குடிமக்கள்

சேப்பாக்கம் ஸ்டேடியம் என்பது க்ரிக்கெட் கொண்டாடுகிற இடம் என்பது தெரியும். ஸ்டேடியமுக்குள்ளே போய் அறியாதவனானாலும், க்ரிக்கெட் பண்டிகை இல்லாத காலங்களில் அந்த வழியாய் மாநகரப் பேருந்தில் போனதுண்டு. அந்த விசாலமான மைதானத்தின் கிழக்கு, வடக்கு எல்லைகளில் அஞ்சு நட்சத்திர க்ளப்கள் ரெண்டு இயங்கி வருவது, அதில் ஒன்றுக்குள் பிரவேசிக்க எனக்கு வாய்ப்புக் கிட்டிய சாயங்காலம் வரை எனக்குத் தெரியவே தெரியாது.

ஒரு க்ளப் தமிழ்நாடு க்ரிக்கெட் குழுமத்துக்கும், மற்றது மெட்ராஸ் க்ரிக்கெட் சங்கத்துக்கும் சொந்தமானதாம். ரெண்டுமே மேட்டுக்குடி சமாச்சாரங்கள் தான். இவை பற்றி முன்னமேயே எனக்குத் தெரியாமற் போனது பெரிய அறியாமை ஒன்றுமில்லை. க்ரிக்கெட் கோட்டி பிடித்து அலைகிற சென்னை வாசிகளிலேயே 99 சதவீதம் பேருக்குத் தெரிந்திராத இந்த விஷயம் க்ரிக்கெட்டில் நாட்டமே இல்லாத இந்தத் திருநெல்வேலிக்கார எழுத்தாளனுக்குத் தெரியமற் போனது தான் நியாயம்.

க்ளார்க் வேலை பார்த்துக் கொண்டு, ஓய்ந்த நேரத்தில் தாமிர பரணிக் கரையில் உட்கார்ந்து கதையெழுதிக் கொண்டி ருந்தவன், கூவம் நதிக்கதையில் வந்து ஸெட்டில் ஆகி வருஷம் பதினஞ்சு ஓடிப்போய்விட்டது. நானும் பிஸினஸ் செய்யப் போகிறேன் என்று மெட்ராஸ்க்கு வந்து சூடு போட்டுக் கொண்ட பிறகு தான் வாழ்க்கை நாறிப் போனது, கூவம் மாதிரி. பேனா பிடிக்கிறவனுக்குத் தராசு பிடிக்க மயிரா தெரியும்!

பிஸினஸை மூடி விட்டு முழு நேர எழுத்தாளனாகியாச்சு. கஷ்ட ஜீவனம். அதனால் தான் தன்னுடைய பிறந்த நாள் விருந்து என்று இந்தத் தொழிலதிபர் அழைத்த போது நாக்கில் நீர் சொட்ட இந்த சேப்பாக்கம் க்ளப்பைக் கண்டு பிடித்து ஆஜராகிவிட்டேனா என்கிற நினைப்பு வருகிறது.

எப்படியும் இவருடைய அழைப்பை நிராகரித்திருக்க முடியாதுதான். கொஞ்சம் இலக்கிய ஆர்வமிருக்கிற பணக்காரர். நம்மோட பரம வாசகர் வேறே. வந்தவர்களெல்லாம் பெரும்பாலும் ஆளுக்கொரு மலர்க் கொத்து வைத்திருந்தார்கள். சிலர் பரிசுகள் கொண்டு வந்திருந்தார்கள், ஜிகினாப் பேப்பரில் சுற்றி.

நானும் ஒண்ணும், ஹ, வெறுங்கையோடு போகவில்லை. உதயக்கண்ணன் பதிப்பித்த என்னோட லேட்டஸ்ட் சிறுகதைத் தொகுதியின் ஒரு பிரதியோடு போனேன். வாழ்த்துரைகள், முகஸ்துதிகள் எல்லாம் முடிந்த பின்னால், ஆண்களெல்லாம் கைகளில் கிண்ணங்களை ஏந்திக் கொண்டார்கள்.

"என்ன வேடிக்க பார்த்துட்டு நிக்கிறீங்க? வாங்க, ரெண்டு ரவுண்டு போடுங்க. போடுவீங்கல்ல?" என்று அழைத்தார், தொழிலதிபர்.

"இல்ல சார் பழக்கமில்ல" என்று புன்னகைத்தேன்.

"ஓ, சரி, அப்ப டின்னர் சாப்ட்ருங்க. நா ஒரு நாலு பெக் போட்டுட்டுத் தான் வருவேன், ஸாரி. நீங்க ஆரம்பிங்க."

