தருணம் (14)

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட முகூர்த்த வேளைகளாக, மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாகத் தழும்புகளாகவோ நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் யானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மகத்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

வாரிக்குழி

–ஜெயமோகன்

சையது அன்வர் ஹுசைன் காட்டின் நடுவே விரிந்த சேற்றுப் பரப்பின் மையத்தில் தேங்கியிருந்த குட்டையை நெருங்கியதும் நின்றான். இடுப்பிலிருந்த கலவறை பெல்ட்டிலிருந்து பொடி டப்பியை எடுத்து ஒருமுறை தீவிரமாகப் பொடி போட்டுக்கொண்டு, புறங்கையால் மூக்கைக் கசக்கினான். சேற்றுப் பரப்பு நீர் மட்டமாக இருந்தது. கரையோரம் கம்யூனிஸ்டுப் பச்சை அடர்ந்திருந்தது. கால் புதையும் சதுப்பு. மெல்ல நடந்தபடி சேற்றுப் பரப்பை உற்றுப் பார்த்தான். பல்வேறு காலடித்தடங்கள். மிளாத்தடங்கள்தான் அதிகம். சில மான்தடங்கள். ஒரேயொரு கடுவாத்தடம் கிழக்காக ஏறிச் சென்றது.

சையது உண்ணிலட்சுமியின் பாதத்தடத்தை அடையாளம் கண்டான். மூன்று தடவைக்கு மேல் யானை வந்து நீர் அருந்தி விட்டுச் சென்றிருக்கிறது. பிண்டங்கள் கிடந்தன. மிகவும் புதிய பிண்டத்திற்கு ஓர் இரவுப் பழக்கம் இருக்கும். தழைவீச்சம் இருந்தது. அதனருகேயிருந்து மேலேறும் பாதத் தடத்தைப் பின்தொடர ஆரம்பித்தான். அது சதுப்புப் புதர்களைக் கடந்து கிளைகள் பின்னி அடர்ந்த தவிட்டை மரப் புதர்களின் இடையே தெரிந்த இடைவெளி வழியாக ஊடுருவிச் சென்றது. காடு, மரங்கள் கனத்து, இருட்ட ஆரம்பித்தது. கருங்குரங்குக் கூட்டம் ஒன்று தலைக்கு மேல் ‘பப் பப் பப்’ என்று ஒலியெழுப்பி உரையாடியபடி இருந்தது. உக்கிலுக்கள் சில புதர்களுக்குள்ளிருந்து எழுந்து பறந்தன. பாதத்தடம் தெரியாமலாயிற்று. புதர்கள் விலகியும், இலைகளும் தண்டுகளும் ஒடிந்தும் யானை போன வழி தெரிந்தது. பிறகு மண் சற்று மேலேறியது. நிறைய கரும்பாறைகள் பச்சைப் படப்புக்கு மேலே யானை முதுகுபோலத் தெரிய ஆரம்பித்தன. அப்பால் ஒரு பெரிய பாறை கோட்டைபோல எழுந்தது. பாறைகளின் ஊடே மூங்கில் புதர்கள் அடர்ந்திருந்தன. முள்ளில்லாத ஓலை முளைகள். எனவே குச்சிகளை விலக்கி முன்னேற முடிந்தது. ஒரு கணம் சலிப்பாக இருந்தது. இதற்குமுன் மூன்று முறை யானையைக் காட்டடிக்கு விட்டிருக்கிறான். ஒருமுறை தேடிக் கண்டுபிடிப்பதற்குள் உயிரே போய்விட்டது. அதிலிருந்து காட்டடி என்றால் அவனுக்குப் பெரு விரலிலிருந்து கோபம் ஏறும். ஆனால் வேறு வழியில்லை. உண்ணிலட்சுமி நாளுக்கு நாள் மெலிந்தபடியே வந்தாள். ஓடைக்கல் வைத்தியரின் கஷாயமும், களிம்புருண்டையும், சோற்றூட்டும் ஒன்றும் பலிக்கவில்லை. தடி பிடிக்க முடியாமல் ஆனபோது முதலாளி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்; காட்டடிக்குப் பிறகும் அது தேறவில்லையென்றால் விற்றுத் தொலைத்துவிடப் போவதாக. காட்டடிக்கு யானையைவிட்டு மாதம் ஒன்றாகிறது. நோயில்லாத யானையென்றால் இதற்குள் எலும்பு புடைத்துத் தெரியாமல் உருண்டையாக ஆகிவிட்டிருக்கும். காட்டுத் தீனி என்றால் யானைக்கு அமுது. உண்ணிலட்சுமி எப்படி இருக்கும் என்று பார்க்க சையதுக்கு திடீரென்று ஆசை ஏற்பட்டது. கூடவே, அதன் உடல் தேறவில்லை என்றால் என்ன ஆகும் என்ற பயமும் எழுந்தது.
குட்டிப் பாறையொன்றின் மீது ஏறி நின்ற சையது செவிகூர்ந்தான். யானையின் மணியோசை கேட்கவில்லை. "உண்ணிலெச்மீ, எக்க, ஹூறீ"1 என்று கூவினான். "ஆனெ த்தெ த்தெ" என்றான். பதிலுக்கு உறுமல் எழவில்லை. சற்றுத் தள்ளி இன்னொரு பாறை மீது ஏறி நின்று மறுபடியும் குரல் கொடுத்தான். மூங்கில் கூட்டங்களில் யானை இல்லை. அவனுக்குப் பீதி ஏற்பட்டது. மறுகணம் அந்தப் பீதிக்கு அர்த்தமில்லை என்று தோன்றியது. கழுத்தில் மணி கட்டப்பட்ட யானை எங்கும் போகமுடியாது. எங்கும் அதைத் தொடரும் அந்த மணியோசை திரும்ப வேண்டிய இடத்தை அதற்கு நினைவூட்டியேதான் இருக்கும். காட்டுடன் அது ஒருபோதும் இணங்க முடியாது.

