இப்படிக்கு நிஷா

அவனுக்கு இவ்வாறாக ஒரு கடிதம் வந்தது:

போதும் நிறுத்திவிடு. ஒரு மாதம் போராடிவிட்டேன். உன்னை சந்தித்த பிறகு இதோ 100900 வினாடிகள் என்னை நான் காப்பாற்றி வைத்திருக்கிறேன். என் பருவத்தின் பலகீனத்தை பரிசோதித்தது போதும். நான் சுவர் எழுப்பி வைத்தேன். நீ வேராய் வந்து குடைகிறாய். எனக்கு வியர்க்கிறது.

நான் கோயிலுக்குள்ளே போனால் நீ வெளியே காத்திருக்கிறாய். என் செருப்பைப் போல் என் மனதும், வாசலோடு ஒதுங்கிக் கொள்கிறது. உள்ளே கடவுளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்!

நான் காரில் போகிறேன். நீ புல்லட்டில் பின் தொடர்கிறாய். இரண்டு பட்டன்களை உதாசீனப்படுத்தி உன் ஆண்மையின் அடர்த்தியை அப்பட்டமாய் காட்டி…. ஷாப்பிங் மாலில்… ப்யூட்டி பார்லரில்… லைப்ரரியில்… ஒரு நாளைக்கு உன்னை எத்தனை முறை சந்தித்தாலும் அலுத்துப் போவதில்லை எனக்கு. எனக்குள் பலமாய் இருப்பது உன் மீதான பலகீனம் மட்டும்தான்.

இதற்கு மேலும் என்னை நான் கட்டிக் காப்பது கடினம். உன் மீதான எதிர்ப்பு சக்தி எனக்குள் குறைந்து கொண்டு வருகிறது. ஒரு மாதம் போராடிவிட்டேன். அதனால் தயவு செய்து இன்னொரு முறை என் முன்னால் வராதே. எங்காவது தொலைந்து போ. இன்னும் ஒரு புன்னகை.. அல்லது.. உதட்டுக் குவியல்… அல்லது.. தலை கோதும் அசட்டுத்தனம்…புகை பிடிக்கும் பதம்… சூயிங்கம் அசை போடும் ரிதம்… மூன்று நாள் முள் தாடியில் தெரியும் ரோஜா…. நான் உன்னைக் கவனிக்காத போது உன் இயல்பு… நான் உன்னைக் கவனிக்கிற போது உன் நடிப்பு… ஏதேனும் ஒன்று போதும். நான் விழுந்து விடுவேன்.

விரும்பியும் விழாமல் விளிம்பிலிருக்கிறேன். இன்னும் ஒரு நிமிடம் நீ என் முன்னால் தோன்றினால் கூட நான் தவறிவிடுவேன். அதனால் எங்காவது தொலைந்து போ. நான் தேடினாலும் கிடைக்காத படி தொலைந்து போ. என் கண் எதிரே தோன்றாதே. உன்னை நேரிலோ தொலைபேசியிலோ அழைத்து "என்னை விட்டு விலகிவிடு" எனக் கூற எனக்குத் தெம்பில்லை. அதனால்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இனி மேல் தலையில் வேப்பெண்ணை தடவு….. அழுக்காய் உடை உடுத்து….. சவரம் செய்யாதே…. அங்கி அணிந்து கொள்… ரேபான் வேண்டாம்… பெரிய புட்டி கண்ணாடிதான் சரி. முடிந்தால் வேற்று கிரகத்துக்கு ஓடிவிடு. என்னைப் போல் எல்லா பெண்களும் முப்பது நாள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள்.

உன் வசீகரம் அப்படி. ஆண்மையின் ஆர்ப்பாட்டமும் பெண்மையின் பொறுமையும் கலந்தவன் நீ. உன்னை யாரும் எளிதில் நிராகரிக்க முடியாது. நான் துரதிர்ஷ்டசாலி. விட்டுவிடு. என்னைத் துரத்தாதே. நான் உனக்கு கிடைக்க மாட்டேன். எனக்கும் நீ கிடைக்க வேண்டாம். கடைசியாக எச்சரிக்கிறேன். இன்னொரு முறை என் முன்னால் நீ வந்தால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை. சத்தியமாக என் கணவனிடம் சொல்லிவிடுவேன்.

இப்படிக்கு
நிஷா.

அதற்கு அவன் இவ்வாறாக பதில் எழுதினான்:

தயவு செய்து இதை உங்கள் கணவரிடம் சொல்லி விடுங்கள். உங்கள் கடிதத்தால் என் வசீகரத்தின் மீதும் கவர்ச்சியின் மீதும் சற்றே தளர்ந்திருந்த என் நம்பிக்கை மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. நன்றி!
எனக்கு ஒரு வேலை கிடைத்தது. சம்பளம் ஐந்து லட்ச ரூபாய். வேலை கொடுத்தவர் துபாயில் இருக்கும் உங்கள் கணவர். உங்கள் மீது நம்பிக்கையின்மையால் உங்களைக் கண்காணிக்க ஒரு மாதம் கெடு கொடுத்தார்.

நேற்றுடன் ஒரு மாதம் முடிந்ததை அடுத்து நான் துபாயில் இருக்கும் உங்கள் கணவரை அழைத்து உங்கள் நன்னடத்தை பற்றிக் கூறினேன். ஆனால் உங்கள் கணவர் உங்களை நம்ப மறுக்கிறார். மாறாக என்னையும் என் வசீகரத்தையும் என் கவர்ச்சியையும் சந்தேகப்படுகிறார். உங்களைக் கவரும் அளவிற்கு எனக்கு சாமர்த்தியம் போதவில்லை என்றும் நான் சிறப்பாக உங்களிடம் நடிக்கவில்லை என்றும் குறை கூறி எனக்குத் தருவதாக ஒப்புக் கொண்ட ஐந்து லட்சத்தைத் தர மறுக்கிறார்.

எனவே அந்த ஐந்து லட்சத்தை நீங்கள் புரட்டிக் கொடுத்தாலும் சரி. அல்லது உங்கள் கடிதத்தை உங்கள் கணவருக்கே அனுப்பி என் திறமைக்கேற்ற ஊதியத்தை அவரிடமிருந்து என்னைப் பெற்றுக் கொள்ளச் சொன்னாலும் சரி.

சாய்ஸ் இஸ் யுவர்ஸ்.

இப்படிக்கு
ஷா

About The Author

4 Comments

  1. Ullathil Irundhu

    முதல் கடிதத்தின் கடைசி வரி தான் ட்விஸ்ட் என்று நினைத்தேன் ஆனால் முடிவு சற்றும் எதிர்பாராதது .

    இன்னும் பல சிறுகதைகள் எழுத என் வாழ்த்துக்கள்.

Comments are closed.