ஒரு மிகை யதார்த்தக் காலக்கட்டம் (3)

அதற்குள், பேர் எழுதிய சீட்டு ஒன்றை அவன் கையில் எடுத்து வைத்திருந்தான்.

"இந்த மனுசரை எங்க பார்க்கலாம்?" அதை வாங்கிப் பார்த்தவள் முகத்தில் வியப்பு. கொஞ்ச நேரம் அவள் பேசவில்லை.

"இந்த மனிதர்… இப்பதான் அரைமணி முன்னால் சுடப்பட்டார். பக்கத்து வீட்டுக்காரி அதைத்தான் வந்து சொல்லிட்டுப் போகிறாள்."

அந்தக் காகிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்தான் அவன்.

"இவரைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?"

"அவரை நான் நேரில் பார்த்தது இல்லை" என்றாள் அவள்.

"ஆனால் ஒவ்வொருவரும் அவரை ஒவ்வொரு விதமாய்ச் சொல்கிறார்கள். செல்வாக்கு மிக்கவர்… சண்டையிடும் குழுக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே நல்ல பாலமாக அவர் செயல்பட்டதாகச் சொல்கிறார்கள். அம்மாவின் பள்ளிக்கு அரசு நிதி ஒழுங்காக வரும்படி அவர் ரொம்ப உபகாரமாய் இருந்தார். பள்ளியின் சகல சிக்கல்களிலும் அவர் தலையிட்டுத் தீர்த்து வைத்தார். போதைப்பொருளோடு அவர் சம்பந்தப்பட்டதாகச் சிலர் சொல்லுவார்கள். ஆயுதக் கடத்தல், இளைஞர்களைக் கலகப்படைக்குச் சேர்த்தல், ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல்… எல்லாம் அவர் செய்வதாக ஊரில் பேச்சு உண்டு. நீங்க ஏன் அவரைப்போய்ப் பார்க்க விரும்பினீர்கள்?"

"தன்னைச் சீக்கிரம் வந்து பார்க்கும்படி சங்கேதச் செய்தி அனுப்பியிருந்தார் எனக்கு. எப்படியோ… இந்தப் பயணத்தில் எனக்கு, நான் எதிர்பார்த்ததை விட நிறையவே செய்திகள் கிடைச்சிட்டது."

வெளியே இருட்டிவிட்டது. "இங்க, எதும் பிரச்னையானா ராத்திரி மின்சாரம் இருக்காது." அவள் விளக்கு ஒன்றை ஏற்றினாள். போய் ஜன்னல்களைச் சாத்திவிட்டு வந்தாள். கையில் ஒரு நோட்டுப்புத்தகம். இரண்டு பேனாக்கள். அந்த நோட்டில் எழுதிக்காட்டினாள். "வாயால் அல்ல, நாம் எழுதிக்கொள்ளலாம். இங்கே சுவருக்கும் காது உண்டு!"

"கொஞ்சநாள் முன்னாடி…" அவன் எழுதினான். "ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையில் படிச்சேன். நம்ம நாட்டின் இந்த வடகிழக்குப் பகுதி, அதுதான் தேசத்தின் வளம் மிக்க பகுதின்னு போட்டிருந்தான். ஆனால், யானை தன் தலையிலியே மண்ணை வாரிப் போட்டுக்கறாப்போல, இப்ப நம்மை நாமே ஜரூரா அழிச்சிக்கிட்டு வர்றோம்…"

"நேத்து ராத்திரி…" அவள் எழுதிக்காட்டினாள். "ஒரு பயங்கரமான கனா! எதோ நதி, அதில் என் கையை முக்குகிறேன். அந்தத் தண்ணீர் அப்படியே சிவப்பாயிட்டது. அம்மா எப்பவுமே சொல்லுவார்கள். நல்ல கனவு பலிக்காது. ஆனால் மோசமான கனவு… பலிச்சிரும்."

"இந்த வீட்டில் எப்பலேர்ந்து இருக்கிறாய்?"

"எனக்கு 18 வயசில், நானும் அம்மாவும் இங்கே வந்தோம். அதும் முன்னாடி நகரத்தின் பிரதானப் பகுதியில்தான், இங்கருந்து ரெண்டு கிலோமீட்டரில் இருந்தோம். இந்தப் பகுதியை விட்டே வெளி மாநிலத்துக்குக் காலிபண்ணிப் போனவர்கள்கிட்டேயிருந்து அம்மா இந்த வீட்டை வாங்கினாள். இங்க இப்பப் பெரியவர்கள் மாத்திரமே வாழ்கிறார்கள். இளைஞர்கள்… செத்திருக்கலாம், சிறையில் இருக்கலாம், தலைமறைவு வாழ்க்கைக்குப் போயிருக்கலாம், அல்லது வெளி மாநிலத்துக்கே இடம் மாறியிருக்கலாம். இங்க எனக்கு மாப்ளைன்னு யாருமே அமைய வாய்ப்பே இல்லாமலாச்சு…." எழுதிவிட்டுச் சிரித்தாள்.

ராத்திரிச் சாப்பாடு வரை எழுத்தாலேயே பேசிக்கொண்டார்கள். சாப்பாடு ஆனதும் தனித்தனிப் படுக்கை அறைகளுக்குப் பிரிந்தார்கள். விளக்கை ஊதி அணைக்கு முன் இரவு வணக்கம் சொல்ல வந்தாள்.

