ஆயா சொன்ன கதைகள் (1)

தொண்டை எரிகிறது. பேச முடியவில்லை. எனக்கு பேசவும் எதுவும் இல்லைதான். நிறையவே நான் யோசனை பண்ணுகிறேன், என்றாலும் அவற்றையிட்டு எனக்கு ஏனோ அபிப்ராயங்கள் இல்லை. எனக்கு என்ன நடக்கிறது. என்னைச் சுற்றியுள்ள மத்தவர்களுக்கு என்ன நடக்கிறது, எனக்கு விளங்கவில்லை. என்னைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ம். ஒண்ணு தெரியும். நான் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறேன். சட்டுச் சட்டுனு நான் அழுது விடுகிறேன். நீங்க சங்கடப்பட வேண்டாம். இது சாதாரண விஷயந்தான். இதென்ன, இதைவிட விக்கி விக்கியெல்லாம் நான் அழுதிருக்கிறேன். ஒரு சோகக் கதையைக் கேட்டமாத்திரத்தில் என் கண்கள் தன்னைப்போல அழுது பெருக்கி விடுகின்றன. நான் விடிய விடிய அழுதுகொண்டே யிருப்பேன். எனக்கு ஒண்ணு தெரியும். அழ எனக்குப் பிரியம். அழுகை என்னை நிர்மலமாக்குகிறது.

எனக்கு காதல் கதைகள் அதிகம் பிடிக்கும். உணர்ச்சிகரமான காதல் கதைகள். ரெண்டு பேர் காதல்வசப்படுகிறார்கள். யாராவது அவர்கள் சேர்வதற்கு எதிர்ப்பு காட்டுகிறார்கள். அந்த இருவரும் முழு ஜீவிதத்தையுமே தனித் தனியே கழிப்பது எனக்கு நன்றாய் இருக்கிறது. தனியாகவே வாழ்ந்து அவர்கள் தனியாகவே செத்தும் போவது உத்தமம். தனியாகவே வாழ்ந்தால் என்ன, அவர்கள் ஒருத்தரையொருத்தர் நினைத்தபடியே இருக்கிறார்கள். அவனுக்கு வேறு மனைவி. அவளுக்கு வேறு கணவன். என்றாலும் அவர்கள் இருவர் இடையே முகிழ்த்த அந்த மகோன்னதக் காதலை அவர்கள் மறந்தாரில்லை. ஒரு உதாரணத்துக்கு, அவன், காதலி அல்லாத இன்னொருத்தி மடியில் செத்துப் போகிறான். (அட இவளும் அவனைக் காதலிக்கவே செய்கிறாள் என்றுகூட வைத்துக் கொள்ளலாம்) – அந்தக் காதலி ஜன்னலுக்கு வெளியே நிற்கிறாள். கல்லறைப் பக்கம் நிற்கிறாள். உறவு வட்டம் நட்புக் கூட்டத்தோடு கலந்துகட்டி அல்ல. தனியே ஒரு ஓரமாய் நிற்கிறாள். அவனை ஒரு தரம், கடைசித் தரமாய்ப் பார்க்க என்று நிற்கிறாள். பாருங்க, சொல்லும்போதே எனக்கு அழுகை வந்தாச்சி. ச். இது ஒண்ணில்ல. என்னைத் தடுக்க முயலாதீர்கள்.

மத்தவரின் காதல் கதைகள் என்னை, என் காதல் கதையை விட பாதிக்கின்றன. நான் இதுவரை யாரையும் ஆழமாக நேசித்ததே இல்லை. ஒருவேளை இனி அப்படி சம்பவிக்கலாம். தெரியாது. ஆனால் எனக்கு என் சொந்தக் கதைகள் அத்தனை இதுவாக ரசிக்கவில்லை. ஏன் அப்படி? தெரியாது. காதல் கதைகளின் சுவாரஸ்யம் எதில் இருக்கிறது. அதைச் சொல்கிற வக்கணையில் அல்லவா இருக்கிறது. சொல்வார் சொல்கிற தினுசில் அதைக் கல்லும் கரைகிறாப்போலச் சொல்லலாம். அல்லது வேறு முறையில் அதைச் சொல்கிறபோது எல்லாரும் ஹெஹ்ஹே என்று சிரிப்பார்கள். கதை என்னவோ ஒரே கதைதான்.

