கி.பி. 2033 (2)

ராத்திரி, டின்னருக்குப் பிறகு சாதனா அவளுடைய அறைக்குள்ளே ஐக்கியமான பின்னால், ஹாலில் எல்.ஸி.டியின் முன்னால் உட்கார்ந்து யாமினி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

"பொம்பளைங்க ஸீரியல் பாத்து அழுவுற, இருபதாம் நூற்றாண்டுல ஆரம்பிச்ச இந்த சோகம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தொடரப் போகுதோ ஆண்டவனே" என்று கிண்டலடித்த ஷிவ்வைக் கண்டு கொள்ளாமல் யாமினி துப்பட்டாவில் கண்ணீரை ஒற்றியெடுத்துக் கொண்டிருந்தாள்.

இந்தக் கிண்டலுக்கெல்லாம் பயந்து கொண்டிருந்தால் வேலைக்காகாது. இப்போதுதான் பெரியம்மா ஆரம்பித்திருக்கிறது. பெரியம்மாவுக்குப் பிறகு பாலங்கள், அப்புறம் அரசன் என்று ராத்திரி பன்னிரெண்டு மணி வரை தொடர்ச்சியாய் வந்து கொண்டிருக்கும். எல்லாவற்றையும் பார்த்துக் கண்ணீரைக் காலி பண்ணி விட்டுத்தான் கண்ணுறங்குவது என்கிற தாய்க்குலத்தின் கொள்கைப் பிடிப்பு நாலு தலைமுறைகளாய்த் தொடர்ந்து கொண் டிருக்கிறது.

ஆனால் இன்றைக்கு, ஸீரியலைவிட முக்கியமான சங்கதியொன்று யாமினியின் மூளையில் மின்னலடிக்கவும், தடாலடியாய் தொலைக்காட்சியை ஆஃப் செய்தாள். ஷிவ் பதறிப் போனான்.

"என்னம்மா, என்ன ஆச்சு ஒனக்கு? ஒடம்பு சரியில்லியா, இல்ல ஸீரியல் சரியில்லியா?"

"ஸீரியல விடுங்க. ஸீரியலவிட ஸீரியஸ்ஸான விஷயம் ஒண்ணு ஒங்ககிட்டப் பேசணும். இன்னிக்கி சாதனாவ நீங்கக் கார்ல கூட்டிக்கிட்டுப் போன போதோ வரும் போதோ ஏதாவது பேசினாளா?"

"நெறய்ய பேசினா. ஏன்?"

"அதில்லிங்க, வந்து, அவளோட லவ்வு மேட்டர் ஏதாவது சொன்னாளா?"

"சொன்னாளே, போகும் போதும் சொன்னா, வரும் போதும் சொன்னா."

"சொன்னாளா, சொன்னாளா, என்ன சொன்னா ஷிவ்?"

"ஐ லவ் யூ டாடீன்னு சொன்னா."

"சீ போங்க. நா அதையா கேட்டேன்."

"வேற எதக் கேட்டியாம்?"

"அவ ஒரு பையன லவ் பண்றாளாம்."

"லவ் பண்ணலன்னாத்தான் ஆச்சர்யம்."

"வந்து, ஷிவ், அது ஒரு முஸ்லிம் பையனாம்."

"ஆஹா, ஒதக்கிதே. நீ ஓக்கே பண்ணிட்டியா?"

"நாம ரெண்டு பேருமே ஓக்கே பண்ணிர வேண்டியதுதான். காலம் கெட்டுக் கெடக்கு. நாம ஓக்கே பண்ணலின்னா அவ ஓடிப் போயிருவா."

"சீச்சீ, அநாவசியக் கற்பனையெல்லாம் பண்ணாத யாமினி, நம்மப் பொண்ணு ஓடியெல்லாம் போக மாட்டா. ஹெலிக்காப்ட்டர்ல போவா."

"கொஞ்சம் ஸீரியஸ்ஸாப் பேசுங்க ஷிவ்."

"சரி பேசுவோம். நம்ம பொண்ணு லவ் பண்றாங்கறது ஓக்கேதான் யாமினி. ஆனா, முஸ்லிம் பையன்ங்கறியே! ஒரு நல்ல ஹிந்துப் பையன் கெடக்யலியாமா அவளுக்கு! ஜாதி என்னன்னாலும் பரவாயில்ல, பையன் ஹிந்துவாயிருந்தா கண்ண மூடிக்கிட்டுக் கட்டி வச்சிர்லாம்."

"முஸ்லிம் பையன்னா இப்ப ஒங்களுக்குக் கசக்குது. ஆனா இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால ஒரு முஸ்லிம் பையனுக்கு நீங்களே ஆசப்பட்டீங்கங்கறத மறந்துட்டீங்க."