நடப்பன, பறப்பன, நீந்துவன எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்துவிட்டு வாச்சைப் பார்த்தபோது பகீரென்றது. மணி ஒம்பதே முக்கால். வங்காள விரிகுடாவுக்கு அருகாமையிலிருக்கிற இந்த ஏரியாவிலிருந்து அண்ணா நகருக்குப் போவதற்கு இந்த ராத்திரிக்குமேல் பஸ் கிடைக்குமா!

ரெண்டு மூணு கோப்பைகளைக் காலி செய்துவிட்டுச் செல்லக் கிறக்கத்திலிருந்த தொழிலதிபரிடம் சொல்லி விட்டுக் கிளம்பி, வாலாஜா ரோடு பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற அரைமணி நேரத்துக்கு அண்ணா நகர் பஸ் எதுவும் வரவேயில்லை.

பரவாயில்லை, அந்தத் திசையில் போகிற எந்த பஸ் வந்தாலும் ஏறி, முடிந்த வரை அண்ணா நகரை சமீபித்து விடுவது என்று அயனாவரம் போகிற பஸ்ஸில் ஏறினேன். புரசைவாக்கத்தில் இறங்கி, ஸெவன் ஸிரிஸ் பஸ்களில் ஒன்றைப் பிடிக்க வேண்டும்.

ரெட்டை டிக்கட் வாங்கிப் புரசைவாக்கத்தில் இறங்கி, புரசை வாக்கம் டாங்க் சாலையில் ஏழு வரிசை பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த போது, அந்த க்ளப்பில் விருந்துக்கு வந்திருந்த கும்பலில், பஸ்ஸுக்குக் காத்திருக்கிற பரிதாப ஜீவன் நான் ஒருவனாய்த்தானிருப்பேன் என்கிற நினைப்பு வந்து மனசு லேசாய்க் கனத்தது. என்னைத் தவிர எல்லோருமே அங்கே லட்சாதிபதிகளாகவோ கோடீஸ்வரன்களாகவோ தான் இருப்பார்கள்.

பெல்ஸ் ரோடு கையேந்திபவன்களில் இட்லியும் மீன்குழம்பும் தின்று விட்டு, பீடி புகைத்தபடி கார்களுக்கருகில் காத்திருப்பார்கள் டிரைவர்கள், தங்கள் எஜமானர்களை பத்திரமாய் வீடு போய்ச் சேர்க்க. எஜமானர்களெல்லாம் மத மதப்பிலிருப்பார்கள். மது மிதப்பில்!

எனக்கு ஞாபகமிருக்கிறது. 1971இல் திருச்சியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் தமிழ்நாட்டில் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. சந்தனப் பொட்டுகள் வைக்கப்பட்டு, பூச்சோடனை செய்யப் பட்ட மண்பானைகள், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் அட்டகாசமாய் அடுக்கப்பட்டுப் பக்கத்துக் கிராமங்களிலிருந்து திருச்சி நகரத்துக்குள்ளே பிரவேசித்ததை மனக்கொதிப்போடு பார்த்து நின்றது ஞாபகமிருக்கிறது.

பானைகளுக்குள்ளே கள், சாராயம். குடியென்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்திருந்த ஒரு தலைமுறை அன்று முதல்தான் பாழ்படுத்தப்பட்டது.

சில வருஷங்கள் கழித்து ஒரு குறுகிய காலத்துக்கு மீண்டும் மதுவிலக்கு அமுலுக்கு வந்த போது, மது விலக்குக்கு முந்தின ராத்திரி எல்லா கள், சாராயக் கடைகளிலும் ஒரே சினிமாப் பாட்டு திரும்பத் திரும்ப இசைத்துக் கொண்டிருந்ததும் நினைவில் பசுமையாயிருக்கிறது.

நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்
இன்னிக்கி ராத்திரிக்கித் தூங்க வேணும்
ஊத்திக்கிறேங் கொஞ்சம்.

அரசாங்க வருமானம் குறைத்து போனதைக் காரணங்காட்டி, மது விலக்கு மறுபடியும் தளர்த்தப்பட்டபோது, குடிப்பதற்குப் பர்மிட் என்றொரு கண்ணாமூச்சி விளையாட்டு அரங்கேற்றப்பட்டது.

