ஆழ்வார்களும் நாயன்மார்களும் (5)

தூக்கிவாரிப் போட்டது அவருக்கு. பேரனுக்கு அவர் பேரையே வைக்கப் போகிறார்களா? நெஞ்சில் எதோ மோதினாப்போல இருந்தது. அது சந்தோஷமா தெரியாது. அந்தப் பெண் சாமந்தி, அவள்தான் இப்படிக் கடிதம் எழுதியிருப்பாள். கண்ட கண்ட சினிமா பார்த்து எப்படியெல்லாம் காரியம் செய்கிறார்கள்! அன்பான தாத்தா… பிறந்து சில நாளே ஆன குழந்தை. தனக்குப் பேர் வைக்கிறதைத் தெரிவித்துக் கடிதம் எழுதுமா? கெக்கேகே என்று சிரிக்கவேண்டும் போல் இருந்தது.

வெள்ளிக்கிழமை காலை அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. இவளுக்கு விவரம் தெரியாது. அவள் அறியுமுன்னே அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டார். இன்னிக்குத்தான் பேர் வைக்கிறார்கள். மகன் நல்லவன்தான். ஆனால் அவன் எடுத்தெறிஞ்சி பேசறதுதான் அவரால் தாள முடியவில்லை. நம்ம சொன்னது எதையும் அவன் காதில் வாங்கிக் கொள்கிறானில்லை. பைக் இருக்கிறது. சட்டென ஏறி ஒரு அழுத்து அழுத்திப் போய்விடத் துடிப்பாய் இருந்தது. வெட்கமும் கூடவே. இவள்பாட்டுக்கு உள்ளே நிலைப்படியில் தலைவைத்துப் படுத்திருக்கிறாள். அழுகிறாளா தெரியாது. அவளுக்கும் சேதி காதுங் காதுமாய் வந்திருக்கலாம்…

சட்டென, வெளுத்த வேட்டி சட்டை மாட்டிக் கிளம்பினார். "இந்தா இவளே…" என்றார் காலால் எத்தி. "ம்" என்றபடி திரும்பிப் படுத்தாள் வேதவல்லி. அழுத கண்ணை மறைக்கிறாளா? "வீட்டைப் பாத்துக்க. பட்டணத்தில் ஒரு சோலி இருக்கு. நான் சாயந்தரமாத்தான் வருவேன். குத்தகைப் பணம் வரும். நம்ம எட் மாஸ்டர் கொஞ்சம் கைமாத்து கேட்டிருந்தார். மதியம் வருவார். பீரோவுல வெச்சிருக்கேன். ஆயிர் ரூவா. குடுக்கணும். வாசலைப் பூட்டிக்கோ. எங்கயும் வெளிய போயிறாதே. கேட்டியா?" என்றபடி வெளியே வந்தவர், பைக்கை எடுக்க நினைத்தார். பட்டணம் வரை அவர் பைக்கில் போவது இல்லை. வேண்டாம், பஸ்சிலேயே போகலாம்… என்று நடக்க ஆரம்பித்தார்.

மனம் ஒருநிலையாய் இல்லை. அன்பான தாத்தா, என்னமாத்தான் கடிதம் எழுதறாங்கள். வெள்ளனேந்தல் பஸ் வந்தது. அதில் ஏற நினைக்கிற சமயம் அந்த தண்டபாணி எதிர்ப்பட்டார் "எங்க அண்ணாச்சி பட்டணத்துக்கா?" என்று அவர் கேட்டதும் அசடு வழிந்தபடி "ஆமாம்" என்று பக்கத்து பஸ்சில் ஏற வேண்டியதாயிற்று. நல்லவேளை, வெள்ளனேந்தல் பஸ் கிளம்புமுன் இந்த பஸ் கிளம்பி விட்டது. இனி பட்டணத்துக்குப் போயி, அங்கிருந்து பஸ் மாறித் திரும்ப வெள்ளனேந்தல் வரை வரவேண்டும். பேர் வைத்தால் எப்ப வைப்பார்கள் தெரியவில்லை. இவர் போவதற்குள் வைபவம் முடிந்துவிடுமா என்றே கவலையாகி விட்டது. பாதி வழியில் இறங்கி, எதிர்வாடையில் போய் வெள்ளனேந்தல் பஸ்சுக்கு நின்று கொண்டார். நேரமாகி விட்டது. ரொம்ப நேரம் பஸ்சே காணவில்லை.

அவர்கள் வீட்டைக் கண்டுபிடிக்கச் சிரமப்பட வேண்டியிருக்குமோ என நினைத்தார். அத்தனை ஜம்பம் பண்ணிவிட்டு ஊர்ப்பயல்கள் முகத்தில் விழாமல் தப்பித்து வர வம்பாடு பட வேண்டியதாகி விட்டது. வெள்ளனேந்தல் தெரியாத ஊர் ஒண்ணும் இல்லை. பஸ்சை விட்டு இறங்கியதுமே யாரோ ஓடி வந்தார்கள். "எழில் வீட்டுக்குங்களா?" ஆமாம், என்றார் வெட்கத்துடன். ரிக்ஷாவில் போய் இறங்கினால் வாசலிலேயே வினைல் போர்டு, சுந்தரமூர்த்தியின் பெரிய படம். எடுப்பான பெரிய மீசையை நீவியபடி. ஆமாமாம், அன்னிக்கு அன்னதானத்துக்கு என்று போர்டு வைக்கையில் கொடுத்தது. அவரைவிடப் பெரிய சைஸ் படத்தைப் பார்க்கவே பரவசம் வெட்டியது.

உள்ளே நுழைந்த ஜோரில்… அட கூறு கெட்ட பயகளா, எல்லாரும் கை தட்டினார்கள். வாங்க மாமா, என்றாள் சிரித்தபடி சாமந்தி. வாங்க ஐயா… என இவன். முருகம்பெருமாள். வாங்க… என சிரித்தபடி, அட இவள். வேதவல்லி! இவ எப்பிடி வந்தாள்? வெள்ளனேந்தல் நேர் பஸ் நின்னதே அதில் வந்தாளாக்கும்?

வாங்க அண்ணாச்சி… என்று அட, தண்டபாணிப் பிள்ளை! இந்த நாய்தான் பஜாஜ் 80 யில் இவளைக் கூட்டி வந்திருக்கும்.
எல்லாம் முடிஞ்சிட்டதா, என்றார் வெட்கத்துடன். நீங்க வந்துதான் பேர் வைக்கணும்னு காத்திட்டிருக்கோம். அவர் பரபரப்புடன் உட்கார, யாரோ குழந்தையைக் கொண்டுவந்து அவர் மடியில் கிடத்தினார்கள். வீறிட்டு அழுதபடி சுந்தரமூர்த்தி அவர் முகத்தில் ஸ்வைங்கென ஒண்ணுக்கடித்தான். அட வெட்கங் கேட்ட மூதேவிகளே, இதுக்குமா கைதட்டுவீங்க!

(முடிந்தது)

About The Author