காவலர் தினம் (2)

இழுஇழுவென்று இழுத்த கவுன்ஸிலிங் ஒரு முடிவுக்கு வர மூணு மணி ஆகிவிட்டது. அங்கே காத்திருந்த மக்களெல்லாம் கான்ட்டீனில் என்னென்னமோ வாங்கித் தின்றார்கள்.
இன்றைக்கு ஒரு புண்ணிய காரியம் பண்ணியிருக்கிறோம் என்கிற இறுமாப்பில் எனக்குப் பசியே தெரியவில்லை.

கவுன்சிலிங் முடிந்து சிரித்த முகத்தோடு வெளியே வந்தவள், ”நா கேட்ட காலேஜ் கெடச்சிருச்சி சார். ஒங்களுக்குத்தான் சார் தாங்ஸ் சொல்லணும்.” என்று கரங்குவித்தாள்.

“ஐயையோ, எவ்வளவு லேட் ஆயிருச்சு சார். என்ன விட்டுட்டு நீங்க போயிருக்கலாமே சார்.”

“இப்படி வார்த்தக்கி வார்த்த சார் போட்டுப் பேசினீங்கன்னா ஸிஸ்டர், இப்படியே விட்டுட்டு நா போயிருவேன்.”

“ஐ”ம் ஸாரி சார். ஐ மீன், ஐ”ம் ஸாரி அண்ணா.” முகம் மலர்ந்து சிரித்தாள்.

கான்ட்டீனில் ஏதாவது சாப்பிடலாமா என்றால், வேண்டாம் அண்ணியும் அப்பாவும் காத்திருப்பார்கள் வீட்டுக்குப் போய்விடலாம் என்றாள்.

வீட்டில், ஊட்டி விடாத குறையாய் உபசரிப்பு எனக்கு. அடிக்கடி வந்து போக வேண்டுமென்றார்கள். குடும்பத்தோடு வரவேண்டும் என்றார்கள். அட்ரஸும் ஃபோன் நம்பரும் வாங்கிக் கொண்டார்கள். அண்ணனுக்கு ஓய்வு கிடைக்கிற போது எல்லோரும் அண்ணா நகருக்கு, என் வீட்டுக்கு வருவதாய்ச் சொன்னார்கள். நீங்க கோடியில ஒருத்தர் என்று சொல்லி என்னை சங்கடப்படுத்தினார்கள்.

அவர்களிடமிருந்து ஒரு வழியாய் விடுபட்டு, ஸ்கூட்டரைக் கிளப்பினேன். இன்றைய நிகழ்ச்சிகளை நம்ம வீட்டுக்காரம்மாவிடம் சொன்னால், புளகாங்கிதத்தில் திக்குமுக்காடிப் போவாள். வீட்டை அடைந்த போது என்னமோ சம்திங் ராங் என்கிற மாதிரி நெருடியது.

ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வரவேற்க வாசலுக்கு வருகிறவள் இன்றைக்கு மிஸ்ஸிங். கதவு திறப்பது தெரிந்தது. திறந்து விட்டு விட்டு, மெல்ல உள்ளே போய்விட்டாள். மூளை முழுக்கப் புதிர்களோடு உள்ளே பிரவேசித்தேன். என்னமோ கோபமாயிருக்கிறாள். பனிக்கட்டி ஆயுதத்தைப் பிரயோகிக்கலாம்.

“டாளிங்!”

“ம்ம்.”

“வீட்ல இன்னிக்கி என்னமோ விசேஷம் போலத் தெரியுதே?”

“விசேஷந்தான், இன்னிக்கி என்ன நாள்?”

“செவ்வாக் கெழம.”

“தேதி?”

“இருவத்தி நாலு. ஏன்?”

“இன்னிக்கி நீங்க ஆஃபீஸ்க்குப் போகலியா?”

“இன்னிக்கி லீவ் போட்ருக்கேன்ல?”

“எதுக்காக சார் லீவ் போட்டீங்க?”

“எதுக். யேய், இன்னிக்கி நம்ம குட்டிப் பயலுக்கு எல்.கே.ஜி. அட்மிஷன்ல? ஐயையோ டைம் என்ன இப்போ?”

“ம்? ஸ்கூல் மூடற டைம். அட்மிஷன்லாம் முடிஞ்சி போச்சு. ஒங்கள நம்பிட்டிருந்தா அம்போதான். எங்க போய்ட்டு இந்நேரத்துக்கு வர்றீங்க. யார் யாரோ செல்ஃபோன் வச்சிருக்காங்க, நீங்க ஒரு செல்ஃபோன் வாங்கிக்கக் கூடாதா? நா இன்னிக்கி எவ்வளவு தவிச்சிப் போய்ட்டேன் தெரியுமா?”

