என் அம்மாச்சியும் மகிழம்பூக்களும்

இந்தக் கோடை விடுமுறைக்குப் புதிய இடம் எங்காவது செல்ல வேண்டுமென்ற குழந்தைகளின் நச்சரிப்பையும் ஆர்வத்தையும் பார்த்து யோசித்ததில், வெகு நாட்களாய் என் மாமனும், மாமியும் என்னை வரச்சொல்லி அழைத்துக் கொண்டிருந்த, என் அம்மாச்சி வாழ்ந்த கிராமத்திற்குச் செல்வதென்று முடிவாயிற்று. சிறுபிள்ளைப் பிராயத்தில் வருடந்தோறும் எனது கோடை விடுமுறையைக் கழித்த, அந்தக் கிராமத்தை நினைக்கும்போதே ஆங்காங்கே மின்னுகின்றன, சில ஞாபக மின்னல்கள்

நினைவு தெரிந்த நாளாய் நானறிந்த ஓர் உற்சாக ஊற்று, என் அம்மாச்சி! அம்மாச்சிக்குத் திருமணமாகும்போது, அவருக்கு வயது பதினைந்தாம்; நான் அறிந்திராத தாத்தாவோ, அவரைவிட இருபது வயது மூத்தவராம்! இல்லற வாழ்வின் இலக்கணமாய், ஈன்ற பிள்ளைகள் பதினால்வர் ஆயினும், வாழ்க்கைப் போராட்டத்தில் வென்றவர் எழுவரே! அவர்களில் பெண் வயிற்றுப் பேத்தி நான் ஒருத்தியே என்பதில் மிகப் பெருமை அவருக்கு.

என் அம்மாச்சியை நினைத்தாலே நெஞ்சம் நிறைவது, வெற்றிலைச் சிவப்பேறிய பற்கள் தெரிய வாய் விட்டும் மனம் விட்டும் அவர் சிரிக்கும் சிரிப்புதான். இப்படியும் ஒரு பெண்மணியா என வியக்க வைக்கும் அவரது வாழ்க்கை. பிள்ளைகள் தலையெடுக்கு முன்னேயே, கணவனையிழந்து கைம்பெண்ணாய் நின்றபோதும், மன உறுதியை இழக்காது போராடி தன் மக்களைத் தடம் மாறாமல் வளர்த்து, தரணியில் தலை நிமிர்ந்து வாழச் செய்தவர் அவர். அது மட்டுமன்று, மிக இளம் வயதிலேயே விதவையாகி, ஆதரவற்றுத் தன் அண்ணன் வீடே கதியென்று வந்த தன் இளைய நாத்தனாரை, அவரது இறுதிக்காலம் வரை மனம் நோகாமல் வைத்துக் காப்பாற்றியவர். தளர்ந்த வயதிலும், தளராத நையாண்டியும், நயமான சாதுர்யப் பேச்சும் எவர்க்கும் எளிதில் கைவராத கலை, அது என் அம்மாச்சிக்கு இறுதி வரை இருந்தது என்பதே ஒரு மலைப்பான உண்மை!

அவரோடு நான் கழித்த தருணங்கள் அத்தனையும் என் மனதில் பசுமரத்தாணிகளாய்ப் பதிந்துள்ளன. என் இரண்டங்குலக் கூந்தலோடு, இடுமயிர் வைத்துப் பின்னலிட்டு, இறுதியில் குஞ்சலங்கட்டி அழகு பார்த்தவர் என் அம்மாச்சி. குஞ்சலம் ஆட வேண்டுமென்று, நான் ஆட்டி, ஆட்டி நடந்த நடையில், கொத்துக் கதம்பத்தோடு இடுமயிர்ப் பின்னலும் எங்கோ அவிழ்ந்து விழ, அதைக் கூட உணராமல் நான் விளையாடிக் கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் இதழ்க் கோடியில் எழுகிறது, ஒரு புன்னகை! யார் யாரிடமோ சொல்லி வைத்து, தாழம்பூ கொணர்வித்து, எனக்குப் பூத்தைத்து விட்ட அழகென்ன! பூ எதுவும் கிடைக்காத பொழுதுகளில், இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அரசாங்க மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு பொரிய மகிழமரத்தின் அடியில் கொட்டிக் கிடக்கும் பூக்களைப் பொறுக்கி எடுத்து வந்து, மண் துடைத்து ஊசி நூல் கொண்டு சரம் சரமாய்க் கோர்த்து, எனக்குச் சூட்டி அழகு பார்த்த அன்பென்ன!

