தாயத்து (2)

<<<<சென்ற வாரம்

என்னால் ஊகிக்க முடிந்தது. அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.

"இந்தப் பக்கத்தில் காத்து கறுப்பு கொஞ்சம் அதிகம். நாங்கள்லாம் எங்க குழந்தைங்களுக்கு எங்க ஈத்காவுல காட்டி தாயத்து வாங்கிக் கட்டி விடுவோம். அப்போ தான் ராத்திரில நிம்மதியா தூங்கும். அவ்ரித் இப்படி ராத்திரில்லாம் கத்திட்டிருக்கறதைப் பத்தி எங்க மௌலானா கிட்ட சொன்னோம். அவர் கூட்டிட்டு வரச் சொன்னார். உங்களுக்கு நம்பிக்கை இருந்தா வாங்களேன். குழந்தைக்கு தாயத்து வாங்கி கழுத்தில மாட்டி விட்டுடலாம். அது அவனுக்குப் பாதுகாப்பா இருக்கும்னு சொன்னாங்க அவங்க கிட்ட அவங்க அக்கறைக்கு நன்றி சொல்லிட்டு மென்மையா மறுத்திட்டோம். ஆனா என்னால தாங்க முடியலைடா. ஜோதி மூணு நாள் ராத்திரி அழுதிட்டிருந்தா. எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயம் தான் என்றாலும் ஆவேசக் கணங்களில் அவ்ரித்தை நானும் ஜோதியும் சேர்ந்தே கைகால்களை அமுக்கிக் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது கொஞ்சம் பயமாவே இருக்கு. என்னோட சந்தேகம் எல்லாம் வேற. ஜோதியோட குடும்பத்துல சில சைக்கியாட்ரிக் கேஸஸ் இருந்திருக்காம். இவனுக்கும் அந்த மாதிரி ஏதாவது. . . ." அதற்கு மேல் பேச முடியாமல் ஜெயமோகனுக்குத் தொண்டை அடைத்தது.

"போதும். மேற்கொண்டு ஏதும் சொல்ல வேண்டாம். நான் வீட்டில் தானே இன்றும் நாளையும் இருக்கப் போறேன். பர்சனலாவே அப்சர்வ் பண்ணிக்கறேன். நாளை என்ன பண்ணலாம்னு சொல்றேன். இப்போ ஏதும் முடிவுக்கு வர வேணாம்னு நினைக்கிறேன். உன் மூடு சரியாயிடுச்சுன்னா பக்கோடா சாப்பிடலாமா?" என்று நிலைமையை சகஜமாக்கினேன்.

சிவசாகர் நகரின் எல்லையைத் தொடும் முன்பே தூரத்தில் கோபுரம் தெரிந்தது.

"கோயிலா?" என்று கேட்டேன்.

"இந்த ஊரின் முக்கிய சிவன் கோயில். அதன் அருகில் ஒரு குளம் இருக்கு. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாதிரி ரொம்பப் பெரியது. சாயங்காலம் போகலாம்" என்றான்.

"வாங்கண்ணா" என்று வரவேற்ற ஜோதியின் முகத்திலும் கொஞ்சம் நகக் கீறல்கள் தெரிந்தன. அவ்ரித் அம்மாவின் இடுப்பில் அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டு என்னைப் பார்ப்பதையே தவிர்த்தான்.

"என்ன சிஸ்டர், அந்தா இந்தான்னு அஸ்ஸாம்ல இரண்டு வருஷம் ஓட்டிட்டீங்க போலிருக்கே"

"ஆமாங்கண்ணா, கைக்குழந்தையா இவனைத் தூக்கிட்டு வந்தப்போ பயம்மாத் தான் இருந்துது, இவனை பாஷை தெரியாத ஊர்ல எப்படி யார் துணையும் இல்லாமல் வளர்க்கப் போறோம்னு. ஆனா எந்த சமயத்துலயும் இவன் சம்பந்தமான எல்லாப் பிரச்னைக்கும் ஃபோன்லயே தைரியமும் மருந்தும் சொல்லி எங்களுக்குக் குழந்தை வளர்க்கற கஷ்டமே தெரியாமல் பார்த்துக்கிட்டிங்களே, உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டிருக்கோம்ணா"

"ஈஸி, ஈஸி" என்றேன்.

"இரண்டு வருஷமாச்சுன்னு தான் பேரு, நிறைய இடங்கள் எல்லாம் சுற்ற முடியலைண்ணா. செக்யூரிட்டி பிரச்னைன்னு எங்கேயும் போக முடியறதில்லை. அதும் போன ஒரு வருஷமா நிலைமை மோசமாயிருக்குன்னு வேற சொல்றாங்க. அப்படியும் நாலஞ்சு இடம் போனோம்."

