சிவாஜியும் பத்மினியும் (1)

ஐம்பத்தேழு வயசுக் கதாநாயகனை மரியாதை யாய் ‘ர்’ போட்டு எழுதுவதுதான் மரபு. ஆனால் நம்ம முருகையன் மரபையோ மரியாதையையோ பற்றிக் கவலைப்படுகிறவரில்லை. அவருடைய ஆஃபீஸில் பெரும்பாலும் எல்லாருமே அவரை ஒருமையிலேதான் குறிப்பிடுகிறார்கள். நாமும் அப்படியே குறிப்பிடலாம். அவர் தப்பாய் எடுத்துக் கொள்ள மாட்டான்.

சின்ன வயசில் முருகையன் ஒரு பக்கா சினிமாப் பைத்தியம். சிவாஜி பைத்தியம். சிவாஜி கணேசன் படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்தாக வேண்டும். டைட்டிலில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று காட்டுகிற போது விஸிலடித்தாக வேண்டும். படத்தில் முதன் முதலாய் சிவாஜி முகங்காட்டுகிற காட்சியில் கற்பூரம் கொளுத்தியாக வேண்டும். சிவாஜி படத்துக்கு தியேட்டரில் வசூல் குறைகிறபோது, வீட்டில் சாமி உண்டியலிலிருந்து பணம் அம்மாவுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து, பத்துப் பதினஞ்சு டிக்கட் ஒரு சேர வாங்கிக் கிழித்துப் போட வேண்டும்.

இளம் விதவையான அம்மா, வீட்டு வேலைகள் செய்து முருகையனைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பினாள். வெகு ப்ரயத்தனப்பட்டு எட்டாங் கிளாஸை எட்டினான். அதன்பிறகு ஏறவில்லை.
தான் வேலை பார்க்கிற வீட்டில், ஓனரிடம் சொல்லி அம்மா இவனை ஒரு நல்ல கம்ப்பெனியில் வாட்ச்மேன் உத்யோகத்தில் அமர்த்தினாள். ஆள் வாட்டசாட்டமாய் இருந்ததனால் வாட்ச்மேன் வேலை பொருத்தமாயிருந்தது.

அம்மா அவனுக்குக் கல்யாணம் செய்ய நாலு பேரிடம் பேச்சுக் கொடுத்த போது கிராக்கி அலை மோதியது. முருகையனின் விருப்பத்துக்கு விடப்பட்டபோது, கண்களை மூடிக் கொண்டு பத்மினியைத் தேர்ந்தெடுத்தான். பத்மினி என்கிற பெயருக்காகவே தேர்ந்தெடுத்தான். பத்மினியின் கையில் இவனைப் பிடித்துக் கொடுத்துவிட்டு அம்மா கண்களை மூடினாள்.

ரெண்டு பெண் குழந்தைகள், நாலு வருஷ இடைவெளியில். தேவிகா என்றும் சரோஜாதேவி என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தான். ‘ஒங்க இஷ்டங்க’ என்று ஒத்துப்போன பத்மினி, வசதியாய் மூத்தவளை தேவி என்றும் சின்னவளை சரோ என்றும் சுருக்கினாள்.

முருகையனுக்குப் பொறுப்பைப் புகட்ட பத்மினி எடுத்து வந்த முயற்சிகள், ரெண்டாவது பெண் பிறந்த பிறகுதான் பலன் தர ஆரம்பித்தன. வாழ்க்கையை முருகையன் ஸீரியஸ்ஸாய் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான். எதிர்காலத்துக்காக சேமிக்க ஆரம்பித்தான். ரெண்டுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்று தீர்மானமாயிருந்தான். குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தந்து, நாட்டின் நல்ல பிரஜைகளாக்க வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டான்.

கணவன் மனிதனாகிவிட்டான் என்கிற மனநிறைவோடு பத்மினி இவனையும் குழந்தைகளையும் விட்டு விட்டுப் போய்ச் சேர்ந்து விட்டாள். பத்மினி போன பின்னால், முருகையனின் உலகம் குழந்தைகளளவில் சுருங்கிப் போனது. ரெண்டு குழந்தைகளையும் நன்றாய்ப் படிக்க வைத்து இஞ்ஜினியர்களாக்க வேண்டும். பெரீய்ய இடங்களில் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். சேமிக்க வேண்டும். பார்வையை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பக் கூடாது. மறுமணம் செய்து கொள்ளும்படி முருகையனுக்கு வந்த வற்புறுத்தல்கள், அவனுடைய லட்சியப் பிடிவாதத்துக்கு முன்னால் எடுபடவில்லை.

ப்ளஸ் ட்டூவில் தேவி எக்கச்சக்கமாய் மார்க் எடுத்து மூகாம்பிகை இஞ்ஜினியரிங் காலேஜில் இடம் பிடித்து, முதல் வகுப்பில் தேறி, மெட்ராஸில் ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் அமர்ந்து, சக்கரவர்த்தியை அங்கே சந்தித்து, அப்பாவிடம் தன்னுடைய விருப்பத்தைச் சொல்லி, மிஸஸ் சக்கரவர்த்தியாய் சீதம்மா காலனியில் ஒரு நவநாகரீக ஃப்ளாட்டில் வசிக்கப் போய்விட்டாள்.
அக்காவைவிட ஆறு மார்க் அதிகம் வாங்கி, சரோவும் அதே கல்லூரியில் இடம் பிடித்தாள். அவளும் இப்போது ஓர் இஞ்ஜினியர்.

