காற்றினிலே வரும் கீதம்!

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே….

நடராசனுக்குப் பிடித்தமான பாட்டு. பாடிக்கொண்டே ஆலமரத்தின் விழுதுகளை ஊஞ்சல்போல் இணைத்து ஆடிக் கொண்டிருந்தான். பக்கத்தில் தென்னந்தோப்பு, மாந்தோப்பு, பறவைகளின் இன்னிசை.

"அண்ணே, அண்ணே இன்னொரு வாட்டி பாடுண்ணே" நடராசனின் ரசிகர்கள் நாலைந்து பேர் நேயர் விருப்பம் போல் கேட்டனர். நேயர்கள் எல்லோர்க்கும் பத்துப் பன்னிரண்டு வயதுதான் இருக்கும். நடராசனுக்கு மட்டும் மற்றவர்களைக் காட்டிலும் பன்னிரண்டு வயது அதிகம் இருக்கும்.

"அண்ணே, அண்ணே! அங்கே பாரு. செங்கோடன் வண்ணாத்திப் பூச்சியப் பிடிக்கப் போறான்." ஒரு சிறுவன் மற்றவன்மேல் புகார்.

"டேய், டேய் எத்தனெவாட்டி சொல்றது? பூச்சியெப் புடிக்கக்கூடாது". நடராசனின் அதட்டலுக்குப் பணிந்தான் செங்கோடன் என்னும் சிறுவன்.

வண்ணத்துப்பூச்சிகள் பலவித வர்ண ஜாலங்கள் காட்டிப் பறந்துகொண்டிருந்தன. மாலை மணி 3 இருக்கும். மத்தியான சாப்பாடு முடிந்து சிறுவர்களுடன் தோப்புக்கு வந்துவிட்டான் நடராசன். சிறுவயது முதலே இயற்கையில் ஈடுபாடு கொண்டவன். தோப்பு, தோட்டம், பூக்கள், ஆறு இவையெல்லாம் நடராசனுக்கு மிகவும் பிடித்தவை.

அவனது தமிழ் ஆசிரியர் ஒருமுறை நடராசனின் இயற்கை ஈடுபாட்டை அறிந்து மற்ற மாணவர்கள் மத்தியில் பாராட்டியுள்ளார்.

பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது தாவரவியல் ஆசிரியர் ஒரு நாள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். பூக்களின் பாகங்களை விளக்கும் பாடம். ஒரு பெரிய அழகிய ரோஜாப்பூவை எடுத்து நடராசனிடம் கொடுத்து ஒவ்வொரு இதழாகத் தனித்தனியே பிய்த்து, பின்னர் மகரந்தப் பகுதியுள்ள பொகுட்டை ‘பிளேடால்’ குறுக்காக வெட்டி அதன் பாகங்களை விளக்கச் சொன்னார். ரோஜாப்பூவைக் கையிலெடுத்தான் நடராசன். அழகிய குழந்தையைப்போல் கண்களில் ஒற்றிக்கொள்ளுமாப்போல் இருந்தது ரோஜாப்பூ!

"மாட்டேன் சார்! மாட்டேன். இந்தப் பூவப் பிக்கமாட்டேன்"

"எதிர்த்தாடா பேசுறே?" -‘ பளார்’ என்று ஓர் அறை. நடராசன் கன்னத்தைப் பிடித்தபடியே வீட்டுக்கு ஓடினான். அன்றிலிருந்து பள்ளிக்குச் செல்லவில்லை. பெற்றோர்களின் செல்லமான கண்டிப்பு பயனளிக்கவில்லை. ஏற்றம் இறைப்பான். பாட்டுப் பாடுவான். சிறுவர்களுடன் விளையாடுவான். சினிமா, டி.வி. இவற்றிலெல்லாம் அவன் மனம் செல்லவில்லை. மழை பெய்தால் வீட்டு மொட்டைமாடியில் ஏறி நின்று மழை நீரில் நனைவான்!

நடராசன் ஊஞ்சலாடிப் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கும்போது அவனது தந்தை வீட்டுக்கும் வாசலுக்கும் தாவிக்கொண்டு வசைமாரி பொழிந்து கொண்டிருந்தார். "அவன் எங்கே போயிருப்பான்? கழுதை கெட்டா குட்டிச்சுவரு. இவன் போனா தோப்பு". கையில் கடிதத்துடன் அப்பா குப்புசாமி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்.