அம்மாச்சியைப் பார்க்கும்போதெல்லாம் ஒளவையார்தான் என் ஞாபகத்துக்கு வருவார். எனக்குத் தெரிந்து, ஒளவையாராய் என் மனதில் உருவகப்படுத்தியிருந்த கே.பி. சுந்தராம்பாளைத் தோற்றத்தில் சற்று ஒத்திருந்தார். அம்மாச்சியின் உடற்கட்டும், புடவைக்கட்டும், திருநீற்றுப்பூச்சும், அவரையே ஒத்திருக்க, பஞ்சு மிட்டாய் போன்ற நரைத்த, அடர்த்தியான, நெளிமயிரில் மட்டும் வித்தியாசப்படுவார்.

அவ்வளவு பரந்த தலைமயிரைக் கொண்டையிட்டு, கொண்டையூசி கொண்டு கட்டுக்குள் அவர் கொண்டு வருவதைப் பார்ப்பது எனக்குப் பிடித்தமான செயல்களில் ஒன்று. அப்போதெல்லாம் எனக்கு, இறுக்கிப் பிடித்தால், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் பஞ்சு மிட்டாயின் நினைவுதான் வரும். அவரிடம் என்னைக் கவர்ந்த மற்றொரு அம்சம், அவர் வெற்றிலை போடும் அழகுதான். அதனினும் அழகு, அந்த வெற்றிலை வாசத்தோடு என் கன்னத்தில் அவரிடும் சில முத்தங்கள்! ஒவ்வொரு முறையும் அவர் முத்தமிட்ட பின்னால் மறைவாகச் சென்று வெற்றிலை எச்சில் பட்ட கன்னங்களைத் துடைத்துக் கொள்வேன். வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அவரைக் காண்பதே அரிது. அவரது வெள்ளி நிற வெற்றிலைப் பெட்டி பல அறைகளைக் கொண்டது. ஒவ்வொரு அறையிலும் வெற்றிலை, சீவல், சுண்ணாம்பு, கொட்டைப் பாக்கு, புகையிலை, பாக்குவெட்டி என்று தத்தம் இடத்தில் அழகாய் அமர்ந்திருக்கும். அந்த வெற்றிலைப் பெட்டியைப் பார்த்த மாத்திரத்தில், அம்மாச்சியும் இதற்குச் சமீபமாக இங்குதான் எங்கோ இருக்கிறார் என்ற நம்பிக்கை எழும்.

