ஒரு சொம்பு ஜலம்

அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. அப்பாகூட என்னை இப்படித் திட்டியதில்லை.

கட்டிய துண்டோடு நடக்க ஆரம்பித்தவன்தான்… பல வயல்கள், வாய்க்கால்கள், வரப்புகளைத் தாண்டி அழுதுகொண்டே வீட்டிற்குள் நுழைந்து அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுதது இன்றும் என் கண்முன் நின்றுகொண்டு இருக்கிறது.

"என்னடா ஆச்சு? ஏன் அழறே?" என்ற அம்மாவின் கேள்விகளுக்கு பதிலாக அழுகையே பீறிட்டுக் கொண்டு வந்தது.

"ஐயோ! என்ன ஆச்சோ இந்த புள்ளைக்கு…?", அம்மாவும் மெதுவாக என்னை சமாதானப்படுத்தி, விஷயத்தைக் கேட்டதும் அழ ஆரம்பித்தாள்.

"ஏண்டாப்பா எங்களையெல்லாம் ஏழையா படைச்ச?", அவளின் கோபம் அழுகையாக வெளிப்பட்டாலும், கண்ணீரில் அது கரைந்துதான் போனது.

"எனக்கு படிக்கவே வேண்டாம்மா! இங்கேயே இருந்துடறேன்…"

"அசடு மாதிரி பேசாதே! அவ யாரு., சித்திதானே…நம்மாத்து மனுஷாதானே….அவளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே!… வாயில வார்த்தையா இல்ல?" அம்மா சமாதானப்படுத்தியதையும் , அக்கா எனக்காக அழுததையும் இன்றும் என்னால் அசை போடாமல் இருக்க முடியவில்லை.

எதிர் வீட்டு தருமி மாமியிடம் பணம் கடனாக வாங்கி, புதிதாக ஒரு பித்தளை சொம்பை வாங்கிக் கொடுத்து அனுப்பினாள் அம்மா.
வாங்கிய பணத்திற்காக எத்தனை முறை தருமி மாமியாத்தில் பத்து பாத்திரம் தேய்த்தாளோ? சதா சர்வ காலமும் தண்ணீரிலேயே பழகி அவளுக்கு ஆஸ்துமா வந்ததுதான் மிச்சம்.

புது சொம்புடன் சித்தியின் வீட்டிற்குள் நுழையவும், "சீதாச்சு! வந்துட்டியா…வா..வா…என்னடா இப்படி பண்ணிட்ட?" அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இன்னும் பயம் போகவில்லை.

"சொம்பு கெடைச்சிடுத்துடா…மேலத்தெரு கொழந்தேள் கொண்டு வந்து கொடுத்ததுகள்… ரெண்டு எடத்துல நசுங்கியிருக்கு… வேற ஒண்ணுமில்லடா…."

அம்மா கொடுத்த சொம்பை நீட்டினேன்.

"ஏண்டா நான் சித்திடா….உன்மேல கோபிச்சுக்கக்கூடாதா? இதுக்காக ஊருக்குப்போய் வேற சொம்பு கொண்டு வந்தியாக்கும்" வாயில் தேனும் பாலும் வழிந்தது.

"இந்தாடா சீதாச்சு! காணாம போன சொம்பு கெடைச்சவுடனே அதுல பாயசம் பண்ணினேன்…உனக்கு கொடுக்கணும்னு…", என்று ஒரு சிறிய கிண்ணத்தில் பாயசத்தைக் கொடுத்தாள்.

வெயில் காலம், குளிர் காலம், என்று எந்த காலமானாலும் என் நித்திரை ஒட்டுத் திண்ணையில்தான். ஒருமுறை திண்ணையில் நான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, காதில் எறும்புபுகுந்துவிட, வலி பொறுக்க முடியாமல் கதவை தட்ட வேண்டிய நிலை.

"பஞ்சாயத்து பம்புல அடிச்சு காதுல விட்டுக்கோ", என்று ஒரு எறும்பளவு தண்ணீர் கூட கொடுக்காத மகா புண்ணியவதி.

இதற்கெல்லாம் பிரதிபலனாக அவள் எனக்கு செய்தது, ஸ்கூல் பீஸ், புத்தகம், வருடத்திற்கு ஒரு கால் டிராயர், சட்டை.

இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியில் ஈ.எஸ்.எல்.சி தேர்வில் வென்று, அந்த நடுநிலைப் பள்ளியில் முதல் மாணவனாகத் தேறி, பரிசுகளுடனும், பட்டங்களுடனும், குறிப்பாக என்னுடைய அந்த டிரங்க் பெட்டியுடன் அரசலாற்றைத் தாண்டியபோது, ஏதோ அந்தமான் சிறையிலிருந்து வங்கக் கடலைத் தாண்டி தமிழ்நாட்டிற்கு வந்ததுபோன்ற உணர்வு.

