கழனி (2)

"’கொஞ்ச நேரம் போனா தன்னால திரும்ப அசைய ஆரம்பிச்சிரும். இப்ப நீ செய்யி பாப்பம். முள்ளுமீன் பெரிசு, முதல்ல அதைப் பிடிக்கப் பழகறியா? ஈல் கண்டா என்னாண்ட விடு, முதல்லியே ஈல் பிடிக்க ஆரம்பிச்சியானா வசந்தெரியாம அதை ஒரேடியா அடிச்சி சாவடிச்சிருவ. நல்ல விலை கிடைக்காமப் போயிரும். சரியாத் தாக்கப் பழகணும். உடம்புல காயந் தெரியப்டாது. நல்லா பாத்து கோளாறா வேலை செய்யணும் பாத்துக்க. எலேய் அசிரத்தையா எதும் பாம்பை அடிச்சிப்பிடாதடா. அது அபசகுனம்ல. அந்நிய நாள்ப் பூராவும் மீன் கிடைக்காமப் போயிரும்…"

"’தயெங், தயெங்…. இங்க வா சீக்கிரம். விளக்கைப் பிடி என்னாண்ட. எம்மாம் பெரிய விலாங்கு. மாட்டாது லேசுல. மத்ததெல்லாத்தையும் வலைக்குள்ள ஒதுக்கி கையவுட்டு பிடிச்சிறலாம். விலாங்கு என்ற விலங்கு நல்ல பொறுமைசாலி, லேசுல உள்ள வராது. நாமளும் காத்திருந்து வேளை பார்த்துக் கையில லபக்கணும். அசந்தம்னா, காயப்படுத்திட்டு நழுவிரும். நாள்க்கணக்குல ஙொம்மாள காந்தி எரியும்…"

காலி வயல்காடுகளில் திரும்ப நாத்துப் பாவுதல், பொற்காலம் முடிஞ்சி சிரமதசை ஆரம்பிக்கிற காலம், லுங் காம் போன்ற ஆட்களுக்கு. அள்ளிக்கொடுக்கும் பூமி என்கிற வள்ளல் சீமாட்டி அப்போது திரும்ப சொந்தக்காரர்களை கவனிக்க ஆரம்பித்து விடுகிறாள். சொந்தக்காரர்கள் உஷாராய்க் காவல் வைத்தார்கள். பால்பிடிக்கிற பயிர் பாழாயிறப்டாதில்ல. வயலுக்குள்ள கட்டிக்கிடக்கிற தண்ணிக்குள்ள யாரும் மீன்தேடி இறங்க முடியாது. லுங் காம் மற்றும் அவனொத்த சகாக்கள், அவர்களுக்கு எழுதப்படாத இந்தச் சட்டம் தெரியும். யாரும் மீற நினைக்கவில்லை.

ஊரெல்லைப் பக்கம் சின்ன ஒரு இடம், அதுமாத்திரம் பயிர்போடாமல் கிடந்தது. கோடையாச்சின்னா அதும் தண்ணியில்லாமல் வறண்டுவிடும். வயல்களின் வரப்புகளில் விளக்குடன் நடந்து திரிவான் அவன். ஆள்காட்டி விரல் பருமனுக்கு மூங்கில்கழி, ரெண்டு கை விரிச்சாப்போல நீளம், முன்பக்கம் பூண்போல மூங்கிலினால் குத்தீட்டி கூட என எடுத்துப் போனான். தவளையை அதால் போட்டுத் தள்ளுவான்.

தவளை பிடிக்கிறதை அவன் விரும்புவதில்லை. தலையில் மடேரென்று அடிபடும்போது அது காட்டும் முகபாவம், மகா பாவம்! அதுங் கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டிவிடுகிறது, முன்காலை உயர்த்தி கண்ணை அது துடைத்துக் கொள்கிறதையும் பார்த்திருக்கிறான். ஆனா சாமி என்னா செய்யிறது அன்னாடப் பாடு கழியணுமே, வேற என்ன இருக்கு?

ராத்திரி வந்தது. இதான் கடைசி ராத்திரி, இனிமே மீன் கிடைக்காது. காடு, புதர்னு அலைய வேண்டியதுதான். அன்னிக்கு அவன் கூடையில் கொஞ்சம்போலத்தான் மீன். நண்டு. இறால். பிரான். அட விளக்குக்கான மண்ணெண்ணெய், அதுக்கே வராது போலுக்கடா.

