துச்சாதினி

மாமா குடும்பத்துக்கும் எங்களுக்கும் பொருளாதாரத்தில் எஸ்கலேட்டர் வைத்தாலும் எட்டாது என்கிற உண்மையை மானபங்கம் செய்கிற மாதிரி, மாமா, சிங்கப்பூரிலிருந்து மாமியோடும் தன்னுடைய பதினாறு வயசுப் பாப்பாவுடனும் வந்தவர், எங்களுடைய ட்டூ பெட்ரூம் எம்.ஐ.ஜி. ஃப்ளாட்டில் ஒரு வாரம் தங்கிப் போகவென்று வந்திறங்கியது அம்மாவுக்கும் சித்திக்கும் பெரிய புளகாங்கிதமாயிருந்தது.

ரெண்டு படுக்கையறைகளில், பாத் அட்டாச்டும் விசாலமுமாயிருந்தது சிங்கப்பூர்க் குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்டு, மற்ற சின்ன அறையில் அம்மா, சித்தி, நான் எல்லோரும் படுத்துக் கொள்ள ஏகமனதாய் முடிவெடுக்கப்பட்டது, அம்மாவாலும், சித்தியாலும். அம்மாவும் சித்தியும் முடிவெடுத்தால் அது ஏகமனதுதான்.

அப்பாவின் படுக்கை முன் ஹாலில். அப்பாவுக்கு அதில் கடுப்பு. பெட்ரூமுக்குள் அப்பாவுக்கு இட ஒதுக்கீடு செய்து விட்டு, தியாக சிந்தனையோடு நான் ஹாலில் படுத்துக் கொள்ள முன்வந்த போது சித்தி தடுத்தாட்கொண்டாள்.

"பேசாம உள்ள வந்து படும்மா. அந்தப் பொண்ணு உள்ளயும் வெளியேயும் போய்கிட்டு வந்துக்கிட்டு இருப்பா. மாப்ள நீ, முன்னால படுத்துக் கெடந்தா நல்லாவாயிருக்கும்?"

"மாப்ளயா, யாரு இந்தப் பயலா!" என்று என்னைக் குறித்து அப்பா ஆச்சர்யப்பட்டார்.

"புரியாத மாதிரி பேசறீங்களே அத்தான்" என்று சித்தி அப்பாவுக்குப் புரிய வைத்தாள்.

"பையன அங்கயே விட்டுட்டு பொண்ண மட்டும் கூட்டிக்கிட்டு மெனக்கெட்டு அண்ணனும் அண்ணியும் சிங்கப்பூர்லயிருந்து வந்திருக்காங்க, வந்தவங்க சவேராலயோ அம்பாஸடர் பல்லவாலயோ தங்காம நம்ம வீட்ல வந்து ஒண்டிக்கிட்டிருக் காங்கன்னா, அதுக்கு என்ன அர்த்தம்?"

"என்ன அர்த்தம்?"

"அவங்க பொண்ண ஒங்ககிட்ட காட்டிட்டுப் போக வந்திருக்காங்கன்னு அர்த்தம்."

"என்ட்ட ஏன் காட்டிட்டுப் போகணும்? எனக்குத்தான் ஒங்க அக்கா இருக்காளே. அப்படி ஒங்கக்கா மண்டைய கிண்டையப் போட்டுட்டான்னா, கொழுந்தியா நீ இருக்க…"

சித்தியைச் சீண்டி விளையாடுவதில் அப்பாவுக்கு ஓர் ஆனந்தம். அப்பாவின் சீண்டுதலில் சில சமயம் சித்தி வாயடைத்துப் போகிறபோது, அம்மாவின் வாய் திறக்கும்.

"ஆமா ஒங்களுக்கு எப்ப வெளையாடணும் எப்ப சீரியஸ்ஸா இருக்கணும்னு தெரியாது. நா மண்டையப் போடறதா இப்ப முக்கியம்?"

அம்மா வாயைத் திறந்தவுடன் அப்பா ஸீரியஸ்ஸானார்.

"நானா இப்ப வெளையாடிட்டிருக்கேன்? அக்கா தங்கச்சி நீங்க ரெண்டு பேருந்தான் இப்ப கேலிக் கூத்து பண்ணிட்டிருக்கீங்க. செகண்ட் இயர் படிக்கிற பொடிப்பயலுக்கு (நான் தான்) அக்கறையாப் பொண்ணு பாத்துட்டிருக்கீங்க. இவங் கல்யாணத்துக்கு ரொம்ப அவரசமா இப்ப?"

