துக்கம்

அப்பா வாசலில் தயாராக இருந்தார். நான் வீட்டினுள் துண்டைத் தேடிக்கொண்டிருந்தேன்.

"நீ கிளம்பலையா இன்னும்…?"

"இதோ வந்துட்டேன்."

வாசலுக்கு அவசரமாகப் போனேன்.

"எப்போ எடுப்பாங்களாம்..?"

ரொம்ப வேண்டிய மனிதர் ஒருவர் தவறிப் போய்விட்டார். இன்று காலையில் தான் தெரிந்தது. இப்போதே நேரம் ஆகிவிட்டது.

"ம். எப்படியும் ரெண்டு….மூணு மணி ஆகும்."

"நல்ல வேளை….ஞாயித்துக் கிழமையாப் போனார்…"

"சும்மா தலையைக் காட்டிட்டுத் திரும்பிடலாம்."

நடந்தோம். நான்கூட அவசியம் இல்லைதான். ஆனாலும், அப்படியும் சொல்ல முடியாது. போனவர் – இருந்த காலத்தில் எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

பண உதவி செய்வது எப்போதும் எல்லோராலும் இயலாது. இடிந்து விழுகிற மனசை வார்த்தைகளால் நிமிர்த்துவதும், தைரியம் சொல்லித் தேற்றுவதும் ஒருகலை. அது செத்துப் போனவருக்கு நிறைய வாய்த்திருந்தது.

பானு கல்யாணத்தை நிச்சயம் செய்தபோது அப்பா எதிர்பார்த்த பணம் கைக்கு வரவில்லை. இன்னும் இரண்டு நாளில் முகூர்த்தம். அப்பா தடுமாறிப் போய்விட்டார். நானும் அப்போது வேலையில் சேராத நேரம்.

"என்னடா ரெங்கா…ஏன் இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே..?"

எப்படித் தெரிந்ததோ, ஆபத்பாந்தவன்போல் வந்துவிட்டார்.

"எனக்கு ஒண்ணுமே புரியலே…"

"போடா முட்டாள்! ஒண்ணுமில்லாத விஷயத்தைப் பொ¢சாக்கிக்கிட்டு. எழுத்திரு, வா என்கூட சட்டையைப் போட்டுக்க"

போனார்கள். என்ன நிகழ்ந்ததோ, திருமணம் மட்டும் நல்லபடியாக நடந்து முடிந்தது. அப்பா மலர்ச்சியாக இருந்தார். அடுத்த மாதம்தான் அப்பாவின் பணம் கிடைத்தது. இருந்தாலும், பிரச்னை எதுவும் எழவில்லை.

இது ஒரு உதாரணம்தான். இதுபோல் இன்னும் எத்தனையோ.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். செத்துப் போனவரின் பங்கு எங்கள் குடும்பத்தின் இன்றைய வளர்ச்சியில் அதிகம். நன்றியுடன் நினைவு கூர வேண்டிய தருணங்கள் பல.

அம்மா பின்னால் கிளம்பி வருவதாகச் சொல்லியிருந்தாள். வீட்டு வாசலில் ஆண்கள். உள்ளே, உடல் அருகே வீட்டுப்பெண்மணிகள்.

"என்ன, இப்படித் திடீர்னு…." என்றார் அப்பா.

நான் பொதுவாக முகம் வைத்துக்கொண்டு நின்றேன். இறந்தவரின் கடைசி தினம் விளக்கமாகச் சொல்லப்பட்டது.

உள்ளே போனோம். தூங்குகிற மாதிரிதான் படுத்திருந்தார். வித்தியாசம் கைகளையும் கால்களையும் இணைத்த கட்டு.

திடீரென விக்கலெடுக்கிற பாணியில் ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. அப்பாதான். டவலால் முகத்தை மூடிக்கொண்டு விம்மி விம்மி அழுதார்.

சில விநாடிகளுக்குப் பின் வெளியே வந்தார்.

"எப்படியும் ரெண்டு…மூணு மணி ஆயிருமா…எடுக்கிறதுக்கு…?" என்றார் சாதாரண குரலில்.

‘சற்றுமுன் அப்படி அழுதவரா?’ என்றிருந்தது.

விரல்விட்டு எண்ணிவிடலாம்……அங்கிருந்த ஆண்களை. வீட்டுக் குழந்தைகளுக்குச் சாப்பிட என்ன கொடுத்தார்களோ..? நேற்றிரவே உயிர் பிரிந்துவிட்டது. இதர வேலைகளுக்கு யார் துணை…? கைச் செலவுக்குப் பணம் வைத்திருக்கிறார்களா..?

என் மனம் கேள்விகளால் குழம்பியிருந்தது.

அப்பா ஜாடை காட்டினார் – ‘போகலாமா’ என்பது போல. இன்று நல்ல முகூர்த்ததினம். இன்னொரு வேண்டியவர் வீட்டுப் பெண் திருமணம்.

வெளியில் வந்தேன், எதுவும் பேசாமலே.

"குளிச்சிட்டு, அங்கே வேறே போகணும். வரலேன்னா தப்பா நினைச்சுக்குவாங்க" என்றார் மெல்லிய குரலில்.

என் கவலைகளைச் சொன்னேன்.

"பாவம்…துணைக்கு ஆள் யாரும் இல்லை போலிருக்கே?"

"சீச்சீ….ஏன் இல்லாம? அந்தம்மாவுக்கு ஒன்றுவிட்ட தம்பியோ அண்ணாவோ, அதெல்லாம் அப்பவே ஏற்பாடு செஞ்சிருப்பாங்க. ரொம்ப உபகாரி, எல்லோருக்கும் வேண்டப்பட்ட மனுஷன். கரெக்டா எல்லாம் நடந்திடும். எத்தனை பேருக்கு உதவி பண்ணியிருக்கார். யாராவது இப்ப உதவிக்கு வராமலா இருந்திடுவாங்க?"

மனசுக்குள் முள் உறுத்த குனிந்த தலை நிமிராமல் அப்பாவைப் பின் தொடர்ந்தேன்.

About The Author

2 Comments

  1. valluvaraju

    இப்ப ரொம்ப மனிதர்கல் இப்படிதான் இருக்கிரார்கல்

  2. Ramadas T K

    என்ன மாதிரியான ஒரு எதார்தம். கலியுகத்தில் நன்றி மரத்தல் சர்வ சாதரணமாகிவிட்டது. திருக்குறளெயே மாட்றி எழுத வெண்டும் இக்காலத்தில்.

Comments are closed.