திருநெல்வேலியில், நம்ம ஆஃபீஸில், சப் ஸ்டாஃப் முதல் மானேஜர் வரை எல்லாருமே மது அருந்துகிறவர்களாகவே இருந்தார்கள். எல்லாருமே பர்மிட் வைத்திருந்தார்கள். அஸிட்டன்ட் மானேஜராயிருந்த சண்முகம், திருநெல்வேலி ஆல் இண்டியா ரேடியோவில், தென்கச்சி சுவாமிநாதன், பைம்பொழில் நாகூர்மீரான் உள்ளிட்ட நண்பர்களைக் கொண்டிருந்தவர். என்னுடைய சிறுகதை ஒன்றை ரேடியோ நாடகமாய் வடிவமைத்த சண்முகம், அதன் ஒலிப்பதிவுக்கு என்னையும் கூட்டிக் கொண்டு போனார்.

மாடியில் ஒலிப்பதிவு ஸ்டூடியோ, மாடிப்படிகளுக்குக் கீழே பாட்டில். பத்து நிமிஷத்துக்குக் கொருதரம் சண்முகம் கீழே இறங்கி வருவார். அரை கிளாஸ் உள்ளே இறங்கும்.

எனக்கும் அவர் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்ததை விளையாட்டுப் போல வாயில் ஊற்றிக் கொண்டேன். ராத்திரி ஸ்கூட்டரில் வீட்டுக்குப் போனபோது, மேகங்களின் மேலாய் மிதந்து போகிறது மாதிரி இருந்தது.

அப்பாதான் வந்து கதவைத் திறந்தார். மகனை சந்தேகமே படாத அருமையான அப்பா. வாயைத் திறக்கவே திறக்காமல் படியேறி மாடியறைக்குப் போய் நல்ல பிள்ளையாய்ப் படுத்துக் கொண்டேன்.

ஆகையினாலே, நம்ம வாசகத் தொழிலதிபரிடம், பழக்கமில்லையென்று நான் சொன்னது ஒரு சமயோசிதப் பொய்.

இங்கே மெட்ராஸில் கடை வைத்திருந்த காலத்தில் பெரிய கம்பெனிகள் சில, நட்சத்திர ஹோட்டேல்களில், ப்ராடக்ட் லாஞ்ச் என்று விழா வைப்பார்கள். அழைப்பு வரும். விழாவிலே மது பரிமாறப்படும். ஓஸியில் குடிப்பதற்கென்றே வியாபாரிகள் வருகை தருவார்கள். விருந்தளிப்பவர்களின் வற்புறுத்தலுக்காக நானும் ஒரு கிளாஸைக் கையில் வைத்துக் கொள்வேன். மதுவை உறிஞ்சுவது போலப் பாவ்லா பண்ணிவிட்டு, அப்படியே வைத்துவிட்டு சாப்பாட்டுக்கு நகர்ந்து விடுவேன்.

அந்த அற்ப உறிஞ்சலுக்கே அடுத்தடுத்து ஆல்கஹால் ஏப்பங்கள் வந்து அருவறுப்பூட்டும். ஒரு பார்ட்டியில், என்னுடைய இந்த ஏமாற்று வேலையை அவதானித்துக் கொண்டிருந்து கேலி செய்த சிலருக்கு சவால் விடுகிற மாதிரி மூக்கைப் பிடித்துக் கொண்டு மூணு ரவுண்டு முழுங்கி விட்டேன்.

பித்தம் தலைக்கேறிய பிறகுதான் பின் விளைவுகள் புலப்பட ஆரம்பித்தன. பாத்ரூமுக்குப் போக எழுந்தால், கால்கள் பின்னிக் கொண்டு, நடக்கவே இயலவில்லை. சாப்பாட்டுக்குப் போக முடியவில்லை. ஸோஃபா ஒன்றில் சரிந்ததை உணர்ந்தேன்.

கண் விழித்துப் பார்த்தபோது, அறையில் எவருமே இல்லை, ஒரேயொரு வெய்ட்டரைத் தவிர. ரொம்ப வெட்கமாய்ப் போனது. மிடாக்குடியர்களெல்லாம் நான் படுத்துக் கிடக்கிறதைப் பார்த்து ஏளனமாய் நகைத்து விட்டுப் போயிருப்பார்கள். ரொம்ப அற்பமாய் உணர்ந்தேன்.

அந்த அசிங்க ராத்திரிக்குப் பிறகுதான் ஆல்கஹாலை இனி அண்டவே விடுவதில்லையென்கிற சபதமெடுத்தேன். பத்து வருஷத்துக்கு மேலாச்சு.

சரி, இப்போது முக்கால் மணி நேரத்துக்கு மேலாச்சு, ஏழு வகையறா பஸ் எதுவுமே எட்டிப் பார்க்கவில்லை. ரிக்ஷாக்காரன் ஒருவன், போகிற போக்கில் ஒரு பரோபகாரம் பண்ணி விட்டுப் போனான். "இந்த ஸ்டாப்பண்ட பஸ் ஏதும் இப்ப வராது சார். அப்பால எட்டிப் போய் அந்த ஸ்டாப்ல நில்லு. கோயம்பேடு பஸ் வரும்."