"ஆமா, என்னமோ இன்னிக்கிப் பொண்ணுபாத்து நாளக்கி நிச்சயதார்த்தம் வச்சி, மக்யாநாள் கல்யாணம் பண்ணிரப் போற மாதிரியில்ல பேசறீங்க! நம்ம கண்ணுல பொண்ணக் காட்டிட்டுப் போறதுக்கு கூட்டிட்டு வந்திருக்கார் அண்ணன். ஒறவு விட்டுப் போயிரக்கூடாதுன்னு நம்ம வீட்ல சம்மந்தம் பண்ண ஆசப்படறார்னு தெரியுது. சம்மதம்னு நாம தலையாட்டி வச்சோம்னா பொண்ணப் பெத்தவங்க நிம்மதியா ஊர்ப்போய்ச் சேருவாங்க. அப்புறம், கல்யாணம் மூணு வருஷமோ நாலு வருஷமோ, நாம எப்ப சொல்றோமோ அப்பத்தான்."

"என்னமும் பண்ணிட்டுப் போங்க. எனக்கென்ன போச்சு. மொத்தத்துல நீங்க ரெண்டு பேரு சேந்து அவன் படிப்பக் கெடுத்துறாதீங்க. சும்மாவே நம்ம தவப்புதல்வன் மஹா புத்திசாலி…" என்று என்னுடைய சுய கௌரவத்தை நிமிண்டி விட்டு விட்டு வாபஸ் வாங்கிக் கொண்டார் அப்பா.

சின்ன வயசில் அப்பா சிவாஜி ரசிகர். படிக்கிற காலத்தில் க்லாஸ் கட் பண்ணிவிட்டுப் பார்த்த சிவாஜி படங்களின் தாக்கத்தில், படற்கையில் என்னைப்பற்றிக் குறிப்பிடும்போது, தவப்புதல்வன், நான் பெற்ற செல்வம், உத்தம புத்திரன், தெய்வமகன் என்றெல்லாம் பட்டங் கொடுத்துப் பரவசப் பட்டுக் கொள்வார்.

அப்பா புறமுதுகு காட்டிப் பின்வாங்கிய பின்னால் சித்தி திரும்பவும் ஸென்ட்டர் ஸ்டேஜுக்கு வந்தாள்."இந்தாம்மா, இப்படியே மசமசன்னு நிக்யாதே. அவ மொட்ட மாடியில இருக்கா. போய் ஓம் மூஞ்சியக் காட்டு. ஏதாவது பேச்சுக் குடு. ஒங்க காலேஜ் ஜோக்ஸ்ல ஒண்ணு ரெண்ட அவுத்து விடு. ஏய், எங்க போற?"

"மொட்ட மாடிக்கி சித்தி, நீங்க தான சொன்னீங்க?"

"அதுக்கு இந்த மூஞ்சியோடவா போவ? ஷேவ் பண்ணிக்கலியா இன்னிக்கி?"

‘ஐயே, ஆம்பளப் பசங்க டெய்லியா ஷேவ் பண்ணிக்குவாங்க? இன்னிக்கித் தமிழ் சினிமா ஹீரோஸ் எல்லாம் இப்படித்தான் சொறசொற மூஞ்சியோட லவ் பண்றானுங்க சித்தி."

"இவ சிங்கப்பூர்க்காரிம்மா. அங்க சைனாக்காரப் பசங்க எல்லாம் மொழுமொழுன்னுதான் இருப்பானுங்க. நீயும் அந்த மாதிரி இருந்தாத்தான் இவளுக்குப் புடிக்கும். நீட்டா ஷேவ் பண்ணித் தல வாரிக்கிட்டுப் போ. இதென்ன சட்ட பாக்கெட் கிழிஞ்சி தொங்குது. வேற நல்ல பேன்ட் ஷர்ட் போட்டுட்டுப் போ."

மாமாவும் மாமியும் ஷாப்பிங்குக்கு மவுன்ட் ரோடுக்குப் போகிறோம். தி.நகருக்குப் போகிறோம் என்று மகளை வீட்டில் விட்டுவிட்டுக் கிளம்பி விடுவதும், எல்லா ஃபிளாட்டுக்கும் பொதுவான மொட்டை மாடியில் போய் ஒரு நாற்காலி போட்டுக் கொண்டு ஏதாவது ஒரு இங்லீஷ் நாவலை வாசித்தபடி இவள் உட்கார்ந்திருப்பதும் ஒவ்வொரு சாயங்காலமும் நடக்கிற சங்கதி.

ஷேவ் பண்ணிக் கொண்டு, இருக்கிறதில் நல்ல உடுப்பை மாட்டிக் கொண்டு அம்மாவிடமும் சித்தியிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு மாடிக்குப் படியேறினேன்.

என்னுடைய அண்மையை உணராமல் புஸ்தகத்தில் ஆழ்ந்திருந்தவளின் கவனத்தை ஈர்க்க, துணிச்சலாய், ஹலோ என்றேன்.

ரியாக்ஷன் இல்லை.