என்னை அலங்காரம் செய்து அழகு பார்த்த அவரே என்னைச் சில சமயங்களில் அழவும் வைத்திருக்கிறார். ஒரு நாள் தெருவில் முந்திரிப் பழங்கள் விற்கக் கண்டேன். அவற்றின் வடிவிலும், பொன்னிறத்திலும் மயங்கி, வாயில் நீரூற, அம்மாச்சியிடம் அவற்றை வாங்கித் தருமாறு கேட்டேன். அவரோ, ‘வேண்டாமம்மா, சாப்பிட்டால் தொண்டை கட்டிக் கொள்ளும்’ என்று எவ்வளவோ மறுத்தும், நான் விடாப்பிடியாய்க் கெஞ்சிக் கூத்தாடி, அதில் வெற்றியும் பெற்று, இரண்டு பழங்கள் உண்டிருப்பேன். அதன் பிறகு என் குரல் போன இடம் தெரியவில்லை. வீட்டுக்கு வருவோரிடமெல்லாம், இந்தக் கதையைச் சொல்லிச் சிரித்தால், எனக்கு அழுகை வராதா என்ன! ஆட்டுக்குத் தழையொடிக்கச் சென்ற அவரை, நானும் பின் தொடர்ந்ததில், கருவேலமுள் காலில் குத்திக் கடுகடுத்ததால் அழுத என்னைத் தன் மடியில் இருத்தி, என் காலை விறகடுப்புச் சூட்டில் ஒத்தியெடுத்து, என் வேதனையைத் தணித்ததும் அவரே; கீழே விழுந்து அடிபட்டு ஆறாமலிருந்த காயங்களுக்கு, கற்றாழைச் சோற்றைத் தணலில் வாட்டியெடுத்து, ஓடி ஓடி ஒளிந்த என்னைத் தேடிப் பிடித்துப் பற்றுப்போட்டு, என்னை அழ வைத்தவரும் அவரே!

எனக்குத் திருமணமான மறுவருடம் அம்மாச்சி காலமானார். அதன் பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, இப்போதுதான் அந்த மண்ணை மிதிக்கிறேன். இத்தனை வருடங்களில் ஊர் மிகவும் மாறிவிட்டிருந்தது. பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டுக்கு வர முன்பெல்லாம் மாட்டு வண்டியைத்தான் நம்பியிருந்தோம்; இப்போது, தடுக்கி விழுந்தால் ஆட்டோ கிடைக்கிறது. கூரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் அரிதாய்க் காணப்பட, மாடி வீடுகள் பெருகி, அவற்றின் மேலே டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்திருந்தன.

ஆடு, மாடு, கோழி போன்ற ஜீவன்களும் அரிதாகக் கண்ணில் பட, கிட்டத்தட்ட எல்லோரது வீட்டிலும் அல்சேஷன், டாபர்மென், பாமெரெனியன் போன்ற செல்ல நாய்கள் தென்பட்டன. அம்மாச்சியின் வீடு கூட இப்போது மாமாவின் வீடாகி விட்டது. கூரையும், சாணி மெழுகிய தரையும் காணாமற் போயிருந்தன; நவ நாகரிக வேலைப்பாடுடன் கூடிய பிரமாதமான வீடாக அது இருந்தது. அம்மாச்சியின் புகைப்படம் ஒன்று சாமியறையில் எப்போதும் எரியும் விளக்குடன் காணப்பட்டது. மற்றபடி, அம்மாச்சி வாழ்ந்ததற்கான சுவடு வேறெங்கும் தென்படவில்லை. கொல்லைப்புறம் சென்று பார்த்தபோது, என் அம்மாச்சி எனக்காக ஊஞ்சல் கட்டிக் கொடுத்த புளியமரத்தைக் காணாமல் பகீரென்றது. அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டிருந்தது. அம்மாச்சியின் வெற்றிலைப் பெட்டி பற்றிக் கேட்டேன்; யாருக்கோ தானமாகத் தந்து விட்டதாக மாமி சொன்னார்.

என் கணவர் நாளேட்டில் மூழ்கியிருக்க, என் பிள்ளைகளும், மாமாவின் மகன்களும் தொலைக்காட்சியில் ஐக்கியமாகியிருக்க, நான் மட்டும் எதையோ இழந்ததுபோல் தவித்துக் கொண்டிருந்தேன். அது, அம்மாச்சியின் வீடாகவோ, ஊராகவோ எனக்குத் தோன்றவில்லை. கடந்த காலத்தின் நினைவுகளிலிருந்து மீளவும் இயலாமல், நிகழ்காலத்தின் நிஜங்களை ஏற்கவும் இயலாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது மனது.

