நேர்மையின் வலிமை

கணேஷ் மிகவும் சந்தோஷமாக இருந்தான். மனத்தில் ஏற்பட்ட நிறைவை அமைதியாக ஏற்று அனுபவித்தான்.

‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை. தந்தைசொல் மிக்க மந்திரமுமில்லை’ என்பது மிகவும் உண்மை என்று உணர்ந்தான்.
மனத்தை பக்குவப்படுத்த தாயின் அன்பும், தந்தையின் அறிவுரைகளும் எத்தனை உதவி புரிகின்றன என்றும் சிந்தித்தான்.

அம்மா லட்சுமி தினமும் அவனுக்கு வீட்டுப் பாடங்களில் உறுதுணையாக இருப்பதுடன், நிலா முற்றத்தில் அமர்ந்து சாதத்தைப் பிசைந்து அவனுக்குக் கொடுத்தபடி, நீதிக்கதைகள் சொல்வாள். அவன் உள்ளத்தைப் பண்படுத்தும் பல தத்துவங்களை அப்பா கூறுவார்.

இருவருமே நேர்வழி தவற விடமாட்டார்கள். நேர்மையின் வலிமையை அடிக்கடி நினைவூட்டுவார்கள். அன்று கடினமான கணக்குத் தேர்வு. தெரியாத பல கணக்குகளைக் கணேஷிற்காகத் தன் ஆசிரியத் தோழியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு வந்து பல பயிற்சிகளை அவனுக்கு அளித்தாள் அம்மா. அவன் கணக்கில் சற்றுப் பலவீனமாக இருந்தான். அதுவே அவனை முதல் நிலைக்குப் போகவிடாமல் தடுத்தது. கணக்கில் முழு மதிப்பெண் பெறும் பிரதாப் தான் எப்போதும் முதல் நிலையில் இருந்தான். அதில் அவனுக்குப் பெருமையும் கூட. சில சமயம் மற்றவர்களை மட்டமாக நினைப்பான், ஏன் கேலியாகப் பேசியதும் உண்டு. கணேஷ் கூட அவன் கேலிப்பேச்சிற்கு ஆளாகி இருக்கிறான்.

இந்தத் தடவை எப்படியாவது முயன்று முழு மதிப்பெண்கள் பெற எண்ணினான் கணேஷ். அதற்காக மிகவும் பாடுபட்டான். மற்ற மாணவர்களும் கணேஷை ஊக்குவித்தனர். பிரதாப்பை வீழ்த்த அறிவுரை கூறினார்கள்.

அம்மா அடிக்கடி வலியுறுத்தினாள். "போட்டி இருக்கலாம்; பொறாமை இருக்கக் கூடாது. நம் வழியில் நாம் முன்னேற வேண்டும். பிறரின் தீய குணங்களைக் கண்டால் நமக்கு அக்குணங்கள் வராமல் மட்டுமே காத்துக் கொள்ள வேண்டும். பழி வாங்குதல் என்ற தீய எண்ணத்தை எப்போதும் தவிர்க்க வேண்டும்" என்றாள்.

கணேஷ் தேர்வில் மிக நன்றாக எழுதியிருந்தான். முடிவை எதிர் பார்த்திருந்தான்.

இன்று பரீட்சை முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பிரதாப் எப்போதும் போல் சற்றுக் கர்வத்துடனேயே அமர்ந்து இருந்தான். கணேஷ் ஆவலுடன் விடைத்தாளை வாங்கினான். நண்பர்கள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

வகுப்பில் இருவர் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் அறிவித்தார். பிரதாப்பும், கணேஷும்தான் அவர்கள் என்றும் தெரிவித்தார்.

பிரதாப்பிற்குப் புருவம் சற்றே உயர, அமைதியாகப் புன்னகை செய்தான் கணேஷ். நண்பர்கள் தங்கள் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் வெளிப்படுத்தினார்கள்.

ஆசிரியர் வேண்டிக் கொண்டதன் பேரில் ஒவ்வொருவராக எழுந்து தங்கள் மதிப்பெண்களைக் கூறிக் கொண்டு வந்தனர். கணேஷ் முறை வந்ததும், அவன் தயங்கி நின்றான்.

"ஏன் கணேஷ், உன் மார்க்கையும் கூற வேண்டியது தானே?"

"சார்….வந்து….." ஏதோ சொல்ல விழைந்தான் அவன்.

"சொல்லுப்பா………" விடைத்தாளை ஆசிரியரிடம் கொண்டு சென்று விளக்கினான்.