சிங்கப்பூரில் ஹலோ சொல்வார்களா, ஹாய் சொல்வார்களா என்று சித்தியிடம் கேட்டுப் பார்த்திருக்கலாம் என்று யோசித்துக் கொண்டு நான் நின்று கொண்டிருந்தபோது, பக்கத்தைப் புரட்டுகிற விநாடியில் பார்வையைத் திருப்பி என்னைப் பார்த்தவள், தடாலடியாய் முகம் மலர்ந்து சிரித்தாள்.

"இந்த ஷர்ட்டும் பான்ட்டும் ஒனக்கு ரொம்ப அழகாயிருக்கு. பர்ஃபக்ட் ஃபிட்டிங்."

எனக்குப் பெருமை நிலை கொள்ளவில்லை. ஆடையைப் புகழ்ந்தாலென்ன, ஆளைப் புகழ்ந்தாலென்ன!

"தாங்க்யூ தாங்க்யூ" என்று நான் உருகிக் கொண்டிருந்தபோது இவள் ஒரு தினுசான கேள்வியொன்றை என்மேல் ஏவினாள்.

"ஆமா, ஆல்ட்டர் பண்ணிப் போட்டுக்கிட்டியா, இல்ல ஸைஸ் ஒனக்கு சரியாவே ஃபிட் ஆச்சா?"

"ம்?"

"எங்க அண்ணாவோட பழைய பான்ட் ஷர்ட் தானே இது? அவன் டிஸ்கார்டு பண்ணின டிரஸ்ஸையெல்லாம் பண்டல் கட்டி ரெண்டு வருஷம் முந்தி டாடி இந்தியாவுக்கு வந்தபோது நானும் மம்மியுந்தான் குடுத்து விட்டோம். அவர் எங்கேயாவது ஆர்ஃபனேஜ்ல குடுத்திருப்பார்னு பாத்தா, இங்கயே குடுத்துட்டிருக்கார். பரவாயில்ல ஒனக்காவது யூஸ் ஆகுதே."

என் முகத்துப் புன்னகை ஆவியாகி மறைந்து போய், அவளுடைய ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய ஒவ்வொரு ஆடையை அவிழ்த்துப்போட, அவள் முன்னால் நிர்வாணமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

உள்ளாடைகள் இன்னும் பாக்கியிருந்தன. உள்ளாடைகளை உருவிப் போடவும் வார்த்தைகள் கைவசம் (அல்லது வாய் வசம்) வைத்திருந்தாள்.

"ஆமா, நானும் இங்க வந்த நாள்லயிருந்து ஒன்ன நோட் பண்ணிட்டுத்தான் இருக்கேன். எங்கண்ணாவோட டிரஸ்களத்தான் மாத்தி மாத்தி நீ டெய்லி போட்டுக்கிட்டுத் திரியற. ஒனக்குன்னு ஒரிஜினல் டிரஸ் எதுவும் கெடையாதா? தீபாவளிக்கி, தைப்பூசத்துக்குக்கூட ஒங்க டாடி பாவம் ஒனக்குப் புதுத் துணி எடுத்துத் தரமாட்டாங்களா?"

வெளியாடை உள்ளாடை எல்லாம் களைந்து முழு நிர்வாணமாய் நான் கையது கொண்டு மெய்யது பொத்திக் கூனிக் குறுகிச் சுருங்கிப் போய் ஒரு மினியேச்சர் மனிதனாய் இந்த சிங்கப்பூர்க்காரி முன்னால்…..

"இருட்டறதுக்கு முன்னால நா இத வாசிச்சு முடிக்கணும்" என்று புஸ்தகத்தில் திரும்பவும் பார்வையைப் பதித்தாள்.

"நீ கிளம்பலாமே, சூடு போதாதா?" என்று அர்த்தம்.

முற்றும் துறந்தவனாய் நான் திரும்பி நடந்தேன். பார்வை மங்கியவனாய், சிரம் தாழ்ந்தவனாய். மாடிப்படியின் மேல்ப்படியில் கால் வைத்தபோது தோளில் ஒரு கை வந்து விழுந்தது. அழுத்தமாய், ஆதரவாய்.

அப்பா.

சிகரெட் புகைக்க மொட்டை மாடிக்கு வந்திருப்பார். சிங்கப்பூர்க் காரியின் குரலைக் கேட்டுப் பின் வாங்கி நின்றிருப்பார். அவளுடைய ஏளன வசனங்களைக் கேட்டிருப்பார்.

தலையை நிமிர்த்த த்ராணியில்லாமல், மௌனமாயிருந்தேன்.

என் கழுத்தில் கை போட்டுத் தன்னை நோக்கி என்னை இழுத்து, வாழ்க்கையில் முதன் முறையாய், ஒரு தந்தையாய் என்னை அணைத்துக் கொண்டார் அப்பா.

(கணையாழி, ஃபிப்ரவரி 2005)

About The Author