கோலம்

இக்கடிதம் கொண்டு வரும் விஸ்வநாதன் என் நெருங்கிய சிநேகிதன். நம் வீட்டில் அவனுக்கு சகல வசதிகளும் கிடைக்கும் என்று உத்திரவாதம் தந்திருக்கிறேன். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் அவன் அங்கே தங்கக் கூடும். இரண்டே நாளில் திரும்பினாலும் ஆச்சர்யப் படமாட்டேன். அவன் குணம் அப்படி! ஆனால் அப்படி அவன் திரும்ப நீங்கள் காரணமாகி விடக்கூடாது என்ற கவலையில் இக்கடிதம்.’

மூக்குக் கண்ணாடியை மேலுயர்த்தி பின் வெளிச்சத்தில் படித்தார். எதிரில் விஸ்வம் நின்றான். கொண்டு வந்த ஹோல்டால் கீழே கிடந்தது.

ஒட்டு வீடு. மத்தியில் திறந்த வெளியில் கம்பிப் பின்னல் வழியே ஆகாயம் தெரிந்தது. சில வினாடிகளுக்கு ஒரு தரம் ‘ம்மாஹ்..’ என்ற கொல்லைப் புற பசுவின் குரல்.

வாசனை இன்னதென்று பிரிக்க முடியாமல் கலவையாய் அடித்தது. ஊஹும். மூச்சு முட்டுகிறது. இதுவா கிராமப்புற வீடு? இங்கேயா தங்குவது?

கண்ணாடியை மடித்துக் கீழே வைத்தார். "எதுக்கு லட்டர்லாம். நீங்க சொன்னா போறாதா" என்றார்.

"என்ன எழுதியிருக்கான்னு எனக்குத் தெரியாது. ஒரு வாரம்… எனக்கு ரெஸ்ட் வேணும், வித்தியாசமா ஒரு இடம் சொல்லு. நோ டி.வி.. .நோ ஃபோன்… எதுவும் இல்லாம… ஒரு ப்ளேஸ்னு கேட்டேன்… இந்த லெட்டரையும் உங்க அட்ரஸையும் கொடுத்தான்."

"படிங்க. அதுல ஒண்ணும் ரகசியம் இல்லே" என்றார் கடிதத்தை நீட்டி.

ஏற்கனவே படித்ததுதான். பொய்தான் சொன்னான். படிப்பது போல பாவனை காட்டி விட்டுத் திருப்பிக் கொடுத்தான்.

"வேற உடுப்பு வச்சிருக்கீங்களா…?" என்றார் காதுக்குள் கண்டு விரலைச் செலுத்தி கடகடவென்று ஆட்டியபடி.

‘ஹாரிபிள்…; விஸ்வத்திற்கு அந்தக் காட்சியில் மயிர்க்கூச்செறிந்தது. எவ்வளவு மென்மையான உறுப்பு. இப்படியா இம்சிப்பது?

"கைலி வச்சிருக்கேன்…"

"எம் பேரு நடேசன். கோவில்ல பொறுப்பு வச்சிருந்தேன் முன்னால, இப்ப முடியலை. ஒடம்பு தளர்ந்து போச்சு. எழுபத்தெட்டாறது . பார்த்தா வயசு தெரியாதா…"

"இல்லே. அம்பத்தாஞ்சுன்னு நெனைச்சேன்…"

"சியாமி…இங்கே வா… குடிக்க ஜலம் கொண்டு வா…"

வினோத் முன்பே சொல்லியிருந்தான். ஒரு அப்பா. ஒரு தங்கை. பெயர் சியாமளி. சமையல் நன்றாக இருக்கும்.

‘கல்யாணம் ஆயிருச்சா…’

‘என்ன?’

‘உங்க தங்கைக்கு…"

வினோத் முகம் இருண்டது. பெருமூச்சு விட்டான். தலையாட்டினான்.

‘ஆயிருச்சு. போ. போனாத் தெரியும்,’

சியாமளி கையில் சொம்பும் டம்ளருமாய் வந்தாள். நடேசன் காலடியில் வைத்து நிமிர்ந்த போது பிரதேசம் ஜில்லிட்டு போன மாதிரி பிரமை தட்டியது.

"எம் பொண்ணு. பேரு சியாமளி. ஸார் நம்ம வினோத்தோட சினேகிதர். ஒரு வாரம் இங்கே தங்கப் போறார்…"

சியாமளி அந்த அறிமுகத்திற்கு என்ன மரியாதை வைத்திருந்தாளோ, திரும்பி அவனைப் பார்க்கவே முயற்சிக்கவில்லை.

