கரு

"ம்ம்மா… ம்மாஆ" லேசான அலறலாய் ஒரு உதறலோடு ஷாலினி அழைத்ததும் மரியாவுக்குப் புரிந்தது. பிள்ளை துணியை நனைத்துவிட்டது. அலுப்பின் வெளிப்பாடாய் பெருமூச்சொன்று எழுகிறது. எத்தனை முறை சொல்லிக்கொடுத்தாலும் இது நடந்து கொண்டுதானிருக்கிறது. எட்டு வயதுப் பிள்ளைக்கு மூன்று வயதுக்கான மூளை வளர்ச்சி இருக்கிறதுதான். ஆனால் மூன்று வயதுக் குழந்தை சொல்லிக் கொடுத்தால் பாத்ரூமில் போய் சிறுநீர் கழிக்காதோ என மரியாவுக்கு சந்தேகம் எழுகிறது. அவளுக்கு மட்டும் எப்படித் தெரியும்?

பி.ஈ படித்துக் கொண்டிருக்கும்போதே அத்தை மகன் லியோவோடு திருமணம். படிப்பு முடிந்த மூன்றாவது மாதத்தில் ஷாலினி பிறந்தாயிற்று. பிள்ளைக்கு மூளை வளர்ச்சி குறைவெனக் கண்டுபிடித்ததும் வீட்டிலிருந்த மாதாபடங்களையெல்லாம் கிழித்துப் போட்டாள். சர்ச்சுக்குப் போவதை நிறுத்திவிட்டாள். எல்லாம் கொஞ்ச நாளைக்கு. தனக்கு மட்டும் ஏனிப்படி என்ற
கழிவிரக்கம் சீக்கிரமே தீர்ந்து போனது. எப்படியேனும் இந்தக் குழந்தையை கண்ணுக்குள் வைத்துக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற வைராக்கியம் விருட்சமாய் எழுந்தது.

தங்களுக்குப் பிறகு ஷாலினிக்குப் பணம்தான் பலம் என்று லியோ துபாயில் வேலை தேடிக் கொண்டான். ஷாலினிக்கு இந்தியாவில் கிடைக்கிற உதவிகள் அங்கே கிடைக்காதென மரியா சென்னையிலேயே தங்கிவிட்டாள்.

ஷாலினிக்குத் துணியை மாற்றிக் கொண்டிருந்தபோது டிவியின் மேலிருந்த குடும்பப் புகைப்படத்தின் மீது பார்வை விழுகிறது. ‘குடும்பமாய் ஒரே இடத்திலிருந்தால் நன்றாகத்தானிருக்கும். வருடத்தில் பதினொரு மாதம் துறவு போலல்லவா இருக்கிறது’ என்று பெருமூச்செறிந்தவளில் கண்ணில் புகைப்படத்தின் அருகிலிருந்த காலண்டர் பட்டது. லியோ ஊருக்குப் போய் இரண்டு வாரமாகிறது. ஆனால்… ‘ஒரு வாரத்துக்கு முன்னாலேயே வந்திருக்க வேண்டுமே… லியோ ஊருக்கு வந்திருந்த பரவசத்தில் நாள் கணக்கில் கோட்டைவிட்டுவிட்டேனோ?’

கை அனிச்சையாய் அடிவயிற்றைத் தடவியது. அங்கே புயலாய் திகில் கிளம்பிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது.

எப்போதோ தங்கை ஜெஸிக்காக வாங்கிய கருச்சோதனைக் கருவியைத் தேடி எடுத்தாள். கருவி அவள் கருவுற்றிருப்பதாய்ச் சொன்னதும் பயத்தில் கண்ணில் நீர் கோர்த்தது. சோபாவில் எச்சில் ஒழுக தூங்கிக் கொண்டிருந்த ஷாலினியின்
அருகில் சென்று சென்று கை நடுங்க தலையைத் தடவி விட்டாள்.

பதினனந்து நிமிடம் போல ஒன்றும் செய்வதறியாது அவளருகில் அமர்ந்துவிட்டு, லியோவின் அலைபேசியில் அழைத்து மெல்லிய குரலில் செய்தியைத் தெரிவித்தாள். அவனின் அதிர்ச்சி தொலைதூரத்திலிருந்தும் தெளிவாய் அலைபரப்பானது.