மாமாவிடம் வேலை பார்க்கும் வேணுவுக்கு, வயிற்று வலியென்று அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒரு ஆள் வந்து சொல்ல, பார்த்து வருகிறேன் என்று மாமா கிளம்பினார். "நானும் உடன் வருகிறேன், எனக்கு ஊரைப் பார்க்க வேண்டும்" என்றேன். ஆச்சரியமாகப் பார்த்தாலும், மறுக்காது என்னை அழைத்துச் சென்றார். நான் சிறுமியாய் இருந்தபோது, இதே ஊ¡ரில் என்னை சைக்கிளின் பின்புறம் வைத்துக்கொண்டு எத்தனை முறை வலம் வந்திருக்கிறார்! அந்த ஞாபகம் எனக்கு இப்போது வந்திருக்கும் என்று நினைத்திருக்கலாம்.

மாமாவுடன் ஸ்கூட்டரில் சென்று, மருத்துவமனை வாசலில் இறங்கினேன். மாமாவிடம், "நான் இங்கேயே இருக்கிறேன், நீங்கள் போய்ப் பார்த்து வாருங்கள்" என்றேன். சற்று யோசித்தவர், "சரி, பத்திரமாய் இரும்மா, உடனே வந்து விடுகிறேன்" என்று கூறி உள்ளே செல்ல, நான் அந்த மகிழ மரத்தைத் தேடினேன். அந்த வளாகமே, நான் அறிந்த, அறியாத பல்வேறு மரங்களால் சூழப்பட்டு, சோலைவனம் போல் கட்சியளித்தது. சூர்யகிரணங்களை உள்ளே வரவிடாமல் தடுப்பதைப் போன்று, ஒன்றுடன் ஒன்று கிளைகளால் கை கோர்த்து அந்த இடத்தையே நிழலால் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. காகங்களின் கரையலும், மற்ற பறவைகளின் கீச்சொலியும் மனதிற்கு இதம் கூட்ட, மகிழம்பூவின் வாசம் என்னை வழி நடத்திச் செல்ல, அந்தப் பெரிய மரத்தைக் கண்டுபிடித்தேன்.

எத்தனை வருட மரமோ! அடி பெருத்து, கிளை பரப்பி, எங்கணும் பூக்களை உதிர்த்து அமைதியாய் நின்று கொண்டிருந்தது. ‘நீயாவது இருக்கிறாயே என் அம்மாச்சியின் நினைவோடு பின்னப்பட்ட ஞாபகச் சின்னமாக!’ என மனம் நெகிழ்ந்து மண்டியிட்டு அதன் பூக்களைச் சேகரிக்கத் துவங்கினேன். அந்தப் பக்கம் வருவோர் போவோர் யாரும் அந்த மரத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவரவர்க்கு அவரவர் பிரச்சினை. உட்புற நோயாளிகளுக்கு உதவிக்கு வந்தவர்களில் யாராவது பெண்கள் மட்டும் போகிற போக்கில் ஒன்றிரண்டு பூக்களை எடுத்து, கொண்டைக்குள் அல்லது பின்னலுக்குள் செருகிக் கொண்டு சென்றனர். சீண்டுவாரின்றி சிதறிக் கிடக்கும் பூக்களைப் பார்க்கும்போது, என்னென்னவோ கற்பனைகள் மனதில் விரிந்தன. அமாவாசையன்று, இரவு வானத்தில் ஆதிக்கம் செலுத்தும் நட்சத்திரக் கூட்டங்களைப் போன்று ஒரு கணம் தோன்றியது. மறுகணம், மரங்கள் யாவும் சாமரம் வீச, மலர்ப் படுக்கையொன்று மிக வேகமாக யாருக்கோ தயாராகிக் கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது. காற்று வீசும் ஒவ்வொரு முறையும், மரத்திலிருந்து சில மலர்கள் கீழே விழுவதையும், ஏற்கெனவே விழுந்து கிடந்தவற்றுள் சில உருண்டு வேறிடம் நோக்கி ஓடுவதையும் பார்க்கும்போது, வாழ்க்கையின் நிலையாமை பற்றிய நினைவு உள்ளே எழுந்தது.