"மறக்க முடியுமா யாமினி, எவ்ளோ பெரிய பாவச் செயல்லயிருந்து தப்பிச்சோம் நாம! அந்தப் பாவ மன்னிப்புக்காகத் தானேம்மா இன்னி வரக்யும் தினமும் காலைல காலைல கோவிலுக்குப் போய்ட்டு வர்றேன்."

"எனக்குங்கூட ஒரு ஸெகண்ட் புத்தி பேதலிச்சுப் போச்சே ஷிவ்! ரெண்டு பேரும் சேந்து மனசார நம்ம சாதனாவப் பறி குடுக்கப் பாத்தோமே, நெனச்சிப் பாக்கவே முடியல ஷிவ்!"

யாமினி ஷிவ்வுடைய கையைப் பற்றினாள். அவன் அவளை இழுத்து ஆதரவாய் அணைத்துக் கொண்டான். நினைத்துப் பார்க்கவே முடியாத அந்த நிகழ்ச்சியை ரெண்டு பேரும் கண்களை மூடியபடி நினைத்துப் பார்த்தார்கள். இருவத்தஞ்சு வருஷம் ரிவர்ஸ் கியரில் பயணமானார்கள்.

***

2008-ஆம் வருஷம். ஒரு கோடை காலக் காலை வேளை. பிரசவக் களைப்போடு ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறாள் யாமினி. பிரசவ வார்டில் ஒரு குழப்பம்.

ஒரே நேரத்தில் பிறந்த ரெண்டு குழந்தைகளின் அடையாள அட்டைகள் மாறிவிட்டன. குழப்பத்தின் தீவிரத்தை அதிகப்படுத்துகிற ரெண்டு அம்சங்கள். முதல் அம்சம், ரெண்டு குழந்தைகளில் ஒன்று ஆண் குழந்தை, மற்றது பெண் குழந்தை. ரெண்டாவது அம்சம், ஒரு குழந்தை ஹிந்துத் தாய்க்கும், மற்றது முஸ்லிம் தாய்க்கும் பிறந்தது.

எந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்பதில் கருத்து வேற்றுமைகள். ஆண் குழந்தைக்கு உரிமை கொண்டாட ரெண்டு தம்பதிகள். பெண் குழந்தை, பாவம், அநாதையாய் விடப்பட்டது.

டாக்டர்களிடம் போய் உரிமை கோரி விட்டு வந்த கணவனை நோக்கிக் கண்ணீரோடு கரங்கூப்பினாள் யாமினி.

"இது வேணாம் ஷிவ். என்னோட கொழந்தைய எங்கிட்டக் குடுக்கச் சொல்லுங்க."

"இந்தா, நீ சும்மா இரு" என்று அவளை அடக்கினான் ஷிவ்.

"பேசாம ரெஸ்ட் எடு. இந்த மேட்டர நா பாத்துக்கறேன்."

"இது பாவ காரியங்க."

"அதெல்லாம் எனக்குத் தெரியும்ங்க. நீ ஏதாவது ஒளறி வச்சுக் காரியத்தக் கெடுத்துராத."

"ஒங்களுக்கு நா ஒரு ஆண் கொழந்த பெத்துத் தர்றேன் ஷிவ்."

"அதுக்கென்ன கியாரன்ட்டியா இருக்கு? அடுத்ததும் பொண்ணாப் போச்சின்னா? கைல இருக்கற வெண்ணையை விட்டுட்டு யாரும் நெய்க்கு அலைவாங்களா?"

"அது அடுத்த வீட்டு வெண்ணைங்க."

"இருக்கட்டும். சும்மா கெடச்சா வேண்டாம்ன்னா இருக்கு? இந்தா பார், டிஎன்ஏ டெஸ்ட் பண்ணுவாங்க, நீ கோ ஆப்பரேட் பண்ணனும்."

"டிஎன்ஏ டெஸ்ட்ல உண்மை தெரிஞ்சிருச்சின்னா?"

"தெரிஞ்சா தெரிஞ்சிட்டுப் போகுது, நமக்கென்ன நஷ்டம்? நமக்கு ப்ராப்தம் இருந்தா, ஆண் கொழந்த நமக்குக் கெடைக்கும். கெடச்சா லாபம், கெடக்யாட்டி நஷ்டமில்ல. கடவுள வேண்டிக்க."

பிறகு யாமினி வாயைத் திறக்கவில்லை. மரபணுச் சோதனைக்கு உட்பட்டாள். கடவுளை வேண்டிக் கொண்டாள், தன்னுடைய குழந்தை தனக்கே கிடைக்க வேண்டுமென்று. ப்ரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஷிவ் – யாமினி தம்பதிக்கு சாதனா கிடைத்தாள்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author