எங்க ஆயா சொல்கிற கதைகள் எப்பவுமே என்னை அழ வைத்துவிடும். சொல்லியபடியே அவளும் அழுவாள். நாங்கள் இருவரும் சேர்ந்தே அப்போது அழுவோம். ஒரு கதை கேட்டு அழுகிறது எத்தனை சுகமான அனுபவம் என்று அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

ஆயாவுக்கு கதை சொல்கிற நேக் தெரியும். எல்லாவற்றையும் தானே அனுபவித்து வதைபட்டு அவள் பேசினாள். அவளுக்கு அதையெல்லாம் சொல்லவேண்டுமாய் இருந்தது. அவளின் பாடுகளை அவள் துப்புரவாக நினைவில் வைத்திருந்தாள். எந்த இண்டு இடுக்கும் அவளுக்கு மறக்கவில்லை. அதை அப்படி விலாவாரியாக அவள் சொல்கையில் எனக்கு அழுகை பொங்கிவிடும். ஒருநாள் ஆயா என்னைக் கேட்டாள்.

”உனக்கு பிர்ச் கஞ்சி தெரியுமா இவளே?”

”ம்ஹும். தெர்ல. என்ன அது?”

”அப்ப அந்தக் காலத்தில்… பிர்ச் கொப்புகளால் நாம அடி வாங்கிய சமயம். என்னை பிர்ச் கொப்புனால அப்ப அடிப்பாங்க. அதைத்தான் பிர்ச் கஞ்சின்றா மாதிரி என் மனசில் அப்படியே பதிஞ்சிக்கிட்டேன். அதன் ருசியை என் வாழ்க்கை முழுசுமா மறக்கவே முடியல்ல.”

”பிர்ச் கஞ்சி… அந்த ருசி எப்பிடி இருக்கும் ஆயா?”

”உப்புக்கரிச்சாப்ல. கடுக்னிருக்கும். ஏன்னா பிர்ச் கொப்பே வாய்ல வெச்சா ஒருமாதிரி துவர்ப்பா இருக்கும்.”

ஆயா தன் வளர்ப்புத் தாயின் சின்னக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அடுப்படியின் அலமாரிக்கு மேலேயிருந்து அந்தக் குழந்தை பொத்தென விழுந்துவிட்டது. பயத்தில் ஆயா காட்டுக்குள் ஓடிப்போனாள். சின்னம்மா அடி பிய்த்தெடுத்துவிடும் என்கிற பயம் அவளுக்கு. ஐயோ அவ அடி ரொம்ப பயங்கரம். வலி தாள முடியாது. குழந்தை கீழ அப்படியே கிடக்க ஆயா வெளியே ஓடிவிட்டாள். கீழே விழுந்ததில் குழந்தை ஒருவேளை செத்திருக்கலாம் என்று பட்டது. ஆனால் இல்ல, குழந்தைக்கு அப்படியெல்லாம் நேரவில்லை. குழந்தைகள் அப்படியெல்லாம் சட்டென்று இறந்துவிடாது. குழந்தைகளுக்கும் குடிகாரர்களுக்கும் நித்ய கண்டம். பூர்ணாயுசு. அவர்களுக்கு வாழ்க்கையின் பிடிப்பு அதிகம். பூனைகளின் சுதாரிப்பு போல அது. ஆயா புதருக்குள்ளேயே மாலை வரை இருந்தாள். வெளியே வரவேயில்லை. அப்பா வீட்டுக்குப் பக்கத்தில்தான் இருந்தது புதர். புதருக்குள் ஒளிந்திருந்தாலும் வீட்டில் என்ன நடக்கிறது என்று அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். சின்னம்மாக்காரிக்கு ஆயா எங்கே ஒளிந்திருக்கிறாள் என்று தெரியும். பொழுது இருட்ட ஆரம்பித்ததும் சின்னம்மா வெளி முற்றத்துக்கு வந்து சத்தமாய்ப் பேசினாள்.