"எப்படி இப்படி கேர்லெஸா…?" அவன் குரலில் மெலிதான எரிச்சல் இருந்தது.

 மரியா மௌனம் காத்தாள். அவள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டுப் பின்,

"வேணாம்மா… ஷாலினி மாதிரி இன்னொண்ணு பொறந்து அதுவும் கஷ்டப்பட வேண்டாம்" லியோவின் குரல் இறுகியிருந்தது

மரியாவின் விசும்பல் கேட்கவும் லியோவுக்கு மனசு இளகிற்று. "நான் வேண்ணா ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வரட்டுமா, மரியா?"

"ஏன், என் குழந்தையைக் கொல்றதுக்கா? ஒண்ணும் வேண்டாம்" தொலைபேசியை அணைத்துவிட்டு அவள் கேவிக் கேவி அழ ஆரம்பிக்க, ஷாலினி மிரண்டு எழுந்து அருகிலிருந்த மேஜையில் இடித்துக் கொண்டு அலறிற்று. கண்களைத் துடைத்துக்
கொண்டு ஷாலினியை சமாதானப் படுத்தியவள் விடாது அலறிக் கொண்டிருந்த தொலைபேசியையும் அலைபேசியையும் உதாசீனம் செய்தாள்.

அரைமணி நேரத்தில் அழைப்பு மணி திரும்பத் திரும்ப ஒலித்தபோதும் அசையாமல் அமர்ந்த்தருந்த மரியா, பின், கதவு பலமாய்த் தட்டப்பட்டதும் எரிச்சலோடு கதவைத் திறந்தாள். வாசலில் நின்று கொண்டிருந்த தன் தாயைக் கண்டதும் அவளது
எரிச்சலைக் கொட்ட ஒரு ஆள் கிடைத்துவிட்ட திருப்தி.

 "என்னடி, எவ்ளோ நேரமா ·போன் பண்றேன். எடுக்கவே இல்லலன்னதும் பதறிப் போயிட்டேன். ஏன் மூஞ்செல்லாம் ஒரு மாதிரி இருக்குது? என்ன பிரச்சனை?" தாயின் மனது பதறியது.

சற்று நேரம் தயங்கிவிட்டு நடுங்குகிற குரலில், "நான் ப்ரக்னென்டா இருக்கேம்மா" என்றாள் மரியா எதோ குற்றம் செய்துவிட்ட தினுசில்

விக்டோரியாவின் முகம் சட்டென்று மலர்ந்தது. "நல்ல விஷயம்தானே… இதுக்கு ஏண்டி இப்படிப் பேயறைஞ்ச மாதிரி இருக்கே?" என்றாள் குதூகலமாய்.

மரியா முறைத்த முறைப்பைப் புறந்தள்ளிவிட்டு சன்னமான குரலில், "ஒரு முறைநடந்தா எல்லா முறையும் நடக்கும்னு நெனைக்கிறது முட்டாள்தனம். நீயா மனசு மாறி எப்போவாவது இன்னொண்ணு பெத்துக்க மாட்டியான்னு வேண்டிக்கிட்டே
இருந்தேன். நடந்திருச்சி" என்றார் விக்டோரியா தன் பிரார்த்தனை பலித்துவிட்ட மகிழ்ச்சியில்

"உங்களுக்கென்ன… அவஸ்தைப்படறது நானா நீங்களா?" சுள்ளென்று விழுந்தாள் மரியா

"இதப் பாருடா… உங்களுக்குப் பிறகு ஷாலுவைப் பாத்துக்கறதுக்கு யாராவது வேணுமில்ல… யோசிச்சுப் பாரு, இந்தப் பிள்ளை நல்லாப் பொறந்ததுன்னா அவளுக்கும் கடைசி வரைக்கும் ஒரு துணை இருக்கும்"

"நல்லாப் பொறந்தாதானே?"

