கொல்லத்தான் நினைக்கிறேன்

மவுன்ட் ரோடில், துப்பறியும் நிறுவனமொன்று திறந்து மூணு மாசமாகியும் விசேஷமாய் ஒன்றும் சாதிக்கவில்லையே என்று யோசனையாய் இருந்தது. கமிஷனரிலிருந்து கான்ஸ்ட்டபிள் வரைக்கும் அனைத்துப் போலீஸ்காரர்களுக்கும் சலாம் அடித்து வசியப்படுத்தி வைத்திருக்கிறதில் ஒரு பிரயோஜனமுமில்லை. அப்பப்ப டீச் செலவு, சிகரெட் செலவு, பிரியாணிச் செலவு என்றுதான் போய்க் கொண்டிருக்கிறதேயழிய என்னுடைய துப்பறியும் மூளையைச் செலவு செய்யக் காவல்துறையிலிருந்து அழைப்பே இல்லை.

காவல்துறைதான் கண்டுகொள்ளவில்லை என்றால், இந்த சென்னை மாநகரப் பொதுமக்களுக்குக் கடத்தல் விவகாரம், கள்ளக்காதல் விவகாரம் என்று ஒரு பிரச்சனையுமே இல்லாமல் போய்விட்டதா என்ன?

அட்லீஸ்ட் கல்யாணப் பெண்களை, மாப்பிள்ளைகளை மோப்பம் பிடிக்கக்கூட என்னைக் கூப்பிடுகிறார்களில்லை.

மதுபாலா என்கிற அழகான அம்சமான அசத்தலான துப்பறியும் நிபுணியை அஸிஸ்ட்டன்ட்டாய் அமர்த்திக் கொண்டதுதான் நான் கண்ட லாபம். அவளும் இல்லையென்றால் வாழ்க்கை ரொம்ப நொந்து போகும்.

மது கூட இன்னும் வந்து சேரவில்லையே என்று கவலையாயிருந்தபோது கதவு தட்டப்பட்டது. மதுபாலா தானோ? நோ நோ, அவளுக்குக் கதவைத் தட்டி விட்டு நுழைகிற மானர்ஸெல்லாம் கிடையாதே என்று யோசித்தவாறே “ப்ளீஸ் கம் இன்” என்றேன்.

ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாய் ஒருவன் வந்தான். எந்த அழகான பெண்ணையும் கட்சி மாறிவிடச் செய்யக்கூடிய விசேஷமான உருவம். கடவுளே, இவன் இங்கேயிருந்து கிளம்புகிற வரை மது வந்துவிடக் கூடாது.

“மிஸ்டர் பொற்கைப் பாண்டியன்?”
“நாந்தான். வாங்க சார், ஒக்காருங்க.”
“சார், ஒங்ககிட்ட ஒரு உதவிக்கு வந்திருக்கேன்.”
“அட் யுவர் ஸர்வீஸ்.”
“சார், என் பேர் விக்ரம், என் ஒய்•ப் பேர் சாதனா. “
“அழகான பேர். ஐ மீன், ஒங்க பேர்.”
“சட்டுபுட்டுன்னு விஷயத்துக்கு வர்றேன்.”
“வாங்க.”
“சாதனாவுக்கு ஒரு காதலன்.”
“நெனச்சேன்.”
“இப்ப நா எதுக்காக ஒங்ககிட்ட வந்திருக்கேன்னா…”

“தெரியும். அந்தக் காதலன் யார், அவன் எங்க இருக்கான், என்ன செய்யறான், எப்படி ஒங்க கண்ல மண்ணத் தூவிட்டு ரெண்டு பேரும் மீட் பண்றாங்க, மீட் பண்ணி என்ன என்ன பண்றாங்கங்கற வெவரமெல்லாம் நா சேகரிச்சு ஒங்களுக்கு ரிப்போட் தரணும்.”

“ஷிட். இந்த வெவரமெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும்.”
“அப்ப எனக்கு வேலையே கெடையாதா?”
“இருக்கு. அத விடப் பெரிய வேல.”
“?”
“சாதனாவ க்ளோஸ் பண்ணணும்.”