”வீட்டுக்கு வாடி. உன்னை அடிக்க மாட்டேன். வா வீட்டுக்கு. எம்மா நேரம் ஆயிட்டது. இன்னிக்குப் பூரா நீ எதும் சாப்பிடல்லியே. வாடி குழந்தே! வந்தியானா ரொம்ப ருசியான பிர்ச் கஞ்சி தருவேன். வா. பயப்படாதே!”

ஆயா அவளை நம்பிவிட்டாள். அவள் புதருக்குள்ளிருந்து வெளியே சின்னம்மாவிடம் வந்தாள். அவளுக்கு அந்நேரம் அசுரப் பசியாய் இருந்தது. குழந்தைப் பருவத்தில் இருந்தபோதிருந்தே அவள் எப்பவுமே பசியுடன் அலைகிறவளாய் இருந்தாள். பிற்பாடு கிழவியான போதுங்கூட அவளைப் பசி பிடித்தாட்டி வந்தது. அவள் வெளியே வந்து சின்னம்மாவிடம் சொன்னாள்.

”கஞ்சி… கஞ்சி எங்க?”

”போ. வீட்டுக்குள்ள வெச்சிருக்கேன்.”

ஆயா உள்ளே போனாள். ஆனால் அதற்குமுன்பே சின்னம்மா அவளுக்காக பிர்ச் கொம்பு ஒடித்து வைத்திருந்தாள். சின்னம்மா ஆயாவைத் தாவிப் பிடித்தாள். சரமாரியாக ஆயாவை அவள் விளாச ஆரம்பித்தாள். காலில் முதுகில், புட்டங்களில் அடி நொறுக்கினாள். முகத்திலும் சரமாரியாய் அடிகள். கத்தினாள்.

”ஏட்டி சின்ன மூதேவி. எம் பிள்ளையைக் கொல்லவா பாத்தே? அவளை அலமாரில ஏத்திவிட்டதே சனி விழுந்து சாகட்டும்னு தானேட்டி?”

ஆயாவின் ஐயா வேலையில் இருந்து திரும்பி வரும்வரை சின்னம்மா அடிகளை நிறுத்தினாளில்லை. ஐயா அவளை சின்னம்மா பிடியில் இருந்து இழுத்தார். ஆனால் அப்பவே ஆயாவுக்கு நடக்கவே, பேசவே திராணி போயிருந்தது. அவள் ரத்தமயமாய் இருந்தாள். பிறகு ஐயா சின்னம்மாவை அடிக்க ஆரம்பித்தார். பிர்ச் கொப்பு அல்ல, முஷ்டியால் மோதினார் அவர்.

சின்னம்மாவுக்கு ஆயாவைப் பிடிக்கவில்லை. குடிக்கிற கூழில் சவுக்காரத்தைக் கலந்து கொடுத்தாள். ஒருதரம் அவள் அந்த பீட்ரூட் சூப்பில் எலி பாஷாணத்தைக் கூட கலந்திருக்கிறாள். சத்தியம். நான் ஒண்ணும் பொய் சொல்லவில்லை. இதெல்லாம் நடக்குமா என்று அப்படிப் பார்க்காதீர்கள். எல்லாமே நிஜம்.