"நம்பிக்கையா இருக்கணும்டா. வேளாங்கண்ணி மாதா கைவிட மாட்டாங்க"

"அப்புறம் ஏன் ஷாலுவைக் கைவிட்டாங்களாம்?"

அவள் கேட்ட கேள்விக்குத் தன்னிடம் பதிலில்லாத இயலாமை கோபமாய் உருவெடுத்தது விக்டோரியாவுக்கு.

"அதுக்காக கலைச்சிறலாங்கிறியா?" சுட்டெரிப்பது போலக் கேட்டார்

சட்டென்று இருக்கையை விட்டெழுந்த மரியா, "எல்லாரும் என்னையே குறை சொல்லுங்க… இன்னொரு பிள்ளை இவளை மாதிரி பொறந்தா என்ன செய்யறதுன்னு யாராவது தீர்வு சொல்றீங்களா?" ஆத்திரத்துடன் வெடித்தாள்

தொடர்ந்து, "இந்தப் பிள்ளையும் ஷாலுவைப் போலப் பொறந்தா நீங்க வளர்க்கறீங்களா?" என்று வீம்பிற்காகக் கேட்டுவிட்டாளே ஒழிய ஷாலுவை அன்னையிடம் விட்டுவிட்டுத் தன்னால் இருக்கமுடியுமெனத் தோன்றவில்லை.

விக்டோரியா மரியாவைத் திகைப்பாய்ப் பார்த்தாள். ஆனாலும் ஷாலினியைத் தன்னால் அரை நாள்கூடப் பார்த்துக் கொள்ள முடியாத இயலாமை அவளுக்குத் தெரிந்தே இருந்தது. சிறுநீரக தொந்தரவில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் தன் கணவருக்குப் பணிவிடை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. இன்னொரு பிள்ளையை எப்படி வளர்ப்பது? உதடுகளை இறுக்கிக் கொண்டாள். தன் பிள்ளைக்கு இத்தனை சின்ன வயதில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் என்ற பச்சாதாபம் எழுந்தது.

தன் மகளின் கேள்விக்கு நேரடியான பதிலைத் தராமல், "முடியலைன்னா ஷாலுவை லிட்டில் ஏஞ்சல்ஸ் ஹோம்ல விடலாமே, மரியா… ரொம்ப நல்லா கவனிச்சுக்கறாங்களாம்" என்றார் தாய்

"நாங்க இருக்கும்போதே எங்க பிள்ளைய அநாதையாக்கச் சொல்றீங்களா? பாருங்க, இன்னொரு பிள்ளை பொறக்கறதுக்கு முன்னாலேயே ஷாலுவை ஹோம்ல விடுறதைப் பற்றிப் பேச ஆரம்பிச்சாச்சு" மரியாவுக்குத் தன் கோபத்தை வெளிப்படுத்த இன்னொரு காரணம் கிடைத்துவிட்டது

"நானென்ன நிரந்தரமாவா விடச் சொல்றேன்? அடுத்த குழந்தை வளர்ற வரைக்கும்தானே?"

தன் தாய் சொல்வதிலும் கொஞ்சம் நியாயம் இருப்பது மரியாவுக்குப் புரிந்தே இருந்தாலும் ஷாலுவைப் பிரிவதை நினைக்கவே கடினமாக இருந்தது. இந்தப் பூஞ்சைப் பிள்ளை, பெற்றவர்களைப் பிரிந்துவேறு கஷ்டப்படவேண்டுமா என்ற எண்ணம் வேறு.

ஒன்றும் பேசிக் கொள்ளாமல் பத்து நிமிடம் கழித்த பின் விக்டோரியா எழுந்தாள். "அப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகணும். நான் கெளம்பறேன். உனக்குத் தெரியாததில்லை, மரியா. யோசிச்சு சரியான முடிவெடு கண்ணு"

மரியாவும் ஷாலினியை ·பிஸியோதெரபிக்கு அழைத்துச் செல்லத் தயாரானாள். அவளுக்குத் தேவையான பொருட்களை ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது குழந்தை குடித்துக் கொண்டிருந்த ஜுஸைக் கொட்டி அதில் புரண்டு கொண்டிருந்தது. மீண்டும் சட்டையை மாற்றி, முகத்தைக் கழுவி அவளைத் தயார் செய்து ஆட்டோ பிடித்து மருத்துவமனையை அடைந்த போது பத்து நிமிடம் தாமதமாகிவிட்டிருந்தது.