ஃபோட்டோ ஆல்பம் காட்ட முயன்றாள்

"இவன் சின்ன வயசில் இருந்து படிப்படியா எப்படி வளர்ந்தான்னு நிறைய வீடியோ எடுத்து வச்சிருக்கோம்ணா" என்று அந்த வீடியோக்களைக் காட்ட முயன்றாள்.

எதையும் செய்ய விடவில்லை அவ்ரித்.

"பாருங்கண்ணா ஒண்ணையும் காட்ட விட மாட்டேங்கறான்" என்று அவள் சிணுங்க, "பரவாயில்லை. வாரம் தவறாமல் ஈமெயில்ல இவனோட புகைப்படங்கள் வந்து கிட்டேதானே இருக்கு நீங்களும் ஜெயமோகனும் அனுப்பறது. இவனுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் அணு அணுவா பார்த்திட்டுத்தானே இருக்கேன்" என்று சமாதானம் சொன்னேன்.

தொலைக்காட்சியில் போகோ சேனல் தவிர வேறு சேனல் மாற்ற அனுமதிக்கவில்லை அவன். "என்னடா நாங்கல்லாம் வேற சேனலே பார்க்கக் கூடாதா?" என்று உரத்த குரலில் ஜோதி சொன்னபோது அவள் மீது பாய்ந்து அடிக்க ஆரம்பித்தான்.

"இதோபாரு, இப்படில்லாம் பண்ணினேன்னா இந்த மாமா கிட்ட சொல்லி ஊசி போட்டு விட்டுருவேன்" என்று அவள் மிரட்ட அடி பலமாகியது. அவளுடைய முடியைப் பிடித்து உலுக்கி அவள் அவனுடைய கைகளைக் கட்டுப்படுத்த முயன்றால் கடிக்க ஆரம்பித்து வாயில் சுண்டி விட முயன்றால் தலையை வைத்து முட்டி அவளால் அவனைச் சமாளிக்க முடியாத அளவுக்கு வேகம் காட்டினான்.

‘நான் சொன்னேனில்லையா?’ என்பது போல் என்னைப் பார்த்தான் ஜெயமோஹன்.

நான் அமைதியாக, "அவ்ரித் பலூன் விடலாமா?" என்று கேட்டதும் சட்டென்று கவனம் மாறி கண்களில் ஒளி கிளம்ப "பவூன் பவூன்" என்று கண்களில் ஒளி படர மழலைக் குரலில் சொன்னபடியே ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டான்.

இரண்டு நாட்கள் ஓடியதே தெரியவில்லை.

மாலை ரயில்வே ஸ்டேஷனுக்குக் கிளம்புகிற நேரத்தில் அவ்ரித் தூங்கிக் கொண்டிருந்தான். நாங்கள் பேசிக் கொள்ள முடிந்தது.

