குப்பை (4)

அரையை நோட்டமிட்ட அசாத்தின் கண்ணில் மூக்குக் கண்ணாடியணிந்த ஒரு சீனப் பெண்மணி தன்னைப் போலவே காத்திருப்பது பட்டது. அறையின் மறுபுறமிருந்த சாளரத்தின் வழியாக வேடிக்கை பார்த்தபடியிருந்தார். முகம் சரியாகத் தெரியவில்லை. வேறு சிலரும் வந்திருந்தனர். ஆனால், வந்தவர் ஒருவரும் திரும்பிப் போகவில்லை. காத்திருக்கவே வந்ததை போலக் காத்திருந்தனர் பொறுமையுடன்.

சூலிங் ஒரு நாள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்லிச் சிடுசிடுத்தாள். அவனுக்கு சற்று அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. "நிஜமாவா சொல்ற" – வாய் பிளந்தபடி அதிர்ச்சியில் கேட்டதற்கு, "இதுக்கு எல்லாம் நீதான் காரணம், இப்ப எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா, நம்ம ரெண்டு பேரையுமே கொன்னுடுவாங்க," என்று முழுப் பழியையும் அவன் மீது போட்டாள். அவனை கேவலமாகக் ஏசியது மட்டுமில்லாமல் அடிக்கவும் அடித்தாள்.

சில வாரங்களுக்கு முன் ஒருமுறை செந்தோசாத் தீவிற்கு அவனை நிர்பந்தப்படுத்தி அழைத்துச் சென்றாள். கற்பனையைச் செயல்படுத்த நினைத்தாள் சூலிங். கடற்கரையில் அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வற்புறுத்தியதே அவள் தான். உனக்கு என் மேல் துளியும் அன்பே இல்லை. உனக்கு எஸ்தரைத் தான் பிடிக்குமோ, என்று அபாண்டமாகக் கூறி அவனை வலுக்கட்டாயமாக இணங்க வைத்து வீழ்த்தினாள். அதை மறந்து இப்போது தன் மீது தவறே இல்லையென்பது போலப் போசினாள். கண்மூடித்தனமாகப் புறத்தோற்றத்தை மட்டுமே விரும்பியிருக்கிறாள் என்று அந்தக் கணமே அவனுக்குத் தெரிந்து விட்டது.

விவரம் அறிந்த ரவி முதலில் அதிர்ந்து, விவகாரம் பெரிதென எண்ணி அவர்களிடமிருந்து அஞ்சி விலகிடப் பார்த்தான். இருவரும் சேர்ந்து கெஞ்சியதில் வேறு வழியில்லாமல் உதவ முன் வந்தான்.

அவனுடைய ஆலோசனையின் படி சூலிங் அவளுடைய குருட்டுப் பாட்டியுடன் இருந்து படிக்க அவள் அம்மாவிடம் அடம்பிடித்து அனுமதி வாங்கினாள். பாட்டி வீடு மார்ஸ்லிங் வட்டாரத்தில் இருந்தது.

பாட்டியுடன் இருக்க ஆரம்பித்த சூலிங் எப்படியாவது கருக்கலைப்பு செய்யத் துடித்தாள். யாருக்கும் தெரியாமல் அதைச் செய்வது ஒன்றும் சுலபமாக இருக்கவில்லை. அவளின் தோற்றமும் சோர்வும் மாணவர்க்ளிடையே சந்தேகத்தை வரவழைத்தன. வழக்கம் போல வதந்திகள் உருவாயின.

அவனுக்கு அடிக்கடி அம்மாவிடம் ஏச்சு கிடைத்தது. உண்மையில்லாத முழு வதந்தி என்று சத்தியம் செய்தான் அவன். அம்மாவிற்கு மற்ற மூன்று பிள்ளைகளையும் கவனிக்க அதிக கவனமும் நேரமும் தேவைப்பட்டதில் அவன் பிழைத்தான். மேலும் ரவி அவனுக்காக அம்மாவிடம் சொன்ன சொல் அம்மாவின் வாயை அடைத்தது.

சூலிங்கின் பாட்டிக்குக் கண் தெரியாவிட்டாலும் காது துல்லியமாகவே கேட்டது. வதந்திகள் அவர் காதையும் எட்டின. சூலிங் வெகு சாமர்த்தியமாக அவரைச் சமாளித்தாள். அத்தனையும் பொய் என்று புளுகினாள். அவருக்கு வேண்டிய பிடித்த பொருள்களை வாங்கித் தந்து வதந்திகள் தன் அம்மாவின் காதுக்கு எட்டாமல் பார்த்துக் கொண்டாள். பாட்டியின் மறதியும் சூலிங்கிற்குச் சாதகமாக இருந்தது.

சக மாணவர்களின் பார்வைகளை பொறுக்க முடியாமல் தான் அதிகம் தவித்தாள் அவள். தூரம் அதிகமாய் இருப்பதாக அம்மாவிடம் சொல்லி பாட்டி வீட்டுக்கருகிலேயே உள்ள ஒரு பள்ளிக்கு மாறினாள். ஒன்பது பாடங்கள் படித்துக் கொண்டிருந்த அவளுக்கு அக்கம்பக்கப் பள்ளியொன்றில் எட்டு பாடங்களுடன் உயிரியல் இல்லாத பிரிவு தான் கிடைத்தது.
ஆனால், தினமும் தொலைபேசியிலிலும் நேரிலும் அவனைத் தொல்லைப் படுத்துவதை மட்டும் விடவில்லை. சில நாட்கள் பள்ளிக்குப் போகாமல் கூட அவள் தன்னைத் தேடி தனது பள்ளிக்கு வருவதை அவன் வெறுத்தான்.
அவன் தன் எண்ணத்தைச் சின்னதும், சூலிங் தன் ‘தற்கொலை’க்குக் காரணம் அவன் தானென்று எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொள்வேன் என்று பயமுறுத்தினாள். அதனால், அவள் கூப்பிடும் போது அவள் முன் நிற்க வேண்டியிருந்தது அவனுக்கு. பேசாமல் தானே தற்கொலை செய்து கொள்ளலாமென்று விரக்தியுடன் சிந்தித்தான். துணிவு தான் துளியும் வரவில்லை.

(தொடரும்)

(‘நியாயங்கள் பொதுவானவை‘ மின்னூலிலிருந்து)

To buy the EBook, Please click here

About The Author