"காப்பி வேணுமா" என்றார் நடேசன்.

"இப்போ வேணாம். நைட் படுக்கப் போகும்போது அரை வாய்…வேணும். அப்படி ஒரு பழக்கம்…"

"எழு மணிக்கே சாப்பிட்டுரலாம்…"

"சரி. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்" என்றான்.

மறக்காமல் கேமிராவை எடுத்துக்கொண்டான்.

*****

கோவில் சிதிலமுற்று இருந்தது. மதில் சுவர்களில் முளைத்து எழுப்பிய அடர்த்தியான செடிகள். பிரகாரம் சுற்றி வரமுடியாமல் முட்செடிகள். விருட்டென்று குறுக்கே பறந்த வெளவால்கள். புழுக்களாய் வாசனை அடித்த மூலஸ்தானம். பாசி படர்ந்து அடர்ந்திருந்த குளம். கடவுளே! இங்கே என்ன இருக்கிறது… ஒரு வாரத்தைக் கழிக்க.

"என்னை ஃபோட்டா எடுக்கறீகளா?" என்று பின்னாலேயே ஒரு சிறுவன் ஓடி வந்தான்.

எரிந்து விழலாம் என்று நினைத்தவன், கடைசி வினாடியில் மனம் மாறினான்.

ஃபிளாஷ் மின்னியதும் சிறுவனுக்கு உற்சாகம்.

"தேங்க்ஸ்" ஓடிப் போனான்.

ஆறரை மணி என்றது கைக்கடிகாரம். ஒரு பாட்டி இவனக் கடந்து சன்னதிக்குள் போனாள். பின்னாலேயே வேறு சிலரும்!

நின்றான். கோபுர வாசலில் காற்று அடித்து அவனைக் குளுமைப்படுத்தியது.

"ஏண்டி சியாமு… உங்க வீட்டுக்கு யாரோ வந்திருக்காளாமே…" குரல் ஒன்று கீச்சிட திரும்பிப் பார்த்தான்.

மாலை வெய்யில் தணிந்து கொண்டிருந்தது. எதிரே சியாமளியும் இன்னொரு வயதான பெண்மணியும் வந்து கொண்டிருந்தனர்.

"உங்க அண்ணனுக்கு வேண்டியவரா…"

"ஆமா…"

அருகில் வந்ததும்தான் அவனைக் கவனித்திருக்க வேண்டும். எதிரே துல்லியமாய் சுன்னத்து மச்சம் புலப்படுகிற அண்மை. தீர்க்கமான நாசி. பெரிய கண்கள். வட்டமுகம். நெற்றியில் எதோ… நெருடல் இன்னதென்று புலப்பட்டு… அதற்குள் சியாமளி கடந்து போய்விட்டாள்.

வெறும் நெற்றி.

‘போனாத் தெரியும்’ வினோத்தின் குரல் மனசுக்குள் கேட்டது.

டி.வி… ஃபோன்… எதுவும் வேண்டாம். சரி. ஆனால்… இதுவுமா… இத்தனை பழமையா.

"நீங்க வருவீங்கன்னு தெரியாது. ஜீரக ரசம், பருப்புத் தொகையால்தான்" என்றார் நடேசன் ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சியபடி.

"டேஸ்ட்டா இருக்கு…"

"என்ன? "

ரொம்ப நல்லா இருக்கு…"

"வாசல் திண்ணைல படுக்கலாம். பிரமாதமா காத்து வரும். சியாமி…

அவருக்கு ஒரு படுக்கை எடுத்துப் போட்டுரு…"

கை கழுவப் போனப்போது நிலைப்படியில் இடித்து கொண்டான். தடுமாறி விழப் போனான். ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் புலப்பட்டவை மங்கலாய்த் தெரிந்தன.

திரும்பிய போது நடேசன் இல்லை. வாசல் பக்கம் போய்விட்டார் என்று தோன்றியது.

"க்கும்" என்று கனைத்துக் கொண்டான். "கொஞ்சம் வாட்டர் வேணும்"என்றான் உத்தேசமாய் சமையலறைப் பக்கம் பார்த்துக் குரல் கொடுத்து.

விளக்கு ஆடியபடி வந்தது, அழகாய்த் தெரிந்தது.

பிறகுதான் சியாமளி புலப்பட்டாள்.