"ஜெயமோகன், என்னுடைய அப்சர்வேஷன் படி அவ்ரித் முழுக்க முழுக்க நார்மலாத்தான் இருக்கான். புது இடம் புது மனிதர்கள். ஆளுக்கு ஒருமாதிரி பாஷை பேசுகிறார்கள். இந்தச் சூழலில் அவனுக்குப் பேச்சு வருவது தாமதமாவது சாத்தியமே. இப்போதெல்லாம் ஆண்குழந்தைகள் மெதுவாகத் தான் பேச ஆரம்பிக்கின்றனர் என்பது அகில இந்திய அளவில் குழந்தை நல மருத்துவர்களின் கருத்தரங்குகளில் விவாதிக்கப்படுகின்ற விஷயம் ஆகி விட்டது. எனவே அது ஒரு மேட்டரே அல்ல. இரண்டாவது நான் பார்த்த படியும் சிஸ்டர் சொன்னபடியும் இவன் இப்படி மாலையின் பிற்பகுதியில் தூங்கி ஏழு மணிக்கு எழுகிறான். ராத்திரி ஒரு மணிக்கு முன்னால் எப்படி தூக்கம் வரும்? அவனுடைய தூக்க பேட்டர்னை முயற்சித்து மாற்ற வேண்டும். மாலை ஐந்து மணிக்கு மேல் தூங்காமல் பார்த்துக் கொண்டால் இரவு பத்து பதினொரு மணிக்குள் தூங்க ஆரம்பிப்பான். ஒற்றைக் குழந்தை, பெற்றோரின் முழுக் கவனத்தோடும் வளரும் குழந்தைக்கு, தான் நினைத்தது நடக்கிறது என்கிற செய்தி முதலில் பதிந்து விட்டிருக்கும்.அதன் தொடர்ச்சிதான். அதில் தடை ஏற்படும் போது வரும் கோபமும் ஆவேசமும். இதுவும் சாதாரண விஷயமே. குழந்தையின் கோபத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது தான் அவனுடைய கேரக்டரைத் தீர்மானிக்கும். அவனுடைய கோபத்துக்குக் கொஞ்சமும் மதிப்பு கொடுக்காதீர்கள். அடிக்கவே அடிக்காதீர்கள். அடிப்பதனால் ஏற்படும் குற்ற உணர்வும், அவனுடைய அழுகை பார்த்து ஏற்படுகின்ற பாச உணர்வும் உங்களை அவனுடைய விருப்பத்திற்குப் பணிய வைப்பதோடு, அவன் மனதில் இன்னும் அரகன்ஸை வளர்க்கும். பாசம் என்கிற பெயரில் தம்மையும் அறியாமல் பெற்றோர் பிள்ளைகளைக் கெடுப்பது இப்படித்தான். கோபப்பட்டு எதையும் சாதிக்க முடியாது போலிருக்கிறதே என்கிற செய்தியை அவனுடைய எண்ணத்தில் பதிய வைக்கும் வண்ணம் உங்கள் செயல்கள் அமைய வேண்டும். பொறுமை அவசியம். ஒரு குழந்தை தானே அவனுடைய நல்ல விதமான எதிர்காலத்திற்காகப் பொறுமை கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் என்ன பெற்றோர்? அவனிடம் நிறையப் பேசுங்கள். அவன் கேட்காத மாதிரி தோன்றும். அவனுக்கு எங்கே புரியப் போகிறது என்றும் தோன்றும். இரண்டும் தவறு. இரண்டரை வயதுக்கு மேல் எல்லாமே புரியும். எல்லாமே பதியும். அடுத்த ஓரிரண்டு வருடங்கள் தான் அவன் நடப்புகளைத் தன் கோணத்தில் புரிந்து எண்ணத்தில் முடிவுகளை ஏற்படுத்திக் கொள்ள இருக்கும் தருணம். எனவே அவனுக்குப் பொறுப்பு வருவது போல் பேசுங்கள். அவன் செய்கிற நல்ல காரியங்களைக் கைதட்டிப் பாராட்டிக் குஷிப் படுத்துங்கள். பக்கத்தில் PLAY SCHOOL இருந்தால் அதற்கு அனுப்புங்கள். மற்ற குழந்தைகளுடன் பழக ஆரம்பித்தால் அவனுடைய கவனம் இன்னும் நிறைய திசைகளுக்குத் திரும்ப ஆரம்பிக்கும். ஆடி வந்த களைப்பில் மதிய உணவுக்குப்பிறகு நன்கு தூங்குவான். கவலைப்பட ஒன்றுமே இல்லை. சொல்லிக் கொடுக்கும் வார்த்தைகளைச் சொல்ல முயற்சிப்பதைப் பார்த்தேன். தான் நினைப்பதை நமக்குப் புரிய வைக்க அவன் எடுக்கும் சிரத்தைகளையும் பார்த்தேன். நான் பார்த்த ஜெயமோகனின் அறிவுக்கு இவன் கூடுதல் புத்திசாலிப் பிள்ளைதான். அநேகமாக மேடம் பரம்பரையின் ஜீனாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்று விடைபெற்றேன்.

சென்னைக்குத் திரும்பி வந்து ஓரிரு வாரங்களுக்குப் பிறகான ஜெயமோகனின் தொலைபேசி அழைப்புகளில் அவ்ரித் பற்றிய குறைபாடுகள் குறைந்திருந்தன. ‘இப்போதெல்லாம் ரொம்ப மெச்சூர்டாகவே நடந்துக்கறான். சரியான நேரத்துல என் குழப்பங்களைத் தீர்த்து வச்ச, ரொம்ப தேங்க்ஸ், நீ சொன்ன மாதிரியே அவனை இங்கே பக்கத்தில் ஒரு PLAY SCHOOL-ல போட்டுட்டேன். அவனுடைய கவனமும் நிறைய மற்ற விஷயங்களில் திரும்புவதை உணர முடிகிறது’ என்றெல்லாம் உணர்ச்சி பொங்க அவ்வப்போது பேசினான். ஈமெயில்கள் அனுப்பினான். அவ்ரித் பள்ளிச் சீருடையில் இருப்பது போன்ற தோரணையில் ஒரு புகைப்படம் அனுப்பி இருந்தான். அதில் மேல்பட்டன் கழன்றிருந்ததால் சற்றே விலகி இருந்த சட்டையின் வழியே உள்ளே தெரிந்தது ஒரு கறுப்புக் கயிறும் அதில் தொங்கிய வெள்ளி தாயத்தும்.

***

About The Author

Momizat Team specialize in designing WordPress themes ... Momizat Team specialize in designing WordPress themes

1 Comment

  1. வடிவேலன் ஆர்.

    நிலா சாரல் ஆசிரியர் அவர்களுக்கு பெ. நாயகி அவர்கள் எழுதிய தாயத்து என்ற கதை மிகவும் அருமை தொடர்ந்து எழுது சொல்லுங்கள் வாழ்த்துக்கள்

Comments are closed.