நிறுத்தக் கூடாதா?

அலுவலகம் செல்ல ஒப்பந்த ஊர்தியின் வருகைக்காகக் காத்திருந்தபோது அந்த ஸ்டாப்பில் வழக்கமாய் எங்களுடன் வரும் சம்பந்தத்தைக் காணவில்லை.

"என்ன மணி.. உங்க பக்கத்து வீட்டுக்காரரை ரொம்ப நாளாக் காணோம்" என்றேன்.

"அவர் இப்ப சொந்த கன்யன்ஸுக்கு மாறிட்டார்ல"

"என்ன இருந்தாலும் இந்த வசதி வருமா.. பஸ்ஸுல ஏறினமா.. நேரா ஆபீஸ் போனோமான்னு.."

"அது சரி. உனக்கு பயண சுகம்.. அவருக்கு பண சுகம். சுளையா மாசம் ரெண்டாயிரம் வருதே.. டிக்கட் செலவு முன்னூறு ரூபா போனாலும் மிச்சம் கணிசமா நிக்குதே.. மாசம் ரெண்டு நாளு ஆபீஸுக்கு சொந்த வண்டில வந்தாப் போதுமே."

அதற்குள் எங்கள் ஆபீஸ் பஸ் வந்து விட ஏறிக் கொண்டோம். அரசாங்க பேருந்துக்கு கம்பெனியே மொத்தமாய் பணம் கட்டி காலை, மாலை இரு வேளைகளிலும் அவரவர் ஏரியாவிலிருந்து அழைத்துப் போவதற்கும், திரும்பக் கொண்டு வந்து விடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொந்த வண்டியில் வருபவர்களுக்கு ஸ்கூட்டர், கார் என்று வண்டிக்கு ஏற்ப அலவன்ஸ் கிடைக்கும். அப்படி வருபவர்கள் இந்த ஒப்பந்த ஊர்தியில் ஏறக்கூடாது. அலவன்ஸ் வாங்காதவர்களுக்கான சலுகை ஒப்பந்த ஊர்திப் பயணம்.

யாரோ கத்தினார்கள். "பஸ்ஸை நிறுத்துங்க.. நம்ம ஸ்டாப் ஓடி வரார்"

எட்டிப் பார்த்தால் சம்பந்தம்! அட இவரா.. இவர் எப்படி இந்த பஸ்ஸுல..

"வுடுங்க வண்டியை.. நிறுத்த வேணாம்." என்று ஒரு சாரார் கத்தினார்கள்.

டிரைவர் குழம்பிய நேரத்தில் சம்பந்தம் மூச்சிரைக்க வந்து வண்டியில் தொற்றிக் கொண்டார்.

"ஏம்பா. ஓடி வரேன்ல.. கொஞ்சம் நிறுத்தக் கூடாதா" என்றார்.

பதில் சொல்ல முனைவதற்குள் கைப்பையைத் திறந்து ஒவ்வொருவராய் நீட்டினார்.

"இன்னிக்கு எனக்கு பிறந்த நாள்.. இந்த மாசத்தோட ஓய்வு பெறப் போறேன்.. அதான் ரொம்ப நாளாப் பழகின உங்க எல்லாருக்கும் இனிப்பு கொடுக்கலாம்னு.."

கையில் எடுத்த லட்டு கனத்தது.

About The Author

1 Comment

Comments are closed.