இப்படி ஏதேதோ எண்ணங்கள் தோன்றிய வேளை, அருகினில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து நோக்க, இடுப்பைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள் ஒரு மூதாட்டி. முன்பே பரிச்சயமானவர் போல் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவர், "மேலுக்கு சுகமில்லம்மா, மூட்டுக்கு மூட்டு வலிக்குது. இங்க வந்தா, ஒண்ணுமில்ல, வயசாயிட்டுதுன்னு சொல்லி ஏதோ களிம்பு கொடுத்தாங்க" என்றார். பேசும்போதே மூச்சிரைத்தது. பேசியவர், அங்கேயே அமர்ந்து, பூக்களைப் பொறுக்கித் தன் சேலைத் தலைப்பில் சேகரிக்கத் தொடங்கினார். எனக்குதான் உதவுகிறாரோ என்று ஐயப்பட்டு, "உடம்பு முடியாதபோது, ஏன் பூ எடுத்துக் கொண்டிருக்கிறீங்க?" என்றேன். "வீட்டுல என் பேத்தியிருக்கு, பூவுன்னா அவ்வளவு இஷ்டம் அதுக்கு, இது நல்ல வாசமா இருக்கில்ல. அதுக்கு ரொம்பப் பிடிக்கும்" என்றார். எனக்குக் கண்ணில் நீர் முட்டியது. துக்கம் தொண்டையை அடைக்க, கைக்குட்டையில் சேகரித்து வைத்திருந்த பூக்களை அம்மூதாட்டியின் சேலைத் தலைப்பில் கொட்டினேன். "ஏனம்மா, உனக்கு வேணாமா?" என்றார். "உங்க பேத்திக்குக் கொடுங்க, அவளும் ஒரு நாள் என்னைப் போல இங்கே வந்து பூ எடுப்பாள்" என்றேன். என் பேச்சின் அர்த்தம் புரியாமல், கண்களால் நன்றி தெரிவித்துச் சென்றாள்.

அந்த மகிழமரத்தை நிமிர்ந்து நோக்கினேன். ‘சில வருடங்கள் கழித்து, அந்தப் பேத்தி நிச்சயம் உன்னைப் பார்க்க வருவாள். அதன்பின் வேறொரு பாட்டியின் நினைவாக, வேறொரு பேத்தி வருவாள். காலங்காலமாகப் பாட்டிகளுக்கும், பேத்திகளுக்கும் உள்ள உறவின் அடையாளச் சின்னமாக நீ என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும்’ என்று மனதார வாழ்த்தி நின்றேன். காற்றடித்து, சில மகிழம்பூக்கள் என்மேல் விழுந்தன. என் அம்மாச்சியே மலர்தூவி என்னை ஆசிர்வதிப்பதுபோல் உணர்ந்தேன்.

About The Author

4 Comments

  1. thirumalaikumar

    அருமையானா கதை. . .
    னான் என் அம்மாச்சிக்கு பேரன் என்றாலும் என் அம்மாச்சி என் ஞாபகத்துக்கு வருகிறாள். . .

  2. Haran

    Hஇ இ நொஉல்ட் லிகெ டொ தன்க் யொஉ fஒர் தெ உதிர்ப்பில் ஓர் உயிர்ப்பு” பொஎம்
    Hஎஅட்ச் ஒff டொ யொஉ. யொஉ டிட் அ fஅபுலொஉச் ஜொப் கேப்ட் இட் உப்”

  3. Ganesh

    மிகவும் அருமையனா கதை. என்னகும் என் அம்மாச்சி நினைவு வருகிரது. மிகவம் நன்றி

Comments are closed.