உயில்

நீண்ட சடைமுடி. குளிச்சு ரொம்ப நாளாச்சு, இல்லை இல்லை, நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டன. அழுக்குச் சட்டை. கிழிஞ்ச வேஷ்டி. ஒரு கையும் ஒரு காலும் நீண்ட துணியால் கட்டுப் போடப்பட்டிருக்கும். மடியில் அலுமினியத் தட்டு. காலுக்கடியில் ஒரு அடிக்கு ஒரு அடி கசங்கின துணி.

"அம்மா, பிச்சை போடுங்க தாயே – அய்யா, பிச்சை போடுங்க ஐயா – சார், பிச்சை போடுங்க எஜமான்". சுரங்கப் பாதையின் அடியில் படிக்கட்டுக்கருகே உட்கார்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரனின் கூக்குரல்.

வருவோர் போவோரில் சிலர் 5 பைசா 10 பைசா 25 பைசா 50 பைசா என்று துணியில் போட்டுவிட்டு செல்வர். மதிய உணவு இடைவேளை வந்து விட்டால் பிச்சைக்காரனுக்கு கொண்டாட்டம்தான். சிலர் தாம் சாப்பிடும் கடலை மிட்டாய் – வேகவைத்த கடலை – வறுகடலை – பொரி – வாழைப்பழம் மற்றும் சிறிய பழத்துண்டுகள் என்று விதவிதமாக அவனது துணியிலோ அல்லது அவனது கையிலோ வந்து விழும்.

தினம் தினம் இது அவனுக்கு அன்றாட நிகழ்வு. சில நாட்கள் காசு குறைவாகவே விழும். சில நாட்கள் காசே விழவே விழாது.
பல நாட்கள் தன் பசிக்குத் தேவையான உணவோ அல்லது கொரிக்கும் அயிட்டமோ கிடைக்கவே கிடைக்காது. அப்போது பக்கத்தில் இருக்கும் உணவு விடுதிக்கு சென்று கையில் இருக்கும் காசைக் கொடுத்துவிட்டு இரண்டு இட்லியோ அல்லது தோசையோ அல்லது கலந்த சாதமோ கேட்டு வாங்கி சாப்பிடுவான் அந்த பிச்சைக்காரன். 

தொடக்கத்தில்  உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுத்தவன் இப்போதெல்லாம் படுத்துக்கொண்டு பிச்சையெடுக்க ஆரம்பித்து விட்டான். படிப்படியாக அவனது குரலொலி குறையத் தொடங்கிற்று.

ஒருநாள் பிச்சைபோட வந்தவர்களில் ஒருவர் அசையாமல் இருந்த பிச்சைக்காரனைப் பார்த்தார். துணியில் விழுந்த காசுகள் அப்படியே இருந்ததைக் கண்டார். பேச்சு மூச்சு இல்லை. உடனே முனிசிபாலிடிக்கு தொலைபேசியின் மூலம் விபரத்தை தெரிவித்தார்.

முனிசிபாலிடியிலிருந்து இரண்டு மூன்று நபர்கள் உடனே வந்தார்கள். பிச்சைக்காரனை தொட்டுப் பார்த்தார்கள். சுமார் 6 மணி நேரத்திற்கு முன்பாகவே அவன் உயிர் பிரிந்து இருக்க வேண்டும் என்று யூகித்து சொன்னார்கள். பிச்சைக்காரன் தலைமாட்டில் வைத்திருந்த அழுக்குத் துணிமூட்டையைப் பிரித்துப் பார்த்தார்கள். மேலே சில்லரை காசுகளும் மடித்துச் சுருட்டிய ரூபாய் நோட்டுக்களும் இருந்ததைக் கண்டனர். மேலும் துணிக்குள் துணி என்று பல அடுக்குத் துணியை ஒவ்வொன்றாகப் பிரித்ததும் ஆச்சர்யம் மேலோங்கியது.

எல்லாம் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்கள்! நேர்த்தியான முறையில் அடுக்கி கட்டப்பட்டிருந்தன!கூடவே ஒரு கசங்கிய தாளில் கிறுக்கியபடி எழுதியிருந்ததை கவனித்தனர்.

‘இந்தப் பணம் நான் பிச்சையெடுத்து சம்பாதித்தது. நான் இறந்தபிறகு என்னுடைய உடலின் அடக்கத்திற்குத் தேவையாகும் செலவு போக மீதமுள்ள பணத்தை தவறாமல் அனாதை இல்லத்திற்கோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ கொடுத்து விடவும்’ என்று எழுதியிருந்தது.

‘ஓரளவு படித்திருப்பான் போலிருக்குது’ என்றோர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள். பிச்சைக்காரன் ஆசைப்படியே அவன் சேர்த்த பணம் அனைத்தும் அனாதை இல்லத்திற்கு பாதியும் முதியோர் இல்லத்திற்கு மீதியும் உயிலானது.

About The Author

3 Comments

  1. K Narasimhan

    மிகவும் அருமையான கதை. மிகுந்த ஏழையாக இருந்தாலும் உயர்ந்த பண்புடன் இருக்கனும் யென்பதனை உணர்த்திய அருமையான கதை.

  2. jayanthi nagarajan

    மிகவும் நன்றாக இருக்கிறது. அவனது தியாகம் நெகிழ வைக்கிறது

    அன்புடன்

    ஜெயந்தி நாகராஜன்

  3. sivaji

    மிகவும் நன்றாக இருக்கிறது. அவனது தியாகம் நெகிழ வைக்கிறது

    அன்புடன் : சிவஜி

Comments are closed.