ஆழ்வார்களும் நாயன்மார்களும் (2)

யாரு?… எனக் கேட்டான் பதறி. யாரு… என அவளும் பதறிக் கேட்டாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. சத்தியப்பிரியனின் காதல் வசனம் எதுவும் எடுத்துவிடலாமா என்று யோசித்தான். அவனது சமீபத்திய ஒரு படத்தில், மச்சானே என் மனசத் தெச்சானே… என ஒரு பாடல். அது ஞாபகம் வந்தது. அவளுக்குப் பாடத் தெரியுமா, தெரியவில்லை. சினிமா என்றால் பின்னணியில் பாட, ஆடவும் ஆட்கள் உண்டு.

சத்தியப்பிரியனின் அடுத்த படத்துக்கு ரெண்டு பேருமாய்ப் போனார்கள். சேதி சுந்தரமூர்த்திக்கு எட்டியபோது பதறிப்போனார். இவனால எனக்குத்தான் பிரயோசனம் இல்லைன்னு பார்த்தால், இவன் நம்ம குடும்ப கௌரவத்துக்கே வேட்டு வெச்சிருவான் போல என்று திகைப்பாய் இருந்தது. சாதி விட்டு சாதி திருமணம், அதும் ஏழைப் பெண்ணை, அன்னாடங் காய்ச்சியைக் கல்யாணம் கட்டுவது பெரிய சமூக சீர்திருத்தம் ஆச்சே… கட்டாயம் அவன் அப்படித்தான் சொல்வான். இவனுக்கு இதை எப்படிப் புரிய வைக்க… தெரியவில்லை.

இருவருக்குமாய் வீர வசனங்கள் பரிமாற்றம் நிகழ்ந்தது. எய்யா, ஒரு பெண்ணை ஆசைகாட்டி அவளைக் கைவிட்டால்தான் உங்க குடும்ப கௌரவம் பாதிக்கும். நான் அவளை விரும்பி அவளையே கல்யாணம் பண்ணிக்கறேன்றேன்… இதுல என்ன கௌரவக் குறைச்சல் உமக்குன்றேன், என்று கேட்டான் அவன். கீழ்ச்சாதின்னா நீங்கல்லாம் கல்யாணம் பண்ண மாட்டீங்க, ஆனால் வப்பாட்டியா… என்னுமுன் கையெடுத்துக் கும்பிட்டார். ஏல! உன்னைப் பெத்ததுக்கு இதுநாள்வரை நான் ஒரு நிமிஷங் கூட சந்தோசப்படவே இல்லை. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாயானால், உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது, என்றார்.

புரட்சித் திருமணம். பதிவாளர் முன்னிலையில். இப்ப குடும்பத்துக்கு எதிரா என்னென்ன பண்ணினாலும் சட்டம் இருக்கு, ஊரிலேயே, அரசாங்கமே அதுக்கு உடந்தையா வசதியும் பண்ணித் தர்றாங்கள். அவருக்குக் குமுறலாய் இருந்தது. அவன் அம்மாதான் பாவம் இதில் ஊமச்சி. இங்கயும் பேச முடியாது. அங்கயும் பேச முடியாது. எதைக் கேட்டாலும் இந்தாளுக்கு ஒரு கோபம். எடு செருப்ப… என்று கத்துவார். ஆம்பளைங்களுக்குக் கோபம் ஒரு சௌகர்யம். முகத்தில் இத்தனை பெரிய மீசை. அதில் பாதி முடி நரைத்தாலும் மீசை எடுப்பு குறையவில்லை. அடிக்கடி சந்தேகம் வந்தாப்போல அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தாகிறது. புருசனையிட்டு வேதவல்லிக்குப் பெரிய அபிப்ராயம் ஒண்ணுங் கிடையாது. பெரியவர்கள் வைத்துவிட்டுப் போன சொத்தை அப்படியே காப்பாற்றிப் பரிபாலனம்… ஊர்ப் பெரிய மனுச பாவனை கொண்டாடி கோவில் விசேஷங்களில் பரிவட்டம்… எல்லாம் இந்த மனுசனுக்கு வேண்டியிருக்கிறது.