சையது பெரிய பாறை மீது ஏறி நின்றான். நான்கு பக்கமும் கூர்ந்து பார்த்தான். அப்பகுதியில் வேறு யானைகளின் நடமாட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. மூங்கில்கள் நிறைய சிதைக்கப்பட்டு, உண்ணப்பட்டிருந்தன. உண்ணிதான் அது. ஆனால் இபிலீஸ்2 எங்கே ஒழிந்தது? சையது பாறையின் மறுபக்கம் சரிந்து இறங்கினான். மீண்டும் குரல் கொடுத்தான். பதில் இல்லை.
காட்டில் மணியோசைக்காகச் செவிகூர்ந்தபடி நடக்கையில் சட்டென்று அவன் நாசிக்கு உண்ணிலட்சுமியின் வாசனை எட்டியது. கூர்ந்தபடி சென்றான். பாறையொன்றின் அருகே நிறைய பிண்டங்கள் குவிந்து கிடந்தன. மண் மிதிபட்டிருந்தது. உண்ணிலெட்சுமி தூங்கும் இடம்போலும் அது. அருகே சென்று குத்துக்கம்பால் பிண்டங்களைக் கிண்டிப் பார்த்தான். ஓர் இரவு பழையவை. சட்டென்று உலோகம் தட்டுப்பட்டு ஒலித்தது. துரட்டியால் எடுத்தான். உண்ணிலெட்சுமியின் மணி.

சையது "யா ரஹ்மான்" என்று சற்றுப் பதைத்துவிட்டான். மணி இல்லாமல் யானை எங்கு போயிருக்கக்கூடும்? அதைப் பின்தொடர்ந்து போவது உசிதமான காரியமா? அவனுக்குப் புரியவில்லை. தலையைச் சொறிந்தபடி நின்றான். இன்னொரு தரம் பொடி போட்டபோது மூளை சற்றுத் தெளிவு பெற்றது. துரட்டியும் குத்துக் கம்பும் இருக்க அஞ்ச வேண்டியதில்லை. உண்ணிலட்சுமி பதினாறு வருடங்களாக அவன் கைபட்டு வளர்ந்தவள். அவன் துரட்டியைத் தரையில் தட்டினால் அவள் பின்னங்கால் நடுங்க ஆரம்பிக்கும். சையது "ரசூலே நீதான் தொணை" என்றான். முண்டாசை அவிழ்த்து முகத்தைத் துடைத்துவிட்டு மறுபடி கட்டிக்கொண்டான். பாதத்தடங்களைப் பின்பற்றிச் சென்றான்.

காடு இறங்கியது. இறங்கும்தோறும் சதுப்பாகியது. மரங்களின் மூர்க்கமிக்க தோற்றமும், கொடிகளின் நரம்புகள் அவற்றில் இறுகிப் புடைத்திருப்பதும் அச்சமூட்டியது. சையது உரத்த குரலில், "உண்ணீ, ஏய் பலாலே3, சைத்தானே” என்று கத்தினான். மீண்டும் மீண்டும் கூவியபோதும் மறுகுரல் எழவில்லை. காட்டின் மௌனமான ஓங்காரம் அவனை அச்சுறுத்த ஆரம்பித்தது. எங்கோ ஒரு நீரோடை விழும் ஒலி, இலைகள் காற்றில் சலசலக்கும் ஒலி, சீவிடின் ரீங்காரம், பல்வேறு பறவைக் குரல்கள் ஆகியவை கலந்து உருவான அழுத்தமான இரைச்சல் காதை இறுக்கி, மௌனத்தை உணர வைத்தது. களைப்பாக இருந்தது. காடு மேலும் மேலும் இருட்டாகியது. அவன் தயங்கி நின்றான். இனி உள்ளே போகவேண்டாம் என்று புறங் கழுத்தருகே எவரோ கூறுவது போலிருந்தது. ஆனால் போகாவிட்டால் உண்ணிலட்சுமியை எப்படிக் கண்டுபிடிப்பது?

–இந்தத் தருணத்தின் தொடர்ச்சி அடுத்த இதழில்…
________________________________________

1. தேவதை
2. சைத்தான்
3. பிசாசு

About The Author