“ஐயையோ, ரொம்ப ரொம்ப ஸாரிம்மா. எப்படி நா மறந்தேன்னே தெரியல. ஆனா, நா இன்னிக்கி ஒரு ரொம்ப நல்ல காரியம் பண்ணிட்டு வந்திருக்கேன், கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவ. அத அப்பறம் சொல்றேன். நீ எப்படி சமாளிச்ச சொல்லு. கோச்சுக்காம சொல்லு.”

“ஒங்களக் கோச்சுக்க முடியுமா, நீங்க என்னோட ப்ரின்ஸ் ச்சாமிங் இல்லியா! இன்னிக்கி நா ஒரு அட்வெஞ்ச்சர் பண்ணியி ருக்கேன் தெரியுமா?”

“நீயுமா?”

“கேட்டா ஆச்சரியப்பட்டுப் போவீங்க.”

“சொல்லு சொல்லு.”

“மூணு மணிக்கி ஸ்கூல்ல இருக்கணும். மணி ஒண்ணாச்சு, ஒண்ணரையாச்சு, ரெண்டாச்சு, ரெண்டரையாச்சு, ரெண்டே முக்காலும் ஆயிருச்சு, நீங்க வரல. சரி இனிமே லேட் பண்ண முடியாதுன்னு, இவனயும் கூட்டிக்கிட்டு, வீட்டப் பூட்டிக்கிட்டு கௌம்பிட்டேன். பஸ்ல போக டைம் இல்ல. அவசரத்துக்கு ஒரு ஆட்டோவும் கெடக்கல. என்னடா செய்யறதுன்னு தடுமாறிட்டு ரோட்ல நிக்கிறேன். அப்ப அந்த வழியா வந்தது ஒரு போலீஸ் ஜீப். வர்றது வரட்டும்னு கைய நீட்டினேன். ஜீப் நின்னுச்சு. விஷயத்தச் சொன்னேன். வண்டி அந்த வழியாப் போனா என்னயும் என் ஸன்னயும் டிராப் பண்ண முடியுமான்னு கேட்டேன். ஏறுங்கன்னாங்க. கரெக்ட்டா மூணு மணிக்கி ஸ்கூலுக்குப் போய்ச் சேந்தாச்சு.”

“ஆச்சர்யமா இருக்கும்மா!”

“ஆச்சர்யம் இன்னும் இருக்கு, கேளுங்க. வேல முடிஞ்சி நாங்க வெளிய வர்றோம், வாசல்ல அதே ஜீப் நிக்கிது. ஏறிக்குங்க ஸிஸ்டர்ன்னார் அந்த இன்ஸ்பெக்டர். வந்து, நம்ம வீட்டுக்கு வாசல்ல எறக்கி விட்டுட்டுப் போனாங்க. ஒங்கக் குட்டிப் பயலுக்கு ஒரு காட்பரீஸ் சாக்லட் வேற! அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப நல்ல டைப்ங்க. நீங்க ஸ்டேஷன்ல போய் அவரக் கட்டாயம் பாருங்க.”

கண்களை மூடியபடி நான் சோஃபாவில் சரிந்திருந்தேன். நானும் என்னவளும் சம்பந்தப்பட்ட இரு வேறு நிகழ்ச்சி களுக்கிடையே இருக்கிற அதிசயமான தொடர்பினை நினைத்துச் சிலிர்த்துச் சரிந்திருந்தேன். உழைக்கிறவனின் வியர்வை உலரும் முன் கூலியைக் கொடு என்று முஹம்மது நபி சொன்னதாய்ப் படித்திருக்கிறேன். ஆனால், வியர்வை சுரக்க ஆரம்பிக்கு முன்பே பல மடங்காய்க் கூலியைக் கொடுக்க எல்லாம் வல்ல அவனால் மட்டுந்தானே முடியும்!

“என்னங்க தூங்கிட்டீங்களா” என்றாள்.

“இல்ல” என்றேன்.

“ஒங்க கதை என்ன, சொல்லுங்க” என்றாள்.

“ரெண்டும் ஒரே கதை தான்” என்றேன்.

(கவிதை உறவு – ஆண்டுமலர், ஜூன் 2006)

About The Author

1 Comment

  1. shree

    அருமையான கதை.. முற்பகல் தர்மம் செய்யின், பிற்பகல் விளைந்துவிட்டது. நல்ல திருப்பங்கள், நல்ல மனிதர்கள்..

    வாழ்த்துகள்!!

Comments are closed.