நித்தியமல்லி (2)

சங்கருடன் அப்பா பேசுகிற சத்தம் கேட்டது. அப்பாவின் சமீப காலங்களில் இது ஒரு மாறுதல், உற்சாகம் கொப்பளிக்கிற குரல்.

பாலுடன் டீத்தூள் கொதித்துக் கொண்டிருந்தது. ஓரிரு நிமிடங்களாகும். ஜன்னல் வழியே பூக்களைப் பார்த்ததில் அந்த வரி மீண்டும் மனசுக்குள் எதிரொலித்தது.

"…இருக்கிற நேரத்தை அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்தால்…"

‘முடியலியே… என்னால் திருமணம் என்பதை ஏனோ ஏற்க முடியவில்லை…’ மிருணாளினி மனசுக்குள் முனகினாள்.

மூன்று முடிச்சுகள் ஒரு பெண்ணின் கடந்த காலத்தை நிகழ்கால நிகழ்வுகளிலிருந்து சுத்தமாய்த் திசை திருப்பி விடுகிறதே. அவளே வேற்றொருத்தியாகி சுத்தமாய் மாறிப்போக நேர்கிறதே. பிடித்தவை, பிடிக்காதவை என்ற தர நிர்ணயங்கள் திடீரென மதிப்பிழந்து புது அளவுகோல்களில் வாழப் பழகவேண்டிய நிர்பந்தங்கள்.

பெரியம்மா பெண் சரோஜி கூடச் சொல்லுவாள். "வேணாம்டி கல்யாணமே வேணாம். பிடுங்கல்…"

"நெஜமாத்தான் சொல்றியா…"

"சத்தியம்… எனக்கு மட்டும் சாமி எதிர்ல வந்தா… மறுபடி கன்னிப் பெண்ணாக்கிருன்னு கேட்பேன்…"

சரோஜி இரண்டு முறை பிரசவத்திற்கு வந்தபோதும் இதையே சொன்னாள். அப்போது அம்மா இருந்த நேரம்.

"என்னம்மா… சரோஜி இப்படிச் சொல்றா…"

"நான்கூட அப்படித்தான் சொன்னேன்… நூத்துக்கு தொண்ணுறு பேர் இப்படித்தான் சொல்லுவா… ஆனா மண்டபம் மட்டும் கிடைக்கமாட்டேங்கிறது… எல்லா முகூர்த்த நாளும் மேளச் சத்தம் கேட்கிறது…"

"அம்மா…"

"போடி போக்கத்தவளே… எதுல கஷ்டம் இல்லே… எதுல நிரந்தர சந்தோஷம்… எல்லாம் அவா அவா மனசுடி…"

அம்மாவிடம் மேலே விவாதிக்க முடியவில்லை. விட்டேத்தியான பதில். அதில்கூட ஒரு அலுப்புத் தொனித்தது. சத்தியம் எதுவென்று மட்டும் புலப்படவில்லை. அவசியமா, வேண்டாமா… நறுக்குத் தெரித்தாற்போல் யாராவது ஒருத்தர் சொல்ல மாட்டார்களா.

இது நாள்வரை இந்தக் குழப்பத்திற்கு விடைதேட வேண்டிய அவசரம், அவசியம் இல்லாமல் இருந்தது.

இன்று வீட்டுப் படியேறி வந்து வாசற் கதவைத் தட்டுகிறது. "பதில் சொல்…" என்று மிரட்டிகிறது.

மூன்று கப்புகளில் டீயை ஊற்றிக் கொண்டு போனாள்.

சங்கர் எழுந்து அறையின் மூலையில் இருந்த காலண்டரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சங்கர்…" என்றார் அப்பா.

அவள் வந்ததை அவனே கவனித்து விட்டான். இருந்தாலும் அப்பாவிடம் படபடப்பு.

நன்றி சொல்லி டீ கப்பை எடுத்துக் கொண்டான். அப்பாவின் வாயருகில் மெல்ல வைத்து உறிஞ்சச் செய்தான்.

"நைஸ்…" என்றான் காலி கப்பைக் கீழே வைத்தபடி.

"நான்கூட அருமையா டீ போடுவேன்…" என்றான் கூடவே.

மிருணாளினி டிரெயுடன் மீண்டும் உள்ளே போனாள். நிச்சயம் பதில் தெரியாமல் போக மாட்டான். இந்த அப்பாவுக்கும் இங்கிதம் போதாது. "சரி… மிஸ்டர்… லேடஸ் ஸீ ஆஃப்டர் வேர்ட்ஸ்" என்று நாசூக்காய் அவனை விரட்டினால் என்ன…

சமையலறை வழியே இன்னொரு கதவு, வேலைக்காரி வந்தால் உபயோகப்படுத்த. அந்தக் கதவைக் திறந்து வெளியே வந்தால் சர்வீஸ் வராண்டா. இன்னொரு கதவைத் திறந்தால் தோட்டம்.