"ஸாரி, சந்தியா" என்று வருத்தம் தெரிவித்தவளைப் புன்னகையோடு பார்த்தாள் பிஸியோ தெரபிஸ்ட் சந்தியா.

"நோ ப்ராப்ளம்ஸ்" என்றவள் தொடர்ந்து, "இங்கே வர்ற நிறையப் பெற்றோர்கிட்ட அலுப்பும் சுயபச்சாதாபமும் தெரியும். நீங்க வித்தியாசம். ரொம்ப பாஸிடிவான அம்மா. நீங்க உங்க குழந்தையை ரொம்ப நல்லா கவனிச்சிக்கறீங்க. ஷாலினி ரொம்ப
லக்கி" என்றாள். சந்தோஷமாக இருந்தாலும் மரியாவின் மனசு குறுகுறுக்கத்தான் செய்தது.

பேச்சை மாற்ற எண்ணி, "ஆன்டிக்கு குட் ஈவினிங் சொல்லு, கண்ணு" என்றாள் ஷாலுவை நோக்கி. ஷாலு கோணலாய்ச் சிரித்து நெற்றியில் சல்யூட் வைத்தது.

பிஸியோதெரபி முடிந்ததும் ஷாலினியை அழைத்துக் கொண்டு வெளியேறியபோது அலைபேசி அழைத்தது.

லியோ, "கோபமா இருக்கியாம்மா? ரொம்ப ஸாரி" என்றான் மிகுந்த வருத்தத்துடன்

"ஓகே" என்றாள் தீனமாய்

"யோசிச்சியா?"

"ம்"

"நீயே சொல்லு என்ன பண்ணலாம்னு. நீ சொல்றபடியே செய்யலாம்" லியோ அவளைக் காயப்படுத்திவிடக் கூடாதென்று பிரயத்தனப்பட்டு வார்த்தைகளைப் பொறுக்கியெடுத்துப் பேசினான்

"…"

"புரிஞ்சுக்கோப்பா, ப்ளீஸ்… எனக்கும் உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு. ஷாலினி மட்டும்னா இன்னும் அஞ்சு வருஷத்திலயாவது திரும்ப வந்திரலாம்…" லியோவின் குரலின் கரகரப்பு மரியாவின் இமைகளை நனைத்தது

"சரி… டாக்டரைப் பார்த்துட்டு ·போன் பண்றேன்" பொது இடத்தில் அவள் அழ விரும்பவில்லை.

நின்ற இடத்திலிருந்து பத்தடி தள்ளித்தான் டாக்டர் லேகா ராஜாராமின் அறை. எத்தனை கூட்டம் இருந்தாலும் அவளுக்கு முன்னுரிமை உண்டு

லேகா மரியாவைப் பார்த்ததும், "ஹாய் ஸ்வீட்டி, எவ்ரிதிங் ஆல்ரைட்?" என்றாள் அக்கறையாய். நெருக்கமான குடும்ப நட்பு.

"பீரியட்ஸ் தள்ளிப் போயிருக்கு, டாக்டர்" அவளையறியாமல் தலை குனிந்து கொண்டாள் மரியா.

"ஐஸீ… டெஸ்ட் பண்ணிப் பாத்துடலாம்" டாக்டரின் குரலில் உணர்ச்சியில்லை.

"வீட்டில டெஸ்ட் பண்ணினேன். பாஸிடிவா வந்தது" மரியாவின் பார்வை நிமிரவில்லை

"அப்படியா? அப்படின்னா ப்ளட் டெஸ்ட் எடுத்து கன்·பர்ம் பண்ணிக்கலாம்" என்று நர்ஸைக் கூப்பிட்டு விபரங்களைச் சொன்னார்.