நாடென்ன செய்தது நமக்கு… என்று பாடி, நீ என்ன செய்தாய் அதற்கு… என்று பதில் கேள்வி போட்டு ஒரு சினிமாப்பாடல் உண்டு. அன்னிக்கு எழில்வேந்தன் அவரைப் பார்த்து எகத்தாளமாய், தப்பான தாளமாய் அதைப் பாடிக்காட்டினான். பயல் கொஞ்சம் கிறுக்குத்தனமான தாகம் இருக்கிறவன்தான், என்றாலும் நல்ல பிள்ளை. இரக்க சுபாவம் உண்டு. நாலு பேருக்கு உதவி செய்கிற குணம். மோட்டார் ரீவைண்டிங், மின்சார வேலை எதானாலும் துப்புரவாய்ப் பார்ப்பான். அவளிடம் வந்து இந்தக் காதலைச் சொன்னபோது அவளுக்கு என்ன பதில் சொல்ல, தெரியவில்லை. ஏலேய் உங்கய்யா… என இழுத்தாள் வேதவல்லி. அவரு என்னிக்குதான் எதைத்தான் ஒத்துக்கிட்டாரு?… என்று எழில் பதில் கேள்வி கேட்டான். பேரை சுத்தமாய் எழில் என்று சொல்லக்கூடத் தெரியாது அவனுக்கு. எளில்ம்பான். விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சலம்.

ஏழைப்பெண்ணைக் கல்யாணம் முடித்து, அவளைத் தன் வீட்டுக்குக் கூட்டிவந்து, பணக்கார அப்பா அம்மாவைக் கேள்வி கேட்கிற சத்தியப்பிரியனின் படம் ஒண்ணு அப்போது ரிலீஸ் ஆகியிருந்தது. அவனும் சாமந்தியுமாய் அதைப் பார்த்தபோது எதிர்காலம் துல்லியமாய்த் தெரிந்தது. பதிவுத் திருமணம் என்று முடிவானது. நான் யார் தெரியுமா?… என்ற அந்தப் படத்தில் கதாநாயகி, ஏழைப்பெண் கட்டியிருந்த அதே மாடல் புடவையையே போய்த் தேர்வு செய்து வாங்கினார்கள். அதேபோல பஃப் வெச்ச ரவிக்கை. சில ரசிகர் மன்ற நண்பர்கள். போய்த் திருமணம் பதிவு செய்துகொண்டு வீட்டுக்கு வந்தான் எழில்வேந்தன். வாசலில் அப்பா அவனுக்காக நரநரவென்று பல்லைக் கடித்தபடிக் காத்திருந்தார். எய்யா நீரு ஒண்ணும் செருப்பை எடுக்க வேண்டாம். இந்த வீட்ல இடம் இல்லன்னும் வசனம் பேச வேண்டாம்… எல்லாம் நாங்க படத்திலேயே பார்த்திட்டோம். (நான் யார் தெரியுமா?) பெத்தவர்களை மரியாதைசெய்யத் தவறக்கூடாது என்பார் எங்க தலைவர். (யார்றா அது?) கலை இறைவன். அதான் உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்னு வந்தோம்.

அம்மா சிரிப்புடன் அவர் பக்கத்தில் வந்து நின்றபோது விட்டார் ஒரு அறை. செருப்பால் அடிப்பேன். போடி உள்ளே… என்று கத்தினார். எலேய் என்னைக் கொள்ளி வைக்க என்கிட்டியே நெருப்பு கேக்கறியா?… என்று கத்தினார். இந்த வசனம் நல்லாருக்குப்பா, என்கிறான் ஆச்சர்யத்துடன். அம்மா அழுதபடிப் பார்த்திருக்க, கிளம்பிப் போய்விட்டார்கள். நான் யார் தெரியுமா, படத்தில் அம்மாவாய் நடித்தவளை விட வேதவல்லி அழுதது சூப்பர்.

(தொடரும்…)

About The Author