வரப்பில் பெட்ரோமாக்சுக்குக் கொஞ்சம் காத்து ஏத்தி சுடரை உசுப்பேத்திக் கொள்ளலாம் என நின்றான். ஆ..அங்க பார்றா, வாளை! எலேய் உள்ளங்கைத் தண்டி! இடுப்பொசரம் பயிர் விளைந்திருந்தது. அதனூடே ஒளிஞ்சி நெளிஞ்சி கிடக்கிறது. சட்னு கண்ணுக்கு அது இருக்கறதே தெரியாததுபோல, மீன்னே தெரியாதது போலக் கிடக்கிறது. வலையைக் கிலையை வீசலாம்னா பயிர் ஒண்ணு ரெண்டு நாசமாயிரும்னு ஒரு பயம்.

எலேய் கத்தி எட்றா! தலைல ஒரு சாத்து சாத்திறலாம்… பரபரப்பில் தானறியாமல் அலறி, தன் சத்தத்தில் தானே வெலவெலத்தான். தண்ணி கலங்கி சேறும் இரத்தமுமாய்க் குழம்பியது. ஆ மீன் இல்லை! வயல் உள்ளாற சலசலப்பு. விடப்டாது, என்று பின்னாலேயே போனான். இடமும் வலமுமாய்ச் சாய்ந்து கிடந்தன பயிர் நாற்றுகள். எலேய் பாத்து. பயிரை நசுக்கிறாதே.

திடுதிப்பென்று வயல்வெளியில் படாரென்று ஒரு துப்பாக்கிச் சத்தம். கைவிளக்கு நடுங்கியது. தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. முதுகெலும்பில் சிலீர். நெஞ்சுப் படபடப்பு. தன்னிலை உணர்ந்தபோது உசிர்ப்பயத்தில் ஓடிக் கொண்டிருந்தான். கால்களில் உணர்ச்சியே தெரியவில்லை. பறக்கிறாப் போலிருந்தது. காலடியில் பயிர் பச்சைகள் மிதிபட்டன. தூரத்தில் இருந்து அவன் முதுகில் துரத்தும் குரல்.

‘"எலே பொறம்போக்கு நாயே. மிதிச்சிச் சவட்டிட்டுப் போறியேடா. எல்லாத்தையும் நான் எடுத்துத் திரும்ப சரியா நடணும். வேற நாத்து வாங்க துட்டு ஆர்ட்ட இருக்கு? இன்னொரு வாட்டி மாட்டினியானா, மவனே சுட்டுச் சாவடிச்சிருவேன் உன்னை…"

>>>
Paddy fields/Samuram singh
ஆங்கிலத்தில் – கேதரின் ஏ. போயி

தவளை பிடிக்கிறதை விரும்பவில்லை என்று சொல்லும் கட்டம் நல்ல பதிவு என்று பட்டது. வேட்டையாடப் போனால் தேவாங்குகள் இப்படி வேட்டைக்காரனைக் கையெடுத்துக் கும்பிடும் என்று சொல்வார்கள்.

இந்தக் கதை மற்றும் பதினோரு கதைகள் தாய்லாந்தின் முற்போக்கு ‘ஜதுரத்’ இதழில் எழுபதுகளில் வெளியாகின. தாய்லாந்தில் சமூக அரசியல் மாற்றங்கள் வந்து கொண்டிருந்த காலம் அது.

1976ல் இராணுவ ஆட்சி வந்தபின் அந்த இதழ் முடக்கப் பட்டுவிட்டது. வட தாய்லாந்தில் கல்லூரி-ஆசிரியப்பபணியுடன் பத்திரிகையாளனாகவும் இருந்த சாம்ராம் சிங், (இயற்பெயர் சுராசிங்சாம்ராம் ஷிம்பனவ்) அரசியல் நெருக்குதல்களால் உண்மைகளைக் கட்டுரை வடிவமாக அல்ல, கதைகளாக கற்பனை போல எழுதத் தலைப்பட்டார்.

தாய்லாந்தின் தலைசிறந்த எழுத்தாளரான சாம்ராம் சிங், கழுத்தணி (The Necklace) என்ற சிறுகதைக்காக சோ கராகத் பரிசு – ‘லோக் நாங்கை’ என்ற இதழால் 1979ல் கௌரவிக்கப் பட்டார்.

நல்ல உற்சாக நடை. இவன் வேட்டையாடப் போனால், அட இவனை வேட்டையாடிட்டாங்கப்பா, என்கிறார். கடைசியில் அவன் ஓடிப் போயாச்சி, என்றாலும் நிதானமாய் வசனம் பேசுகிறான், சுட்டவன். பேசுகிறவன் சுட்டவன் அல்ல, சாம்ராம் சிங். இதில் வரும் மீன் வகைகள் நானாக போட்டது. விவரப்பிழை இருக்குமோ? நான் சுத்த சைவம்.

About The Author