பின் மரியாவிடம் திரும்பி, "ஒரு மணி நேரம் கழிச்சி வா, மரியா" என்றார்

மருத்துவமனையின் தோட்டத்திற்கு வந்து காலியான ஒரு இருக்கை தேடி ஷாலுவை இருத்திவிட்டு அருகில் அமர்ந்தாள் மரியா. எதிரிலில் அமர்ந்திருந்த இளம்பெண், "ஹாய், என் பேர் ரேவதி. உங்களுக்கு என்னைத் தெரியாது. எனக்கு உங்களைத் தெரியும். நான் சந்தியாவோட தங்கை" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்

"ஹலோ" என்று வறட்சியாய்ச் சொன்னதோடு நிறுத்திக் கொண்ட மரியாவை எங்கிருந்தோ வந்த பந்து ஒன்று தோளில் அறைந்து சற்று நிலை தடுமாறச் செய்தது.

"ஸாரி, ஆன்ட்டி. ப்ளீஸ், மன்னிச்சிருங்க" என்ற பட்டுக் குரலில் நிமிர்ந்தாள். நான்கு வயதிருக்கும் அந்தக் குட்டி தேவதைக்கு.

பவ்யமாய் அது மன்னிப்புக் கேட்ட விதத்திலும் ரோஜா போன்ற முகத்திலும் குறுகுறுவென்றிருந்த அதன் கண்களிலும் ஈர்க்கப்பட்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்த மரியாவிடம் மீண்டும், "ப்ளீஸ், ஆன்ட்டி…" என்றது கெஞ்சும் விதமாய்

"அபி, பார்த்து விளையாடறதில்லை?" என்று அவளை அதட்டிய ரேவதி மரியாவிடம்,

"ஸாரிங்க" என்றாள்

"உங்க மகளா?" என்றாள் மரியா அபியின் மேலிருந்த பார்வையைத் திருப்பாமலேயே. அபி மன்னிப்பைப் பெற்றுக் கொண்டுதான் திரும்புவேன் என்பது போல நகராமல் நின்று கொண்டிருந்தது

"ரொம்ப ஸ்வீட். நல்லா வளர்த்திருக்கீங்க"

பூரிப்பாய் இருந்தாலும் ரேவதி காட்டிக் கொள்ளாமல், "இதை எல்லாம் வளர்க்கறதுல என்னங்க கஷ்டம்? உங்களைப் போல என்னாலெல்லாம் இருக்க முடியாதுங்க. ஐ அட்மையர் யூ" என்றாள். தொடர்ந்து, "உங்க பொண்ணையும் உங்க பொறுமையயும் பார்த்த பிறகுதான் நான் இவளைத் திட்டறதைக் குறைச்சேன். உங்க பொண்ணை ஒரு சின்ன விஷயம் செய்ய வைக்கறதுக்கு என்ன பாடு படறீங்க. அதைப் பாக்கும்போது இவ ஓவர் ஆக்டிவா இருக்கறான்னு திட்டறதுக்கு மனசு வரமாட்டேங்குது."

ரேவதி ஆறுதல் சொல்வதாய் நினைத்துக் கொண்டு ஷாலினியின் குறையைப் பெரிதுபடுத்திக் காட்டினாள். மரியாவுக்கு வலிக்கிற இடத்தில் தையல் போடுவது போலிருந்தாலும் பேசாமல் முறுவலித்தாள்

அபி பெரியவரிகளின் உரையாடலில் கலந்து கொள்ள விரும்பாமல், "பந்தை எடுத்துக்கட்டுமா ஆன்டி?" என்றது.

"ஷ்யூர்" என்றவளுக்கு அவளை இழுத்தணைத்துக் கன்னத்தில் முத்தம் வைக்க வேண்டும் போலிருந்தது. அவளது மனதைப் படித்தாற்போல, "ஆன்டிக்கு ஒரு கிஸ் குடுத்துட்டு வா… நாம கிளம்பலாம். நேரமாச்சு" என்றாள் ரேவதி அபியைப் பார்த்து.