குபுக்கென்று நாற்காலியிலிருந்து எம்பினேன்.
“சாதனாவ?”
“க்ளோஸ். அதாவது கொலை.”

‘அடக் கொலைகாரப்பாவி! என்னைத் துப்பறியும் நிபுணன் என்று நினைத்தாயா, இல்லை தாவூத் இப்ராஹீமோட அடியாள் என்று நினைத்தாயா? ஆள் பஞ்சமா பாதகத்துக்கு அஞ்சாதவனாய் இருப்பான் போல. கவனமாய்க் கையாள வேண்டும்.’

“சார், அவ்வளவு பெரிய வேலயெல்லாம் செஞ்சு எனக்கு அனுபவம் இல்ல. நீங்க வேற பெரிய ஏஜன்ஸியாப் பாருங்க. இப்ப நான் வேறொரு வேலயா வெளியக் கெளம்ப வேண்டியிருக்கு. நீங்க கெளம்புனீங்கன்னா நானும் கெளம்பலாம்.”

சர்வ இளக்காரமாய் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, விக்ரம் வெளியேறினான்.

‘வந்த ஒரு கிராக்கியும் கொலைகாரக் கிராக்கியாகவா வர வேண்டும்!’ வெறுப்பாயிருந்து.

மதுபாலாவுக்கு உடம்பு சவுகரியமில்லை, இன்றைக்கு வரமாட்டாள் என்று •போன் வந்தது. என்ன இழவுக்கு ஆ•பீஸைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். வீட்டில் போய் மிர்ச்சியோ சூரியனோ கேட்டுக் கொண்டு ஜாலியாய்ப் படுத்துக்கிடக்கலாம் என்று பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டேன்.

அடுத்த நாள் காலையில் மது வந்தாள். “ஸாரி பாஸ். நேத்து கெளம்புற நேரத்துல எனக்கு ச்சம் வந்துருச்சு, அதான் வரமுடியல” என்றாள்.

அடிப்பாவி, அச்சம் மடம் நாணம் ஏதுமில்லாமல் பச்சையாய்ச் சொல்கிறாளே என்றிருந்தது. இருந்தாலும், என்னிடத்தில் ஓர் அந்நியோன்னியம் இருக்கப்போய்த்தானே ஒளிவு மறைவில்லாமல் பேசுகிறாள் என்று ஆறுதலாயுமிருந்தது. போடி, உன் அந்நியோன்னியமெல்லாம் வெறும் வாய்ப்பேச்சோடு சரி.

இவளோடு பேசிக் கொண்டாவது இருக்கலாம். நேற்று Radio on demand டில் பங்கு கொண்டதை இவளோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது, கதவில் நாக்கிங்.

‘இன்றைக்கு என்ன கிராக்கியோ’ என்று யோசித்தவாறே கம் இன் என்றேன். வந்தவன், ஷேவ் செய்யாத முகத்தோடும் சோகத்தோடும் வந்தான்.

“சார், எம்பேர் கிஷோர்.”
“கிஷோர் குமார்?”
“நோ. வெறும் கிஷோர். நீங்கதான மிஸ்டர் பொற்கைப் பாண்டியன்?”
“ஆமா. சொல்லுங்க.”
“என்னோட காதலிய ஒரு அயோக்கியன் நேத்து கொல பண்ணிட்டான் சார்.”
‘கொலை! காதல் கொலை!’ எனக்கு வேலை வந்து விட்டது.

எழுந்து, அவனுடைய கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டேன்.

“கவலப்படாதீங்க கிஷோர். அந்த அயோக்கியன் யார்னு கண்டுபிடிச்சு தூக்குல ஏத்திருவோம்.”
“நீங்க கண்டு பிடிக்க வேண்டாம் சார். யார்னு எனக்கேத் தெரியும்.”

சப்பென்று ஆகிவிட்டது.
சோர்ந்து உட்கார்ந்தேன்.
“என் வேலய நீங்களே செஞ்சுட்டீங்க. யார்ங்க அந்தக் கொலகாரன்?”
“என் காதலியோட ஹஸ்பண்ட்.”

(தொடரும்)

About The Author