"ஏனுங்க! என்ன கடுதாசின்னுதான் பாருங்களேன்". மனைவியின் சொல்லைக் காதில் வாங்கவில்லை.

"ஆமாமா, இவனுக்கு 25 வயசாகுது. படிப்ப முடிடான்னா பள்ளிக்கூடத்துக்குப் போகலே. ஒரு மருந்துக் கடயிலே வேலைக்குச் சேத்துவிட்டேன். ஓடியாந்துட்டான். கேட்டா முதலாளி திட்டினார்ங்குறான். எங்கூடவே ஒக்கார வெச்சி டிரைவிங் கத்துக் குடுத்தேன். லைசென்சும் வாங்கியாச்சி. நல்லாத்தான் வண்டி ஓட்றான்னு லாரி சர்வீசுலே சேத்துவிட்டேன். ராத்திரி வேலே ஒத்துவரலேன்னுட்டான். சரி, ஆட்டோ ரிக்க்ஷாவாவது ஓட்டுடான்னேன். ஒருமாசங்கூட வண்டி ஓட்டலே. ஏண்டான்னு கேட்டா ”மொதலாளி சாராயம் கடத்தச் சொனார்.வந்த்துட்டேங்குறான்’. டிரைவர்னா அப்பிடியும் இப்பிடியும் இருக்கணும். ஏதோ தெரிஞ்ச டிரைவரோட பையன்னு இவனுக்கு வேலே கொடுக்குறாங்க. அதெக்காப்பாத்திக்கத் தெரியலே. தோப்பு, தோட்டம், சின்னப்பசங்க சகவாசம் இதெல்லாம் சோறு போடுமா?"

பெத்தமனம் பிள்ளைக்காகப் பரிந்து பேசியது.

"ஏலேய்! திம்மப்பா, நடராசன் தோப்லே இருந்தாக் கூட்டிட்டு வா". குப்புசாமியின் சத்தத்திற்குப் பயந்து சிறுவன் திம்மப்பா, ‘டர்ர்..ர்ர்..ர்ர்…’ என்று கார் ஓட்டும் பாவனையில் சத்டம் போட்டுக்கொண்டும் கைகளை அசைத்துகொண்டும் ஓடினான் தோப்பை நோக்கி. கிருஷ்ணகிரி பைபாஸ் ரோட்டின் பக்கம் சரிவான பகுதிக்கு திம்மப்பாவின் ‘கார்’ ஓடி நின்றது. இருபது நிமிடங்களில் நடராசன் தன் தந்தையின் முன் நின்றான்.

“தொரைக்கு டூட்டி எல்லாம் முடிஞ்சுதா..?" தந்தையின் கேள்விக்குத் தலையைச் சொரிந்து கொண்டு நின்றான் நடராசன்.

"அந்தக் கடுதாசியத்தான் புள்ளே கையிலே குடுங்களேன்" தாயை நோக்கிய நடராசனின் கைகளில் தந்தை கடிததைக் கொடுத்தார். "என்ன விசயம்னு படிச்சிச் சொல்லு"

கடித உறை ‘பொதுப்பணித்துறை-பெங்களூர்’ என்று அடையாளம் காட்டியது. கடிதத்தைப் படித்துப் பார்த்த நடராசன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

"அம்மா, எனக்கு வேலை கெடைச்சிடுச்சு. அரசாங்க வேலை-பெங்களூர்லே டிரைவர்" தந்தி வாசகம்போல் பேசினான். தாயும் தந்தையும் மகிழ்ச்சியில் பூரித்துப் போனார்கள்.

மறு நாள் காலை கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூருக்குப் புறப்பட்டான் நடராசன். குப்புசாமி மகனின் செலவுக்குக் கை நிறையப் பணம் கொடுத்து அனுப்பினார்.

"ஒடம்ப நல்ல பாத்துக்கடா. வேலை நெரந்தரமாய்ட்டா காலா காலத்துலே ஒனக்குக் கண்ணாலம் பண்ணி வக்கணும். அந்த பகவதி காப்பாத்துவா" பாசமுடன் தாய் வழியனுப்பி வைத்தாள்.