அபி தன் பூந்தளிர்க் கரங்களால் மரியாவின் கழுத்தை அணைத்துக் கன்னத்தில் பதித்த முத்தத்தில் மரியாவின் நெஞ்சு நிறைந்தது. பதிலுக்கு அவள் கன்னத்தில் முத்தம் பதித்தபோது சடாரென்று சோக அலை ஒன்று ஓங்கி எழுந்து
அவளைப் போர்த்திக் கொண்டாற்போலிருந்தது. ஷாலுவிடம் இப்படி ஒரு முத்தம் கிடைக்க எவ்வளவு ஏங்கி இருக்கிறாள் மரியா? ஷாலுவுக்கு அணைத்துக் கொள்வதோ முத்தமிடுவதோ பிடிப்பதே இல்லை.

வெகு நேரம் அபி விட்டுச் சென்ற சுகமான அதிர்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள் மரியா. ‘பிறக்கப் போகும் குழந்தை அபியைப் போலிருக்குமா?’ மணிக்கூண்டிலிருந்து கிளம்பிய ஒலி அவளை நனவுலகத்துக்குக் கொண்டுவந்தபோது அருகிலிருந்த ஷாலுவைக் காணவில்லை.

"ஷாலூ…" பதற்றமாய் அழைத்துக் கொண்டே தோட்டத்தைச் சுற்றி வந்தாள். எங்கும் காணாததில் அதீதமான கற்பனைகள் எழுந்து நெஞ்சு படபடத்தது. உதவி தேடலாமென பையை எடுக்க வந்தவள் தற்செயலாய் பெஞ்சுக்கு அடியில் ஷாலினி
படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

படபடப்புக் குறையாமல் ஷாலினியை வெளியில் இழுத்து, உடலில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு அவளை அணைத்துக் கொள்ள முற்பட்டபோது ஷாலு தட்டிவிட்டது.

ஒரு வேற்றுக் குழந்தையின் கொஞ்சலில் தன் பிள்ளையை மறந்துவிட்ட குற்ற உணர்வு இதயத்தை இறுக்க ஷாலுவின் கையை அழுத்தமாய்ப் பற்றிக் கொண்டு முத்தமிட்டாள் மரியா. ஷாலு கையை உதறி தீப்பட்டாற்போல அனற்றிற்று.

மரியாவிற்கு வயிற்றிலிருக்கும் பிள்ளை இன்னும் ஷாலுவை எப்படி அலைக்கழிக்கப் போகிறதோவென்ற பயம் அதிகமாயிற்று. அதே சமயம் அபியின் பஞ்சு ஸ்பரிஸமும் பூமுகமும் நினைவில் வந்து போயின. நொடியில் சுரந்துவிட்ட
கண்ணீரைச் சுண்டி எறிந்துவிட்டு லேகாவின் அறைக்கு நடந்தாள்.

உள்ளே சென்றமர்ந்ததும், "குழந்தை நல்லபடியா பொறக்கறதுக்கு எவ்வளவு சான்ஸ் இருக்கு டாக்டர்?" அவரின் பதில் என்னவாக இருந்தாலும் அதில் பாதகம் இருக்கப் போவதாக உணர்ந்திருந்ததால் குரலில் சுரத்தே இல்லை மரியாவுக்கு

லேகா, "முதல்ல ரிசல்ட் வரட்டும், மரியா…" என்று சொன்னபடியே நர்ஸ¤க்கு சைகை காட்டினார்

"லியோ வேண்டாம்னு சொல்றார்" சொல்லும் போதே கண்ணீர் பொங்கியது. அபியின் முகம் கிழிபட்டுக் காற்றில் கரைவது போன்ற காட்சி பின்னணியில் ஓடிற்று. ஷாலு வாயில் விரலை வைத்து ‘சப் சப்’பென்று சத்தத்தோடு சப்பிக் கொண்டிருந்தது

"அவரையும் குறை சொல்ல முடியாது. ஆனா…" எல்லையை மீறுவதாக நினைத்தாளோ என்னவோ சொல்லவந்ததை சொல்லாமல் நிறுத்திக் கொண்டாள் லேகா.