அறைக்குள் சங்கர் காத்திருக்கிறான் என்ற உணர்வு மீறி தனிமையைத் தேடுகிற நினைப்புடன் வெளியே வந்தாள்.

நிச்சயம் இப்போதைய வாழ்வில் எந்த உறுத்தலும் இல்லை. விழிப்பதும் உறங்குவதும் பொழுதுகள் அதன் போக்கில் கழியத்தான் செய்கின்றன. "வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள.." இதைத் தவிர வேறு என்ன அர்த்தம்…

சிமெண்ட் பெஞ்ச் போட்டிருந்தது. ஜில்லிட்ட மேடை பவழ மல்லி உதிர்ந்திருந்தது. நேற்றைய மாலையில் அதன் வாசம் சுகந்தமாய் ஏதேதோ உணர்வுகளைக் கிளறியதும் இன்று… இப்போது தரையில் வதங்கி பார்க்கவே நெருடுவதாய்…

"மறுபடி பூக்கும்… மிருணா…" குரல் மிக அருகில் கேட்டது.

"மறுபடியும் ஸாரி. அப்பாதான் உங்களைத் தேடச் சொன்னார். கிச்சன் கதவு திறந்திருக்கவும்…" என்றான்.

"பவழமல்லி எனக்குப் பிடிச்ச பூ… மிருணா…" என்றான் தொடர்ச்சியாய்.

மிருணாளினி அவனைப் பார்க்கவில்லை.

"மிருணா… சில சமயங்களில் சில முடிவுகளை நாம் மட்டுமே தனித்து எடுத்துவிட முடியாது. நான் உங்களைத் தொந்தரவு பண்றதாக்கூடத் தோணும். இன்பாக்ட் அதுவே நிஜமாயும் இருக்கலாம்."

மீண்டும் இதழ்க்கடையில் சிரிப்பு.

"கல்யாணம்கிறது உங்களுக்கு எதனாலேயோ தவிர்க்கத் தோணுகிற விஷயமா பதிஞ்சு போச்சு… அப்படி இல்லேன்னு உங்களுடன் வாதம் பண்ணப் போறதில்லை… யெஸ்… ஜ வில் நாட்… ஆர்க்யூ…"

மிருணாளினி நிமிர்ந்து வியப்புடன் அவனைப் பார்த்தாள். சிரிக்காமல் நின்றான்.

"ஆமா… ஆர்க்யூ மென்ட்டே இல்லை… ஆனா… ஒண்ணு மட்டும் நிச்சயம்… நீங்க பயப்படற அளவு அது ஒண்ணும் மோசமான விஷயம் இல்லேன்னு” நிரூபிக்கப் போறேன். வித் யுவர் பர்மிஷன்… உங்களைக் கல்யாணம் பண்ணிண்டு…"

இப்போது அவன் கண்கள் சிரித்துக் கொண்டிருந்தன.

"வரேன் மிருணா. மறுபடியும் வருவேன். உங்களோட தோட்டத்துப் பூ மாதிரி. ஒவ்வொரு தடவையும் கசங்கிப் போனாலும் மீண்டும் மீண்டும் மலர்கிற மாதிரி ரெகுலர் இன்டர்வல்ஸ்ல வருவேன். உங்க மனசு அதுவா மலர்ற வரைக்கும்."

நிதானித்தான். "அப்பாகிட்ட சொல்லிட்டுப் போறேன்"

துளிக்கூட பதற்றமின்றி திரும்பி போனான். சில வினாடிகளுக்குப்பின் வண்டி கிளம்பிப் போகிற சத்தம் கேட்டது.

பிடிவாதக்காரன். ஆனால் பார்வைக்குப் புலப்படாது. எத்தனை மெல்லிய இதழ்களில் அழுத்தமான மனம் வைத்திருக்கிற நித்திய மல்லி மாதிரி. இரண்டு வருடங்களாய் விடாமல் முயற்சிக்கிறவன். நேரடியாய்.. மறைமுகமாய்.

வீட்டில் சொல்லி விட்டானாம்.

"பொண்ணு ரெடிம்மா. சம்மதம் மட்டும் பாக்கி" வேறு வரன்கள் பார்க்கவே இல்லையாம்.

காற்றில் பூ ஆடியது. "போதும் மிருணா. நீ அவனை பரிசோதித்தது எங்களுக்கெல்லாம் பூரண திருப்தி" என்கிற மாதிரி.

சங்கர் வீட்டுக்குள் நுழையும்போது விடாமல் டெலிபோன் மணி அடித்துக் கொண்டிருந்தது.

(முடிந்தது)

About The Author