ரொம்ப நன்றியப்பா என்று எட்டிப்போய் நின்று, கோயம்பேடு போகிற பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். மறுபடியும் டபுள் டிக்கட்.

அமிஞ்சிக்கரை, அரும்பாக்கம் எல்லாம் தாண்டி, கோயம்பேடு ரவுண்டானாவில் இறங்கி வாச்சைப் பார்த்தபோது மணி பனிரெண்டேகால்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கி நடக்க வேண்டும். ரோகிணி த்யேட்டரைத் தாண்டி ஒரு ஃபர்லாங் நடந்து, வலது பக்கம் எடை மேடையையொட்டி இறங்கினால் பாடிக்குப்பம் ரோடு வந்து விடும்.

அண்ணாநகரின் மேற்கு எல்லை.

தன்னந்தனியாய் நடந்து கொண்டிருந்தவனுக்கு வழித்துணையாய் வந்து சேர்ந்தது, சுவாரஸ்யமானதொரு மலரும் நினைவு. நம்ம கடையில் வாட்ச்மேனாயிருந்த கஜேந்திரன். ராத்திரி ராத்திரி குடித்துவிட்டுப் படுத்திருப்பான்.

"திரும்பத் திரும்ப எதுக்குய்யா குடிக்கப் போற? அங்க தான் எழுதி வச்சிருக்கான்ல குடி குடியைக் கெடுக்கும்னு?" என்று நான் கேட்டதற்கு கஜேந்திரன் சொல்லுவான்,

"அத மட்டுமா சார் எழுதி வச்சிருக்கான்? வேற ஒண்ணும் எழுதி வச்சிருக்கானே சார்?"

"வேற என்னய்யா எழுதி வச்சிருக்கான்?"

"நன்றி மீண்டும் வருக."

ரோடில் ஈ காக்கா இல்லை. எடைமேடையை அடையுமுன்னால் ஒரேயொரு மனித முகத்தைப் பார்த்துவிட வேண்டுமென்று ஆசையாயிருந்தது. என்னைப்போன்ற பாவப்பட்ட எவனாவதொருவன் எதிர்ப்படாமலா போவான்!

எதிர்ப்பட்டான்.

எதிர்த்திசையிலிருந்து, புள்ளியாய்த் தோன்றி நிழலாய் வடிவமெடுத்து ஒருவன் வந்து கொண்டிருந்தான். ஆஹா, என்னைப் போல் ஒருவன்!

ஐயோப்பாவம், நெற்குன்றத்திலிருந்து நடந்து வருகிறவனாயிருக்கும். என்னுடைய அசதியையும் மீறி அவன்மேல் ஒரு பரிவு ஏற்பட்டது. அருகில் அவன் நெருங்கியதும் என்னுடைய பரிவை வார்த்தைகளில் வெளிப்படுத்த வேண்டுமென்கிற பதைப்பு இருந்தது.

அவன் நெருங்கி வந்ததும் சிநேக பூர்வமாய்ப் புன்னகைத்தேன்.

"எங்க, நெற்குன்றம் பக்கமிருந்தா வாறீங்க?"

"ம்? மதுரவாயில்."

அடப்பாவி, நெற்குன்றத்தையும் தாண்டி மதுரவாயிலிலிருந்து வருகிறான். எப்படியும் மூணு மூணரைக் கிலோ மீட்டர் நடந்திருப்பான்.

நான் பரவாயில்லை சாமி!

"சார் நீங்க எங்கயிருந்து வர்றீங்க?" என்று என்னை நோக்கி ஒரு கேள்வியை வைத்தான்.

"கோயம்பேடு டர்ணிங்ல பஸ்ல எறங்கி நடந்து வர்றேங்க. நீங்க எங்க, கோயம்பேட்டுக்கா போறீங்க?" என்று நான் கேட்டதற்கு,

"நா இப்ப எங்க போறேன்னு எனக்கே தெரியாது" என்று ஒரு புதிரை பதிலாய்த் தந்தான்.

தொடர்ந்து, அவனுடைய அடுத்த கேள்வி வந்தது:

"சார், நீங்க வர்ற வழியில ஒயின் ஷாப் ஏதாவது தொறந்திருந்ததுங்களா?"

(வடக்கு வாசல் இலக்கியமலர், செப்டம்பர் 2008)

About The Author