளாற பறக்கற மாதிரி இருக்குடா… போதைன்னு பீர்லே ஒண்ணும் வராது… ஆனா மிதப்புக் கொஞ்சம்" என்பார்.

அடிக்கடி சப்தமாய் ஏப்பம் விடுவார். "என்னப்பா இப்பிடி ஏப்பம்?" என்றால் "பீரோட குணமே அப்பிடிடா… கொஞ்சக் கேஸ்தான் வரும். இரத்தம் சுத்தமாகும். இரத்த ஓட்டம் நல்லா இருக்கும். உங்களுக்கெல்லாம் வேண்டாம்டா… நாந்தான் பனியன் கம்பனி வெக்கையிலே கெடந்து சாகறேன். சூடு கொறைக்கத்தான் இது. வேற எதுவும் இல்லே. பாலோ, தயிரோ, எண்ணக் குளியலோ முடியாமற் போச்சு, அதனால இப்படி…" பீர் தவிர வேறெதும் அப்பா குடித்ததாய் எனக்குத் தெரியாது. வெளியில் குடிப்பாரா என்பதை அறிந்து கொள்வதில் சிரமங்கள் இருந்தது.

வீட்டில் பீர் பாட்டில்கள் அடுக்கப்பட்ட அலமாரி எப்போதும் பார்க்க அழகாய் இருக்கும். பாட்டில்கள் அடுக்கப்பட்ட அடுக்கிற்குக் கீழ்தான் எங்கள் புத்தங்களை வைப்போம். புத்தகங்களையும் பாட்டில்களையும் ஒரே பார்வையில் பார்ப்பது என்பதென்னவோ சந்தோஷமானதுதான். அதிலும் அவர் குடிக்க உபயோகிக்கும் மஞ்சள் நிற சின்னச்சின்ன வெள்ளைப் பூக்கள் போட்ட கண்ணாடி டம்ளர் மேல் அடுக்கில் எந்த நிலையில் வைத்தாலும் பார்க்க அழகாக இருக்கும். பழைய பாட்டில்களை மொத்தமாய் விலைக்குப் போடுகிறபோது லேபிள்களைச் சிதைக்காமல் கிழித்து சேகரித்து வைப்பதில் எனக்கும் வெங்கடேஷிற்கும் மனஸ்தாபம் ஏற்படுவதுண்டு. அநேகமாய் வெங்கடேஷ்தான் அதிகபட்சமான லேபிள்களைச் சிதையாமல் கிழித்துக் கதவில் ஒட்டி வைப்பான். வீட்டு உள் கதவு லேபிள்களால் முழுக்க செய்தமாதிரி ஒட்டப்பட்டுக் கிட்க்கும். அப்பாவின்
சொந்தக்காரர்களுக்கும், அம்மாவுக்கும் அதெல்லாம் கொஞ்சம் பிடிக்காத விஷயங்கள்தான்.

(தொடரும்)

About The Author