பெங்களூர்! நந்தவன நகரம் என்று அழிக்கப்படும் பெரிய நகரம். எங்கு பார்த்தாலும் மரங்கள். பல்வகையான வண்ணத்தில் மலர்கள். நடராசன் சொக்கிப் போனான்.

"நாளே நீனு டூட்டிகே பா" மறுநாள் பணிக்கு வருமாறு மேலதிகாரி ஆணையிட்டார்.

காலை 10 மணி. நடராசனுக்கு ‘புல்டோசர்’ வண்டியை ஓட்டும் பணி அளிக்கப்பட்டது. குப்புசாமி தன் மகனுக்கு எல்ல விதமான மோட்டார் வாகனங்களையும் ஓட்டக் கற்றுக் கொடுத்து அதற்கு உரிய ஓட்டுனர் உரிமம் வாங்கிக் கொடுத்திருந்ததன் பயனை நடராசன் அன்றுதான் உணர்ந்தான்! எளிதாக புல்டோசரை ஓட்டிச் சென்றான்.

பெங்களூர் சிட்டி மார்க்கெட் தாண்டி சில்வர்ஜூபிலி பார்க்-வெள்ளிவிழாப் பூங்கா. அழகழகான மரங்கள். பூக்கள், காய்கள், கனிகள் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கின! வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சாலையில் பச்சைப் பசேலென்று ஒரு மரம். இளஞ்சிவப்பு மலர்கள் கண்ணைப் பறித்தன; மனத்தை மயக்கின!

"ரோட்லே இடஞ்சலா இருக்ற அந்த மரத்த வேரோட தள்ளணும்பா" மேஸ்திரி எஞ்சினீயரின் ஆணையை நிறைவேற்றுமாறு நடராசனைப் பணித்தார்.

கிருஷ்ணகிரி தோப்பு, பழமரங்கள், மலர்ச்செடிகள், பட்டாம்பூச்சிகள், பாடும் பறவைகள் – நடராசனின் மனக்கண் முன் வட்டமடித்தன. ‘தென்றல், இனிமை, இயற்கை, தெய்வம்’ நடராசனின் உதடுகள் ஏதேதோ உச்சரித்துக் கொண்டிருந்தன.

"ஆமாங்கக்கா, நடராசன் கவர்மெண்டு வேல கெடச்சி பெங்களூர் போய்ருக்கான்" தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு நடராசனின் தாய் போவோர் வருவோரிடமெல்லாம் தன் மகனுக்கு வேலை கிடைத்ததைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தாள்.

திடீரென்று நடராசன் பெட்டி படுக்கையுடன் வந்து நின்றதைக் கண்ட பெற்றோருக்குத் தூக்கி வாரிப் போட்டது. "எனக்கு இந்த வேலை வேண்டாம்" அவன் உதிர்த்த சொற்கள் அவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.!

மறு நாள் மாலையில் அகில இந்திய வானொலியில் செய்தி கேட்டுக் கொண்டிருந்த நடராசனின் முகம் மகிழ்ச்சியில் பூவாய் மலர்ந்தது! காற்றினில் வந்த அந்த கீதம் இதோ!

"பெங்களூர் சில்வர்ஜூபிலி பூங்காவையொட்டி மேம்பாலம் கட்டுவதற்காக எந்த மரங்களையும் வெட்டக்கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது!"

(‘இரண்டாயிரத்தில் எதிர்பாராதது’ என்னும் என் சிறுகதைத் தொகுதியிலிருந்து -டிசம்பர் 1999)

About The Author

3 Comments

  1. ஸ்ரீ

    அருமையான சிறுகதை! அதன் கருவே அதற்கு அழகு சேர்க்கிறது! வாழ்த்துகள் இளங்கண்ணன்!

  2. R.V.Raji

    பாலு ஸார்!
    காற்றினிலே வந்த கீதம்” மிகவும் அருமை. நாமும் இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
    “அண்ணே, அண்ணே! இன்னொரு கதை சொல்லுங்க அண்ணே!”

  3. P.Balakrishnan

    ஷ்ரீ, ராஜி உங்களது பாராட்டுகள் உற்சாகம் அளிக்கின்றன. நன்றி!

Comments are closed.