அ க தி (5)

”என் நபருடன் நான் அதைச் செய்திருக்கக் கூடாது என உன் உள்மனம் சொல்கிறது, நான் உறுதியாச் சொல்வேன்…” என அவன் மேற்கோள் தந்தான்.

”ஆ, பழைய நினைவுகள்… அவற்றைப் புரட்டிப் பார்ப்பது, அதை இன்னும் மோசமாக்குகிறது, நண்பனே சான்சோ” என அவர் மெல்லச் சொன்னார். முகத்தில் தேய்ந்த புன்னகை.

”இன்னவும் பிறவுமான பேச்சுகளுடன் எஜமானனும் அடிமையும் அவ்விரவைக் கழிக்காநின்றனர்” என்று கியூபாக்காரன் உடனே பதிலிறுத்தான். நாவலின் அடுத்த வரி அது. அவன் கண்கள் ஜிவுஜிவுத்திருந்தன. உதடு காய்ந்து கிடந்தது. போய் ஒரு பிளாஸ்டிக் தம்ளரில் தண்ணீர் அருந்தக் கொடுத்தார் பேராசிரியர். இப்ப போதும்ப்பா, கொஞ்சம் ஓய்வெடு. இளைஞன் தலையைக் கீழே சாய்ந்தான். மகா களைப்பாய் இருந்தான். அப்படியே அயர்ந்து உறங்க ஆரம்பித்தான்.

அவரும் அவளும் கொஞ்சநேரம் வாளாவிருந்தார்கள்.

போலிசைக் கூப்பிடுங்க, அவள் ஒருவழியாக வாய்திறந்தாள். அவர் அமைதிகாத்தார்.

அவனை ஒப்படைக்கணும், அவள் சொன்னாள். சட்டவிரோதமான, நமக்கு சம்பந்தமில்லாத நபர். அவங்கூட நாம ஒட்டிஉறவாடிட்டிருக்கம். அது தவிர, அவன் ஒரு புளுகன், நிச்சயமாய்ச் சொல்லுவேன். டான் க்விக்ஸாட்டை முழுசா அவன் நினைவு வெச்சிருக்கறதாச் சொல்றானே, அது சாத்தியமே இல்லை. பேராசிரியர் உங்களுக்கே ததுங்கிணதோம்… இன்னும் எத்தனை விஷயம்லாம் நமக்குத் தெரியாம வெச்சிருக்கானோ… இல்லே?

பைபிளை மனனப் பாடமா தெரிஞ்ச ஜனங்களும் இருக்காங்கதானே இவளே? – என்றார் அவர்.

அவன் எழுந்துக்குமுன்னால போலிசைக் கூப்பிடுங்க, என்றாள் அவள்.

அவர் ஃபைலை தொலைபேசி மேலே வைத்தார்.

வேணா, என்றார் தீர்மானமாக.

என்ன வேணா? – என்றாள் அவள். அவனை ஒப்படைக்கணும் நாம. நாமளே இங்க புதியவர்கள்.

நாம இங்கியே குடியிருக்கற ஆட்களா இருந்தால், அப்ப மாத்திரம்? – அவர் கேட்டார்.

அவனை ஒப்படைக்கிறது நம்ம பொறுப்பா ஆயிருக்கும்…

பொறுப்பு – அதை ஒண்ணுக்குமேற்பட்ட விதங்களில் நாம விளக்கலாம், என்றார் பேராசிரியர். தொலைபேசி பக்கத்திலேயே இருந்தார், ஒரு பாதுகாப்பு போல.

எனக்கு கிறுக்கு பிடிச்சிரும் போலருக்கு, என்றாள் அவள். நாம சிந்திக்கிற சக்தியை இழந்துட்டம். நீங்க இப்பிடி பிடிவாதம் பிடிக்கிறதால நாம ஜெயில்ல கம்பியெண்ணப் போறம்.