தன் ஆறாவது வயதில் ஆயா வீட்டைவிட்டு ஓடிவிட்டாள். அதனால் அவளை ஒரு பள்ளியில் அங்கேயே தங்கிப் படிக்கிறாப் போல போட்டார்கள். சரியான சாப்பாடு கிடைக்காததால் அந்தப் பள்ளியைவிட்டும் அவள் ஏழாவது வயதில் ஓடிவிட்டாள். அந்த உறைவிடப் பள்ளியில் புதிய கூழ் ஒன்றை அவளே கண்டுபிடித்தாள். ரெண்டு கொடுக்காப்புளிகளைத் தண்ணீரில் கரைத்து குடித்துக்கொண்டாள் ஆயா.

எட்டு வயசில் அவள் நோவராத் ஓலிம்ஸ் சந்தையில் வாழ்ந்தாள். அப்போது மற்றவர் கழித்துப்போட்ட பிளம் விதையும் தோலுமாய்த் தின்றாள். பிறகு ஒரு கூட்டுப் பண்ணையில் ஆடு மாடு மேய்த்தாள். பிறகு ஒரு வருஷம்போல ஒரு தோட்டக்காரனுடன் வேலை. வருஷம் முடிந்ததும் அவளுக்கு குளிர்காலத்தில் உடுத்திக்கொள்ள கம்பளிகள் கிடைக்கும். அதைத் தாண்டி கூட ஒரு ரெண்டு வருஷம் போல அவனிடம் தோட்ட வேலை செய்தாள். சிறு கன்றுக்குட்டி கிடைத்தது அவளுக்கு. அதன் கழுத்தில் கயிறு கட்டிக் கூட்டிக்கொண்டு போனாள் அதை. எஜமானனுக்கு பிரிவு சொன்னாள். சைதோமிர் நகரத்துக்கு வந்தாள். ஒரே வாரத்தில் அந்தக் கன்றுக்குட்டி இறந்துவிட்டது. ஆயா அதை வெட்டி விலையாக்க வேண்டிவந்தது. ரெண்டு தார்பாலின் பூட்சுக்கு அந்த மாமிசத்தை அவள் விற்றாள். ரெண்டுமே இடது காலுக்குச் சேர்கிற, ஜோடியற்ற பூட்சுகள்.

எல்லாவற்றையும் நான் சுருக்கமாய்ச் சொல்கிறேன். ஆயா இந்தக் கதைகளை கொஞ்சம் கொஞ்சமாய் பத்து வருஷம் சொன்னாள். பத்து வருஷமாய் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு விபரமும் விடாமல் விலாவாரியாய்ச் சொன்னாள் அவள்.

அவளது வாழ்க்கை பற்றி எனக்கு மனப்பாடமாய் சொல்லத் தெரியும். அவள் கதையை நான் இத்தனை அறிந்திருக்கிறதால்தான் நான் என்னைப் பற்றி அதிகம் யோசியாமல் போனேனோ. சில சமயம் எனக்கே படுகிறது. நான் எனக்காக வாழவே இல்லை. என் ஆயாவுக்காகவே நான் – அவள் பதுமையாகவே வாழ்கிறேன். அத்தனைக்கு ஆயா என்னை ஆக்கிரமித்திருக்கிறாள். யாரிடம் பேசினாலும் என் கதையை அல்ல, அவள் கதையையே பேச வைத்துவிட்டாள். அவர்களும் அவள் கதையை மற்றவர்களுக்குச் சொல்வார்கள். ஐய ஆயா செய்தது தப்பு. மகா தப்பு. எனக்கு என் வாழ்க்கை சார்ந்து சொல்ல எதுவும் இல்லாமல் அடித்து விட்டாள் அவள். என்னை ஒரு ஆளாக அவள் உருவாக விடவே இல்லை. எனக்கான அடையாளம், சுதந்திரம் அவள் வளர்ப்பில் எனக்குக் கிடைக்கவே இல்லை.

மூலம் : உக்ரேனிய மொழியில் தானியா மல்யார்சக்

ஆங்கிலத்தில் : மைக்கேல் எம். நேதன்
தமிழில் : எஸ்.ஷங்கரநாராயணன்

(மீதி அடுத்த இதழில்)

About The Author