"உங்களோட… வாயில் விரல் சப்பியபடி கதை கேட்டுக்கிட்டே தூங்கலாமான்னு இருக்கு." அவன் சிரித்தான்.

"அது நடக்கவே நடக்காது. பிரின்ஸ் ரொம்ப ஆங்காரம் பிடிச்சது. என்னுடன் தான் மாத்திரமே தூங்கணும் அதுக்கு."

ரொம்ப நேரம் அவனால் தூங்க முடியவில்லை. பிரின்ஸை வருடித் தந்தபடியே யோசித்துக் கிடந்தான். இதுக்கு இதன் அப்பா யாரென்று தெரியுமா? அது இப்ப இதுக்கும் ஒரு விஷயமே இல்லை. இதன் அப்பாவுக்கும் அப்படித்தான்… அவை விலங்குகள். ஆனால் நாம அப்படி இருக்க முடியுமா என்ன? நாம் மனிதர்கள்!

******

பாதி ராத்திரியில், பிரின்ஸ் படுக்கையை விட்டு எம்பிக் கீழே குதித்துக் குரைக்க ஆரம்பித்தது. வாசல் கதவை, யாரோ திறக்கச் சொல்லி ஆவேசமாய் உதைக்கிற சத்தம்.

"யார் உள்ளே? திறங்க கதவை!"

"யாரு?" அவள் கேட்டாள். கையில் டார்ச்சின் மங்கலான ஒளி நடுங்கியது.

"ராணுவம்."

கதவைத் திறந்தாள். அவளையே குருடாக்கும் வெளிச்சம் உள்ளே நுழைந்தது. பிரின்ஸ் அவர்கள் மேல் தாவ முயன்றது. "அப்பா, பிரின்ஸைப் பிடிச்சிக்கோங்க!" என்று கத்தினாள்.

நவீன ஆயுதங்களுடன் சுமார் பத்துப் பேர். சிலர், யாரும் வெளியே தப்பிவிடாமல் வாசல் பக்கம். சிலர், வீட்டுக்குள் தேடுதல் வேட்டை. பரபரவென்று எல்லா அறைகளிலும் தேடிப் பார்த்தார்கள்.

பெரிய மீசையுடன் ஓர் அதிகாரி. சுருட்டிவிட்ட மீசை நுனி மிடுக்காய்த் தேள்கொடுக்காய்த் தெரிந்தது. அப்பாவைப் பார்த்துக் கைத்துப்பாக்கியைப் பிடித்தான் அவன்.

"ஊ"வென அலறினாள்.

"வேணாம்!" என அப்பாவை மறித்து, மறைக்க முயற்சி செய்தாள். அதிகாரி சிரித்தபடிக் கைத்துப்பாக்கியை விலக்கினான். அதை அப்பாவிடம் திருப்பித் தந்தான். "பொம்மைத் துப்பாக்கி! சீனத் தயாரிப்பு. நீயே வெச்சிக்க!…" அவர்கள் வெளியேறுவதை இருவரும் வியர்க்க விறுவிறுக்கப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், பக்கத்தில் அமர்ந்தபடி அவர்கள் காபி அருந்தினார்கள். பிரின்சுக்குக் குக்கி பிஸ்கெட்டுகள். மேசையில் அந்தக் கைத்துப்பாக்கி கிடந்தது.

"தெருவில் கிடந்து எடுத்து வந்தேன். நிசத் துப்பாக்கியாக்கும்னு நினைச்சிருந்தேன் இதை…" பாவம், அப்பா எப்படி வெலவெலத்திருப்பார், என்னால்… அவளுக்குச் சங்கடமாய் இருந்தது.

அவன் பேசவில்லை. போய்க் குளிர்ந்த காற்றுக்காக ஜன்னலைத் திறந்… கையில் துப்பாக்கியுடன் சட்டென யாரோ இருளில் பதுங்கியதைப் பார்த்தான். ஜன்னல்களை மறைச்சாப்போல அலமாரிகளை இவள் வைத்திருந்தாள். நான் திரும்ப நகர்த்தி வைத்தது தப்பு என நினைத்தான். ஜன்னல் மூடியே இருக்கட்டும். திரும்பினான் அவன்.

திடீரென்று எதோ சத்தம். ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே எதோ வந்து, மேசையில் தட்டி விழுந்தது. மெழுகுவர்த்தியை ஊதிவிட்டு மேசையடியில் பதுங்கிக் கொண்டார்கள். உள்ளே வந்து விழுந்த அந்தப் பொருளை, பிரின்ஸ் வாயில் கௌவி எடுத்து வந்து அவனிடம் கொடுத்தது. அடுத்த அறைக்குப் போனார்கள். இன்னொரு வர்த்தியை ஏற்றிக்கொண்டார்கள். ஒரு காகிதம் சுற்றிய கல். “உடனே வெளியேறுங்கள்” எனக் காகிதத்தில் குறிப்பு. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"உங்களை இழக்க என்னால முடியாது அப்பா! இது ரொம்ப மோசமான பகுதி. நீங்க காலையில் கிளம்பிப் போங்க!"

"இல்ல! அது முடியாது! நான் இப்பவே கிளம்பறேன்…"

ஆங்கில மூலம்: சடாதல் எஸ். பட்டாச்சாரியா

(தொடரும்)

About The Author