நேற்று சரோவுக்கு ஓர் இன்ட்டர்வ்யூ. காலையில் எழுந்து, டிஃபன் ரெடி பண்ணி, அப்பாவுக்கு லஞ்ச் பாக் செய்து வைத்து விட்டு, குளித்து ரெடியாகி, கடவுளை மனசுக்குள் துதித்துவிட்டு அம்மாவின் படத்தின் முன்னால் ரெண்டு நிமிஷம் மௌனமாய் நின்று, அப்பாவின் காலைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு, ‘இன்ட்டர்வ்யூக்குப் போய்ட்டு வறேம்ப்பா’ என்று கிளம்பின போதுதான் இவளுக்கும் கல்யாண வயசு வந்து விட்டது என்பது முருகையனுக்கு உறைத்தது.

புத்திசாலிப் பொண்ணு, முதல் வகுப்பில் பி.ஈ. தேறியவள். இந்த வேலை இவளுக்குக் கிடைத்து விடும்.
பிறகு இவளுக்கொரு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். தேவிக்கு செய்து வைத்தது போலவே, பெரீய்ய இடத்தில். குழந்தைகள் படிப்புக்கும், தேவி கல்யாணத்துக்கும் சேமிப்பெல்லாம் செலவாகிவிட்டது. சரோ கல்யாணத்துக்கு ஆஃபீஸில் லோன் போடவேண்டும். பழைய மானேஜருக்கு முருகையன் மேல் ஓர் அபிமானம். போனவாரம் அவர் ரிட்டயர் ஆகிவிட்டார். இப்போது ஒரு ‘சின்னப் பையன்’ புது மானேஜர். பாம்பே ஆஃபீஸிலிருந்து மாற்றலாகி ப்ரமோஷனில் வந்திருக்கிறவன். எம்.பி.ஏ., எம்.ஸி.ஏ. என்று என்னென்னமோ படித்திருக்கிறான். சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான்.

அடடே! இவன் கல்யாணம் செய்து கொள்ளாதவனாயிருந்தால், யார் கண்டது, நமக்கே மருமகனாய்க் கூட வந்திருக்கலாம். சரோ மாதிரி ஒரு அழகான இஞ்ஜினியர்ப் பொண்ணைக் கட்டிக் கொள்ளக் கசக்குமா என்ன! சரி, சரோ கல்யாணமாகிப் புருஷன் வீட்டுக்குப் போன பின்னால், இவனுக்கு டிஃபன் செய்து கொடுப்பது யார், லஞ்ச் பாக் பண்ணிக் கொடுப்பது யார், சாயங்காலம் வேலையி லிருந்து திரும்புகிறபோது காஃபி டம்ளரோடு குட் ஈவ்னிங் டாடி என்று செல்லமாய் வரவேற்பது யார்!
வாழ்நாளில் பெரும்பகுதியைக் குழந்தைகளைப் பராமரிப்பதிலேயே செலவழித்தாகிவிட்டது. ஒரு குழந்தை போய் விட்டாள். இன்னொருத்தியும் போன பின்னால், தன்னைப் பராமரிக்கவென்று வீட்டோடு ஒரு பெண் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!

சரோவைக் கட்டிக் கொடுத்த கையோடு, பொருத்தமான ஒரு பெண்ணைப் பார்த்துத் தானும் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையை சௌகர்யப்படுத்திக் கொண்டால் அதிலென்ன தப்பு? ராத்திரி, சாப்பாடு முடிந்த பின்னால் கல்யாண விஷயத்தை மகளிடம் ஆரம்பித்தான். முதலில் அவளுடைய கல்யாண விஷயத்தை. சந்தோஷத்தை முந்திக் கொண்டு சம்பரதாயமான அந்த பதில் வந்தது.

“எனக்கு என்னப்பா இப்ப அவசரம்?”

அவசரம் உனக்கில்லாமல் இருக்கலாம் மகளே, எனக்குத்தான் இப்ப அவசரம். இன்றைக்குக் காலையில் கல்யாண எண்ணம் வந்ததிலிருந்து மனசு துரிதமாய் ஒரு துணையைத் தேடித் தவிக்க ஆரம்பித்து விட்டது.

முருகையன் தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்ல மெல்ல தன்னுடைய சுய திருமணத் திட்டத்தை மகளின் முன்னே வைத்தான்.

“எக்ஸலன்ட் ஐடியா டாடி” என்று சரோ அப்பாவைக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா, எப்பவோ நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கலாம். அக்காவுக்காகவும் எனக்காகவும் ஒங்க சொந்த சந்தோஷங்களைத் தியாகம் பண்ணிட்டீங்களே அப்பா” என்று சொல்கிறபோது சரோவின் குரல் உடைந்தது.

இன்றைக்குக் காலையில் ஆஃபீஸுக்குக் கிளம்புகிறபோது ரொம்ப ரொம்ப உற்சாகமாய் இருந்தது. அந்த உற்சாகத்தைச் சிதைக்கப் போகிற சம்பவம் சிறிது நேரத்தில் நடக்கவிருப்பது முருகையனுக்குத் தெரிந்திருக்கக் காரணம் இல்லை.

(மீதி அடுத்த இதழில்)

About The Author

1 Comment

Comments are closed.