சரி, நீ என்ன சொல்ற? – அவர் கேட்டார்.

ஒப்படைச்சிருங்க அவனை. இப்பவே.

கதவைப் பார்க்க அவள் போனபோது அவர் வழிமறித்தார்.

வேணா, என்றார்.

911ஐக் கூப்பிடுங்கன்றேன்ல, என்றாள் அவள் கோபமாக.

வேணாம்மா, என்றார் பேராசிரியர். உன்னால அவனை ஒப்படைக்க முடியுமா சொல்லு? உன்னை அவன் டல்சீனியான்னு கூப்பிட்டான். அவங்கம்மா பேர். உன் கையை மரியாதையா முத்தமிட்டான்.
நீங்களே டான் க்விக்சாட் ஆயிட்டீங்களா? என் கிழட்டுக் கிறுக்கே. நாம வந்த சோலி என்ன, நம்ம விஷயம் என்ன, எல்லாத்தையும் காத்துல விட்டாச்சி…

இல்ல, என்றார் பேராசிரியர். பார் அவனை. ஆதரவற்ற குழந்தை.

ஆ… என்றாள் அவள். ஆக அதான் விஷயம். இரக்கம். நான் டல்சீனியா அவங்கம்மான்னா நீங்க அப்பான்னு……

கியூபாலேர்ந்து வந்திருக்கிறான்… என்றார். அவ்ளதூரத்லேர்ந்து தக்கி முக்கி வந்திருக்கிற அகதியை இங்கத்த அதிகாரிங்க கிட்ட ஒப்படைக்க ஏலாது. திருப்பி அவனை கியூபாவுக்கே அனுப்பிட்டாங்கன்னு வெய்யி, அவ்ளதான் அவன் விதியே முடிஞ்சிட்டது.

ஏ நம்ம விதியப் பாருய்யா, என்றாள்.

அவர்கள் எதிரும் புதிருமாய் நின்றிருந்தார்கள். அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். சிறிது யோசித்தார்.

பத்து பதினைஞ்சு ஆவுது, என்றார். நடு சாமம் ஆவட்டும். அவனை எழுப்புவம், தாம்பாவில் அவனை விட்ருவம்.
என் பொணத்து மேல, என்றாள் அவள்.

அவர் அவளையே பார்த்தார்.

உங்களுக்கு என்னைப் பிடிக்கல… என்றாள் அவள். நீங்க சொன்னதை நான் கேக்கல, அதனால.

அப்டி இல்லப்பா, என்றார் அவர் சோகமாக. நான் உன்னை நேசிக்கிறேன். ஆனா, என்னன்னா… எப்பவுமே நான் ஏணின்னா நீ நோணின்றே. ஏன்னே தெரியல.

வெளியே காற்று அடங்கிவிட்டது. அவள்போய் அப்படியே படுக்கையில் குப்புற விழுந்தாள். அழ ஆரம்பித்தாள். பேராசிரியர் சூட்கேசை மூடினார். விளக்குகளை அணைத்தார். தொலைக்காட்சி சத்தத்தை மாத்திரம் அணைத்தார். வெறும் திரைக்காட்சிகள்… அவர் வாழ்க்கையை அசைபோடுகிறாப் போல ஒர் உணர்வு ஏற்பட்டது அவருக்கு.

"காலத்தால் அழிபடாத பழைய நினைவுகள் இல்லை. மரணம் தாண்டிய துயரங் கிடையாது.” தன் கதாநாயகனை அவர் மேற்கோளாய் தனக்குள் சொல்லிக் கொண்டார். இப்ப பார், இந்த கியூபாவாசி. காலம் அழிக்க முடியாத நினைவாற்றலுடன் இவன். என்ன ஆச்சர்யம், என்ன அற்புதம்… என நினைத்துக்கொண்டார்.