என்னுடைய வரலாற்றையே திருப்பிப் போட்ட (பிரித்து மேய்ந்த) அந்த சித்தி இன்று இழுத்துக் கொண்டிருக்கிறாள்… அவளை நான் பார்க்கப் போக வேண்டுமாம்…

"என்னடா சீதாச்சு…இப்பதான் வர்றியா?" பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன் கேட்ட பாலாமணி அய்யரை ஓங்கி ஒரு அறை விடலாம் போலிருந்தது.

அக்ரஹாரத்தினூடே நடந்து சென்றபோது, இளமைக் கால அக்ரஹாரமும், மனிதர்களும், பண்பாடும் தொலைந்த பாதிப்பு நன்கு தெரிந்தது. முகம் தெரியாத புதியவர்களின் நடமாட்டத்தால் நான் பழசாகிப் போனதாகத் தோன்றியது.

"இவாத்துக்கு 10 நாள் சீதகம், இவா அவாளுக்கு 3 நாள் தாயாதி", என்ற அக்ரஹார வாசிகளின் ரகசியப் பேச்சுக்களும், "பத்தாம் நாள் காரியம் தடபுடலா செஞ்சுபுடணும் இவனே…நன்னா வாழ்ந்துட்டுப் போயிருக்கா….", என்ற புரோகிதர்களின் பிரசங்கங்களும், நான் இவ்வளவு தூரம் பஸ் பிடித்து செலவு செய்துகொண்டு வந்ததற்கு ஒரு அர்த்தத்தை ஏற்படுத்தியது. வெறுமனே இவளைப் பார்த்துவிட்டு போவதற்குப் பதில், இறந்த தினத்திற்கு வந்ததாகிவிட்டது.

"ஏண்டா சீதாச்சு…நேத்திக்கே வந்திருக்கப்படாதா?…அம்மாவ பாருடா…. நீ வருவேன்னு உயிர எக்கி வச்சுருந்தாளேடா….ஊட்டி ஊட்டி வளர்த்தாளேடா…" அதன் பிறகு வசனம் இல்லாததால் ஒப்பாரி ஓங்கியது. வேறு யாருமில்லை. சித்தியின் தவப்புதல்விதான்.

வாய் திறந்திருந்தது சித்திக்கு…சுற்றிலும் பெண்கள் கூட்டம். காதிலிருந்து வழிந்த சீழில் எறும்புகள் மொய்த்துக் கொண்டிருந்தன.. நான் வந்திருக்கிறேன் என்பதைக் காட்டிவிட்டு வெளியே வந்தேன்.

எல்லா சடங்குகளும் முடிந்து, இடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்புவதற்கு மதியம் மணி 2 ஆனது.

சாப்பாடு பறிமாறப்பட்டது. நான் வழக்கம்போல் அந்த ரெண்டாங்கட்டு நிலைப்படி அருகில் உட்கார்ந்து கொண்டேன்.

இன்று நான் நல்ல வேலை, வீடு வாசல் என்று வசதியாக இருப்பதற்கு யார் யாரோ உதவியிருக்கிறார்கள் என்றாலும், அவர்கள் அனைவரும் நான் செடியான பின்பு என்னை வளர்த்தவர்கள். நான் கன்றாக இருந்தபோது இந்த சித்தி ஊற்றிய தண்ணீரில் வளர்ந்தவன்தான். என்னுடைய (குறிப்பாக என் குடும்பத்தின்) ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டாளே தவிர என் படிப்பிற்கும், பசிக்கும் செலவு செய்தவள் அவளே.

ஆனால் இவற்றையெல்லாம் விட அவளால் நான் அனுபவித்த கொடுமைகளும், அவமானங்களும்தான் மீண்டும் மீண்டும் மூளையில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று புரை ஏறியது.

"தலைல தட்டுங்கோ!… சீதாச்சுக்கு தேர்ஸம் கொடுங்கோ…"

இருமல் அடங்கவும், சித்தியின் தவப்புதல்வி சொம்பில் ஜலம் கொண்டு வந்து நீட்டவும் சரியாக இருந்தது. குடித்துவிட்டு சொம்பை கீழே வைக்கும்போது என்னையும் அறியாமல் கண்கள் கலங்கியது. அரசலாற்றில் நான் விட்ட அதே சொம்புதான்.

"என்ன இருந்தாலும் பாசமில்லாம போகுமா….சீதாச்சு மெட்ராஸுலேந்து வந்திருக்கானே…", சாதம் பறிமாறிக்கொண்டிருந்த மாமி கண்ணீரின் வழியே மங்கலாகத் தெரிந்தாள்.

சென்னையை நோக்கி பஸ் பறந்துகொண்டிருந்தது. இன்று ஏன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது புரை ஏறியது? ஒருவேளை இறந்தபிறகும் ஆவியாகி என்னை வேலை ஏவுவதற்காக நினைத்துப் பார்த்திருப்பாளோ?…. சிரிப்பதா அழுவதா… தெரியவில்லை. கீழே குனிந்து பார்த்தேன். என்னுடைய வயர் கூடையின் ஓரத்தில் கழுத்து நசுங்கிய அந்த சொம்பு களங்கமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தது.

****

About The Author