கையில் சொம்பு. நீர் தளும்பிக் கீழே சிதறியது.

"வந்து… ஒரு நிமிஷம்…" என்றான் படபடப்பாய்.

தெருவில் நடேசன் யாருடனோ இரைத்து பேசுகிற குரல் கேட்டது. உள்ளே வந்துவிட மாட்டார். கிடைத்த கொஞ்ச அவகாசம்.

"வினோத்.. எல்லா சொன்னான்.. இன்பாக்ட் நான் வந்தது உங்க கூடப் பேசி… உங்க மனசு புரிஞ்சிக்கத்தான்…"

வேகமாய், அதே நேரம் புரிகிற தொனியில் பேசிக் கொண்டே போனான்.

"எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. வினோத் ஃபோட்டோ காட்டினான். பார்த்ததும் நீங்கதான்னு முடிவு பண்ணிட்டேன். நேர்ல பேசணும்னு தோணிச்சு. வினோத்துக்கு கூடத் தெரியாது… ‘இப்படி ஆயிருச்சு. ரிமேரேஜ் பண்ணியே தீருவேன்’னு பேசுறான்.. ஹீ ஈஸ் ட்ரையிங்… … திருமண மலர்… வாண்டட் காலம் எல்லாம்…"

நடேசன் சிரிக்கிற குரல் எதிரொலித்து. உள்ளே வந்துவிடாமல் இருக்க வேண்டும்.

சியாமி அசையாமல் நின்றான். விளக்கு வெளிச்சத்தில் எதிர் சுவரில் நிழல் வளர்ந்து ஆடியது.

"உங்க பர்மிஷன் வேணும். ஐ வாண்ட் யூ… என்னோட தேவதை நீங்கதான் ப்ளீஸ்… உங்க பதிலை நேரடியாச் சொல்லணும்னு அவசியம் இல்லே.. எப்படியாவது இருப்பேன்…"

வாசல் நடையில் சத்தம் கேட்டது.

விஸ்வம் விருட்டென்று நகர்ந்து வாசலை நோக்கி நகர, படி தடுக்கி விழப்போனான்.

"பார்த்து… பழைய காலத்து வீடு. எனக்கே சமயத்துல புரிபடாது…" என்றார் நடேசன்.

திரும்பி ஓரக் கண்ணால் பார்த்தான். சியாமளி இல்லை. விளக்கு கீழே வைக்கப்பட்டிருந்தது.

"காப்பி வேணும்னு சொன்னீங்களே…"

"இப்ப வேணாம். அரை மணி ஆகட்டும்…"

வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டான். நடேசனும் ஊர்க் கதைகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். கதவு சப்தித்தது. காப்பியின் வாசனை. சியாமளி.

"கொண்டா… என்னவோ வினோதமா ஒரு பழக்கம்.., ஃபாரின்ல பிளாக் காப்பி குடிப்பான்னு கேள்விப்பட்டிருக்கேன்…"

டம்ளரை நடேசனிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

"படுத்துக்கோங்கோ. என்னை விட்டா ராப்பூரா பேசிட்டிருப்பேன்…"

எழுந்து உள்ளே போனானர். வெறும் டம்ளரை நீட்டியபோது இருட்டில் சியாமளியின் முகம் புலப்படவில்லை.

கண் விழித்தபோது இவன் படுத்திருந்த இடம் தவிர, மீதி நீர் தெளிக்கப்பட்டு… வாசலில் பெரிதாய்க் கோலம். நடுவில் சாணத்தின் மீதி பறங்கிப்பூ.

நடேசன் வாசலில் வந்து நின்றார்.

"நல்லாத் துங்கினேளா, இதென்ன.. புதுசா.. வெல்கம்னு கோலத்துள் எழுதியிருக்கு.." என்றார் குரலில் ஆச்சர்யத்தைக் காட்டி.

கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தான். பொழுது விடிந்திருந்தது.

About The Author

2 Comments

  1. Dr. S. Subramanian

    A crisp and classic story. Kindles nostalgia. My mind races to my childhood days in the village–the riverbed, the rice fields, the temple, the peepul tree by the pond….hmmmmm

  2. Rishi

    கதையாகச் சொல்லாமல், மெஸேஜ் சொல்லாமல் – எதையும் சொல்லிச் சொல்லாமல் – உணர வைக்கிறார் ரிஷபன். நேரில் கிராமத்திற்குச் சென்றுணர்ந்ததைப் போன் ஸ்பரிஷம்.

Comments are closed.