நடு சாமத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்தார். மனைவியை எழுப்பினார். அவன்காதில் என்னவோ சொல்லி மெல்ல உசுப்பினார். வெளி வராந்தாவின் வலதுகோடி அறை அவர்களுடையது. அறையைவிட்டு வெளி வந்தார்கள். விறுவிறுவென்று படிகளை நோக்கி மூணு நிழல்களாய்ப் போனார்கள். வாடகைக்காரின் பின்இருக்கையில் படுத்துக்கொள்ளச் சொல்லி அவனுக்கு சைகை செய்தார் அவர். டிக்கியில் சூட்கேசை வைத்தார். மனைவி சீட்பெல்ட்டைக் கட்டிக் கொண்டாளா என்று பார்த்துக் கொண்டார். கார் நிறுத்துமிடத்தில் ஒரேயொரு தெருவிளக்கு மாத்திரம் எரிந்துகொண்டிருந்தது. இன்ஜினை இயக்கி விருட்டென விடுதியில் இருந்து வெளியேறி மரப்பாலம் போகிற கடற்கரைச் சாலை வழியே, வெறிச்சிட்ட பிரதான சாலைக்குத் திரும்பினார்..

சரியா இருக்கியா, அவர் மனைவியைக் கேட்டார். கண்ணை மூடியபடி அவர்பக்கத்தில் அவள் உட்கார்ந்திருந்தாள். பதில் எதையுங் காணோம்.

பின்இருக்கையில் தான் கொண்டு வந்திருந்த போர்வைக்குள் சுருண்டிருந்தான் பையன். தஸ் புஸ்ஸென்று ஆழ்ந்த மூச்சுகள்.
ச், அப்பவே அந்த ஷணமே நான் என்வழியப் பாத்துப் போயிருக்கலாம். அப்ப எனக்கு போக்கிடம் இருந்தது… அப்பவே நான் போயிருந்திருக்கணும், என்றாள் அவள் திடீரென்று. பேராசிரியரின் உடம்பு தூக்கிப்போட்டது. காரில் ரேடியோ நிகழ்ச்சிகளை தாறுமாறாக மாற்றிக்கொண்டிருந்தார் அவர்.

என்ன காலக்கொடுமையடா இது, ச்… ச்… அவர் முணுமுணுத்துக் கொண்டார். பிறகு எதுவும் பேசாமல் காரோட்டுவதில் கவனம் செலுத்தினார். பாலங்கள் விருட் விருட்டென்று கடந்து போயின. நதி தீரங்களின், வயல்வெளிகளின் மங்கல் முகம். அடிக்கடி விளக்கைப் போட்டு ஃப்ளாரிடா வரைபடத்தை ஒரு பார்வை பார்த்துக்கொண்டார். பல மணிநேரப் பயணம்.
காரில் காஸ் நிரப்பிக்கொள்ள ஒருமுறை நிறுத்தினார். போத்தல்தண்ணீர், சல்லாத்தாளில் சுற்றித் தந்த சான்ட்விச்கள் வாங்கிக்கொண்டார். இளைஞன் தூங்கிக் கொண்டிருந்தான்.

எதாவது சாப்பிடு இவளே.

இப்படியே தூக்கி எறிஞ்சிருவேன், என்றாள் அவள்.

பேராசிரியர் காரை மேற்காகத் திருப்பினார். நெடுஞ்சாலையைத் தவிர்த்து பக்கசாலைகள் வழியே காரைச் செலுத்தினார். அந்தப் பகுதிகள் எல்லாம் ஒரேசாயலில் இருந்தன. வீடுகள். மகாகடைகள். கார் நிறுத்துவெளிகள் வெறிச்சிட்டுக் கிடந்தன. பிறகு அவர்கள் எவர்கிளேட்ஸ் சதுப்புகள் ஊடான சாலையை எட்டினார்கள். அவர் வாயை இறுக மூடியபடி பேசாமல் காரோட்டிப் போனார். காரை ஊடே எங்கயும் நிறுத்தவும் இல்லை.

About The Author