ஷாலினியின் விரலை வாயிலிருந்து விடுவித்த மரியா, தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்து, "விரலை வாயில வைக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல கண்ணு… " என்றாள் மென்மையான அதட்டலுடன்

"ஏன் டாக்டர், குழந்தை நல்லா பிறக்கறதுக்கு ஏதாவது செய்ய முடியுமா?" என்று கேட்டுவிட்டாலும் உள்ளுக்குள்ளே ‘நல்லாப் பொறக்கறது ஷாலுவுக்கு நல்லதா?’ என்ற கேள்வி அவளைக் குடைந்து கொண்டிருந்தது.

"இது மரபு ரீதியான பிரச்சனைன்னா ஒண்ணும் செய்ய முடியாது மரியா. தெரிஞ்சுக்கறதுக்கு சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்"

"ஏன் டாக்டர், இன்னொரு பிள்ளை பிறந்தா நான் ஷாலுவை நல்லா வச்சிப்பேனா?" அழுத்தம் தாளாமல் வெளியே வந்தே விட்டது கேள்வி.

லேகா மரியாவை சில விநாடிகள் கூர்மையாய்ப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ‘இந்தக் கேள்விக்கு நானெப்படி பதில் சொல்லமுடியும்?’ என்ற பதிலும் ‘உன் குழப்பம் எனக்குப் புரிகிறது, ஸ்வீட்டி’ என்ற வாஞ்சையும் இருந்தன. மரியாவுக்கு யாருடைய மடியிலாவது தலைவைத்துப் படுத்துக் கொள்ள வேண்டும்போலிருந்தது. அருகிலிருந்த ஷாலினியில் சின்னத் தோள்களில் சாய்ந்து கொள்ள முற்பட்டாள். ஷாலு முனகிவிட்டு நகர்ந்து அமர்ந்தது.

நிமிர்ந்த போது நர்ஸ் லேகாவிடம் ஒரு ·பைலை நீட்டிக் கொண்டிருந்தாள். வாங்கி விரித்துப் பார்த்த லேகா, "டெஸ்ட் நெகடிவ்னு வந்திருக்கு மரியா" என்றாள்.

"எ… எப்படி டாக்டர்?"

"நீ வீட்ல உபயோகிச்சது பழைய கிட்டா இருந்திருக்கும். எக்ஸ்பயரி டேட் கடந்திருக்குமாயிருக்கும். அல்லது பதட்டத்தில நீ ரிசல்டைச் சரியா பாத்திருக்க மாட்டே"

மரியா திகைப்புடன் அமர்ந்திருந்தாள். மூளை ஸ்தம்பித்தது போலிருந்தது.

"மரியா… " டாக்டர் அழைத்த குரலில் உயிர்ப்புற்று,

"டாக்டர், அப்ப நான்…"

"கர்ப்பமில்லை"

மரியா சட்டென்று உடைந்து, ஷாலுவைக் கட்டிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். ஷாலு அவள் பிடியிலிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்தது.

About The Author

6 Comments

  1. Vanji

    மிக அருமை. எப்படி உங்களால் இவ்வளவு அருமையாய் அந்தத் தாயின் உணர்வுகளை எழுத்தில் வடிக்க முடிந்தது? மனதை பிசைந்து விட்டது.
    I see lot of autistic kids now. very sad. The thing is that there is no findings on why this condition occurs. Also, there is no cure for this. I feel from bottom of my heart that no kid should be born with this. May god give strength to those moms and dads.

  2. Balasundar Senthilvel

    சுகமான சோக கதை. எழுத்து இறைவன் உங்களுக்கு கொடுத்த வரபிரசாதம். Keep It up!

  3. Shanthi

    ரொம்ப அருமை! நிலா

    Before pregnancy test result, Mariya was confusing to continue or not… But after knowing that She cant bear the disappointment… The Pain of Present situation makes her to cry.. This is the most admirable story that I have ever read…

  4. bharani

    மனதுக்குள் ஒரு சங்கடத்தை உண்டாக்குகிறது இந்தக் கதையின் முடிவு. முடிவு எப்படியிருந்தாலும் சங்கடம் தான் மிஞ்சியிருக்கும்; சோகமாய் இருப்பினும் நல்ல கரு!!

Comments are closed.