எல்லாம் சரியாக இருந்தாலும் ஒரு சிறிய கணக்கின் விடையை மாற்றி எழுதி விட்டான் கவனக் குறைவில். அதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்பட்டாலும், சிறு கணக்குகள் பிரிவின் கூட்டலில், அவசரத்தில் மொத்த மதிப்பெண்களையும் ஆசிரியர் தந்துவிட, கண்டு கொண்ட கணேஷின் மனம் ஒப்பவில்லை. இதைச் சுட்டிக் காட்டாமல் விட்டுவிட்டால் அவனும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனாகத்தான் இருப்பான். அம்மா அடிக்கடி நேர்மையைப் பற்றி கூறுவது நினைவுக்கு வந்தது.

"உன் படிப்பைப் போல் உன் நன்னடத்தையும் மிக மிக முக்கியம் கணேஷ்" என்று அப்பா அறிவுறுத்தும் வார்த்தைகளும் செவியில் ஒலித்தன.

ஆசிரியரிடம் பிழையைச் சுட்டிக் காட்டினான். அவர் திருத்தலைச் செய்து மதிப்பெண்ணைக் குறைத்துவிட்டு அவனைத் தட்டிக் கொடுத்தார். அவனுடைய நண்பர்களுக்கோ அளவற்ற வருத்தம். பிரதாப்பிற்கு மீண்டும் குதூகலம், தனக்கு மட்டுமே முதல் மதிப்பெண்ணிற்கான பரிசு கிடைக்கும் என்று. ஆசிரியர் முதல் மதிப்பெண்ணுக்கு பரிசு உண்டென அறிவித்திருந்தார்.

ஆசிரியர் எழுந்தார். "வழக்கம் போல் கணிதத்தில் முதலாவதாக வந்த பிரதாப்பிற்கு என் பாராட்டுக்கள். நீங்களும் முதலில் வர முயல வேண்டும். இதோ அதற்கான பரிசு. பிரதாப் பெற்றுக்கொள்". அழகிய பேனா ஜோடியை அவனுக்குப் பரிசாக அளித்தார்.
"மாணவர்களே, இதோ மற்றொரு பரிசு, கணேஷிற்கும்" எல்லா மாணவர்களும் ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.

"ஆமாம்! மிகவும் அக்கறையுடன் முயன்று நன்றாக எழுதி முதலிடம் பெற்றாலும், மிகச் சிறிய தவறினால் அதை இழந்து நின்றான் கணேஷ். அவன் நினைத்திருந்தால் என் கவனக்குறைவைப் பயன்படுத்தி முதல் மதிப்பெண்ணைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. நேர்மையைப் பெரிதாக எண்ணியுள்ளான். இது மிகவும் போற்றத்தக்கது. இளம் வயதிலேயே சிறு விஷயத்திலும் நேர்மையைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தீர்கள் என்றால், பின்னால் மிக நல்ல மனிதர்களாக உருவாவீர்கள். கணேஷ் மாதிரி நீங்களும் நேர்வழியில் நடக்க முயற்சிக்க வேண்டும். என் நல்வாழ்த்துக்கள் கணேஷ்! வந்து பரிசைப் பெற்றுக்கொள்"

ஆசிரியர் முடித்ததும் பலத்த கைதட்டல்கள். தங்கள் நண்பனை மனமாற வாழ்த்தினார்கள்.

பிரதாப்பிற்கும் மனம் இளகி விட்டது. எத்தனை உயர்ந்தவன் கணேஷ். சிறு விஷயத்திலும், அதுவும் பலத்த போட்டியிலும் நேர்மையே பெரிதாக எண்ணி முதலிடத்தை விட்டுள்ளானே. பலமுறை கணேஷ் செயல் அவனுக்குப் பெரிதாகத் தோன்ற, தான் பெற்ற முதலிடம் அவன் செயலின் முன் சிறிதாகவே தோன்றியது. மனம் மாறிய பிரதாப் கணேஷைப் பாராட்டினான். தன் கேலிச் சொற்களுக்கு மன்னிப்பும் கேட்டான்.

கணேஷை அனைவரும் புகழ்ந்து பேசிக் கொண்டார்கள். சிறிய விஷயம் எனினும் பெருமை பெற்றதாகிவிட்டது அவனின் நற்செய்கை.

வீட்டிற்குச் சென்று பெற்றோர்களிடம் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நினைத்தான். பெற்றோர்களின் அறிவுரைகள் இல்லாவிட்டால் தான் இப்படி நடந்திருக்க முடியாது என்றும் நம்பினான்.

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவை எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.

– பாரதியார்.

About The Author